படைப்பிலக்கிய பிரபஞ்சம்: ‘எழுத்தாளன்- வாசகனென்ற’ இருகோள்கள் இயங்கும் வெளி. எழுத்தாளன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வாசனையும் சுற்றிவருகிறான். வாசகன் எழுத்தாளனன்றி வேறுகோள்களையும் சுற்றவேண்டியவனாக இருக்கிறானென்பதை கவனத்திற்கொள்ளவேண்டும். எனினும் இருவரும் வாசிப்பு, கலை, இலக்கியமென்ற ஈர்ப்புவிசையாற் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.
“வாசகன் விரும்பிய வகையில் – அவன் கற்பனைக்கொப்ப- சித்திரங்களை வடித்துக்கொள்ள உதவும் பொருட்களைக் கையளிப்பவன் படைப்பிலக்கியவாதி. எழுத்தாளன் கொடுத்த கையேட்டின் துணைகொண்டு சித்திரத்தை முடிப்பவனாக வாசகன் இருக்கிறான்”- என்கிறார் ஜான் மக்டொனால்டு. குற்றவியல் மற்றும் மர்ம புனைவுகளில் எழுதிக்குவித்து புகழ் பெற்றவர். விக்கிபீடியாவில் இரண்டு ஜான் மக்டொனால்டுகள் வருகிறார்கள்: ஒருவர் ஜான் ஏ மக்டொனால்டு அரசியல்வாதி, கனடா நாட்டைச்சேர்ந்தவர். இரண்டாவது ஆசாமி ஜான் டி.மக்டொனால்டு எழுத்தாளர் அமெரிக்கர். இந்த இரண்டாவது ஆசாமியும் அவரது ‘Creative Trust’ என்ற கட்டுரையும் நமக்கு வேண்டியவை. ‘படைப்புக் கூட்டணி என்பது அக்கட்டுரைக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் எழுத்தாளன் வாசகனென்ற இருவரின் உறவையும் படைப்பூடாக மேம்படுத்துவதற்குரிய வழிகளை மக்டொனால்டு விவரிக்கிறார்.
‘இயக்குனரும் நடிகரும் இணைந்து ஒரு காட்சிக்கு உயிரூட்டுவதைப்போல’ என்று இதனைச்சொல்லலாம். ஒரு நாவலின் வெற்றியென்பது, அதனைச் சமைத்த படைப்பாளியிடமில்லை, அதைச்சுவைக்க காத்திருக்கும் விருந்தினரிடமிருக்கிறது. காட்சிக்கான மேடை, வெளி, சூழல்; ஒலி ஒளி; ஆடைகள்; நடிகர்கள்; நடிப்பு; வசனம் என அனைத்தையும் இயக்கும் மையபொருள் இயக்குனர். காமிரா, கோணம், வசனம், ஒளி. ஒத்திகை என எல்லாம் முடிந்து, அவரது அவ்வளவு உழைப்பையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு கூடுதலாக மெருகூட்டும் நடிகர்கள் அமைந்தால், திரைப்படம் வெற்றி பெறுகிறது. உதாரணம் கிளவுஸ் கின்ஸ்கி(Klaus Kinski)- வெர்னெர் ஹெர்ஸோக் (Werner Herzog); பீம்சிங் – சிவாஜிகணேசன் கூட்டணியில் உருவானத் திரைப்படங்கள்.
