எழுத்தாளன் முகவரி -13: எழுத்து வியாதி

roger-caras_KKwkdRoger A. Caras ஓர் எழுத்தாளர், விலங்கு அபிமானி. விலங்குகளைக்குறித்து நிறைய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். அமெரிக்காவின் முக்கிய தொலைகாட்சி நிறுவனங்களில் பறவைகள், விலங்கு சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார். திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. நாய், பூனை ஆகியவற்றிர்க்கு நீங்கள் அபிமானியெனில்  Cat is watching, Dog is listening என்ற அவருடைய இரண்டு நூல்களும் உங்களுக்குத் தேவைப்படலாம். விலங்குகளை மையமாக வைத்து ஒன்றிரண்டு புனைவுகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இந்த ரோஜெர்தான் எழுத்து வியாதி பற்றி பேசுகிறார். ஆங்கிலத்தில் Writer’s block என்று பெயராம். மருத்துவ நூல்களில் இந்நோய் பற்றிய மேல்விபரங்கள் கிடைக்காதென்று  எச்சரிக்கவும் செய்கிறார்.  நண்பர்கள் யாரேனும் இப்பெயரை முன்னதாக அறிந்திருக்கலாம். அவர் கட்டுரை ஒன்றை படிப்பதற்கு முன்பாக நான் அறிந்ததில்லை. இந் நோய்க்கு ஆளாகாதவர் எழுத்தாளரே இல்லை என்று ரோஜெர் துண்டைப்போட்டுத் தாண்டுகிறார்.

இவ்வியாதிக்கான அறிகுறிகளென்ன? எப்படி தெரிந்துகொள்வது? எந்தப் பரிசோதனைசாலைக்குச்சென்று இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாம்? பொது மருத்துவர்களே போதுமா அல்லது நிபுணர்களை பார்க்கவேண்டுமா? என்று சில கேள்விகள் உங்களைப்போலவே எனக்கும் இருந்தன. பெயரேதுமில்லாமலேயே வதைக்கும் நோய்களை நாம் அறிவோம், இப்படி புதுப்புது பெயர்களில் வெருட்டும் நோய்களும் இன்னொரு பக்கம். தமிழிலக்கியத்தில் பசலை நோய் என்று ஒன்றுண்டு. இன்றுவரை அது என்ன நோயென்று நான் விளங்கிக்கொண்டதில்லை. படித்தவற்றில் சொல்லப்பட்ட விளக்கங்களெல்லாம் எங்கள் ஊரில் பேயோட்டும் பண்டாரம் சொல்வதுதான். ரோஜெரின் Writer’s blockஐயும் அப்படி யொரு பசலை நோய் இனத்தில் சேர்த்துக்கொண்டேன். எழுத்துவியாதி: தொத்துவியாதியா, பரம்பரை வியாதியா? மனநோயா? உடல் நோயா? குணப்படுத்தகூடியதா? அல்லோபதிக்கு இணங்குமா சித்தவைத்தியமே போதுமா? எனது சிற்றறிவுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு விளக்கம் கொடுப்பதற்கு முன்பாக எழுத்து வியாதி, தொத்து நோய் அல்ல என்பதை உறுதிப்படுத்த இயலாதென்றாலும்,  அதொரு பரம்பரை வியாதியுமல்ல. .

இந்த எழுத்துவியாதிக்கு ரோஜெர் தரும் விளக்கம் அந்நோய் மன அழுத்தம், சித்தபிரமை, தன்னிரக்கம், தசைபிடிப்பு என எல்லாம் கலந்த ஓர் கலவை. அது நமக்கிருக்கிறதா இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வதாம்? உங்கள் மேசையில் சிறிய அளவு பேப்பர் கிளிப்புகளை ஒரு பக்கமும், பெரிய அளவு பேப்பர் கிளிப்புகளை இன்னொரும் பக்கமும் என சேர்க்க ஆரம்பித்தல் நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்கிறார். அடுத்த அறிகுறி இதுநாள்வரை உங்கள் மின்னஞ்சலில் குப்பையென  ஒதுக்கி வாசிக்காமல்விட்ட கடிதங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதும், எவ்வித தேவையுமில்லை என்கிற கடிதங்களை எழுதுவதும், அம்மாதரியான கடிதங்களுக்கு வேலைமெனக்கெட்டு பதில் எழுதுவதும், வெகுநாளாக சந்திக்காதிருந்த நண்பர்களை போனில் தொடர்பு கொள்வதும், தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லையென கவலைப்படுவதுமென ரோஜெர் நிறைய காரணங்களை அடுக்குகிறார்.

