கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா – 26-01-2013
முதல் நாவல் நீலக்கடல் 2005ல் வெளிவந்தது. தமிழ்ப் படைப்புலகிற்குப் புதியவன் என்ற வகையில், வெளியீட்டுவிழா அவசியமென நண்பர்கள் கூற எனதன்பிற்கும் மரியாதைக்குரிய பிரபஞ்சன் தலைமையில் நடந்தேறியது. பெரிய படைப்பென்று சொல்லமாட்டேன். ஆனாலும் நடுநிலையான விமர்சகர்களின் கவனத்தைப்பெற்றது. திருவாளர்கள் ரெ.கார்த்திகேசு, வே. சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோர் எனக்கு உற்சாகத்தை ஊட்டும் வகையில் எழுதியிருந்தார்கள். நீலக்கடல் நாவலை பாராட்டி எழுதுவதற்கு முன்பு, இவர்களிடம் எனக்குத் தொடர்பில்லை. அவர்கள் பாராட்டுதலை உறுதிப்டுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பரிசும் அந்நாவலுக்குக் கிடைத்தது. மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவது நாவல்- மாத்தாஹரி வெளிவந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்திருந்த கதை, கட்டுரை, கவிதைகளில் தமது தேர்வென பத்து படைப்புகளைக் குறிப்பிட்டிருந்தார், அவற்றுள் மாத்தாஹரி ஒன்று. தொடர்ந்து அந்நாவலையும் திருவாளர்கள் ரெ. கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கி.அ. சச்சிதானந்தம் ஆகியோர் பாராட்டி எழுதினார்கள். தமிழவன் சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் மாத்தாஹரி நாவலை வெகுவாக பாராட்டியிருந்தார். நாவலுக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசு கிடைத்தது.
‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ எனது மூன்றாவது நாவல். என்னைக்காட்டிலும் எனதெழுத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன், ந.முருகேசபாண்டியன், கி.அ.சச்சிதானந்தன், மதுமிதா ஆகியோரை நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தேன். அன்பிற்குரிய திரு.பிரபஞ்சன் அவர்களுக்கு சாரல்விருதுக்கான பாராட்டுவிழாவில் நண்பர் ந.முருகேச பாண்டியன் கலந்துகொண்டதால் அவரால் வர இயலவில்லை. பின்னர் அக்குறை மதுரையில் எங்கள் சந்திப்பால் நீங்கியது. அழைப்பிதழில் போட்டிருந்த விருந்தினர்களின்றி ஆன்றோர்கள் முன்னிலையில் (திருவாளர்கள் லெனின் தங்கப்பா, தேவமைந்தன், முருகேசன், ரமேஷ் பிரேதன், பக்தவச்சலபாரதி, மு. இளங்கோவன், விஜெயவேணுகோபால், இளம்பாரதி, பாலகிருட்டிணன், சந்தியா நடராசன், சங்கர நாராயணன், உதய கண்ணன், அகநாழிகை வாசுதேவன் அவரது நண்பர்கள்… தமிழ் சான்றோர்கள், பிரெஞ்சு பேராசிரியர்களென கலந்துகொள்ள நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. நண்பர் பாவண்ணன் கலந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்த்தேன். அவருக்கும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.
நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் நாயகர், கவிஞர் சீனு. தமிழ்மணி, கவிஞர் பூங்குழலி பெருமாள் அவர் தம் துணைவர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் பல எழுத்தாள நண்பர்கள் விடுபட்டிருக்கலாம் மன்னிப்பார்களாக. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிடினும் உள்ளன்போடு வாழ்த்திய உள்ளங்கள் இருக்கின்றன: பிரான்சு சிவன்கோவிலைச்சேர்ந்த நண்பர் முத்துக்குமரன், என்மீது அளவற்ற அன்புகொண்டிருக்கும் பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் அண்ணாமலை பாஸ்கர், நண்பர் இந்திரன் ஆகியோரை மறந்துவிடமுடியாது. அனைவருக்கும் எனது நன்றிகள்.
‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’க்கு வரவேற்பு எப்படி?
அஜய் என்ற முகம் தெரியாத நண்பர் எழுதியிருக்கிறார்:
—
http://wordsbeyondborders.blogspot.com
நண்பரின் கூற்றுப்படி நன்றாக வந்திருக்கிறதென நினைக்கிறேன். எனது வளர்ச்சிக்குப் பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வை நடராசன், சு. சமுத்திரம், சுஜாதா, இரா.முருகன்- இராயர் காப்பி கிளப், திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்கள் எனக் குறிப்பிடலாம். முக்கியமாக நால்வரை நான் எவ்வளவு வணங்கினாலும் தகும்: மனமாச்சர்யங்களின்றி ‘நீலக்கடல்’ நாவல்மூலம் என்னை அடையாளம் கண்டு எழுதிப் பாராட்டிய திரு. ரெ.கார்த்திகேசு, திரு.வே.சபாநாயகம், திரு.ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோரே அந்த நால்வர். குடத்திலிட்ட இவ்விளக்கை குன்றின்மீது நிறுத்த விழைந்தவர்கள் அவர்கள். மீண்டும் வனங்குகிறேன்.
———————————–
விழாப்படங்கள்
அன்புள்ள நண்பருக்கு உங்களின் “கௌமுதி” வெளியிட்டு விழா செய்திகள், மற்றும் புகைப்படங்களை படித்தும் கண்டும் மகிழ்தேன். அதில் நீங்கள் குறிபிட்டுள்ள “நீலக்கடல்” பாராட்டு விழா பற்றியும் குறிப்பிடுள்ளீர்கள். ஆனால் ஏனோ பிரான்சில் பல தமிழ் சங்கங்கள் ஒன்றாக இணைந்து பிரான்ஸ் சிவன் கோயிலில் நடத்திய “நீலக்கடல்” பாராட்டு விழா பற்றி எழுத மறந்து விட்டீர்கள். இது உங்களின் நினைவிற்கு மட்டுமே.
அன்புடன்
முத்துக்குமரன்.