எழுத்தாளனின் முகவரி -12: வரலாற்று நாவல்

உண்மையும் -புனைவும்

நன்கு அறியப்படாத (அறியப்பட்டதல்ல) வரலாற்றினை புனைகதையாகச் சொல்ல முற்படுபவதே ஒரு சரித்திர நாவல்.

சரித்திர நாவல் என்பது ஆதாரபூர்வமான உண்மைகளும், ஆசிரியனின் கற்பனைகளும் கலந்தது. இக்கலப்பு சீர்மையுடனும் ஒத்திசைவுடனும் நிகழ்த்தப்படுவது.  நன்கு அறியப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைகதை வடிவத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் பொதுவில் இருப்பதில்லை. வரலாற்று நாவலை எழுதுவதென்பது ஒரு சாதனை. கூடுதற் கவனம் வேண்டியிருக்கிறது. எது பற்றி எழுதுகிறோமோ அல்லது கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அது குறித்த முழுமையானப் பிழையற்ற தகவல்களை, முன்னதாக சேகரித்துக்கொண்டு அவற்றோடு இணைந்து கதையை நடத்தவேண்டும். சமூக புனைவுகளில் இவ்வித நியதிகளில்லை, அதனாற் சங்கடங்களும் குறைவு. சொற்களில் ஆளுமையும் கற்பனைத் திறனுமிருந்தால், எழுதிக்கொண்டுபோகலாம், “இடறி விழுந்தாலும்” அங்கே ‘கரடிவித்தை” எனச்சொல்லி சமாளிக்கும் திறனை எழுத்தாளனோ அல்லது அவன் ஏற்கனவே வாசகனிடத்தில் சம்பாதித்த புகழோ பெற்றிருப்பார்கள்.

சரித்திர நாவல் பிற நாவல்களைப்போலவே உண்மையும் புனைவும் கலந்தது. ஆனால் இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிட்டதுபோன்று வரலாற்று புனைவில் இவ்வுண்மைகள் ஆதாரங்களைக்கொண்டதாக இருக்கவேண்டும். மாந்தர்கள் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்கள் என நேர்த்தி குலையாமால், வாசகனிடத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தித் தருதல் அதன் நோக்கம். காத்திரமான வரலாற்று நாவல்களில் இடம் பெறும் மாந்தர்கள் இரண்டுவகையினர்: முதல்வகையினர் நாவலாசிரியன் எழுத உட்காருவதற்கு முன்பாக தேடிஅலைந்த ஆதாரங்களிலிருந்துப் பெறப்பட்டவர்கள்; இரண்டாவது வகையினர் அவனது சொந்தக் கற்பனையிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.

Thomas Flemingதாமஸ் ·ப்ளிமிங் புகபெற்ற அமெரிக்க சரித்திர புனைகதை ஆசிரியர், The Offocers wives என்கிற நாவலின் பூர்வீகத்தைப் பற்றி பேசுகிறார். தமது நான்காண்டுகால ராணுவ அக்காதெமி வாழ்க்கையின் போது அதிகாரிகளைப்பற்றியும் அவர்களுடைய மனைவிமார்களைப்பற்றியும் நிறையத் தெரியவந்ததாம், குறிப்பாக பெண்களின் நடை உடை பாவனைகள், அவர்கள் நடந்துகொள்ளுவிதம், பழகும் முறைகள் ஆகியவற்றை அவதானித்து வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அமெரிக்க படைகளைப்பற்றி, பெண்ணொருத்தியின் பார்வையில் இதுவரை சொல்லப்படாதது ஏன்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறார், இப்புதிய பார்வை ஒரு வரலாற்று நாவலுக்கு உதவுமென அவர் நினைத்தது வீண்போகவில்லை, கொரிய வியட்நாம் போருக்குப் பிந்திய அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை அவர் சொல்லியிருந்த முறை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மனிதர்கள் காலத்தோடு வாழப்பழகியவர்களென்றாலும், அவர்களின் அடிப்படைப்பண்புகளில்  மாற்றங்கள் இல்லை. ஐம்புலன்களும், அவை நிகழ்த்தும் மாயங்களும் சாகாவரம் பெற்றவை. மனிதர்களின் பசியும், அன்பும், அழுக்காறும், அருளும், வாய்மையும், இன்னாசெய்தலும், காமமும் எக்காலத்திற்கும் பொருந்துபவை. ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலில் வரும் கிருஷ்ணப்ப நாயக்கரை நமது சமகால அரசியல்வாதியோடும், அதே நாவலில் வரும் செண்பகத்தை, அரசியல் வாதியின் மனைவியரில் ஒருத்தியாக மனதில் நிறுத்தி எழுதுகிறபோது, நாவலைக் கூடுதற் ஈடுபாட்டோடு என்னால் எழுதமுடிந்தது. ‘மாத்தா ஹரி’ நாவலில் முதல் உலகப்போரில் நியாயமின்றித் தண்டிக்கப்பட்ட ‘மாத்தாஹரி’க்கு, எனது உறவுக்காரப்பெண்ணொருத்தியின் வாழ்க்கை ஊடாக நீதி வழங்கினேன். புதுச்சேரியிலிருந்து வெளி நாடு வாழ்க்கைப்பற்றிய கனவுகளுடன் பிரான்சுக்கு வரும் பெண்களின் வாழ்க்கைமுறையை அந்நாவலிற் பயன்படுத்திக்கொண்டேன். இதுபோன்ற அணுகுமுறைகள் நாவலுக்கு நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தித்தருகின்றன.

