பிரெஞ்சு மரபுப்படி ‘டிசம்பர் 31’ஐ – Saint Sylvestre’ என்று அழைப்பார்கள். நண்பர்களும் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டாடுகிற இரவு விருந்துக்கு ‘La Réveillon de Saint-Sylvestre’ என்று பெயர். எனது பெற்றோருடன் இருந்தவரை அதிரசமில்லாமல் தீபாவளியைக் கொண்டாடியதில்லை. (பிரான்சுக்கு வந்த பிறகு ஞாபகப்படுத்தினால், பாகு பதம் வரவில்லையென்று அரிசிமாவையும் வெல்லத்தையும் கையிற்கொடுக்கிறாள் மனைவி) தமிழ்நாட்டைப் பொருத்தவரை திபாவளிக்கு அதிரசம் முக்கியம் அதுபோல பிரெஞ்சுக்காரர்களுக்கு டிசம்பர் 31 இரவு விருந்து சாப்பாட்டிற்கு ஷாம்பெய்னும் – வாத்து ஈறலும் ( Foie -gras), தவிர்க்க முடியாதவை.
அவவருடத்திலேயே ஆடம்பரமான விருந்தை குடும்பத்துடன் சாப்பிடுவதில் ஆரம்பித்து – நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நடனம் ஆடுவதென்பது வரையிலான சடங்குகள் அதிலுண்டு. டிசம்பர் 31 அன்று நள்ளிரவு 12மணிக்கு விருந்தினர்கள், உறவுகள், நண்பர்கள் ஒருவர்க்கொருவர் முத்தமிட்டு புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதென்பது பிரெஞ்சு மரபு. புதுவருடத்தின் முதல்நாள் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வார்கள். ஜனவரி 6வரை பொதுவில் நீடிக்கும் இக்காலத்தை ‘Épiphanie’ என அழைக்கிறார்கள்.
அதன் முடிவில் ‘ La Galette des rois’ என்ற இனியப்பம் வாங்கிச் சாப்பிடுவார்கள்.
————————————————————-