பேரன்பு கொண்ட நண்பர் நா.கி அவர்களுக்கு,
வணக்கம் உங்களது அஞ்சல் கண்டு உங்களது வலைத்தளத்தைப் பார்த்தேன்.
புதிய நாவல் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வெளியீட்டு விழா நிகழ்ச்சிப்
படங்களைப் பார்த்தேன். நாவலின் ஒரு சோற்றுப் பதமாக தந்திருந்தையும்
ரசித்தேன். தலைப்பே உள்ளே நுழைந்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.
கிடைக்கும்போது முழு விருந்தையும் சுவைக்க வேண்டும். என் விமர்சனம்
உங்களுக்குத் தூண்டுதலாக இருந்ததை இருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி
தருகிறது. அதன் மூலமாக உங்களது நட்பு கிடைத்ததைப் பேறாகக் கருதுகிறேன்.
முதுமையின் உடல் நலிவால் வெளியூர் செல்ல இயலாமையால் உங்கள விழா
சாக்கில் உங்களையும், மற்ற இலக்கிய நண்ர்களையும் சந்திக்க முடியாது போனது
வருத்தம் தருகிது. மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் இப்புதிய நாவல்
தகுந்த அங்ககீகாரமும் பரிசுகளும் பெறவும் வாழ்த்துகிறேன்.
(பி.கு: எனது இனிஷியல் ‘வே’ – ‘வெ’ அன்று.)
மிக்க அன்புடன்,
சபா.
———————————————————————–
அன்பிற்கும் வணக்கத்திற்குமுரிய திரு வே.சபாநாயகம் அவர்களுக்கு!
உங்கள் கடிதம் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. முதன்முதலில் எனது எழுத்தை எவ்வித முன்முடிவுகளின்றி வாசித்து பாராட்டியவர்கள் நீங்கள். அதை என்னால் மறக்கமுடியாது. இன்றைய தமிழ்ச்சூழலில் பெரும்பாலான புத்தக மதிப்புரைகள் வேண்டியவர்கள் கேட்டுக்கொண்டபடி எழுதுகிறார்கள். எனக்கு அப்படி எழுதப்பட்டவை அல்ல என்பதால் மகிழ்ச்சி. இந்தியா வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்களை பார்க்க வேண்டுமென நினைப்பேன். அங்கே வருகிறபோது இலக்கிய துறைசார்ந்த செயல்பாடுகளில் கவனம் வரமாட்டேன்கிறது. உறவுகள், உள்ளூரிலுள்ள வீடு, பராமரிப்பு, குடியிருப்போர் பிரச்சினைகளென கவனம் சிதைந்துவிடுகிறது.
உங்கள் ஆசிப்படி இந்நாவலும் நெருங்கிய நண்பர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது. கிருஷ்ணப்ப நாயக்கர் நாவல் குறித்து இன்னொரு முகம் தெரியாத நண்பர் வானளாவ புகழ்ந்திருந்தார். கொஞ்சம் அதிகபட்சமாக உணர்ந்ததால் அதைத் தவிர்த்துவிட்டு குறைகளையும் சுட்டிக்காட்டியிருந்த அஜெய் என்ற நண்பரின் மடலை வெளியிட்டிருந்தேன்.
உங்கள் பெயர் முதல் எழுத்தை திருத்திவிடுகிறேன்.
பணிவுடன்
நா.கிருஷ்ணா
நா.கிருஷ்ணா