மூன்று காரணிகள்
மிகபெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கிறபோது, அவர்களின் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள், தேர்வு செய்யும் சொற்களை அவதானியுங்கள். ஒரு காட்சியை அல்லது சம்பவ விவரணையை அளிப்பதில் நம்மிடமிருந்து அவர்கள் எங்கனம் வேறுபடுகிறார்கள் என்பதை அவர்களுடைய படைப்பை வாசிக்கிறபோது கண்டுணர முடியுமெனில் எழுத்து நமக்கு வசப்படக்கூடுமென நம்பலாம். இது நம்பிக்கை மட்டுமே. ஆனால் அந்த இடத்தைப்பெறுவதற்கு அவர்கள் கொடுத்த விலையென்ன என்று நாம் பார்க்கவேண்டும். அது மந்திரத்தால் விழுந்த மாங்காய் அல்ல, கடின உழைப்பால் பெற்றது.
எவராவது வட்ட செயலாளரைப்பிடித்து கலைமாமணி வாங்கிவிடலாம், உரையில் வைத்து பணம்கொடுத்தால் சில தினசரி செய்திகளில் இடம் பெற்றுவிடலாம், அவரை இவரை பார்த்து தொலைகாட்சியில் பத்து நிமிடம் வந்து போகலாம், சாகித்ய அகாடமியில் யாரையாவது பிடித்து ஏதாவது செய்து ஒரு பரிசைவாங்கிவிடலாம் என்பது போன்ற ‘லாம்’கள் ஒரு நாள் அலுத்துபோகும். உண்மையான எழுத்தாளனைக்கண்டதும் பதற்றத்துடன் இந்த லாம்களையெல்லாம் உதறிவிட்டு எழுந்து நிற்கவேண்டிவரும் இப்பணிவுக்கு அசலான படைப்பாளியிடம் நமக்குள்ள மரியாதையைக்காட்டிலும் விலைகொடுத்துவாங்கிய புகழ்தரும் கூச்சமே காரணம்.
எந்த மொழியாக இருப்பினும் மூத்த எழுத்தாளர்களெனச் சொல்லப்படுகிறவர்களின் வெற்றிக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக ஜான் ஜேக்ஸ் (John Jakes) என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார். அவர் கூறும் மூன்று கர்த்தாக்கள்: Practice, Persistence Professionalism.
1. Practice: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என தமிழில் சொலவடை இல்லையா அதையே Practice எனபெயரிட்டு ஜேக்ஸ் இன்றியமையாதது என்கிறார். எழுத்திற்கு புதியவராக இருந்தாலும், பதிப்பித்தவுடனே விற்பனையில் சூடுபிடிக்கும் எழுத்தாளர் என்ற தகுதியை எட்டிப்பிடித்தவரென்றாலும் காலக்கெடுவினை வரையரை செய்து எழுதுவது நம்மை வளர்க்க உதவுமாம். அக்காலவரையரை நாளாக இருக்கலாம், வாரமாக இருக்கலாம் அல்லது மாதமாக இருக்கலாம். ஒரு முறை காலக்கெடுவைத் தீர்மானித்தபிறகு செயலில் இறங்குவது பயிற்சியில் அடுத்த கட்டம். திட்டமிட்டபடி எழுதி முடிக்கவேண்டும். வள்ளுவன் கூறுவதைப்போல எண்ணியது கைகூட திண்ணியராகவும் இருக்கவேண்டும். எழுதும் வரம் பிறவியில் ஒரு சிலருக்கு அமைந்திருக்கலாம், உழைத்தால் பெறமுடியுமென்பது ஜேக்ஸ் தரும் உத்தரவாதம்.
