எழுத்தாளன் முகவரி-3

எழுத்தும் செயல்திறனும்

ஓர் எழுத்தாளர் ஓயாமல் இயங்குவதில் சங்கடங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளர் பலரும் செயல் திறனுடன் இருப்பார்களென்பது கட்டாயமில்லை. ஐசக் அசிமோவ் ரஷ்யராகப்பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். எழுதிக்குவித்த எழுத்தாளர்களென்று ஒரு வரிசையை உருவாக்குவோமெனில், ஐசக் அசிமோவிற்கு கட்டாயம் அதிலிடமுண்டு.

நன்றாக எழுதுவதென்பதுவேறு, வேகமாக எழுதிமுடிப்பதென்பது வேறு. இரண்டும் இணைவதென்பது அரிதாகவே நிகழ்கிறது. இவ்விரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். நன்றாக எழுதவேண்டுமென்று நினைக்கிறபொழுது, அதிக நேரத்தைச் செலவிட்டாக வேண்டிய கட்டாயம். மேற்கத்திய எழுத்தாளர்களில் பலர் ஒரு நாவலை முடிக்க குறைந்தது ஒருவருடமென்ற கணக்கில் இயங்குகிறார்கள். பிறதுறைகளைப்போலவே படைப்பிலக்கியத்திற்கும் பொதுவாக காலம், நேர்விகித்தில் உதவுகிறது. செலவிடும் நேரம் கூடுதலாக இருப்பின் படைப்பின் தரமும் நன்றாகவே அமையும். எங்கேயேனும் பிழைகள் நிகழலாம்.

படைப்பாற்றல் அல்லது ஒரு படைப்பாளியின் செயல் திறன் என்பதென்ன? பத்துநிமிடத்தில் ஒரு சிறுகதை, மாதத்திற்கு ஒர் நாவல், வாரத்திற்கு ஏழுகட்டுரைகள், தூங்கி எழுகிறபோது நெஞ்சில் ஊறுபவைகளை கொட்டி ஒரு கவிதைத் தொகுப்பென்று எழுதிப்பழகுவதா? போதிய நேரத்தை ஒதுக்கி எழுதுகிறபோது எழுத்தில் ஒரு பளபளப்பு கூடிவருமே, அதனைத் தவிர்த்த எந்திரத்தனமான பற்றற்ற எழுத்துவினையை  தேர்வுசெய்ய நல்ல எழுத்தாளன் விரும்புவதில்லை. எழுத்தில் வேகமும் வேண்டும் அது தரமானதாகவும் அமையவேண்டும், இதற்கென உபாயம் அல்லது ஔடதமிருக்கிறதா, இருக்கிறதென்கிறார் ஐசக் அசிமோவ். ‘தீர்வில்லாத பிரச்சினைகள்’  என்று ஓரினம் இருக்கிறதா என்ன? .

1. எழுத உட்காரவேண்டுமென்ற விருப்பம்.

எழுத்தை நேசிப்பதாலும், அதிக வாசிப்பாலும் நூற்றில் ஐந்துவிழுக்காட்டினருக்கு எழுத்தின்மீது உருவாகும் பற்றுதல் முதலாவது. இவ்விருப்பம் இல்லையெனில் எழுதிக்குவிக்க சாத்தியமில்லை. உங்களுக்கான கதவு அடைபட்டுவிட்டதென்று பொருள்.  எந்த ஒன்றுக்கும் முதற்தேவை விருப்பம், அதுவன்றி எதுவும் அசையாது. படைப்புத் திறனுக்கும் அதுவே முதற்படி. ஐசக் அசிமோவ் கருத்தின்படி விருப்பமென்பது உந்துதலோ, மிகப்பெரிய கனவோ அல்ல. எழுத்தில் அக்கறைகொள்ள அல்லது எழுத உட்கார கனவும் உந்துதலும் அவர்வரையில் அத்தியாவசியமுமல்ல. எழுதவேண்டுமென்று நினைக்கிற நம்மில் பலரும் உந்துதலன்றி வேறு காரணங்களை முன்னிட்டு இத்துறையை தேர்வுசெய்திருக்க சாத்தியமில்லை. ஆனால் அந்த உந்துதலுக்கும், உங்கள் கற்பனை அல்லது சிந்தனை புத்தகமாக உருப்பெறுவதற்குமிடையில் ஆற்றவேண்டிய வினைகளுள்ளன. அவ்வினைகள் வெள்ளை காகிதத்தையும் எழுதுகோலையும் இணைக்கும் பணியாக இருக்கலாம், கணினியின் விசைப்பலகையைத் தொட்டு கற்பனை வடிவத்தை வார்த்தைகளில் உருமாற்றம் செய்வதாகவும் இருக்கலாம். வினையை விருப்பமின்றி, ஆர்வமில்லாது நிறைவேற்றுபவராக இருப்பின்; கதைசொல்லலில் உங்களுக்குள்ள அபார ஞானம் எத்தகைய பயன்பாட்டையும் அல்லது முன்னேற்றத்தையும் உங்கள் எழுத்தில் சேர்த்திடாது.