 நடந்ததும் நடக்கவிருப்பதும்:

பொதுவாக கடந்தகாலமென்பது, நிகழ்காலத்தினும் பார்க்கக் கொடியது, கடுமையானது. கடந்தகால மனிதவாழ்க்கையின் இன்னல்கள், துயர்கள், இழைத்த தவறுகள், கற்ற பாடங்கள் ஆகியவற்றின் பொதுப்பலன்களே நிகழ்காலத்தில் பெற்றிருக்கும் நமது வளர்ச்சி. ஒரு தலைமுறை வாழ்க்கை, வருங்கால தலைமுறையின் நன்மைக்கு தன்னைப் பணயம் வைக்கிறது. பல இழப்புகளைச் சந்திக்கிறது. கடந்தகால வரலாற்றை மறுவாசிப்பு செய்வது, பின்வரும் சந்ததியினருக்கு எவ்வகையான வாழ்க்கைக்கு (இன்றைய நாம்)  உத்தரவாதம் தரப்போகிறோமென்பதை ஒருவகையில் உணர்வில் நிறுத்துவது. எக்காலத்திலும் வாழ்க்கையென்பது தடைகளின்றி களிமண்பூமியில் உருண்டோடும் நீர்த்தாரையாக இருந்ததில்லை. ஆங்காங்கே அதிர்வுகளையும் நடுக்கங்களையும்; யுத்தத்தையும் சமாதானத்தையும்; ஆக்கத்தையும் அழிவையும் கடந்தே ஆகவேண்டியிருக்கிறது. நெருக்கடிகள் வெயில் போலவும், கடும் பனிபோலவும் மனிதர் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவரவருக்குள்ள வாய்ப்பையும் ஆயுதங்களையும் கொண்டு களத்தில் அவற்றை உருவங்களாகவோ அருவங்களாவோ எதிர்கொள்கிறோம், நமது முன்னோர்களும் அதைச் செய்திருந்தனர். கடந்த காலத்திய நிகழ்வுகளையும், அவற்றின் பங்குதாரர்களையும் தேடிப்பெறுவதில் சரித்திர நாவலாசிரியர்களுக்கு இடையூறுகள் குறுக்கிடுவதில்லை. அவ்வாறு தேடிப்பெறும் தகவல்களூடாக நம்மைப்போலவே நமது முன்னோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பதும்; அவற்றின் முடிவுகளும் நமக்குத் தெரிய வருகின்றன, மாறாக சரித்திர நிகழ்வுகளில் பங்குபெற்ற நமது முன்னோர்களின் அலைச்சல்களென்ன -திட்டமிடல்களென்ன – குயுக்திகளென்ன என்பதுபோன்ற  நுணுக்கமான தகவல்கள் கிடைப்பதில்லை. கடந்த காலத்தின் இக்கோட்டை வாயிற்கதவைத் திறப்பதற்கு அசாதாரண பலமும், தந்திரமும் தேவைப்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் நம் மூதாதையர்கள் எவ்விதம் எதிர்கொண்டிருக்க முடியும் என்பதை அறிய அவர்கள் வாழ்க்கைக்குள் நம்மையும் இணைத்துக்கொள்ளுதல் அவ்வகையில் ஒரு தந்திரம். புனைவொன்றில் சாத்தியப்படும் இத்தந்திரத்தை வரலாறுகளில் காண்பதற்கில்லை. அக்பர் தானொரு சமயவிரோதியல்ல என நிரூபணம்செய்ய அவர் தேர்வு செய்த வழிமுறைகளிலொன்று இராஜபுதன பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டது. பிற வழிமுறைகள் அக்பரின்  வரலாற்றை எழுத உதவலாம், ஆனால் அக்பரைப்பற்றிய புனைவொன்றை எழுத இராஜபுதனத்து பெண்ணை மணந்த தகவல் முக்கியமானது. அதனாற்றான் பல நேரங்களில் வரலாறுகள் நமக்குச் சோர்வைத் தருகின்றன. தவிரவும் அச்சோர்விற்கு பிரதான மனிதர்களிடம் மட்டும் வரலாறு கொள்ளும் அக்கறையும் ஒரு காரணம்.