தொடர்ந்து எழுதிப்பழகுவது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான கடவு சீட்டு. எத்துறையில் கடுமையான பயிற்சியைக் கைகொள்ளுகிறோமோ அத்துறையில் நம்மை அறியாமலே மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருப்போம் என்கிறார். அவ்வாறான பயிற்சி எளிதானதல்ல என்பதையும் ஜேக்ஸ் மறுப்பதில்லை. சொந்த அனுபவத்தை சாட்சியம் அளிக்கிறார். அவர் பிள்ளைகள் வளரும் பருவத்தில், ஓர் இரவிற்கு இரண்டரை மணிநேரத்திலிருந்து மூன்று மணி நேரம் எனவைத்து வாரத்திற்கு மூன்று இரவுகள் எழுதுவாராம். ஒரு பக்கம் விளம்பரத்தொழில், இன்னொருபக்கம் குடும்பத் தலைவன் இரண்டிற்கும் தாம் தலைவன் என்ற வகையில் நிறைவேற்ற பணிகள் இருந்தன, எனினும் தவறாமல் எழுதுவாராம். திடீரென்று வீட்டில் யாரேனும் சுகவீனமுற்றாலோ, அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருந்தாலோ அன்றிரவு திட்டமிட்டபடி எழுத முடியாதுபோனாலுங்கூட வேறொரு இரவில் உட்கார்ந்து அவ்வாரத்திற்கென திட்டமிட்டிருந்த பணியை முடிக்கும் வழக்கத்தினை ஜேக்ஸ் கொண்டிருந்தேன் என்கிறார். தினந்தோறும் எழுதுவதென்று தீர்மானம் செய்து அத்தீர்மானத்தை விடாது நிறைவேற்றினாலொழிய ஓர் வெற்றிகரமான எழுத்தாளனாக நம்மால் வலம் வர முடியாதென்பது அவரின் கருத்து. எழுத்தாளனென்று பெயரெடுத்தால் போதும் என்கிற நினைப்பிற்கும், வெற்றிகரமான எழுத்தாளனாக வரவேண்டுமென்ற ஆசைக்குமுள்ள பேதம் ஜேக்ஸை பொறுத்தவரை, பின்னதற்கு நிறைய எழுதிப்பழகவேண்டும்.
2. Persistense: ஜேக்ஸின் செயல்முறை திட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது சோர்விலனாக இருத்தல். இன்றைக்கு வாசகர்களின் தேர்வுக்கொப்ப தினசரிகள், சஞ்சிகைகள் இருக்கின்றன. இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தை சுதந்திரமாக பதிவுசெய்யவும் கூடுதலாக கவனம் பெறவும் விரும்பினீர்களெனில் இருக்கவே இருக்கின்றன இணையதளங்கள். எழுதும் உத்வேகத்திற்கும், அயர்வுறாது தொடர்ந்து இயங்க நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு ஒத்துழைக்கவும் இவை உதவுகின்றன. ஆனால் அறுபது எழுபதுகளில் எழுதவந்த படைப்பாளிகளை யோசித்துப்பாருங்கள். எந்தப்பின்புலமும் இல்லாது வெற்றிபெற்ற எழுத்தாளர்களை நினைவு கூருங்கள். அவர்களின் வெற்றிக்குப்பின்னே ஜேக்ஸ் கூறுவதுபோல அயராத உழைப்பு இருந்தது. முன்பெல்லாம் வாரசஞ்சிகைகளுக்கு வெள்ளைதாள்களை வாங்கி, பிறருக்கு படிக்க ஏதுவாக பொறுமையுடன் எழுதியதை நகலெடுத்து, திரும்பப்பெறுவதற்கும் போதிய தபால் தலைகளுடன் கூடிய உறையைவைத்து, சில சஞ்சிகைகள் நமக்கல்ல என்பதை புரிந்து, எங்கே நம்முடைய ஜம்பம் பலிக்குமென யோசித்து அனுப்பிவிட்டுக் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பெண்கள் எனில் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூடுதலாக பாவப்பட்ட ஜென்மங்கள். முதலில் அவர்கள் எழுத உட்காரவே இருட்டறைக்குள் ஒதுங்கவேண்டும். இவைகளெல்லாம் ஓரளவு வசதிபடைத்த நடுத்தர மற்றும் முன்னேறிய சமூகத்திற்கு வாய்த்தது. சாமான்யனென்றால் அதுகூட இல்லை. உங்கள் படைப்பு எடுபடாமல் போனதற்குக் பல காரணங்கள் இருக்கலாம். அறிமுகமில்லாத பெயரெனில் அக்கறை கொள்ளமாட்டார்கள்; அதிட்டமிருந்து படிக்கப்படநேர்ந்தாலும் அன்றைக்கு அந்த உதவி ஆசிரியனின் மன நிலையைப்பொறுத்தும் உங்கள் தலைவிதி அமையலாம். படைப்பு நிராகரிக்கப்பட பெரும்பாலும் எழுத்தைத் தவிர்த்து வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்பதுதான் உண்மை. சார்த்ரு தொடங்கி நம்ம ஊர் எழுத்தாளர்வரை இப்படி ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் உலகிலுண்டு. மேற்கத்திய உலகில் உங்கள் சரக்கு அசலான சரக்கு எனில் நிச்சயமாக விலைபோகும். தமிழில் இரண்டும் நடக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்தே விலைபோகும். தமிழ்நாட்டில் இலக்கியத்திலுங்கூட அரசியலுண்டு. சிபாரிசு முன்நிற்கிறது. பணத்தாலும் நைச்சியம் செய்தும் பெற்றவை நம்மை அதிக நாட்கள் தாங்கி நிற்காது. சிலர் என்னிடம் பேசும்பொழுது கூசாமல் தங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சுயபுராணங்கள் அதிகரிக்கிறபோது எனக்கு குமட்டிக்கொண்டுவரும். பத்திரிகையாளர்கள் இதழியல், பதிப்பாளர்கள் அனைவருமே பொய்யைக் கூவி விற்பவர்கள் அல்ல, எனது பத்தாண்டுகால எழுத்து அனுபவத்தில் அறியவந்த உண்மை, நல்ல எழுத்துக்கு ஆதரவு எப்போதுமுண்டு, கௌரவர்கள் கும்பலில் பாண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு நமது எழுத்தைக்கொண்டுபோகவேண்டும், நீங்களும் நேர்மையாளராக இருந்தால்.
