அவ்வைக்கு 75
வணக்கத்திற்குரிய அவ்வைக்கு 75 வயதென்று தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை பதினைந்து அன்று சிறப்பாக விழா எடுத்து விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். தொடக்க காலத்தில் எனது நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். அண்ணா நகரில், அவரது இல்லத்திற்கு வருபவர்களிடமெல்லாம் என்னை ஏதோ ஒரு பெரிய கவிஞர்போல அறிமுகப்படுத்துவார். கூச்சத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருப்பேன். அவரை சுற்றியிருந்தவர்களின் இலக்கிய இரசனை வேறாக இருந்தது. எனவே ஒதுங்கிக்கொண்டேன். இருந்த போதிலும் பழகுவதற்கு எளியவர், குழந்தை மனம். சுவைஞர். நல்ல தமிழை எங்கே கண்டாலும் தயக்கமின்றி பாராட்டுவார். அவரைக்குறித்து பல்வேறுவிதமான விமர்சங்களை என்காதுபட சிற்றிதழுலகில் கேள்விபட்டேன். அவை தவறா சரியா என எனக்குத் தெரியவும் தெரியாது. நான் எப்போதுமே எனது அனுபவங்களின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவேன், என்வரையில் உயர்ந்த மனிதர். இலக்கியத்தில் அவருக்குள்ள பரந்த ஞானத்தையும், இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என கேட்பவர்களை வசீகரிக்கும் அவரது நாவன்மையையும் பாராட்ட எத்தனை விழாவேண்டுமென்றாலும் எடுக்கலாம்.
வாழ்க நீ எம்மான்.
காதலும் காதல் சார்ந்த இடமும்
ஒரு பொருள் அல்லது உயிரியொன்றின்மீது உணர்ச்சியின்பாற்பட்ட அன்பு சுரப்பதால், அப்பொருளை அல்லது உயிரியை உடல், மனம் சார்ந்து அடைய எத்தனிக்கிறோம். அந்நிலையில் வெளிப்படும் பாவங்கள், சேட்டைகள் அனைத்துமே ‘காதல்’ என்ற சொல்லை புரிந்துகொள்ள உதவுபவை. ‘காதல்’ மற்றொரு நபர் மீது செலுத்தும் ஆழமான நேசமென்று பொதுபுத்தியில் உணர்ந்துகொள்ளபட்டுள்ளது. காதலின் பொருளை தெரிந்துகொள்ள பிரயாசைப்படின் அக்காதலுக்குள் உட்பிரிவுகள் இருப்பதும் அவற்றுக்கு நாமே சாட்சியாக இருப்பதும் தெளிவு. உடலிச்சையை (சிற்றின்பத்தை?) அடிநாதமாகக்கொண்ட தீவிர காதலில் ஆரம்பித்து, அதனைத் தவிர்த்த நெருக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்ட அல்லது ‘நீ அருகிலிருந்தால் போதும்’ என அமைதிகொள்கிற குடும்பம், நட்பு, அறிவியல், கலை, பக்தி, பரிவு, இரக்கம்… ஆகியவற்றின் அடிப்படையிலான மென்மையான காதல்வரை பல வரன்முறைகள் அதிலிருக்கின்றன.
காதல் ஒன்று:
1912ம் ஆண்டிற்கான கான் உலகத் திரைப்படவிழாவில் தங்க ஓலை (Palm d’or) விருதை வென்றிருப்பது காதல் (Amour) எனும் திரைப்படம். இயக்குனர் மிஷாயில் ஹானிக்க ஆஸ்த்திரியாவைச் சேர்ந்தவர். இயக்குனரின் திரைப்படங்கள் The Piano Teacher, The White Ribbon ஆகிய இரண்டும் ஏற்கனவே கான் திரைப்படவிழாவில் மிகச்சிறந்த படத்திற்கான தங்க ஓலை விருதை வென்றவை. இன்றைய தேதியில் மேற்கத்திய இயக்குனர்களில் முக்கியத்துவம் பெற்றவர். அவரது திரைப்படங்கள் அனைத்துமே கருத்திற்கொள்ளவேண்டியவை. அவரது பெற்றோர்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். வீயன்னா பல்கலைகழகத்தில் தத்துவம், உளவியல், நாடகம் மூன்றையும் பயின்றவர். திரைப்பட விமர்சகராக ஆரம்பக்காலங்களில் பணியாற்றிருக்கிறார், தம்மை தேர்ந்ததொரு இயக்குனராக உருவாக்கியது விமர்சகர் தொழிலே என்கிறார். ‘எண்பது வயதைக் கடந்த அறிவார்ந்த தம்பதிகளுக்கிடையே நிலவும் காதலை இத்திரைப்படம் சொல்கிறது. ஆன், கணவர் ஜார்ஜ் இருவரும் இசைக் கலைஞர்கள். ஆனால் இவைகளெல்லாம் கடந்த காலத்தியவை, தற்போது பணி ஓய்விலிருப்பவர்கள். அவர்களுடைய மகளும் இசைக்கலைஞர் (இவர் இயக்குனரின் The Piano Teacher படத்தின் கதாநாயகி) குடும்பத்துடன் வெளிநாட்டிலிருக்கிறாள்.
