1. கான் திரைப்பட திருவிழா -2013
66 வது கான் திரைப்படவிழா இம்மாதம் 15,தேதியன்று தொடங்கிவைக்கபட்டது. இவ்வருட பிரதம விருந்தினர் டைட்டான் புகழ் நடிகர் Leonardo di Caprio. தவிர அவருடைய ” The Great Gatsby” தொடக்க நாள் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஜூரிகள்: Steven Spielberg (USA), Christopher Waltz (Austria), Daniel Auteuil (France), Nicole Kidman ( Australia). முதலாவது ஜூரிகுறித்து புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை. மற்ற நால்வரும் நடிகர்கள். மே. 15லிருந்து -26 க்குள் போட்டியில் கலந்துகொள்கிற 20 படங்களை ஜூரிகள் பார்வையிட்டு பரிசுக்குரிய திரைப்படங்களை மே. 26ந்தேதி அறிவிப்பார்கள். ஆக 10 நாட்கள் கான் நகர La Croisette அவென்யுவில் திருவிழா. மிகப்பெரிய நடிகர் நடிகைகளென பெயரெடுத்துள்ள அனைவருக்கும் உள்ள கனவு என்றாவது ஒருநாள் தங்கள் வாழ்நாளில் கான் திரைப்படவிழா அரங்கின் சிவப்பு கம்பளத்தில் ஒரு முறை கால்பதித்திட வேண்டும்.
Monsoon Shootout – அமித்குமார்
இவ்வருட கான் திரைப்படவிழாவில் அதிகாரபூவமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒர் முழுநீள இந்தியத் திரைப்படம் -Monsoon Shootout. கலை இலக்கியமென்று காத்திரமாக இயங்குகிற Arte பிரெஞ்சு தொலைகாட்சி நிறுவனம், இப்படத்தைத் தயாரித்த நான்கு தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று. மற்ற மூன்று நிறுவனங்கள்: இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மன். படத்தின் இயக்குனர் அமித் குமார் ஏற்கனவே The Bypass என்ற குறும்படத்தின் மூலம் மேற்கத்திய திரைப்படவிமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். இந்தியாவில் பிறந்து ஆப்ரிக்காவில் வளர்ந்த இவர், பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் வார்ப்பு.
மான்சூன் ஷ¥ட் வழக்கமான இந்தியா மசாலா அல்லவாம். ஒரு பக்கம் புதிதாய் நியமனம்பெற்று வந்திருக்கும் காவலதிகாரி, இன்னொரு பக்கம் அவர் வேட்டையாடவேண்டிய கொடூர மனம் படைத்த நிழல் உலக தாதா. இருவரின் உள்ளுணர்வுகளை திரைக்கதையில் அழகாக இயக்குனர் வெளிக்கொணர்ந்திருக்கிறாராம். படத்தைக்குறித்து மேற்கத்திய இதழ்கள் வைத்திருக்கும் அபிப்ராயங்களை வாசிக்கிறபொழுது கண்டிப்பாக ஏதோ ஒரு பரிசை இப்படம் வெல்வது உறுதியென தெரிகிறது.
——————-
2. Mariage pour tous – Marriage for all
ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சு அதிபராகப் பொறுப்பேற்ற சோஷலிஸ்டு கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து கொடுத்த வாக்குறுதி. அதன் படி கடந்த வெள்ளிகிழமை அதாவது 17/05/2013 அன்று பிரான்சுநாட்டு அரசியல் நிர்ணயசபை ஓரின திருமண சட்டவரைவிற்கு தமது ஒப்புதலை அளித்தது. அதற்கு முன்பாக நாட்டின் நீதித்துறை அமைச்சர், அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதல் பெற்றதும் நாட்டின் ஒருபாலின திருமணம் ஜூன் மாதத்திலிருந்து அனுமதிக்கப்படுமென்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப முதல் ஒருபாலினத் திருமணம் மே 29ந்தேதி மொன்பெலியெ என்ற நகரில் நடைபெற உள்ளது. நகர மேயர், ஆளுங்கட்சியைச்சேர்ந்த ஓர் இடது சாரி. மாறாக வலது சாரி கட்சிகள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதால் அக்கட்சிகளின் மேயர்கள் தங்கள் நகரத்தில் இத்திருமணத்தை நடைமுறைபடுத்தமாட்டார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில் ஒருபாலினத் திருமணத்தை பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பதாகக் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்க மதத்தில் தீவிர மதவாதிகள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இம்மாதம் 27ந்தேதி எதிர்ப்பாளர்கள் பிரான்சு நாடெங்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார்கள்.