3. Professionalism இதைத் தமிழில் தொழிற் திறம் அல்லது துறைமைத் திறம் எனக் கொள்ளலாம். தொழிற்திறம் என்பதென்ன? தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா? சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிகள், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா? தொழிற்திறமென்பது இதைச் செய், அதைச் செய்யாதே (Do or Don’t) என்பதால் ஈட்டுவதல்ல.
ஜேக்ஸிற்கு படைப்பாளிக்குரிய தொழில்திறமென்பது ஒரு நாடக ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்வது. எழுதிய நாடகத்தை ஒத்திகை பார்ப்பது தேவையெனில் சிலகாட்சிகளை நீக்கவும், வசனங்களை துண்டிக்கவும், பாத்திரங்களை அகற்றவும் ஏன் அறவே நாடகத்தை கிழித்துப்போட்டுவிட்டு முற்றிலுமாக புதியதொன்றை எழுதவதற்காகவுமென நினைக்கவேண்டும். நாடக ஆசிரியனுக்கு நண்பர்களாக வந்திருக்கிற பார்வையாளர்களை முன்வைத்து மேற்கண்ட மாற்றங்களை கொண்டுவர இயலும். இவ்வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லை. அவனுடைய பார்வையாளர்கள் (வாசகர்கள்) முகமற்றவர்கள். தூரத்திலிருந்து படைப்பு, கைத்தட்டலை ஏன் இழந்ததென யோசிக்கக் கடமை பட்டவன். மெய்பார்ப்பில் தவறா, பதிப்பாசிரியரின் தவறா, நாவலுக்கு பெயரிட்டதில் குறையா என்பதுபோன்ற இரண்டாம் தர ஐயங்களை அறவே ஒழித்துவிட்டு எழுத்தில் நாம் என்னகுறை வைத்தோம் என்ற தெளிவு வேண்டும். நாடக ஆசிரியனுக்கு கிடைக்கும் ‘ஒத்திகை நேர பார்வையாளன்’ எழுத்தாளனுக்கு பதிப்பாளர் மூலமாகக் கிடைக்கிறது. ரசனையுள்ள பதிப்பாளர்களை தேர்வு செய்தல் நலம் அவர்கள் சுயநலத்தின் அடிப்படையில் சில குறைகளைச்சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ளுதல் அவசியம். பொதுவாக வளர்ந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் வெள்ளைத் தாள்களைக்கொடுத்தாலும், பிரசுரிக்கவும் அதைவாசித்து பின் நவீனத்துவம் எனவும் ஆட்களுண்டு. ஆனால் வளரும் நிலையில் இருக்கிற நம்மைப்போன்றவர்கள், பாரபட்சமற்ற விமரிசினங்கள் வரின் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமே விமர்சகனாக இருந்தும் எழுத்தில் குறைகண்டு திருத்தி எழுதலாம். இந்த அனுபவம் எனது முந்தைய இரண்டு நாவல்களுக்கு ஏற்படவில்லை. திண்ணையில் வெளிவரும் எனது மலைபேச்சு நாவலுக்கும் கைவசம் சந்திதியா பதிப்பகம் அனுப்பவிருக்கும் பிரதிக்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன. பிறர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் எழுத்தாளன் தமது படைப்பின் முதல்வாசகனாக இருந்து திருப்தியுற்றால் அப்படைப்பு வெற்றிபெறுமென மனதார நம்புகிறேன்.
——