1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
கைகுலுக்கல் – Se serrer la main
பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக அச்சந்திப்பு வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. (ஏற்கனவே குறிப்பிட்டதைபோன்று அவர்களுக்குள் நெருங்கிய நட்போ உறவோ ஏற்படுமாயின் கன்னத்தோடு கன்னம் கன்னம் ஒட்டி உதடுபடாமல் காற்றில் உச்சுகொட்டுவார்கள் அந்நட்பு காதலன் காதலி என்கிற போக்கில் அமையுமானால் உதட்டில்). பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து (எதிலிருப்பவர் தயிர்வடை தேசிகனாக இருந்தால்) ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.
2.பிரெஞ்சு எழுத்தாளர் வரிசை- 1.
மிஷெல் ஊல்பெக் (Michel Houellebecq)
1956ல் பிறந்த ஊல்பெக், இன்றைய பிரெஞ்சு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர். எழுத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கென ஓர் அணுகுமுறை இருக்கிறது. படைப்பின் அழகியல் எழுத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் இருக்கிறதென நம்புபவர்கள் அவர்கள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கொரு நோபல் பரிசு காத்திருக்கிறதென பல ஆண்டுகளாக நம்பிகொண்டிருக்கிறேன். அடுத்தவருடமே கூட நிகழலாம். சுஜாதா சொல்வதுப்போல அவர் எழுத்தை வாசிக்கிறபோதெல்லாம் பட்சி சொல்ல கேட்டிருக்கிறேன். கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், இயக்குனர். பிரெஞ்சு நாவலாசிரியர்களில் சிலரைத்தவிர பெரும்பாலானோர் தங்கள் படத்தை தாங்களே இயக்கவேண்டுமென பிடிவாதமாக இருப்பவர்கள். ஊல்பெக்கும் அக்கூட்டத்தைச் சேர்ந்தவர். நவீன பிரெஞ்சு எழுத்தாளர்களில் உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி. Extension du domaine de la lutte, Les Particules élémentaires (Atomised), La Carte et le Territoire (The Map and the Territory), ஆகியவை அவரது முக்கிய நாவல்கள்.
3. அண்மையில் வாசித்த பதிவுகள்
அ. மலைகள்.காம்
நண்பர் சிபிச்செல்வனின் உழைப்பால் வெளிவரும் இணைய இதழ். தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. புதிய படைப்பாளிகளில் குறிப்பாக இளைஞர்களில் திறமை சாலிகளை தேர்வுசெய்து ஊக்குவிக்கிறது. இவ்விதழில் பெருமாள் முருகனின் கவிதைகள், அ.ராமசாமியின் முதல் சென்னைப்பயணம் கட்டுரை, பொதுலேர் கவிதைகள் குறித்த கட்டுரை, மகுடேசுவரன் கவிதைகள், ஹாருகி மிகராமியின் மொழிபெயர்ப்பு கட்டுரையென தீவிர வாசகர்கள் படிக்க நிறைய இருக்கின்றன.
பெருமாள் முருகன் கவிதையில் மொழி நன்றாக இருந்தது. அ.ராமசாமின் முதல் சென்னைப்பயணம் சுவாரஸ்யமான அனுபவம். கூறிப்பாக பீடா அனுபவம். பொதுலேர் கவிதைகள் குறித்த விரிவான கட்டுரை உள்ளது. அநேகரை இக்கட்டுரை கவரக்கூடும். மீக ஆழமாக விரித்து சொல்லப்பட்டிருக்கிறது. பிறவற்றை படிக்கவில்லை. அவற்றை படித்ததும் முழுமையாகவே மலைகள். காம் இதழில் பிரசுரமான படைப்புகள் குறித்து எழுதுகிறேன்.
இலக்கியத்திற்குமட்டுமே தம் இணையம் என்பதில் சிபிச்செல்வன் தெளிவாக இருக்கிறார். பிரசுரித்துள்ள ஆக்கங்கள் உறுதிசெய்கின்றன.
http://malaigal.wordpress.com/
ஆ. சில கவிதைகளின் எளிமையும் சொற்தேர்வும் சட்டென்று நம்மைக் கவர்ந்துவிடும், வாசித்ததும் மனதில் உட்கார்ந்துவிடும். இக்கவிதையை ஆபிதின் பக்கங்களில் வாசிக்க நேர்ந்தது. இஜட். ஜபருல்லாஹ் என்பவரின் கவிதை.
நீ கொடுத்தது. – இஜட். ஜபருல்லாஹ்
இறைவா!
இருட்டும் வெளிச்சமும்
எங்களுக்கு
தந்தவன் நீ!
அதோடு விடாது
இருட்டில் வெளிச்சமும்
வெளிச்சத்துக்குள்
இருட்டையும் புகுத்தி வைத்த
காரணக்காரன் நீ!
வெயில்
மழை
மாறி மாறி
எங்களுக்கு தந்தாய்.!
வெயிலின் சூட்டிலும்
மழையின் குளிரிலும்
தவிக்கிறோம்!
என்றாலும்
“சரியான வெயில்”
“நல்ல மழை”
என்றுதான் நாங்கள்
சொல்கிறோம்!
ஏன்..?
நீ கொடுத்தது
அல்லவா?
***
http://abedheen.wordpress.com
—————————————————–
’நாகி’ கொடுத்ததை நன்றியுடன் பெற்றுக்கொண்டேன் 😉