தாதாயிஸம் – மீயதார்த்தவாதம் சந்திப்பு

சுவிஸ் -ஜெர்மன் எல்லைக்கருகே பிரான்சின் தென்கிழக்கிலுள்ள சிறு நகரம் சேன் லூயி (Saint Louis). பல நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் மாநகரம் எனக்கூறப்படுவற்றோடு நம் கிராமங்களையோ அல்லது நகரங்களையோ இணைத்துப் பார்க்கவியலுமா என யோசிப்பதுண்டு. விவசாயம், குறைவான மக்கட்தொகை இவைதான் கிராமத்திற்கான அடிப்படை  இலக்கணமெனில், உலகில் எங்கிருந்தாலும் கிராமமே. மக்களின் வருவாய், போக்குவரத்து, சுகாதாரம், வாழ்க்கை வசதிகள் எனப்பார்க்கிறபொழுது மேற்கத்திய கிராமங்கள் வேறுபடுகின்றன. நான் வசிக்கும் ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து சேன் லூயிக்குச்செல்ல அதிகபட்சமாக ஒன்றரைமணி நேர வாகனப்பயணம், இரயிலென்றாலும் பயண நேரமென்பது அவ்வளவுதான். கடந்த சில மாதங்களாக திடீரென்று இந்நகரத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். மனித உறவுகள்போல சில நேரங்களில் ஊர்களுடனான சந்திப்பும் நேருகிறது. ஆர்வத்தோடு பழகுகிறோம். சந்திப்பின் தொடக்கத்தில் மனிதர்களைப் போலவே ஊர்களும் அலுப்பதில்லை. சேன்-லூயி நகரத்துடன் முகமன் கூறவும் பின்னர் தொடர்ந்து உரையாடி மகிழவும் காரணமாக இருந்தவள் இளைய மகள். உயிர்வேதியியலை முடித்திருந்த எனது இளையமகளுக்கு கடந்த நவம்பர் (2011) மாதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கே வேலைகிடைத்திருக்க சேன்-லூயி நகருக்கு மாதத்திற்கொரு முறையேனும் செல்லவேண்டியிருக்கிறது. இரு கிழமைகளுக்கு முன்பாக அங்கு சென்றபோது செய்தித்தாளில் ஒரு விளம்பரம்: ‘·பெர்னெ -பிராங்க்கா’ சமகால ஓவியகூடத்தில் (Fernet -Branca Espace D’art Contemporain) “Chassé-Croisé : Dada- surréaliste 1916-1969 ஜனவரி-15 – ஜூலை 1 -2012 என விளம்பரப்படுத்தியிருந்தார்கள். “தாதா – மீயாதார்த்தச் சந்திப்பு அல்லது சங்கமம் – என்ற பெயரில் நடை பெற்றுக்கொண்டிருந்த ஓவியக் காட்சியைப்பற்றி அதில் பேசப்பட்டிருந்தது.

“Chassé-Croisé” என்ற சொல்லுக்கு பரிவர்த்தனை, சந்திப்பு என்று பொருள்கொள்ளலாம். தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் படைப்பிலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளிலும் புது முயற்சிகளில் இறங்கியதை அனைவரும் அறிவோமென்றாலும் ஓவியமும் சிற்பமுமே கூடுதலாக கவனம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை மொத்தம் 98 கலைஞர்களின் 300 படைப்புகள் தகவல் உபயம் நுழைவாயிலில் பார்வையாளருக்கென வழங்கப்பட்ட பிரசுரம். இப்படைப்புகள் அனைத்தும் பாரீஸைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்குச் சொந்தமென அங்கிருந்த பெண்மணி கூறினார். விலைமதிப்பற்ற ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தவர்கள் (கட்டணம் 7 யூரோ) தங்களை இன்னாரென்று காட்டிக்கொள்ள விருப்பமில்லையாம். வெளியே வந்தபோதுதான் எண்ணிப்பார்க்காதது ஒரு குறையாக உறுத்தியது. ஒரு வசதிக்காக மொத்தம் 300 படைப்புகள் என்று கணக்குவைத்துக்கொண்டே தொடருகிறேன். இம்முன்னூறு படைப்புகளையும் ஒன்பது கூடங்களில் பிரித்து காட்சிபடுத்தியிருந்தார்கள். தாதாக்களில் ஆரம்பித்து மீயதார்த்தவாதிகளின் ஓவியங்கள் சிற்பங்கள் என்று ஒரு பிரிவு. மாயை -புதிர் என்கிற Esotericism வகைசார்ந்த ஓவியங்கள் எனும் பிரிவும் அங்கே இருந்தது. பின்னர் நிழற்படங்களில் புதுமைகளை சாதித்தவர்களின் படைப்புகளும் இருந்தன.