2. எழுதுவதைத்தவிர வேறெதையும் தேடுவதில்லை என்ற பிடிவாதம்

” உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்/ கண்ணன்எம் பெருமான் என்றென்றே” என்பது திருவாய்மொழி. எழுத்தாளனுக்கும் எழுதுவதன்றி, பிறவற்றை நேசிப்பதில்லை என்ற பக்தியை எழுத்தின்மீது செலுத்த வேண்டியவராக இருக்கவேண்டும். எழுத்தாளனும் பிற மனிதர்களைப்போலவே எண்ணற்ற ஆசைகளால் இழுபடுகிறவன். இந்த இழுபறியிலும் எழுத்தை தேர்வுசெய்து இறுகப்பற்றி பக்தி செலுத்துவதன் மூலம் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் எழுதிக்குவிக்கவும் நமக்கு முடியும். எழுதுவதன்றி வேறொன்றை விரும்புவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைத் திடப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. எழுத உட்காருகிறீர்கள், அச்சமயம். இயற்கையின் எல்லாகுணாம்சமும் இணைந்து,  ‘வாழ்க்கையில் இதைக்காட்டிலும் சுவாரஸ்யமானவை வேறு இருக்கின்றன, ‘எழுந்திரு’, என்கிறது. அதற்கென்ன நாளைக்கு உட்கார்ந்து எழுதுகிறேன்’, என நீங்கள் பதில் கூறிக்கொள்கிறீர்கள். அப்போதே செயல் திறனுள்ள எழுத்தாளனாக வரவேண்டுமென்ற நமது கனவு இடிந்து நொறுங்குகிறது.

3. சொந்த உழைப்பின் மீதான நம்பிக்கை.

உங்கள் எழுத்து இப்போதெல்லாம் உங்களை திருப்திபடுத்துவதில்லை. ஒரு முறைக்கு இருமுறை என்று ஆரம்பித்த பழக்கம் பத்து பன்னிரண்டுமுறை வளர்ந்திருக்கிறது. எழுத்தைத் திருத்துகிறீர்கள். ‘நான் அவனிடம் பேசினேன்’ என்ற வாக்கியத்தில் ‘நான்’ என்ற எழுவாயை அதிகப்பிரசங்கித்தனமாக உணருகிறீர்கள். ‘அவனிடம் பேசினேன்’ என்று மாற்றினாலும் சொல்ல வந்தது சொல்லப்படுகிறது என நினைக்கிறீர்கள் முன் வாக்கியத்திலும் ‘பேசினேன்’ என்று வருகிறது, எனவே அடுத்த வாக்கியத்தை ‘அவனிடம் உரைத்தேன்’ என மாற்றி, அமைக்கிறீர்கள். இப்படி அடித்து, திருத்தி சொற்கள், வாக்கியம், பத்தி பின்னர் மொத்த நூலையும் பல்வேறு காரணங்களுக்காக மாற்றி அமைத்து … அவ்வாறு செய்தாலன்றி அமைதியாக தொடர்ந்து எழுத முடியாதெனில் இத்திருத்தமும், மாற்றமும் தேவை. சில நேரங்களில் முதலில் எழுதப்பட்ட வரியே மீண்டும் வந்தமரலாம். இருந்தாலும் மாற்றத்தை செய்தே ஆகவேண்டுமென்கிறார் ஐசக் அசிமோவ். இந்த வாக்கியத்தை இப்படியே அனுப்பினாலென்ன? இங்கே யார் கேள்விகேட்க இருக்கிறார்கள்? ‘லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும் என்று பதிப்பாளரும், பணம் கொடுத்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தி நம்மைப்புகழ்வதற்கு நான்கு பேரை திரட்டமுடியுமென்ற எண்ணமும் எழுத்தாளருக்கும் வருகிறபோது இதுபோன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் பெரிய எழுத்தாளனாகவரவேண்டுமென்ற கனவுகாண்போருக்கு இச்செயல்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

4. நேரம்…நேரம்…நேரம்.

ஐசக் அசிமோவ் நான்காவதாக அறிவுறுத்துவது நம்மில் பலரும் அறிந்த விஷயத்தை அதாவது: காலம் பொன்போன்றது- கறந்தபால் முலைக்குத் திரும்பாதது என்பதுபோல கழிந்த விநாடியை திரும்ப ஈட்ட முடியாது. அசிமோவ் கூறுகிறார்: உலகில் பல இழப்புகளை ஈடு செய்யலாம். நேரத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது இருபது வயதில் ஒருவனுக்குக்கிடைக்கும் ‘ஒரு நிமிடத்திற்கும்’ அறுபது வயதில் அவனுக்கு கிடைக்கும் ‘ஒருநிமிடத்திற்கும்’ வேற்பாடு உண்டு. இருபது வயது இளைஞனுக்கு அமையும் நிமிடம் அவனைப்போலவே ஆரோக்கியமானது, ஆடும், பாடும், ஓடும், உட்காரும், வீரியமும் அதிகம். அறுபது வயதில் ஒருவனுக்கு அமையும் நிமிடம்: தள்ளாடும், படுக்கும், உறங்கும், மூச்சுவாங்கும், பலருக்கு அது பல்போன நிமிடமாகக்கூட இருக்கலாம். செயல் திறன்மிக்க எழுத்தாளனுக்கு நேரத்தை மிச்சப்படுத்த அனேகவழிகளிருக்கின்றன. அது அவரவர் திறன் சார்ந்தது. சிலர் கதவை அடைத்துக்கொள்கிறார்கள். சிலர் மின்னஞ்சல் கூட பார்ப்பதில்லை என்கிறார்கள். ஐசக் அசிமோவ் பணியாளர், செயலாளர், முகவர் என எவரையும் அவர் நியமித்ததுகொண்டதில்லையாம். தனது காரியங்களை தானே பார்த்துக்கொண்டதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததென்கிறார். இது அவரவர் தேவையையும் சூழலையும் பொறுத்தது.

செயல் திறன்கொண்ட எழுத்தாளராக  வரவேண்டுமா? மனத்தை அலையவிடாதீர்கள், ஓயாமல் செயல்படுங்கள்.

————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s