புத்தகத்தைப் பிரித்தால் கொட்டாவி வருகிறதா? அதுதான் இலக்கியம் எனச்சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். நேற்று வர்ஜீனியா உல்பும், இன்று கிளேஸியோவும் எனக்கு சில நேரங்களில் வாசிப்பு அலுப்பைத் தருகிறார்கள், இருந்தாலும் சில காரணங்களுக்காக வாசிக்கிறேன். தாலிகட்டிய மனைவியை வேடிக்கை பார்க்கவா முடியும். வாசகர்களிடத்தில் இவர்களைப்போன்றவர்களுக்குக் கொஞ்சம் பரிவும் இரக்கமும் இருந்திருக்குமென்றால் கூடுதலாகக் கொண்டாடப்பட்டிருப்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பார்க்க வேறொரு கேள்வியையும் எழுப்பவேண்டியவர்களாக இருக்கிறோம். உண்மையிலேயே நல்ல நூல்கள் அனைத்துமே அலுப்பைத் தருகின்றனவா? இல்லை, என்கிறார் கென் ·போலெட்.
கென் போலெட் (Ken Follet)ஆங்கில நாவலாசிரியர். வரலாற்று புனைவுகளை விறுவிறுப்பான மொழியில் எழுதக்கூடியவர். கென் போலெட் நூல்களின் விற்பனை சாதனையை விக்கிபீடியாவில் வாசித்த போது தலைச் சுற்றியது; இதுவரை 100 மில்லியன்கள் விற்று தீர்ந்திருக்கிறதாம். அவருடைய நான்கு நூல்கள் நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிகம் விற்பனையாகும் நூல்கள் வரிசையில் முதலிடம் பிடித்தனவாம். எனக்கு இன்னமும் ஆர். எல். ஸ்டீவன்சனின் The Black Arrow அவ்வகையில் மிகப் பிடித்தமான நாவல். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, ஆங்கில துணைப்பாடத்தில் எங்களுக்கிருந்தது. அந்நாவலில் பெரிதும் ஈர்க்கப்பட்டு பின்நாளில் நாவல்கள் வாங்கி படிக்க ஆரம்பித்த பொழுது, கல்லூரி நாட்களில் விரும்பிப்படித்த அலிஸ்ட்டெர் மக்லின் போன்றவர்கள்கூட திருப்தி அளிக்கவில்லை.
கென் போலெட்டை பொறுத்தவரை “நல்ல நால்களென்றாலே வாசகனுடைய பொறுமையைச் சோதிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை”. உயர் நிலைப்பள்ளியில் படித்தபோதும் சரி, பின்னர் கல்லூரில் சேர்ந்துபடித்தபோதும் சரி ஒரு சில ஆசிரியர்களை விரும்பியிருக்கிறேன், ஒரு சில ஆசிரியர்களை விரும்பாமலிருந்திருக்கிறேன். காரணம் அந்த ஆசிரியர்களேயன்றி நானில்லை. மிகக்கடினமான பாடங்களையும் எளிதாய்ப் புரியவைத்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள். மிக எளிதானப்பாடங்களையும் விளக்கெண்ணெய் வைத்தியர்களாக அவதாரமெடுத்து வகுப்பைத் தூங்க வைப்பவர்களும் இருக்கிறார்கள். கென்போலெட் இளைஞராக இருந்தகாலத்தில் ஆலிவர் ட்விஸ்ட் தொடராக வந்திருக்கிறது. பில் சைக்ஸ் நான்சியைத் துன்புறுத்துவதாக ஒரு அத்தியாத்தில் முடிந்தது. மறு அத்தியாயத்துடன் அத்தொடர்வந்த இதழ்கள் நியூயார்க் துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கியபோது நான்சியின் தலையெழுத்தை அறியவதற்காக ஒரு பெருங்கூட்டம் காத்திருந்ததாம். ஆலிவர் ட்விஸ்டு அதன் பெயருக்கேற்ப பல திருப்பங்களை கொண்டதாகச் சொல்லப்பட்டிருப்பினும், அந்நூல் தெரிவிக்கும் உண்மையை மறுக்க முடியாதென்கிறார் கென் போலெட். உலகின் மிகப்பெரிய நாவலாசிரியர்களென ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறவர்கள் அனவருமே மனநெகிழ்வைத் தரும் சம்பவங்களை வாசகர்களுக்கு ஏற்படுத்தித் தருவதை ஒரு விதியாகக் தங்கள் எழுத்துக்களில் கொண்டிருந்திருக்கிறார்கள். உலகில் எந்த எழுத்திற்கும் இது பொருந்தும்.