இனி ஜான் மக்டொனால்டு முன்வைக்கிற உதாரணத்தைப்பார்ப்போம். நம்மெதிரே ஒரு குழந்தை இருக்கிறது. அக்குழந்தையை மகிழ்வூட்டவேண்டும். என்ன செய்யலாம்? நம்மிடம் ஒர் அட்டை, காகிதம், கத்திரிக்கோல், பசை, சில வண்ணப்பென்சில்கள் இருக்கின்றன. காகிதத்தைப் போதிய அளவில் கத்திரித்தெடுத்து கோழி ஒன்றைச் செய்து குழந்தையிடம், “இது கோழி” என்கிறோம். அடுத்து வண்ணபென்சில் கொண்டு வரைந்து கத்தரித்தெடுத்த மற்றொரு காகிதத்தை ”இதுதான் தானியக் களஞ்சியம்”, என்கிறோம். பின்னர் மஞ்சள் பென்சில் கொண்டு வரைந்த வாகனமொன்றை வெட்டியெடுக்து குழந்தையிடம், “இதோபார் வாகனம் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, இனி கோழி வாகனச் சக்கரத்திற் சிக்காமல் தப்பிக்கவைப்பதோடு படத்தையும் உன் கற்பனைக்கேற்ப முடிக்கலாம் எனக்கூறி நாம் ஒதுங்கிக்கொள்கிறோம். அளித்திருந்த பொருட்கள் ஆர்வத்தை தூண்டுகிறதென வைத்துக்கொண்டால், குழந்தை தனது கற்பனைக்குகந்த மரங்களைச் சேர்க்கலாம், ஒரு வீட்டைத் தீட்டலாம், அவ்வீட்டிற்கு வேலி போடலாம், சுவர் எழுப்பலாம், கிராமத்துக் குழந்தையெனில் கூரைவேயலாம். நகரத்துக்குழந்தையெனில் எங்காவதொரு தீம் பார்க்கிற் கண்ட காட்சி நினவுக்கு வர மாடுகளையோ வேறுகாட்சிகளையோ பென்சிலால் வரைய முயற்சிக்கலாம். கிராமத்துக்குழந்தையின் கற்பனையில் உதித்தவையும் சரி நகரத்துக் குழந்தை தமது மனதிற் தீட்டியதை வெளிப்படுத்தியவையும் சரி, நாம் சொல்லி உருவானவை அல்ல. நம்மால் ஆரம்பிக்கப்பட்ட படைப்புப்பணியில் குழந்தையும் தன் பங்கிற்கு இணைந்துகொண்டிருக்கிறதென்பது தெரியவரும் உண்மை. நாம் கோழி, தானியக்களஞ்சியம், டிராக்டரென்று வரைந்துக்காட்ட நகரம் மற்றும் கிராமக் குழந்தைகள் அதனதன் கற்பனைக்கொப்ப நாம் படைத்திருந்த மூன்றோடு பொருந்தக்கூடிய பிறவற்றை வரைந்து நிரப்புகின்றன.
மக்டொனால்டு கூற்றின்படி இம்மூன்று சித்திரங்களோடு, குழந்தையின் கற்பனையில் உதித்த வீடு, வேலி, கூரைபோன்ற பிறவற்றையும் நாமே வரைந்து குழந்தையிடம் கொடுத்து, “இது கோழி, இது வேலி, இது மரம், இது டிராக்டர்” என சொல்லியிருப்போமென்றால் குழந்தை அடப் போய்யா நீயும் கெட்டது உன் சித்திரமும் கெட்டது எனக்கூறுகின்ற வகையில், கொட்டாவி விடலாம். அதைப்போலவே கோழிச்சித்திரத்தை மட்டும் போட்டுக் காட்டிவிட்டு மற்றதை நீப்போடு என சொல்லியிருந்தாலும், குழந்தைக்கு அழுகை முட்டிக்கொண்டு வரலாம். குழந்தையின் கற்பனையை வளர்க்கவேண்டுமெனில் ஆர்வத்தோடு நாம் வரைந்த ஓவியத்தில் குழந்தையும் தம் கைப்பட சில சித்திரங்களை கிறுக்க வேண்டுமெனில் எல்லாவற்றையும் நாமே தீட்டிவிட்டுக் குழந்தையை அழைக்க கூடாது அல்லது ஒன்றை மட்டும் தீட்டி இனி உன்பாடென ஒதுங்கிக்கொள்ளவும் கூடாது. சித்திரம், குழந்தை உதாரணத்தைத் தருகிற மக்டொனால்டு வேறொன்றிலும் எச்சரிக்கை வேண்டுமென்கிறார். கோழி, தானியக் களஞ்சியம், டிராக்டர் ஆகியவற்றை வரைந்து பிறவற்றை நீ தீட்டு எனக்குழந்தையிடம் கொடுக்கிறபோது அவ் ஓவியங்களைப்பற்றிய கூடுதற் தகவல்களும் குழந்தையின் கற்பனையைப் பாதிக்கலாம் என்கிறார். உதாரணமாக படத்திலுள்ளது கோழி அல்ல, பதினோருமாத சேவல், பெயர் மெல்வின், சிறகுகள் ஒளிர சூரிய ஒளியில் நிற்பது அதற்குப் பெருமை, பிற சேவல்கள்போலன்றி நீண்ட கால்களென மூச்சு திணறும் அளவிற்குத் தகவல்களைத் திணிப்பதும் குழந்தைக்கு அயற்சியைத் தரலாம், இதில் நாம் செய்ய ஒன்றுமில்லை எனக்குழந்தை ஓடக்கூடும். இங்கே சித்திரமும் குழந்தையும்:படைப்பும் வாசகனும்.