——-
3. இப்படியும் நடந்தது…
இம்மாதம் 4ந்தேதி பிரெஞ்சு தினசரியைப் புரட்டியபோது ஓர் வியப்புக்குரிய செய்தி. ஒவ்வொரு நாளும் வலைப்பூவில் இடவேண்டுமென நினைத்து தள்ளிபோய்விட்டது. எழுதாமற்போனால் பிறவி எடுத்த பயனை அடையாமற்போய்விடுவேன் என்பதுபோல அச்சம்: பாரதத்தாய் மன்னிப்பாளாக. என்றாவதொரு நாள் இந்திய தேசத்திலும் இதுபோன்ற அதிசயங்கள் நடைபெற்றாகவேண்டுமென்ற வேண்டுதலுடன் எழுதுகிறேன்.
மே மூன்றாம்தேதி பாரீசிலுள்ள கிழக்குதிசை இரயில் சந்திப்பிற்கு பெண்மணி ஒருவர் சென்றார். அவர் செல்லவேண்டிய நகரம் நாட்டின் வடபகுதியிலுள்ள ரேன்ஸ் (Reims). குறிப்பிட்ட பிளாட்பார்மில் அந்த இரயிலை பிடிக்கவேண்டும். வந்தவர் எதிர்புறம் நின்றிருந்த அதிவேக இரயிலில் ஏறிவிட்டார் அது நான்ஸி நகருக்கு போகும் இரயில்.
இரயில் நகர்ந்தபோது அறிவிப்பை உள்ளே கேட்ட பிறகுதான் செய்திருக்கும் தவறு எவ்வளவு பெரியதென்ற உண்மை அப்பெண்மணிக்கு தெரியவந்திருக்கிறது. அழத் தொடங்கிவிட்டாராம். அருகிலிருந்த சகபயணிகள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நான்சி நகரில் இறங்கியதும் அவர் தங்குவதற்கும் மறுநாள் தங்கள் வாகனத்தில் ரேன்ஸ் நகரில் கொண்டு விடுவதாகவும் சமாதானம் செய்திருக்கிறார்கள். பெண்மணியோ தான் அன்று ரேன்ஸ் நகரில் இருக்கவேண்டிய நிப்பந்தத்தை தெரிவித்திருக்கிறார்.
சகபயணிகளில் ஒருவர் பிரச்சினையை பரிசோதகரிடம் தெரிவித்திருக்கிறார். பயணிகள், பரிசோதகரிடம் எட்டு கி.மீட்டரில் வரக்கூடிய Champagne -Ardenne நிலையத்தில் இரயிலை நிறுத்த வாய்ப்புண்டா எனக்கேட்டிருக்கிறார்கள். பொதுவாக அதிவேக இரயில்கள் அங்கு நிற்பதில்லை. இந்த இரயிலும் மணிக்கு 240.கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பரிசோதகர் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டார். 30 நொடிகளில் மேலிடத்து ஒப்புதல் கிடைத்ததாம். ரேன்ஸ் நகருக்குப்போய்க்கொண்டிருக்கிற இரயிலையும் ஒருசில நிமிடங்கள் Champagne -Ardenne நகரில் நிறுத்த ஏற்பாடு செய்தார்கள். அதன்படி Champagne -Ardenne இரயில் நிலையத்தில் இரு இரயில்களும் நிறுத்தப்பட்டு பயணியைப் பத்திரமாக ரேன்ஸ் நகருக்கு வழி அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்பிரச்சினையால் பாரீஸ் -நாண்சி இரயில் வழக்கத்தைக்காட்டிலும் 3 நிமிடங்கள் தாமதமாக வந்துசேர்ந்ததைத் தவிர வேறு சங்கடங்கள் பயணிகளுக்கு இல்லையாம். ஆமென்.
—————
4. கடந்த வாரம் படித்த நூல்
நூல் பேராசிரியர் பஞ்சாங்கத்துடையது. பெயர். கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும். இந்நூலில் மூன்று ஆளுமைகளை தரிசித்தேன். முதலாவது கி.ராஜநாராயணன், இரண்டாவதாக இராஜநாராயணனின் இயற்கை உபாசிப்பை மிக நுணுக்கமாக ஆய்ந்து, சொல்வேள்வி நடத்தும் பேராசிரியர், மூன்றாவதாக இந்நூலுக்கு முன்னுரை என்ற பெயரில் அமுதைப் பொழியும் பேராசிரியை மீனாட்சியின் எழுத்து. கி. ராஜநாராயனனின் கிராமமும், அதன் மக்களும், பிற பங்குதாரர்களும் நமக்கு என்றுமே அலுக்காதவர்கள். அவர்களை பேராசிரியர் க. பஞ்சாங்கம் அறிமுகபடுத்துகிறபோது மேலும் உயர்ந்துவிடுகிறார்கள், அம்மாக்கள் கையளிக்கும் சோற்றுருண்டைபோல அவ்வளவு ருசி. தவிர அவரது தமிழ் ஞானம் நூலை பகுத்தாய்வுசெய்ய கூடுதலாகவே உதவி இருக்கிறது. இன்னொரு முறை கி.ரா. வின் எழுத்துக்களை தேடிபிடித்து வாசிக்க செய்திருக்கிறார். நமது நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டிய நூல். .
—————————————————————–