“கடுமையாக உழைக்கவும் பொறுமைகாக்கவும் உள்ளுணர்வுகள்மீது நம்பிக்கைவைத்து பொய்யான அச்சங்களை தவிர்க்கவும் முடிந்தால் எவர் ஒருவரையும்போல கூடுபாய என்னால் முடியும்”- கேல் காட்வின்
கேல் காட்வின் ( Gail Godwin) எழுத்தாளர் அதாவது வெற்றிகரமான எழுத்தாளர் (சிறுகதைகள், நாவல்கள்). அவரது நாவல்கள் கவனத்திற்கொள்ளும் அளவிலும், விற்பனையில் சாதனைபடைத்தவைகளாகவும் இருக்கின்றன. கேல் காட்வினுடைய ‘A mother and two daughters, The Odd woman, இரண்டு நூல்களையும் சந்தர்ப்பம் அமைந்தால் வாசியுங்கள். கருவறைக்குச்சென்று பெண்களை தரிசிப்பீர்கள். அம்முகங்களில் ஒளிரும் கருமையிலும், இறுக்கத்திலும், உதடுபூக்கும் பார்வையிலும், இருபுருவருங்களிக்கிடையில் நெளியும் கேள்விகளிலும் பார்வையைத் திருப்பாது அவதானித்தால் பெண்ணென்ற ஜீவனின் முழுதரிசனத்திற்கு வாய்ப்புண்டு. தமது எழுத்தில் உருப்பெறும் பாத்திரங்களாகக் கூடுபாயும் திறனை, பத்து பன்னிரண்டு வயதிலேயே தாம் பெற்றிருந்ததாக கேல் தெரிவிக்கிறார். இளம்வயதிலேயே எழுத்தில் உயிர்ப்பிக்க நினைக்கும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறும் மோடிவித்தை எளிதாகக் கூடிவந்திருக்கிறது: மனைவிக்குத் தலையாட்டும் கணவன், கவனிப்பாரற்ற பணக்கார சிறுவன், உல்லாசமாகச் சுற்றித் திரிந்த நாயொன்றின் சொந்த அனுபவமென்று எதையும் அதனதன் இடத்திலிருந்து சொல்ல அவருக்கு சாத்தியமாகிறது.
பதின் வயதை எட்டியபோது வேறொரு அனுபவம். அது பொதுவாக சுயபுரிதலுக்கு உதவத்தொடங்கும் வயது. அன்றி தன் செயல்பாடுகளைப்பற்றிக் கேள்வியும் எழுப்பக்கூடியது. கதைசொல்லலைக்குறித்து இவருக்கு வழிகாட்டியவர்கள் அந்நேரத்தில்’உனக்குத் தெரிந்ததை எழுது’ – எனக்கூறியிருக்கிறார்கள். விளைவாகத் தமது கற்பனைப்பரப்பை சுருக்கிக்கொண்டிருக்கிறார். இளம்வயது பெண்ணைக்குறித்து எழுதுவதென்றாலும், நடுத்தர வயது பெண்மணியைப்பற்றிய எழுத்தென்றாலும், முற்றுமுதலாக தம்மையே முன்நிறுத்தி அக்கதைமாந்தர்களைப் படைத்திருக்கிறார். இவ்வணுகு முறையில் அதுவரை அனுபவித்திராத உள்ளுணர்வுகளும், உத்தியும் வாய்த்தபோதிலும் அவருக்கு நாட்டமில்லை, இப்புதிய சிக்கலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதெப்படி என்ற கவலை அவரை அரித்திருக்கிறது.
ஜெர்மன் சொல்லான ‘Zeitgeist’ (The Spirit of the Times) என்பதற்கு ஒரு கால கட்டத்தின் பண்பாடு, புத்திகூர்மை, அரசு, சமூகம் மற்றும் சமய நெறிமுறைகளின் கலவையென்று பொருள். விழிப்புணர்வு, தன்னை உணர்தல் மற்றும் அறிதல் ஆகியவற்றிற்கும், காலத்தின் பாற்பட்ட மேற்கண்ட கூறுகளுக்கும் அடிப்படையில் தொடர்புண்டு. இலக்கிய வரலாறுகளை அறிந்தவர்களுக்குக் கதைசொல்லலில் நிகழ்ந்துள்ள மாயத்திற்கும், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்குங்கூட இக்கூறுகளே காரணமென்பதை அறிவார்கள். மேற்கத்திய உலகில் விக்டோரிய காலத்து இலக்கியத்திற்கும் இன்றைய இலக்கியத்திற்கும் இடையில் நிகழ்ந்த இரசவாதம் இந்திய கதைசொல்லலிலும் நிகழ்ந்திருக்கிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையையும் புதுமைப்பித்தன் கதையையும் ஒப்பீடு நோக்கில் வாசித்தாலே இந்த உண்மைத் தெளிவாகும்.
