1. கூடங்குளம் விவகாரம்: ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள்
1985லிருந்து பிரான்சு நாட்டில் Strasbourg நகரில் இருக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதென்ற அனுபவமில்லை. (அதுபோலவே கடந்த இருப்பந்தைத்து ஆண்டுகளில் ஒரேயொரு பிரெஞ்சு பிராங்கைக்கூட அல்லது யூரோ அமலில் வந்தபிறகு ஒரே யொரு யூரோவைக்கூட கையூட்டாகத் தர நேர்ந்ததில்லை- 99 விழுக்காடு சாதாரண மக்களின் அனுபவமிது- அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அல்லது வேறு மேற்கு நாடுகளில் வசிக்கும் நண்பர்களைக்கேட்டுத் தகவலை உறுதிபடுத்திக்கொள்ளலாம். ) பிரான்சு நாட்டின் வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகளால் எப்போதேனும் மின்சார விநியோகத்திற்கு தட்டுப்பாடு வருவதுண்டு, அதைக்கூட அதிகபட்சமாக இரண்டொரு நாட்களில் தீர்க்கப்பட்டதாகத்தான் செய்திகளில் வாசித்திருக்கிறேன். மின்சார பற்றாக்குறையைப் பிரான்சு நாட்டில் சந்திக்காமலிருப்பதற்கு, இங்கே பெரும்பானமையான மின் சக்தி, அணு உலைகளிலிருந்து பெறப்படுகிறதென்பது முதன்மைக் காரணம். அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினகள் கடுமையான விவாதங்களுக்கு உட்பட்டன. எனினும் திறப்பு விழாவில் காட்டும் அக்கறையை அதன் பராமரிப்பிலும், பாதுகாப்பு விஷயத்திலுல் காட்டும் மேற்கத்தியர்களின் மனப்பாங்கு பிரெஞ்சு மக்களை அமைதிபடுத்தியிருக்கிறது. இதனினும் மலிவாக மின்சக்திக்கு மாற்று உபாயங்கள் கிடைக்கும்வரை அணு உலைகள் தவிர்க்க முடியாதவை.
இந்தியாவின் நிலமை வேறு, கோலாகலமாக கிரகப்பிரவேசம் செய்யும் சொந்தவீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கவே பலமுறை யோசிக்கும் நமக்கு பொதுசொத்து பராமரிப்பின் இலட்சணமென்னவென்பதை ஊரை ஒரு முறைவலம்வந்தால் புரியும். இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணு உலைபற்றி பேச ஒன்று மில்லை. அது 30 பேரை பலிவாங்கும் பட்டாசு தொழிற்சாலை விவகாரமல்ல, ஒரு ஆர்டிஓ விசாரனை நடத்தி நான்கைந்து ஏமாந்த சோணகிரிகளை கைது செய்து பிரச்சினைக்கு மங்களம் பாட. நமது அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார எந்திரங்களின் செயல் திறன் உலகறிந்த செய்தி, உரசிப்பார்க்க அவசியமில்லை. ஒரு பொருளை அடைவதிற் பெருமை இல்லை. பொருளை பராமரிப்பதில், அதன் பயன்பாட்டினை முழுமையாகப் பெறுவதில் நமக்கும் மேற்கத்தியர்களுக்கும் வேறுபாடுகளிருக்கின்றன. நம்மிடம் உள்ள குறை நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது. போப்பால் யூனியன் கார்பைடு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் இன்றும் கேட்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கில் ஆரம்பித்து, தமிழ் நாட்டு லெட்டர்பேடுகள்வரை கூடங்குளம் பிரச்சினைக்குப் பின்னால் வெளிநாட்டினர் என்கின்றனர். காஷ்மீர், அஸ்ஸாம் கலவரம், மாவோக்கள், வடகிழக்கு மக்களின் பீதி, தெலுங்கானா, காவிரி நீர் சிக்கல், நிலக்கரி சுரங்க ஊழல், 2G விவகாரம், கல்குவாரி என ஆரம்பித்து நாளை சிவகாசி விபத்து, சஹானா விவகாரம், டெங்கு சுரம், சாக்கடையில் கொசு என எல்லாவற்றிர்க்கும் வெளிநாட்டினர் சதி எனக்கூறலாம்.
இப்பிரச்சினையில் மத்திய ஆளுங்கட்சி பிடிவாதமாக இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் சோனியா பிறப்பால் இத்தாலியர், அது தவிர கூடங்குள அணு உலையை கட்டமைத்தவர்கள் செர்ணோபில் புகழ் ரஷ்யர்கள். இப்பிரச்சினையில் நாமறிந்த வெளிநாட்டினர் இவர்கள்தான். இவர்களைத் தவிர வேற்றுநாட்டினரின் தொடர்பிருப்பின் ஆட்சியும் உரிய அதிகாரமும் கொண்ட அரசாங்கங்கள் அதைக்கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது கடமை.
கூடங்குள அணு உலை இயங்க போராடும் மக்களின்அச்சங்களைத் தவிர்ப்பது மத்திய மாநில அரசுகளின் வேலை. இரண்டு அரசுமே அதனைச் செய்வதில்லை. இந்தியாவில் பொறுத்தவரை எதுவும் நடக்கலாம் என்பதுதான் விதி.
இரத்தக் கண்ணீர் என்றொரு திரைப்படம்: ஆரம்பக்காட்சியில் எம்.ஆர். இராதா கூட்டமொன்றில் பேசும் வசனம் ஞாபகத்திற்கு வந்து தொலைகிறது. சத்யாகிரகிகளை ஒருகட்டத்தில் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் இறங்கிவந்து பேசியதாக இந்தியச் சுதந்திரத்தின் வரலாறு தெரிவிக்கிறது . ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள்.
2. ரெ. கார்த்திகேசு வின் இரண்டு நூல்கள்:
நீர்மேல் எழுத்து என்ற சிறுகதை தொகுப்பும், விமர்சன முகம் -2 என்கிற கட்டுரை தொகுதியும் மின்னூல்கள் வடிவத்தில் Kobo books தளத்தில் 1.99 டாலருக்கு கிடைக்கின்றன. ஆசிரியர் பெயரை எழுதித் தேடவேண்டும். ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் நீங்கள் வாசித்தவரில்லையெனில் அரிதான வாய்ப்பு. காற்றும் தண்ணீரும் மலிவாகக்கிடைப்பதால் அவற்றின் தேவையை குறைத்துமதிப்பிடமுடியாது அதுபோலவே ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்களூம்.
3. நண்பர்களுக்காக ஒரு குறும்படம்:மசாலா மாமா
http://replay.fr/masala-mama-488243
__________________________