 கபாரே வொல்த்தேர் :

தாதா இயக்கம் உருவான இடம் கபாரே வொல்த்தேர் (Cabaret Voltaire). கபாரே என்னும் சொல்லுக்கு இரவு கேளிக்கைக்கான இடமென்று பொருள். சுவிஸ்நாட்டில் ஜூரிச் நகரில் கிழடுதட்டியிருந்த மரபுகளில் ஆயாசப்பட்டுக்கிடந்த இளம்கலைஞர்களில் சிலர் இரவு நேர பார்களில் அவவப்போது நுழைந்து விடியவிடிய குடித்து கூத்தடித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். தங்கள் குழுவுக்கு ‘கபாரே பந்த்தாகுருவெல்’ என ஆரம்பத்தில் பெயரிட்டிருந்தனர். பந்தாக்குருவெல் பிரெஞ்சுக் கவிஞர் ரபலெ கவிதையில் வருகிற ஒரு குண்டோதரன். இப்பெயர் கூட பின்னாளில் அலுத்திருந்தது. சோதனைபோல முதல் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்க போர்க்கால அவலங்களுக்கு  சாட்சிகளாக இருப்பது இளம் கலைஞர்களின் மனதைப் பிசைந்தது.  1916ம் ஆண்டு பனி கொட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு பிப்ரவரி மாதம் தேதி 5, இளம் கலைஞர்கள் ஒரு குழுவாக ஜூரிச் நகரின் வீதியில் இரவு விடுதி ஏதேனும் திறந்திருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ‘பப்’ திறந்திருக்க நண்பர்கள் கூட்டம் நுழைந்தது.  யுகொ பால்  என்ற இளைஞர் ‘பப்’ பின் முதலாளியிடம், “நண்பர்களுடன் வந்திருக்கிறேன், எங்களுக்கு மட்டும் தனியாக ஓர் கூடமிருந்தால் அரட்டை அடிக்க வசதியாயிருக்கும், பிறவாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இருக்காது”, என்றிருக்கிறார். முதலாளி யோசித்தார், “பின்பக்கம் சிறியதொரு இடமிருக்கிறது, வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னை குறைசொல்லகூடாது”, என திறந்து விட்டிருக்கிறார். அவ்விடத்திற்கு, “கபாரெ வொல்த்தேர்” என்று பெயர் சூட்டினார்கள் நண்பர்கள். பிரெஞ்சு தத்துவாதியான வொல்த்தேர் பெயர் அவர்களுக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் தாதா என்ற பெயரை அதே இடத்தில் மூன்றாம் நாள் அறிவித்து கொண்டாடுவோமென அவர்கள் அப்போது நினைக்கவில்லை.

தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் [1916 -1960]