மகாபாரத்திற்குத் தேவைப்பட்ட நூற்றுக்கணக்கான கதைமாந்தர்களை இன்று எந்த இலக்கியவாதியும் அழைப்பதில்லை. சுந்தரராமசாமிக்கு ஒரு ஜோசப் ஜேம்ஸ் போதும். ஏக நாயகன் அல்லது ஏக நாயகி கதைக்கு அச்சாணி. சக்கரத்தின் குடம்போல படைப்பும் அதன் ஆரங்களென பிறமாந்தரும், சம்பவங்களும் சுற்றிவருகிறார்கள். மைய நாயகன் ஏதோஒரு குணத்திற்கு ஏகபோக உரிமையாளன், கதையை முன் நகர்த்த பிறகுணங்களும் அவனிடம் தற்செயலாக எட்டிப்பார்ப்பதுண்டு. உதாரணமாக ஜே.ஜே. சிலகுறிப்புகளில் வரும் ஜோசப் ஜேம்ஸ் ஓர் அறிவுஜீவி சகமனிதனின்று வேறுபட்டவன். முளங்காடு கிருஷ்ணப்ப வைத்தியர் அய்யப்பனால் “அவனது உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல பரவசம் ஊட்டக்கூடியது” என வியந்தோதப்பட்டவன். ஜே.ஜே. அறிவாளி மட்டுமல்ல, கூர் உணவிற்குச்சொந்தக்காரன், அடுத்து அவனை மொய்க்கும் கூட்டமிருக்கிறது: முதலாவதாக நம்மிடம் வளவளவென்று உரையாடுகிற கதைசொல்லி, (உண்மையில் தான் தேடி அலையும் ஜே.ஜேவைக் காட்டிலும் விஷயஞானமுள்ளவனென எனச் சொல்லாமல் சொல்கிற பாத்திரம், அடுத்து அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா என ஒவ்வொருவரையும் காலார நடக்கவிட்டு கதைசொல்கிறார் சு.ரா.
ஜே.ஜே., கதைசொல்லி, அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா எங்கிருந்து முளைத்தார்கள். இவர்களை சு.ரா. எப்படி கண்டுபிடித்தார். அம்மனிதர்களின் குணங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன. அவர்களுக்குள்ளே ஆசிரியரா? அவர்களுக்கு வெளியே ஆசிரியரா? என்ற கேள்விகளுக்கு விடைகள் அறிய உங்களைப்போலவே எனக்கும் ஆர்வம். கேல் காட்வினிடம் இதற்குப் பதிலிருக்கிறது. A Mother and Two daughters நாவலில் தமக்கேற்பட்ட அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாவலின் கதை மூன்று வெவ்வேறு குணத்துடனான பெண்களுக்கிடையேயான பந்தத்தைச் சொல்வது. ஒவ்வொருத்திக்கும் பிரத்தியேக குணமிருக்கிறது அப்பிரத்தியேக குணம், பிற இருவரின் குணத்துடனும் செயல்பாடுடனும் உரசுகிறபோது ஏற்படுகிற சிக்கல்களால் எவ்வாறு மாற்றி கட்டமைக்கப்படுகிறதென்பதை கதையில் தெரிவிக்கவேண்டும்.
மூன்று பெண்களின் பிரத்தியேகக்குணத்தை காட்சிஊடகத்தில் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்துவது சுலபம். ஆனால் இலக்கியமென்று வருகிறபொழுது. அவள் முகம் தட்டையானது, பெரிய கண்கள், கோபக்காரி எனக்கூறி வர்ணனைபோல குணத்திற்கும் ஒரு சொல்லைப்போட்டு முடித்துக்கொள்ளலாமா? கூடாதென்கிறார் கேல் காட்வின். மூன்று பெண்களின் குணத்தை பிரித்தறிவதற்கான சூழலை நாவல்களில் வாசகனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டுமென்கிறார். நாவலின் ஏதாவதொரு பக்கத்தை புரட்டி அங்கு வாசிக்கிற சொற்களை, அதன் தொனியைவைத்து கதைமாந்தர் யார்? அவளுடைய குணம் என்ன? என்று கண்டுணர வேண்டுமாம். அதைச்செய்யமுடிந்தால் நாம் நல்ல எழுத்தாளன். அக்கதைமாந்தரை எப்படி உருவாக்குவது, எங்கே கண்டுபிடிப்பது?