ரோஜெர் எழுத்து நோய் முற்றிய நிலையில் அதன் சிக்கல்களை பேசுகிறார். எனக்கென்னவோ ஆரம்பநிலையிலியே இந்நோயை கண்டறியும் வாய்ப்பு தமிழில் இருக்கிறதென்பேன். உதாரணமாக பிள்ளை பருவத்தில் மண்ணைத் தின்று, அம்மண்ணும் கரிசல் காட்டுமண்ணாக இருந்து, குடித்தநீரும்  தாமிர பரணி தண்ணீராக இருந்தால் பின்னாளில் எழுத்துவியாதி வர 99 விழுக்காடுகள் சாத்தியமிருக்கிறது. பள்ளிக்குப்போகும் வயதில் பக்கத்துவீட்டு அக்கா உங்களை மாலைவேளைகளில் கோவிலுக்குத் துணைக்கு அழைத்து சென்றிருப்பாளா? அவள் கொடுத்த கடிதத்தை பத்திரமாக எதிர்வீட்டு மாமாவிடம் சேர்த்துவிட்டு அவர்கள் தயவில் எள்ளுருண்டையோ கடலைமிட்டாயோ வாங்கித் தின்றுவிட்டு கற்பனையில் மூழ்கி இருப்பீர்களா? இருபதுவயதில் காதல் கவிதை எழுதுவதுண்டா? சக நண்பர்கள் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் என அலைந்தபோது நீங்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களை தேடியவரா? பணக்கார பெண்ணைப் பார்த்து திருமணம் செய்தோமா, வாழ்க்கையில் செட்டில் ஆனோமா என்றில்லாமல், உங்கள் எழுத்து நிராகரிக்கபட்டதென்பதற்காகவே சொந்த முதலீட்டில் சிற்றிதழ் சேற்றில் காலை விட்டிருக்கிறீகளா? வீட்டு நிர்வாகத்தை மனைவி ஏற்றுக்கொண்டிருக்க நேரத்தோடு இலக்கிய கூட்டத்திற்கு சென்று எழுத்தாள நண்பர்களிடையே உள்ள விருப்பு வெறுப்புகளை வெப்பமானியில் கணக்கிடுபவரா? உங்களுக்கு எழுத்து நோய் உண்டு உண்டு…

எழுத்துநோயிலிருந்து விடுபட என்ன வழி: ரோஜெர் வழிமுறை பஸ் ஸ்டாண்டிற்கு எதிரிலுள்ள ….லாட்ஜில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் … சந்தியுங்கள் என்பதுபோல இருக்கிறது. சன்னல் பக்கம் நிற்பதையும், மாத்திரைகள் உபயோகத்தையும் தவிர்த்தால் அதுபோயே போய்விடும் என்கிறார். எனக்கென்னவோ அந்த நல்ல காரியத்தை சில எழுத்தாளர்களே உங்களுக்குச் செய்யக்கூடுமென்று தோன்றுகிறது. தவிர ‘இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது நான் ஒருவன் மட்டுமே’, என்ற எண்ணத்தை தவிர்ப்பதுகூட குணமடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாம். சில எழுத்தாளர்கள் (சம்பாதிக்கும் எழுத்தாளர்கள்) ஏற்கனவே கழுவிய காரை இரண்டாம் முறையாக கழுவியோ, தங்கள் தோட்டத்து புல்லை மீண்டும் ஒரு தடவை வெட்டியோ, சோர்ந்திருக்கும் வீட்டு நாயை மீண்டும் ஒருமுறை வெளியில் அழைத்து சென்றோ இந்நோயை தவிர்க்க முற்படுவார்களாம்.

நம் தமிழில் என்ன செய்கிறோம். நம்மையும் இந்த நோய் பீடிக்காமலில்லை, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை கையாளாமலும் இல்லை. சில நண்பர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதை தூசுதட்டி மறுபதிப்புக்கு சாத்தியமுண்டா என பதிப்பாளரை கேட்கிறார்கள். ஒரு சிலர் கேட்பதற்கு ஆளிருந்தால், “கேழ்வரகில் நெய்வடிகிறது”,  எனலாம் என்பதுபோல, “நேற்றிரவு பதினோருமணிக்கு நெடுங்கதை வணங்காமுடி போன் பண்ணினார், ஒரு மணி நேரத்திற்குமேல் என்னிடம் உரையாடியவர் “என்ன இருந்தாலும் உங்களைப்போல எழுதமுடியுமா? இன்றைக்கு நாங்கள் எழுதுவதெல்லாம், உங்களிடம்  கற்றதுதானே” என இவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கமாட்டார்களென நம்புவர்களிடத்தில் கதைவிடுவார். அவ்வாறில்லையா? ஈவ்னிங் ஸ்டார் போன் போட்டு தானெழுதியுள்ள பாடலைக்குறித்து எனது அபிப்ராயத்தைக்கேட்டாரென முக நூலில் எழுதுகிறவர்களுமுண்டு. வேறு சில நண்பர்கள் அத்திப்பட்டில் ஆரம்பித்து அண்டார்ட்டிக் வரையில், அகில உலக எழுதாக் கவிதை விருது, ஞாயிற்றுகிழமை பெருங்கதை விருதென்று தங்களுக்குள்ள ‘நெட் வொர்க்’கால் பெற்றிருப்பார்கள், எவ்வித கூச்சமுமின்றி ஆஸ்துமா நோயாளிபோல மூச்சிறைக்க அதனை விநியோகித்துக்கொண்டிருப்பார்கள்.