முதல் உலகப்போரின்போது தாதா(Dada)க்கள் என அழைத்துக்கொண்டவர்களுக்கும் அறுபதுகளில் தங்களை மீயதார்த்தவாதிகளென அழைத்துக்கொண்டவர்களுக்கு முள்ள வேறுபாடு மயிரிழைதான். முதல் உலகப்போரும் அதன்  விளைவுகளும் ஐரோப்பிய மண்ணிலும் அம்மக்களின் வாழ்வாதாரங்களிலும் ஏற்படுத்தியிருந்த சிதைவுகள் அலட்சியப்படுத்தக்கூடிதல்ல. பாதித்திருந்த கலைஞர்களில் ஒரு பிரிவினருக்கு ஆதிக்க அரசியல் காயப்படுத்திய மானுட இனத்திற்கு அவசர சிகிச்சை, காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது. தங்கள் அபயக்குரலுக்கு மேடை தேடிகொண்டிருந்தகாலம் அது. தங்களின் இம்முயற்சியை சிறுபிள்ளைத்தனமான, வரம்பு மீறிய, எள்ளலுக்குறிய, குறுப்புத்தனமானதென்று கூறிக்கொள்ளும் துணிச்சலும் அவர்களுக்கிருந்தது. இக்கலைஞர்கள் வரம்பற்ற சுதந்திரத்தைக் கனவு கண்டவர்கள். அவர்களுடைய கனவை நனவாக்க கைக்குக்கிடைத்தன வற்றையெல்லாம் படைப்பாக மீட்டெடுத்தனர். தாதா இயக்கம் பிறந்தது. பிறந்த ஆண்டு 1916. கவிஞர்கள் யுகோ பால் ( Hugo Pal), திரிஸ்டன் ஸாரா (Tristan Zara); ஓவியர்கள் ழான் அர்ப் (Jean Arp), மர்செல் ழான்கோ (Marcel Janco), சோபி டபர் அர்ப் (Sophie Tauber Arp – இவர் ழான் அர்ப்பின் மனைவி)  ஆகியோர் இணைந்து செய்த புரட்சியென கூறவேண்டும். ஜூரிச்சில் ‘Spiegelgasse’ என்ற மதுச்சாலையில் மரபுகளுக்கு எதிரான தங்கள் கலகக்குரலை பதிவு செய்தார்கள். கலை, கல்வி, இலக்கியத்தில் பயணம் செய்தவர்களை வழமையான பாதையிலிருந்து விலக்கி கண்களை மூடிக்கொண்டு திசையின்றி பயணிக்க இந்த இளைஞர்கள் ஊக்குவித்தார்கள்.

மழலை மொழியில் ‘தாதா’ (Dada) என்றால் குதிரை   இவர்கள் தூரிகையை கையில் பிடித்தவர்கள்.   தங்கள் படைப்புக்கே பொருள் தேடவேண்டாம் என்றவர்கள், ‘தாதா’வென தங்கள் கலைபுரட்சிக்கு பெயரிட மழலைகளின் ‘தாதாவை’ தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது. முதன் முதலாக இயக்கத்திற்கு பெயர்வைக்கதீர்மானித்தவர்கள், அகராதியை புரட்டினால் என்ன பெயர் கண்ணிற் படுகிறதோ அதனை வைப்பதென முடிவெடுத்தார்கள். ‘தாதா’ என்ற சொல் கண்ணிற்பட ‘தாதா’ இயக்கம் பிறக்கிறது.

“தாதா இயக்கத்தின் படைப்புகளுக்கு பொருள்தேடும் முயற்சிவேண்டாம், அதற்காக பொருளற்றதெனவும் எண்ணவேண்டாம். இயற்கையைப்போல இதுதானென தாதாவுக்கும் பொருள்கொள்ளமுடியாது. ஆக தாதா  சுயமான, மரபுக்கு எதிரான கலை”, என்றார் ழான் அர்ப். ஓவியர், சிற்பி, கவிஞரென மூன்று அவதாரங்களை எடுத்தவர் இவர். பிறந்தது வாழ்ந்தது, ஓவியம் பயின்றதென மூன்றும் ஸ்ட்ராஸ்பூர் நகரை மையப்படுத்தியது.

” தாதா’ என்பதற்கு ஒரு பொருளுமில்லை(Dada ne signifie rien)- அவன் வழிவழியாய் நிலவிவரும் நெறிகளுக்கும், பொதுவில் பலரும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கும் பகைவன். இதுதான் நெறியென்ற வழி காட்டுதலுக்கு எதிரானவன். தாதா எனில் கேலிகூத்து என்பதோடு, பதின்பருவத்தினரின் சகிக்கவொண்ணா வலியுமாகும்.. .என்கிறார் திரிஸ்த்தன் ஸாரா