A Mother and Two daughters நாவலை ஆரம்பித்தபோது அவரது மனதில் கீழ்க்கண்டவகையில் சிந்தனை ஓடியிருக்கிறது. நாவலில் இடம்பெறவிருக்கிற மூன்று பெண்களில் ஒருத்திகூட இவரது குணத்தின் அடிப்படையில் உருவாக்கப்படபோவதில்லை என்கிறபோதும், தம் ஒருத்தியால் மூன்று பேர் இடத்தையும் இட்டு நிரப்பமுடியுமென தோன்றியிருக்கிறது. முதலில் நாவலில் தாயாக வருகிற ‘நெல்’ (Nell) என்ற பாத்திரத்தின் விதவை என்ற அடையாளமோ, இரண்டு பெண்களுக்கு அன்னையென்ற குடும்பத் தகுதியோ, அவளுக்கு வயது 63 ஆக இருக்கலாமென தீர்மானித்ததோ ஆகிய எதுவுமே கேல் காட்வினோடு தொடர்பு உடையதல்ல, பதிலாகச் சுதந்திரத்தின் பெயரால் தனிமை நம்மை அநாதையாக்கிவிடுமென்ற உண்மையை இவரைப்போலவே நாவலில் இடம்பெறும் வயதானப்பெண்மணியும் தெரிந்துவைத்திருப்பவளென்று எழுத்தாளரால் காட்டமுடிந்தது. நாவலில் வரும் இரண்டாவது பாத்திரம் கேட், பெண்மணியின் மூத்த மகள். ஒரு கலகக்காரி, மரபுகளுக்கு எதிரானவள். வாழ்க்கையில் சிற்சில சமயங்களில் இவரும் அவ்வாறு நடந்துகொண்டிருக்கிறாராம், அக்குணத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவும் விரிவுபடுத்தியும் சொல்லநினக்க, கேட் பெண்பாத்திரம் உருவாயிற்று என்கிறார். நாவலில் வரும் மூன்றாவது பெண்ணும் அவ்வாறே உருவானதுதானாம். ஆக எந்தவொரு பாத்திரத்திலும் நம்மை நுழைத்து அப்பாத்திரத்தின் வழியில் சிந்தித்து செயல்பட கதைமாந்தர்கள் உயிர்ப்பித்துவிடுகிறார்கள்.
இனி கதையின் துணைமாந்தர்கள், படைப்பிற்குள் எப்படி நுழைகிறார்கள்? உதாரணமாக கதையில் வரும் மூத்த பெண் கேட் என்பவள் எதிலும் முரண்பட்டவள், அவளொரு ஆணைச் சந்திக்கவேண்டும். சண்டைபிடிக்கும் குணத்தவளான கேட்டிற்கு இருவகையான ஆண்களைப் படைக்கலாம். கேல் காட்வின் தீர்மானித்தது அவளைச் சீண்டக்கூடிய ஆணை. அதிகம் பணம்படைத்த மனிதர்களை அவள் நம்புவதில்லை என்பதால், ஆணை ஒரு கோடீஸ்வரனாகப்படைக்கிறார். அவன் எப்படி கோடீஸ்வரனானான்? அவளுக்குப் பிடிக்காத இரசாயண பூச்சிக்கொல்லி வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவனாக அவனை மாற்றுகிறார். தமது தொழிலை நியாயப்படுத்த அவனுக்கும் காரணங்கள் இருக்கின்றன. கதையில் வரும் கேட் என்பவளுக்குமட்டுமல்ல பொதுவாக நம்பகத்தனமைக்கொண்ட கதைமாந்தர்களை உருவாக்கவேண்டும். அப்பாத்திரம் என்ன பேசினால் எப்படி நடந்துகொண்டால் அதன் பண்பிற்கு நம்பகத்தனமையை ஏற்படுத்தித்தரமுடியுமென சிந்திக்கவேண்டுமாம்.
பாத்திரங்களின் தேர்வும், மொழியும்:
1 பாத்திரங்களின் தோற்றம்: பூனைக்கண்கள், சுருட்டைமுடி, அரும்புமீசை என்று எழுதிக்கொண்டிராமல் அவர்கள் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கிற உடல்மொழி சமிக்கைகளில் கவனம் செலுத்துவதென்பது முதலாவது.
2. பிறரைச் சந்திக்கிறபோதும், உரையாடுகிறபோதும் கதை மாந்தரின் மன நிலை, அவர்கள் கவனம் மற்றும் கவனமின்மை -இரண்டாவது
3. பாத்திரங்களின் உரையாடல் எப்படி அமையவேண்டும்: வளவளவென்று பேசுவதா? உளறுவதா? சுருக்கமாகவா? திணிக்கின்ற வகையிலா? – என்பது மூன்றாவது.
4. பேச்சும் பேச்சின் தொனியும்: கட்டளை, கிண்டல், வருத்தம்? என எழுத்தில் நுண்ணுணர்வைப் பாய்ச்சுவது நான்காவதாகச் செய்யவேண்டியது
கதைமாந்தர்களையும், துணமாந்தர்களையும் அவர்களுடனான உறவுகளையும் தீர்மானிக்கமுடிந்தால் கதைசொல்லலில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். இனி மிச்சமுள்ள கிணறைத்தாண்ட நாம் செய்யவேண்டியது பாத்திரங்கள்தோறும் கூடுபாய்ந்து கதைமாந்தருடைய தனித்த அடையாளத்தை இறுதிவரைக் கட்டிக்காப்பது.
———————————————–