ரோஜெர் கைப்பக்குவத்தில் மருந்தொன்றை தயாரித்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கிறது. எழுத்து வியாதியிலிருந்து தப்பிக்க சமைலறைக்குள் புகுந்து விடுவாராம். விதவிதமாக சமைப்பாராம். அதுபற்றிய புத்தகங்களையும் உடனுக்குடன் எழுதுவாராம். அவர் கூறும் யோசனை எழுத்துநோய் முற்றிய நிலையில் நிவாரணம் வேண்டுமெனில் வேறு படைப்பு துறைகளில் இறங்குவது நல்லது. அது ஓவியம், சிற்பம், சமையல், தோட்டக்கலை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிற எழுத்தாளர்களைப்பார்த்து வயிறு எரிந்து, இதயவலியால் துடிப்பதைக்காட்டிலும் உகந்த வழிமுறை.

ரோஜெர் சொல்கிற எழுத்துநோய் உண்மையில் நமக்குண்டா அல்லது  வருவதற்கான சாத்தியங்கள் உண்டாவென்று எனக்குத் தெரியாது.  எழுதிக்கொண்டிருக்கையில் சட்டென்று சோம்பல் நம்மிட கைகோர்க்கிறதென்பது உண்மை. அச்சோம்பல்தான் எழுத்து நோயாவென்றும் தெரியாது. நமது மூத்த எழுத்தாளர்களில் பலர் இனி நான் எழுதுகோலை தொடமாட்டேன் என சத்தியம் செய்து சம்பாதித்த புகழை கட்டிகாப்பதற்கு வழிமுறைகளென்ன என்ற கவலையில் மூழ்கியிருக்க மேலை நாடுகளில்  எண்பது, தொண்ணூறு வயதிலும் எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவரவர் பணியில் முடக்கம் ஏற்படுவது இயற்கைதான். கல்லூரியில் பாடம் எடுத்ததுபோதும், மாலை ஆறுமணிக்கு மேல் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பிழைக்கபோகிறேன் என்கிற பேராசிரியர்களுக்கும், பகல் முழுக்க கட்சிகாரர்கள், கோர்ட், வாய்தா என அலைந்து அலுத்துவிட்டது இனி ஓர் அரசியல் கட்சியில் தேர்ந்து தேர்தலில் நிற்கப்போகிறேன் என்கிற வழக்கறிஞர்களுக்கும் வரும் நோய்கூட அவ்வகையில் ஒரே இனம் தான்.

ஆக மீண்டும் எழுத்தைக் கையிலெடுப்பதுதான் எழுத்து நோயிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழிமுறை.கந்துவட்டி பேராசிரியரைப்போல, அரசியற்களமிறங்க நினைக்கும் வழக்கறிஞரைப்போல, எழுத்தாளர்களும் இன்னொரு  நிலத்தில் கால்பதித்து அங்கேயும் அலுத்து நாளை மற்றொன்றை தேடி எதிலும் நிறைவுறாமற் தேய்ந்து கரையலாம். ஆனால் எந்தத் தொழில் செய்தாலும் நான் தனித்தவன் என்ற உணர்வு இல்லாவிட்டால் எப்படி? புகழுக்கும் விருதுக்கும் தகுதிவேண்டாமா? தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் இருக்கலாம், ஆயிரக்கணக்கில் வழக்குரைஞர்கள் இருக்கலாம் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நாடறிந்தவர்களாக இருக்கிறார்கள். எழுத்திலும் அதற்கான சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. எழுத்து வியாதி எழுதத் தூண்டுகிற வியாதியாக இருக்கவேண்டுமேயன்றி எழுதாமல் உங்களை முடக்கும் வியாதியாக இருக்கக்கூடாது. என்ன செய்யலாம்? எனக்குத் தெரிந்த வழி தொடர்ந்து எழுதுவது. கணினி முன் உட்காருங்கள், கூடாத காரியங்களை ( ரோஜெர் சொல்வதுபோல அர்த்தமற்ற கடிதங்களை தேடிப் படிப்பது, கூடாத காரியங்களில் கவனம்  என்றெல்லாம் வேண்டாம். உங்கள் எழுத்தில் புதிதாய் என்ன சேர்க்கலாம் என்று யோசியுங்கள் அது உத்தியாக இருக்கலாம், மொழியாக இருக்கலாம், கதை சொல்லலாக இருக்கலாம். சக நண்பர்கள், வாசகர்கள் உங்களைவிட புத்திசாலிகள் என்பது எப்போதும் நினைவிலிருக்கட்டும், எழுதுங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள்…

————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s