தாதாக்களுக்குப் பிறகு வேறுவகையாகக் கலகக்குரல்கள் கேட்டன. அவர்கள் மீயதார்த்தவாதிகள் எனத் தங்களை அழைத்துக்கொண்டபோதும், இரு தரப்பினருமே மரபுகளுக்கு எதிராவனவர்கள்.  இவர்களுக்கு கலையென்பது எதார்த்தத்தை பிரதிபலிப்பதுமட்டுமல்ல, கனவுகளைத் தீட்டுவது. பரவசம், வியப்பு, தற்செயல்களால் கட்டமைக்கப்படுவது. மீயதார்த்தவாதத்தின் நதிமூலம் தாதா இயக்கம். தாதா இயக்கத்திற்கு ஜூரிச் பிறப்பென்றால் மீயதார்த்தத்திற்கு பாரீஸ் பிறந்த மண். தாதா இயக்கம் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது உருவானதெனில், மீயதார்த்தவாதம் யுத்தம்முடிந்தபின்னர் உருவாயிற்று. இரண்டுக்குமே யுத்தம் அடிப்படையான காரணம்.

மீயதார்த்தவாதம் அகராதியில் அதுவரை இடம்பெற்றிராத சொல். பிரெஞ்சு கவிஞர் அர்த்துய்ர் ரெம்போ சிந்தனையிலுதித்த புதிய படைப்புக் கருத்தியத்தின்( ஒவ்வொரு பொருளுக்கும் வேறு முகமுண்டு) அடிப்படையில் 1917ம் ஆண்டு பிக்காஸோவின் கற்பனையிலுதித்த ஓவியங்களைக் கண்ட மற்றொரு பிரெஞ்சு கவிஞரான அப்பொலினேர் அவைகளை மீயதார்த்தவகை படைப்புகளென வர்ணிக்கிறார். ஆனால் மீயதார்த்தத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் மற்றொரு பிரெஞ்சு கவிஞர் பெயர் ஆந்தரே பிரெத்தோன்(‘André Breton).

இலக்கியம் என்னும் இதழில் 1922ம் ஆண்டு ஆந்தரே பிரெத்தோன் எழுதுகிறார்: “தாதா இயக்கமென்றில்லை- இனியெதுவுமே நமக்கு வேண்டாம், எல்லாவற்றையும் கைகழுவுவோம்”.  ஆனால் பிரெத்தோன் இம்முடிவினை எடுக்க பலகாலம் காத்திருந்திருக்கிறார். ஆண்டுகள் பலவாக அவரிடைய இலக்கிய பிதாக்களில் சிலர் மெல்ல மெல்ல இம்மாற்றத்தை அவர் மனதில் விதைத்துவந்திருக்கிறார்கள். மீயதார்த்தவாதம் என்றதும் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்குவருகின்றன. முதல் உலகப்போரின் சூத்திரதாரியான கிய்யோம் (ஆங்கிலத்தில் வில்லியம்) கெய்சர் என்கிற ஜெர்மன் முடியாட்சியின் இறுதி வாரிசு ஒருவரெனில் மற்றவர் கிய்யோம் அப்பொலினேர் என்னும் பிரெஞ்சு கவிஞர். முதல் உலகப்போர் ஜெர்மன் நாட்டின் தோல்வியில் முடிய, கிய்யோம்  கெய்சர் 1918ம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகுடத்தைத் துறக்கிறார். அதேதேதியில் பாரீஸ் நகரில்,  புல்வார் சேன்-ழேர்மன் வீதியில் 202 எண் இல்லத்தில் போரின்போது தலையில் குண்டுடடிப்பட்டிருந்த கியோம் அப்பொலினேர்  உயிர் துறக்கிறார். இறந்த போது கவிஞருக்கு வயது 38. ஜெர்மன் கிய்யோம் கெய்சர் வீழ்ச்சியைக் கொண்டாடிய பிரெஞ்சு மக்கள் தங்கள் கவிஞர் கியோம் இறந்திருப்பதை அறியாமலேயே  “கியோம் ஒழிந்தான்” என மகிழ்ச்சிபொங்க பாரிஸ் நகரவீதிகளில் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவத்தையே ஒரு மீயதார்த்த காட்சியாக சித்தரிக்கலாம். யுத்தத்தின் முடிவில் வெற்றியை கொண்டாடவோ, பழிவாங்கும் உணர்வோ கவிஞர் அப்பொலினேருக்கு இல்லை. கவிதையொன்றில்:

“வெற்றியென்பது/ தொலைநோக்கும்/ அண்மித்த  பார்வைக்கும் உரியது/ அதுவன்றி / இவற்றிர்க்குப் புதிதாய் / ஒரு பெயருமுண்டு”. எனக் குறிப்பிடுகிறார்.