சொல்லப்படும் பொருளின் தனித்தன்மை
நடை, செறிவு, வாசிப்புத்தன்மை ஆகியகூறுகள் வாசகன் புரிதலைத் தீர்மானிக்கின்றன. இரண்டுகுழந்தைகளிடம் ஓவியங்களைக்கொடுப்பின் அவரவர் கற்பனைக்கொப்ப அவற்றை முடிப்பதுபோல ஒரு புனைவை வாசிக்கிற இரு வாசகர்களுக்கும் வெவ்வேறு கற்பனைகளிருக்கக்கூடும். அவர்கள் கற்பனைகளைக் குறுக்குவதற்கான முயற்சியில் ஓர் எழுத்தாளன் இறங்கக்கூடாதென்கிறார் மக்டொனால்டு. எக்மோர் ஸ்டேஷனை பலரும் சொல்லியிருக்கலாம். நம்முடைய பங்கிற்கு: டிக்கெடுக்கும் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர் இரயில்கள் புறப்பட தயாராக இருந்தன என்றெழுவதைத் தவிர்த்து பிறர் சொல்லாத எக்மோர் கண்ணிற்படுகிறதா எனப்பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். புனைவின் நம்பகத்தனமையைக் கூட்ட அது உதவும். உதராணமாக கடந்த பத்தாண்டுகளாக திருத்தப்படாத பழுதடைந்த கடிகாரம். 2012லும் எக்மோர் சந்திப்பில் காணநேர்ந்த நீராவி எஞ்சின், இடுப்புக்குழந்தையுடன் போர்ட்டர்வேலைபார்க்கும் பெண்மணி..
” ‘டிக்கெட் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்தார்கள்”- என குறைவானத் தகவல்களைக்கொண்டு எக்மோர் இரயில் நிலையத்தின் பிம்பத்தை எழுதி முடித்துக்கொள்ளலாமென்ற முயற்சியும் மெக்டொனால்டிற்கு கூடாதவேலை. பல்வேறு சேர்மங்களின் பங்களிப்பில் உருவான காட்சியொன்றை எழுத்தாளன் குறைத்து மதிப்பிட்டு வாசகனுக்கு அளிக்கிறபோது, அக்காட்சி நம்பகத்தன்மையை இழப்பதோடு, வாசகனுடைய ஆர்வத்தை குறைக்கக்கூடுமென்கிறார்.
நாம் சொல்ல விழையும் பொருள் தனித்துவமானது என்ற எண்ணத்தை வாசகன் மனதில் உருவாக்கவேண்டும். அதற்கு உதவுபவை என்ற பட்டியலில் அதிக எண்ணிக்கையில் ‘சொற்களை’ தெரிந்து வைத்திருப்பது முதலாவது. சொற்களை அறிய தொடர்ந்தும்; நேரமிருப்பின் கண்டதையும், நேரம் போதாதெனில் தேர்வு செய்தும் வாசிப்பதும் நல்லதென்கிறார். அடுத்து அவதானிப்பு. எதையும் கூர்ந்து நோக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். எங்கே இருந்தாலும், எதைசெய்தாலும் ஐம்புலன்களையும் திறந்துவைத்துக்கொண்டு செயல்படுங்கள் உங்கள் எழுத்துக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடுமென்பது மக்டொனால்டு தரும் உத்தரவாதம். நம்மைச்சுற்றியிருக்கும் உலகின் இழைநயம் அதாவது கட்டமைப்பு, வடிவம், பாணி, நிறம், அமைவு, இயக்கமென எல்லாவற்றையும் அவதானிக்கவேண்டும். நிறம், ருசி, ஓசையென நம் கண்ணிற்படுகின்ற பொருட்களின் பண்புகளை மட்டுமின்றி அப்பொருட்களோடு மனிதர்கள்கொண்டிருக்கிற பல்வேறுவிதமான உறவுகளையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் கட்டாயம்.
மனிதர்கள் இருவகை
கண்களிருந்தும் அவறை உபயோகிப்பதில்லையென வாழும் மனிதர்களும் இவ்வுலகிலுண்டு என்கிறார் மக்டொனால்டு. பிரெஞ்சு உளவியல்வாதியான ‘யுங்’ வகைப்படுத்தும் மனிதர்களில் ‘ நானற்ற’ (Not I) மனிதர்களாக எழுத்தாளர்கள் இருக்கவேண்டுமாம். ‘நான்’ (I) வகை மனிதர்கள் எப்போதும் தம்மைப்பற்றியே சிந்திப்பவர்கள், தன்னைச் சுற்றி உலகம் இயங்கவேண்டுமென்ற எண்ணுபவர்கள். எனவே பிறரை அவதானிக்க, தானற்ற மற்றமைகளில் இவர்களுக்கு அக்கறை உருவாவதில்லை என்பது அவரது கணிப்பு.
வாசிப்பாலும் பிற முயற்சிகளாலும் பெற்ற சொற்திறன், புற உலக அவதானிப்பு, சொல்லும் வகை என்று எழுத்தாளன் வளர்கிறபோது, தனக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார், மக்டொனால்டு.
————————————————————___________________________________________________________________________________________