ஆங்கிலத்தில் Soap Opéra என்ற சொல்லுண்டு. ஒப்பேரா என்கிற இசை நாடகங்களில் அக்காலங்களில் இடையில் சோப்பு விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டாம். அம்மாதரியான ஒப்பேராக்கள் அதிகம் மெலொடிராமாக்களாக இருப்பதுண்டு. தமிழ் தொலைகாட்சிகளில் வரும் தொடர்களைப்போல. எனவே Soap Opéra க்களெனில் பெண்களை மூக்கைச் சிந்தவைக்கிற வகையில் கதைசொல்லப்படுவது. நளதமயந்தி, அரிச்சந்திரன் கதை, நல்லதங்காளென நமக்கும் அனுபவங்கள் உண்டு. இராமயணத்தையும் மகாபாரதத்தையும் இத்தனை காலம்கடந்தும் வாசிப்பதற்கும், வடிவங்கள் எதுவாயினும் அது வெற்றிபெறுவதற்கு இச் சூத்திரமே அடிப்படை.
இது எப்படி நிகழ்ந்தது, எதனால் மெலொடிராமாக்கள் வெகு சனமெனப்படுகிற பெருவாரியான மக்களை ஈர்க்கின்றன? இங்கிலாந்து அரசாங்கம் எல்லோருக்கும் கல்வியென 1870ல் ஒரு சட்டத்தைக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட அதுமாதரியான சட்டம் அமெரிக்காவிலும் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. இவற்றின் விளைவாக நாட்டில் கல்விகற்றோர் எண்ணிக்கை பெருக, புனைவுகளுக்குப் பெரும் எண்ணிக்கையினாலான வாசகச் சந்தை திறக்கிறது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்ற பங்குதார்களைக்கொண்ட வாசிப்புலகம் இப்புதிய தாக்கத்தால் இரண்டாகப் பிளவுபடுகிறது: பழைய வாசகர்கள் ( மேட்டுக்குடி வாசகர்கள்) தங்களை அறிவார்ந்த வாசகர்களென அழைத்துக்கொண்டு கனத்தப் புத்தகங்களைத் தேடி வாசித்தார்கள். புதிதாகக் கல்விபெற்ற பெரும் எண்ணிக்கையிலான வாசகர்கள், பரபரப்பூட்டுகிற கிளர்ச்சியூட்டக்கூடியவற்றை தேர்வு செய்தார்கள். முதல் வகையினர் தங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, தாங்கள் மேன்மக்கள் என்று சொல்லிக்கொள்ளவும் பெரும் எண்ணிக்கையான மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ளவும் சில நூல்களை தேர்வுசெய்துவாசித்தனர். இப்பிரிவினால் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டார்கள் என்கிறார் கென் பொலெட்.
இதன் விளைவாக புனைவுகளில் கதைமாந்தர்கள் இடத்தை கதை பொருட்கள் அபகரிக்கின்றன. ராபின்சன் குரூசோ இடத்தில் உதாரணத்திற்கு டைட்டானிக் கப்பல். ஜேம்ஸ் ஜாய்ஸின் உல்லிசெஸ¤க்குபிறகு, புற உலகு, சமூகம் எனற அக்கறைகள் வலுவிழந்து, நுணுகி ஆயும் தன்மையும், உண்முக நோக்கும் கவனம் பெறுகின்றன. இது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று இலக்கியமெனச் சொல்லப்படுபவை எளிய மனிதனின் வாழ்க்கைப்போராட்டங்கள், நெருக்கடிகள், சிக்கல்கள் இவற்றைக் கணக்கில்கொள்ளாது தள்ளி வெகுதூரத்தில் நிற்கின்றன. ஒருநல்ல இலக்கியம் இரண்டிலும் கால் ஊன்ற தெரிந்திருக்கவேண்டும். பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களிடமும் போய்ச்சேரவேண்டும். நன்றாகவும் எழுதப்படவேண்டும். நல்ல எழுத்துக்கள் நடுத்தர எளிய மக்களை சென்றடையவேண்டாமா? வேண்டும். அவ்வாறே புத்திஜீவிகளுக்குமட்டுமே எனச்சொல்லிக்கொள்கிற எழுத்துக்களிலும் சிறிது கவனமெடுத்து கதைக்களன், கதை சொல்லல், சிறிதளவு கிளர்ச்சி, கொஞ்சம் பரபரப்பு என்றமைத்துக்கொள்வதால் என்ன குடிமுழுகிப்போய்விடும்? சாலமன் ருஷ்டி, குந்தர் கிராஸ், உப்பர்ட்டோ எக்கோ போன்றோர் சாதிக்கவில்லையா? தமிழிலும் உதாரணங்களுண்டு.
——————————————