‘Les Mamelles de Tiresias’ என்ற நாடகத்தின் முன்னுரையில் அப்பொலினேர், “மனிதன் தான் ‘கால்களால்’ நடப்பதை வேறுவகையில் வெளிப்படுத்த விரும்பியபோது, தோற்றத்தில் கால்களைப்போன்றிராத சக்கரங்களை உருவாக்கினான். மீ எதார்த்தத்தை அறியாமலேயே, மனிதன் அதனை நடைமுறைபடுத்தினான்” என்கிறார். வெற்றிகுறித்து கவிஞர் அப்பொலினேரின் கருத்தியத்திற்கு வலுவூட்ட இளைஞர்களில் சிலர் முன்வந்தனர். அவர்களில் இருவர் – ஆந்தரே பிரெத்தோன், பிலிப் சுப்போ. கவிஞரை ‘·ப்ளோர் கபே’ என்கிற சிறுவிடுதியில் அடிக்கடி சந்திப்பது இவர்களின் வழக்கம். அப்பொலினேர் இறந்தைக் கேள்விப்பட்டதும் பிரெத்தோன் தனது நண்பரும் கவிஞருமான லூயி அரகோனுக்கு எழுதுகிறார்:

ஆனால் கியோம்/அப்பொலினேர்/  சற்றுமுன் இறந்தாரென்று அந்த ஹைக்கூ வடிவம்பெற்றிருந்தது. இக்கவிதையில் மீயதார்த்தத்தின் தோற்றுவாயும் எழுதப்பட்டிருப்பதாக படைப்பிலக்கியவாதிகள் கூறுகிறார்கள். அப்பொலினேர் மீயதார்த்தவாதமென்ற சொல்லுருவாக்கத்தின் தந்தையெனக் கருதப்படினும் அவருடைய கவிதைகள் மரபுகளிலிருந்து விடுபடாதது முரணாகக்கொள்ளப்பட்டது. அவரது இறப்பு சீடர்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மீயதார்த்தவாதம் பிறக்கிறது. குருவின் இறப்பு சீடர்களுக்கு மீயதார்த்தத்தை முன்னெடுத்துசெல்ல கிடைத்த சமிக்கை. அரகோன் (Louis Aragon), பிரெத்தோன், சுப்போ (Philipe Soupault) ஆகிய மூவர் கூட்டணியோடு எலுவார் (Eluard) என்பவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நால்வரும் இருபத்தைந்து வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் உலகபோரில் பங்கெடுத்தவர்கள். அந்நேரத்தில் நாட்டிலிருந்த படைப்பாளிகள் பலரும் தேசியம், காலனி ஆதிக்கம், இனவெறி என்றபொருளில் கவனம் செலுத்த  “மனித மனத்தின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட களங்கம் ஏதுமற்ற தானியங்குமுறையில் தெரிவிப்பது” (Manifeste du surréalisme -1924) என மீயதார்த்தத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

மீயதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ‘ அழகான சடலம்’ (cadavre exquis) என்ற ஒன்று போதும்.  இவ்விளையாட்டின்படி ‘அடுத்தவர் வாக்கியம் பற்றிய அக்கறையின்றி எதையாவது எழுதி பின்னர் ஒன்று சேர்த்தல்.’ இலக்கியம், ஒவியம் அனைத்து பரிமாணங்களிலும் அழகான சடலம் அடையாளம்பெற்றது. பிற இயக்கங்களைப்போலவே மீயதார்த்தவாதமும் முடிவுக்குவந்தது. அம்முடிவு எப்போது எப்படி நிகழந்ததென்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. ஒருமித்த கருத்துகளில்லை. உலகெங்கும் மீயதார்த்த அடிச்சுவட்டில் வேறு இயக்கங்கள் தோன்றவும் செய்தன. ஆனால் ஆந்தரே பிரெத்தோன் இறந்தபிறகு மீயதார்த்தவாதம் அநாதையாயிற்று.

