1. வெடிக்கு மருந்தாகும் மக்கள் – முத்துகிருஷ்ணன்
அணமையில் சிவகாசியில் நடைபெற்ற கோரவிபத்தையும் அதற்கான நதிமூலங்களையும் கட்டுரை விவரிக்கிறது. பிரச்சினகளின் வேர் தேடி எழுதுகிற முத்துகிருஷ்ணன் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களின் தள்ளாடும் உயிர்வாழ்க்கையையும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் கூட்டத்தையும், கண்டும் காணாததுபோல இருக்கிற அரசாங்க எந்திரங்களின் கையாலாகாதத் தனத்தையும் பின்புலத்திலுள்ள அரசியலையும் பிட்டுவைத்திருக்கிறார். தமிழில் உருப்படியான படைப்புகள் அபூர்வமாகவே வருகின்றன. ஆக்கபூர்வமான; சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும்.
2. இடிந்தகரைXகூடங்குளம்: நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்- அ.ராமசாமி
இடிந்தகரை கூடங்குளம் சிக்கல்களில் ஊடங்களின் பங்களிப்பை நுணுக்கமாக ஆய்கிறது கட்டுரை. இரண்டுவிதமாக ஊடகங்கள் உண்டு. மக்கள் நலனில் அக்கறைகொண்டு இயங்கும் ஊடங்கங்கள், அதுபோல பாவலா செய்யும் ஊடகங்கள். உலக அளவில் ஊடக அறம், சுதந்திரமென்பது பெரும்பாலும் இதழின் உரிமையாளர்களுடைய நலனைக் கருத்திற்கொண்டது. கூடங்குளம் தொடர்பான செய்திகளை தினசரிகளில் வாசிக்கிறபோதே பத்திரிகைகளின் நிறமும் குணமும் சந்தி சிரிக்கின்றன. கட்டுரை ஆசிரியர் இடிந்தகரை போராட்டகாரர்ளை அரசாங்கத்திடம் மட்டுமல்ல நமது ஊடகங்களிடமுங்கூட. கவனத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார்: அரசியல்வாதிகளைப்போலவே பெரும்பான்மையான ஊடகங்கள் எப்போ மக்களின் உண்மையான நலன்களில் அக்கறைகொண்டவையல்ல என்பது அவரது வாதம்.
http://ramasamywritings.blogspot.fr/2012/10/x.html#more
3.காலச்சுவடு கண்ணன் பதில்கள்
தமிழ்நாடு படைப்புலகம் தமிழ்நாடு அரசியலுலகத்திற்கு நிகரானது. அரசியலிலுள்ள அவ்வளவு கயமைகளும் போலிகளும், பசப்புகளும், பாசாங்குகளும், வியந்தோதும் கூட்டத்தை விலைக்கு வாங்கும் கூட்டமும் அங்குண்டு. பல நேரங்களில் சமூக அக்கறைகொண்டும், சிறுமை கண்டும் கொந்தளிப்பவர்கள், நடிப்பில் களைத்து அரிதாரத்தை வெகுசீக்கிரம் கலைத்துக்கொள்கிறார்கள். அசல் வாழ்க்கையில் வேறு மனிதர்கள் என்பதை புரியவைக்கிறார்கள். என் அனுபவத்தில் பத்தாண்டுகளில் கண்ணன் சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்று இயங்குபவர். ‘எதுவரை’ இணைய தளத்தில் அவருடைய பதில்கள் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளவை ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ இரகமல்ல. சு.ரா.வுக்கு பரிசளிக்கக்கூடாதென்ற அரசியல், பிள்ளைகொடுத்தாள்விளை சிறுகதை சர்ச்சையென பல பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். பதில்களில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம், அவர் எரிச்சலுற்றிருப்பது வெளிப்படை. செயல்பாடுகளில் நியாயமிருப்பின் உரத்த குரலைத் தவிர்ப்பது சாத்தியம்மல்ல. இப்பதில்களை முடிந்தால் தொகுத்து ஒரு நூலாக கொண்டுவரவேண்டுமென அவரிடம் சொல்லியிருக்கிறேன். வழக்கம்போல ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இவ்வருடமும் கண்ணனைச் சந்திக்கிறேன்.
4.. வால் பசங்க வராங்க- ஞானி
பிரதமர் மன்மோகன்சிங் தலமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின்மீது வேளைக்கு ஒன்று நாளைக்கு ஐந்து என ஊழல் குற்றசாட்டுகள். காங்கிரஸ்காரர்களுக்குப்பழகிவிட்டது. ”நல்லமாட்டுக்கு ஒரு அடி’ என்ற சொலவடை கிராமத்திலுண்டு. மழையில் எருமைமாடுகள் அதுபாட்டுக்கு நனைந்துகொண்டு அசைபோட்டபடி படுத்திருக்கும். தலைக்கு மேலே வெள்ளம், இதில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன? எரிகின்ற வைக்கோல்போரில் பிடுங்கினமட்டும் இலாபம் என்பதுபோல அவசர அவசரமாக அரசின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கூட்டணிகள் எதிர்கட்சிகள் என்றிருக்கிறவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருப்பதால் சாதுர்யமாக காய் நகர்த்த முடிகிறது. குற்றத்தை மறுப்பதற்குப் பதிலாக, அவருக்கும் அதில் பங்குண்டு எனசொல்லவும் முடிகிறது. சில்லரைவணிகத்தின் பின்னிருக்கும் அரசியலை வழக்கமான பாணியில் விளாசியிருக்கிறார் ஞானி.
—————————————-