1. Lilas இலக்கிய பரிசு -2013
‘Prix Lilas’ (Lilac Prize) 2007ல் பிரான்சு நாட்டில் அறிமுகமான இலக்கிய பரிசு. பெண்படைப்பாளிகளுக்கென்று பெண்களால் ஏற்படுத்தப்பட்டது. நோக்கம் பெண்ணிலக்கியத்தை ஊக்குவிக்கவேண்டும். பிரெஞ்சு மொழியில் எழுதும் பெண்எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து வருடா வருடம் பரிசு வழங்குகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ‘Orange Prize’ க்கு இணையானது. குழுவில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், ஆறாவது ஜூரி மட்டும் வருடத்திற்கொருமுறை புதுப்பிக்கப்படுகிறார். இவ்வருடத்தில் 12 புதினங்கள் போட்டியில் கலந்து கொண்டன. அவற்றில் ஆறு இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. வெல்லும் படைப்பாளி 3000 யூரோவுக்கான காசோலையும், ‘Mont blanc’ தயாரிப்பில் பிளாட்டினமும் தங்கமும் கலந்ததொரு பேனாவும், பாரீஸில் புகழ் பெற்ற ‘Clossarie Des Lilas’ ரெஸ்ட்டாரண்டில் விருந்தும் பெறுகிறார். இறுதி பட்டியலில் இடம்பெறும் ஆறு பேரில் எனது வாக்கு ‘Sylvie Bocqui’ என்கிற பெண்மணிக்கு. இவர் ‘Strasbourg’ ஐச் சேர்ந்தவர் என்பது இரண்டாவது காரணம். முதற்காரணம் ‘Une saison’ நாவல், நட்சத்திர ஓட்டலில் ‘House Keeper’ ஆக வேலைபார்க்கும் இளம்பெண்ணொருத்தியின் தனிமையையும், அலுவலையும் பற்றி உரைக்கிறது. வாடிக்கையாளர்கள் புறப்பட்டுச்சென்றதும் ஒவ்வொரு அறையாக நுழைந்துவெளிவரும் பெண்ணின் நிழலுக்குள் அடைக்கலம் தேடியிருக்கும் அவளது தனிமையின் வெக்கை நம்மைச் சுடுகிறது. வெளிஉலகத்தைவிட்டு வெகுதூரத்தில் கனவில் வாழும் ஒருத்தியின் தினசரிகள் கதையாக நீளுகிறது. .
2. வாசித்ததில் மனதிற் பதிந்தவை:
அ. அகநாழிகை: பொன் வாசுதேவன் கவிதை
விசையுந்தி எம்பி நீர்வெளி மேல்வந்து
கணநேரம் காற்று சுவைத்து
சற்றே ஆறுதலுற்று நிஜமுணர்ந்து நீர் மீளும் மீன்
சிறுபாம்புக் குவியலென நகர்ந்தபடியிருக்கும்
நீர்ப்புல மேல்பரப்பாய்
ஓயுதலற்றுச் சிறகசைக்கும் கேள்விகள்
விழிகளின் உள்ளூடுருவி
அண்மையில் புலப்படும் அகத்தெளிவின் சலனங்கள்
சரிந்து நீண்டு கவிழ்ந்த இருளில்
மெல்லப் புதையும் நான்
கன்னம் நனையப் பரவி காது நுனி சிதறி
வெளியேறிக் கசியும் நீர்
உணர்த்தும் கால ஜென்மங் கடந்த புதிர்ப்பித்து
———————————-
ஆ. நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா -ஷாஜி
“நாம் பயன் படுத்தும் ஒலிக்கருவிகளில் கேட்கும் இசையின் தரமானது பதிவுசெய்யப்படதில் பாதியைக்கூட எட்டுவதில்லை” என கட்டுரையின் இடையில் வரும் வரிகளின் உண்மையை ஓரளவிற்கு அறிந்தவன். ஷாஜி அளவிற்கு இசை நுட்பத்தில் தேர்ந்தவல்லவென்றாலும், இசையை பாமரனாக அனுபவிப்பவன். பல்வேறு பழங்குடிமக்களின் பாடல்களிலிருந்து சீன நாட்டின் மரபான வாத்தியகருவி இசைவரை எதையும் விடுவதில்லை. வாசிப்பு- இசை- சினிமா மூன்றும் எனது ஆயுளை நீட்டிக்கத் தேவை. இசையில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கவேண்டிய கட்டுரை.
http://www.musicshaji.blogspot.fr/
—————————————————
இ. நினைவுத் தடங்கள் வே. சபாநாயகம்.
‘நான் இரசித்த முன்னுரைகள்’ தொடரில் திரு. வே.சபாநாயகம், வல்லிக்கண்ணன் தமது கடிதங்கள் தொகுப்பொன்றிர்க்கு எழுதிய முன்னுரையை பதிவு செய்திருக்கிறார். தகவற் தொடர்பு: தொலைபேசி-மின்னஞ்சல் -முக நூலென அருவ நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற இந்நாளில், ஊடகப்பொருள்கள் மட்டுமல்ல அவற்றின் உள்ளடக்கமும் குறுகிவிட்டன. உணர்வுகளை உண்மையிற் பரிமாறிக்கொண்டதுபோக இன்றைக்கு அதே உணர்வுகளை ஓரிருவார்த்தைகளில் உதறிக்கொள்கிறோம் -. இன்றைய வாழ்க்கையின் தன்னலபோக்கினால் விளைந்திருக்கும் கெடுதல். மனித மனங்களை இணைப்பதில் கடிதங்களின் பங்கென்ன என்பதை, பதிவை வாசித்து அறியுங்கள்.
ஈ. மழை -வண்னதாசன்
‘இன்று..ஒன்று..நன்று’ தொடரில், ‘மழை’ குறித்து வண்ணதாசன் எழுதியது அவரது வலைத்தளத்தில் மறு பிரசுரம் கண்டுள்ளது. வண்ணதாசனல்ல, கல்யாண்ஜி முகம் காட்டுகிறார். கடவுளே! இவர்களுக்கு மட்டும் எப்படி இதுபோல எழுத வருகிறதென பலரை நான் பொறாமையுடன் வாசிப்பதுண்டு, வண்ணதாசன் அவர்களில் முதல் வரிசைக்காரர். மனிதர் நிறைய எழுதவேண்டும். எனக்கும் மழை என்றால் மோகம். விரும்பி பலமுறை திரும்பத் திரும்ப வாசித்தேன்.
http://vannathasan.wordpress.com/
————————————————————————–
3. இந்தியா.. இந்தியா
திரும்பவும் இந்தியா செல்லவேண்டியிருக்கிறது, சொந்த வேலைகள், குடும்ப விசேடங்களென காத்திருக்கின்றன. ஏப்ரலில் இந்தியப் பயணமென்று முடிவானதால் அதற்கு முன்னதாக 2012க்கான கணக்கை முடிக்கவேண்டும். வருமான வரித்துறை பொதுவாக மே 1ல் பேலன்ஸ் ஷீட் அனுப்பவேண்டுல், நேரமினமையால் இப்போதே முடித்துவிடலாம் என உட்கார்ந்து இரவுபகலாக செய்யவேண்டியிருக்கிறது எழுத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இடையில் ஒருவாரத்திற்கு இணையத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட தலைவலி, இப்போதுதான் சிறிது மூச்சுவிடுகிறேன். இரண்டு நல்ல சிறுகதைகளை மொழிபெயர்த்து அம்ருதாவிற்கொன்றும், சிற்றேடுக்கு ஒன்றும் அனுப்பியிருக்கிறேன்.
————————————-