இவ்வியக்கங்களில் தீவிரமாக பெண்களும் பங்கேற்றிருக்கின்றனர். அவ்வகையில் அன்று 16 பெண்களின் ஓவியங்களை காணமுடிந்தது. ஆண் படைப்பாளிகளுக்கு ஈடான புகழை அவர்கள் எட்டவில்லையென்றாலும் அவர்களின் படைப்புகள் ஆண்களின் படைப்புக்கு சற்றும் குறைந்தவையல்ல. குறிப்பாக ஜேன் கிரேவ்ரோலின் (Jane Gaverolle) Le Démon Mesquin’ (குட்டிச்சாத்தான்), போனா (Bona Tibertelli de Pisis) என்பவரின் Le Chef d’Etat (அதிபர்) முக்கியமானவை.

சேன்- லூயி கண்காட்சி ஏழு கூடங்களில்: 1. குறிப்பிடத்தக்கவை 2. தொடரும் தாதாக்கள், 3 ஆரம்பகால மீஎதார்த்தவாதிகள் வட்டம் 4. வட்டத்தின் வளர்ச்சி 5. சித்தர் மனநிலை, 6. நிழற்படங்களில் மீயதார்த்தம் என பல்வேறுதலைப்புகளில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தார்கள்.

இறுதியாக போட்டோகிராம் (Photogram) என்ற பெயரில்  மீயதார்த்தவாத நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 1922ம் ஆண்டு மன் ரே (Man Ray) என்ற கலைஞர் ஒரு புனல், அடுக்களையில் உபயோகமாகும் ஒரு அளவைக் கோப்பை, ஒரு வெப்பமானி ஆகிய மூன்றையும் நீரில் நனைத்த ஒளியுணர் காகிதத்தின்( Papier sensible) மீதுவைத்து மின்விளக்கை ஏற்ற அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிடைத்திருக்கிறது அந்நிகழ்விற்கு ‘Rayo Gramme’ என்று பெயரும் வைத்திருக்கிறார். அவருக்குப்பின் பலர் அம்மாதிரியான அரிய காட்சிகளை தங்கள் புகைப்படக்கருவியின் உதவி கொண்டு எடுக்க பல நல்ல படைப்புகள் கிடைத்துள்ளன.

அல்பெர்ட்டொ சவினோவின் (Alberto savino) ‘ஈடன்'(Paradis Terrestre-1828), ஜார்ஜோ டெ சிரிக்கோ(Georgio de Chirico)வின்  ஒரு புறப்பாட்டின் புதிர் (Enigme d’un départ- 1920), ஹன்ஸ் ரிஷ்ட்டருடைய (Hans Richter) மினுமினுப்பு (Eclat-1960); ஆந்தரே மஸ்ஸோன் (André Masson) வரைந்த மீன்கள் (Les Poissons -1923), ஸ்டான்லி வில்லியம் ஹேட்டர்(stanley william hayter) படைப்பில் ‘ஓட்டம்'(Runner -1930), வில்பிரெடு லாம் (Wilfredo Lam) என்பவருடைய ‘உருவம்’ (Figure- 1939), ஜாக் ஹெரால்டுவின்(Jacques Hérold) ‘பெண்மணி'(La Femmoiselle-1945) ஆகியவை முக்கியமான படைப்புகளில் சில.

கட்டுரையின் தொடக்கத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சேன் லூயி ஒரு சிறிய நகரமெனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே வந்திருந்த பார்வையாளர்கள் மிகக்குறைவு. தவிர ஜனவரியில் ஆரம்பித்து ஜூலைமாதம்வரை ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும், குறைவான பார்வையாளர்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எண்ணிக்கைக் குறைவான பார்வையாளர்களுக்கிடையே நான் ஒருவன் மட்டுமே அந்நியன். ஓவியங்களுக்கு காவலிருந்தவர்கள், எங்கு சென்றாலும் என்னையே தொடர்ந்து வந்ததைபோல இருந்தது. வெளியேறும்போது என்சட்டைப் பையை திறந்துகாட்டி ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை, திருப்தியில்லையெனில் எதற்கும் ஒருமுறை நன்றாகச் சோதனையிட்டுக்கொள்ளுங்ககளென்று கூறியபோது காவலாளியின் உதட்டில் வழிந்த முறுவல் கூட மீயதார்த்தவகை சார்ந்ததுதான்.

நன்றி: காலச்சுவடு

——————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s