சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:
திரு. தமிழவன் அவர்களை பொறுப்பாசிரியராகக் கொண்டு வரும் இதழ் ‘சிற்றேடு’ அவ்விதழில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவல் வெளியீடு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. அச்செய்தியை வெளியிட சிறிது தயக்கம். எனது நெருங்கிய இலங்கை நண்பர் மரியதாஸ் என்பவரிடம் கலந்து பேசினேன். எதற்காகத் தயக்கம் தாராளமாக வெளியிடுங்கள் என்றார். தமிழவன் ஏட்டில் வந்துள்ள செய்தி புறம்தள்ளக்கூடியதா எனக் கேட்டார். தமிழவன் என்னை முன்பின் அறியாமலேயே சிங்கப்பூர் இலக்கிய மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் ‘மாத்தாஹரி நாவலை பாராட்டினார் என்பதை நவீன இலக்கியம் சார்ந்த நண்பர்கள் அறிவார்கள்.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் புது நாவல் – செ.ஜெ.
மாத்தாஹரி என்ற மிகவும் வித்தியாசமான நாவலை எழுதி அனைத்துலகத் தமிழ் எழுத்து சார்ந்து புகழ்பெற்றுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்க கௌமுதி’ என்ற நாவலில் வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் 26-1-2013 அன்று நடைபெற்றது. இந்த நாவல் ஒரு நாவலுக்குள் இன்னொரு நாவலாய் அமைப்புக்கொண்டிருக்கிறது. நாவல் வெளியீட்டுவிழாவில் கி.அ. சச்சிதானந்தம், கவிஞர் மதுமிதா, பேரா.விஜெயவேணுகோபால், எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன் ஆகியோர் பேசினர். ஆங்கிலப் பாதிப்புடன் தற்கால தமிழிலக்கியம் தோன்றியது. பிரெஞ்சு பாதிப்புத் தற்கால தமிழுக்குப் புதுத் தொனியையும் அழுத்தத்தையும் கொடுத்தது. பாரதிதாசன் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் “புரட்சிகவி” என்ற கவிதை பற்றிய சில அபிப்ராயங்களைத் தவிர “பாரதிதாசனின் அமைப்பாக்கத்தில்” பிரெஞ்சு இலக்கிய பாதிப்பு பற்றிப் பாண்டிச்சேரியிலுள்ள தமிழாய்வுத் துறைகளில் ஆய்வு நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடக்கவேண்டும்.
எது எப்படி இருப்பினும், பிரெஞ்சு மொழியிலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் தமிழின் தற்காலத்தை வளப்படுத்த ஒருவர் கிடைத்துள்ளார் என்பது தமிழுக்கு யோகமாகும். (கடைசி சொற்கள் சி.சு. செல்லப்பாவுடையவை).
———————————————–