வரலாற்று மாந்தர்களும் வரலாற்று புனைகதை மாந்தர்களும்:

இந்தியச் சுதந்திரப்போரென்பது காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் இவர்களைமட்டுமே கொண்டதா? ஆயிரம்பக்கங்களில் வரலாறு எழுதப்படுகிறபோதும் இவர்களின் வீர தீரங்களை மட்டுமே பேசுவது சராசரி மனிதர்களாகிய நமக்கு அலுப்பை தரவில்லையா? சுதந்திரப்போராட்டத்தின் போது இத்தலைவர்கள் வீட்டுப் பெண்கள் அதனை எப்படி எதிர் கொண்டார்கள், இச்சுதந்திர போராட்டத் தலைவர் ஒருவரின் எதிர் வீட்டுக்காரர் மன நிலையென்ன, அவர் இந்திய விடுதலைப்போரை ஆதரித்தாரா எதிர்த்தாரா? பெரு நகரங்களில் சரி, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் கூட ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்கு போராடினார்களா? மாடசாமிகளும் தொப்புளான்களும், உள்ளூர் ஆண்டைகளிடம் கொத்தடிமைகளாக பலதலைமுறைகளாக இருந்தவர்கள், அவர்களுக்கு இந்த விடுதலையால் கிடைக்கும் இலாபமென்ன? இதையெல்லாம் வரலாறு சொல்லுமா? பேசியிருக்கிறதா? ஆக புனைவுகளில் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. அக்கால அரசர்கள், கோவிலைக் கட்டினார்கள், குளத்தை வெட்டினார்கள், மான்யம் வழங்கினார்கள். எங்கிருந்து வழங்கினார்கள்? யாருடையப்பணம்? என்ற கேள்விகளைக்கேட்டு அதற்குரியப் பதிலை முன் வைக்கவேண்டும். நீலக்கடல் நாவலிலும் சரி, அண்மையில் வெளிவந்துள்ள கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலிலும் சரி வரலாறு நினைவுகூர்கிற ட்யுப்ளே, லாபொர்தெனே, ஆனந்த ரங்கப்பிள்ளை; கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோருக்கு ஈடாக மாடசாமி, தொப்புளான், தீட்சதர் போன்றோரை வைத்து பேசியிருக்கிறேன். ஒரு சிலரின் பிறப்பும், சூழலும் காலமும் அரியாசனத்தில் வைத்துக் கொண்டாடுகிறது, ஆனாலும் கொண்டாகும் அளவிற்கான எவ்விதச்சாதனையையும் அவர்களில் 95 விழுக்காட்டினர் செய்வதில்லையென்பது எனது தரப்பு வாதம்.  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியில் வரும் தொப்புளான் எதிர்பாராதவிதமாக வழிப்பறிக்குத் திரும்புகிறான், சராசரி மனிதனாக வாழ்க்கையை எதிர்கொண்டவன், வெள்ளந்தியாக ஐயோ தப்பில்லையா என யோசிக்கிறான், பின்னர் கிருஷ்ணப்ப நாயக்கரும் அதைத்தானே செய்கிறாரெனத் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறான். இருபதாம் நூற்றாண்டிலும் எவ்வித மாற்றமுமின்றி வரலாறு திரும்ப எழுதப்படுவதைக் காண்கிறோம். கிருஷ்ணப்ப நாயக்கர் அன்று அரசர், இன்றைக்கு நம் கண்முன்னே ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம். ஆக கிருஷ்ணப்ப நாயக்கர்களும் தொப்புளான்களும் வேறு பெயரில் இருக்கவே செய்கிறார்கள். இன்றைய வாசகர்களுக்கு கடந்த கால வரலாற்றில் மறைக்கப்படுகிற இதுபோன்ற (வரலாற்று) உண்மைகளைப் புனைவாகச் சொல்வது அவசியமாகிறது.  பொதுவில் சரித்திர நிறுத்தும் கதை மாந்தர்களுக்கு அதிகப்பக்கங்களை ஒதுக்குவதில்லை, அவர்களை முதன்மைப் பாத்திரங்களாக முன் நிறுத்தும் வழக்கமும் எனக்கில்லை. நீலக்கடல், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டிலும்  இதனை வழக்கமாகப் பின்பற்றியிருந்தேன்.

தாமஸ் ·ப்ளீமிங்க் நாவல்களில் தமது சண்டைக்காட்சிகளை விவரித்து சொல்வதை வரவேற்கிறார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியை எழுதுகிறபோது அதன் முக்கியத்துவத்தை உணரத்தவறிவிட்டேன். அடுத்த நாவலில் அதை சரிசெய்யவேண்டுமென நினைக்கிறேன். சரித்திர நாவல் எழுதும் நண்பர்கள் தாமஸ் யோசனையைப் பின்பற்றலாம். ஜான் ஹெர்சே (John Hersey) கூற்றுப்படி வரலாற்றாசிரியர்கள் உண்மைகளையும்;  புனைகதை ஆசிரியர்கள் கற்பனைகளை சொல்லப் பிறந்தவர்கள். ஆனால் வரலாற்று புனவுகளை எழுதுகிறவர்கள் இந்நியதிக்குப் பொருந்த மாட்டார்களென்கிறார் தாமஸ் ·பிளிமிங். அவரைப் பொறுத்தவரை வரலாற்று புனவை எழுதுகிறவன், இவை இரண்டிற்கும் இடையில் இயங்கக்கடமைப்பட்டவன்.

———————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s