1..இந்தியா – ஏப்ரல் 21 -கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு
ஏப்ரல் 12-13 காலச்சுவடு நண்பர் கண்ணன், கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் கலந்துரையாடலுக்குப்பிறகு 17ந்தேதி புதுச்சேரியில் எனது சகோதரர்மகன் திருமணம். அதன் பிறகு நடந்த முக்கிய நிகழ்ச்சியெனில் செஞ்சியில் புதுவை ‘இலக்கியம்’ சீனு தமிழ்மணியின் நண்பர் பேராசிரியர் ஜெ. ராதாகிருஷ்ணன் என்கிற ‘நறுமுகை’ குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் கிருஷ்ணப்ப நாயக்கர் நூலை முன்வைத்து செஞ்சியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை சொல்லவேண்டும். திருச்சியிலிருந்து வந்திருந்த ந.முருகேசபாண்டியனுக்கும் மற்றவர்களுக்கும் ஓட்டலில் அறை, மதிய உணவு, நிகழ்ச்சியென அவ்வளவையும் குறிஞ்சி இலக்கியவட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பார்வையாளர்களாக பேராசியர்கள், தமிழ் முதுகலை ஆய்வு மாணவர்கள், சிற்றிலக்கிய அபிமானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேராசிரியர் க. பஞ்சாங்கம், ந. முருகேசபாண்டியன், திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனா ( இவர் பேராசியர் அ. மார்க்ஸின் படைப்புலகத்தை முனைவர் தேர்வுக்கு ஆய்வுக்கு எடுத்துள்ளார், சிற்றிலக்கிய படைப்பாளி) ஆகியோரின் உரைகள் இருந்தன. மூவரின் உரையும் எனது எழுத்தை உயர்வாகவே மதிப்பிட்டிருந்தன. நவீன இலக்கிய உலகில் பேராசிரியர் க.பஞ்சாங்ககத்தையும், ந.முருகேசபாண்டியனையும் அறிந்தவர்கள் இருவரின் கருத்தையும் குறைத்து மதிப்பிட இயலாது. இன்றைய இலக்கிய சூழலில் பாரபட்சமற்ற விமர்சனத்தை வைக்கிற அரிதான ஒரு சிலரில் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களை அறிந்தோர்க்கு உண்மை புரியும். கிருஷ்ணப்ப நாயக்கர் குறித்த அவர்களின் மதிப்பீடு எனக்கு அரு மருந்து. உரைகளை ஒலிநாடாவில் பதித்து குறிஞ்சி வட்டம் இணைய தளத்தில் வெளியிடுவார்கள்.
2. ஆளுமைகளுடன் சந்திப்பு.
இம்முறை சென்னை சென்று சந்திக்க நினைத்த எழுத்துலக நண்பர்களை கடுமையான வெயில் காரணமாக சந்திக்க இல்லை. திருவாளர்கள்:தமிழவன், எஸ். ராமகிருஷ்ணன், இந்திரன், பாவண்ணன், திலகவதி, திருப்பூர் கிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், சந்தியா நடராசன்,மதுமிதா, சுதா ராமலிங்கமென திட்டங்கள் இருந்தும் வெயிலுக்குப்பயந்து சென்னை போகவில்லை. எனக்கு பெரும் இழப்பு. வருத்தங்கள் இருக்கின்றன.
அதை ஈடுகட்ட நண்பர் நாயக்கர், சீனு தமிழ் மணி உதவியால் சில ஆளுமைகளை புதுச்சேரியிலேயே சந்திக்க முடிந்தது. பெரியவர் கி.ரா., பேராசிரியர் க. பஞ்சாங்கம், ராஜேந்திர சோழன், ஜெயப்பிரகாசம் இச்சந்திப்புகள் குறித்து சிறிய தொடரொன்றை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசையிலிருக்கிறது. இவர்களைத் தவிர நண்பர் நாயக்கர், மு. இளங்கோ, சீனு.தமிழ்மணி, நறுமுகை ஆகியோரைப்பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.
———————————————-