ஒரு நாள் முதிர்ந்த வயதினர் பலருக்கும் நிகழ்கிற பக்கவாத விபத்து ‘ஆன்’னுக்கும் நேருகிறது. பக்கவாத நோயை, அல்லது ஏற்பட்டிருக்கும் சோதனையை மூதாட்டியும் கிழவரும் எப்படிச் சந்திக்கிறார்களென்பதை பார்வையாளர்களுக்கு அலுப்பின்றி சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மிஷாயில் ஹானிக்க (Michael Haneke).
எனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் தமது சுவிஸ் கணவருடன் இங்கே (Strasbourg) வசிக்கிறார். அவரது பெற்றோர்கள் இங்கே வந்திருந்தபோது, அப்பெண்மணியின் தந்தை The Hindu வுக்கு எழுதுவதுபோல எங்கள் ஊர் மாநகராட்சி வெளியிடும் மாதச் சஞ்சிகையின் ஆசிரியருக்குத் தவறாமல் புகார்கள் எழுதுவார். ஒரு நாள் உள்ளூர் மேயர் அவரை அழைத்து கடிதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, குறிப்பிட்டிருந்த குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்திருக்கிறோம் சென்று பாருங்களென அவரை மாநகராட்சி அதிகாரியுடன் அனுப்பியும் வைத்தார். அப்பெரியவரை சென்னை வந்தபோது சென்று பார்க்க நேர்ந்தது, ‘காதல்’ திரைப்படத்தில் வருகிற கணவன் மனைவிபோல அவர்கள் வாழ்ந்தார்கள். ஆக இதுபோன்ற காதல் கதைகள் சென்னையிலும் கிடைக்கின்றன.
காதல் இரண்டு
இது நிழற்படக் காதலல்ல, நிஜவாழ்க்கைக் காதல். தம்பதிகளுடையேயான அன்னியோன்னிய காதலைப்பற்றிய ஓர் உண்மைச்சம்பவம். . அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன். உண்மையில் அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). இவர் பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அதிபர் தேர்தலில் வெல்லக்கூடுமென்று தெரியவந்தது. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அப்போதைய அதிபர் சர்க்கோசி, அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக தொமினிக் ஸ்ட்ரோஸ்கானை நியமனம் செய்தார். சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் தமது பெயரை பிரேரிப்பதற்காக பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல், அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் கைதுசெய்யப்பட்டார். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சிலும் குப்பை கிளறப்பட்டது. அவருக்கெதிராக இங்கும் பாலியல் குற்றசாட்டுகள். பெண்பத்திரிகையாளர்கள், நட்சத்திர விடுதிகளில் வலம் வரும் வேசிப்பெண்களென பலரும் இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமில்லை. அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழுநீர் பானையில் விழுந்தார். இங்கே சொல்லவந்தது தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் பற்றியல்ல. அவர் மனைவி ஆன் சாங்க்ளேர் கணவரிடத்தின் கொண்டிருந்த காதல் குறித்து. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி தமது மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளுக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. ஆன் சேங்க்ளேர் வாழ்வது மேற்கத்திய நாடொன்றில், பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி அலைவரிசயின் நட்சத்திர பெண்மணி, பெண்விடுதலையாளர்.
வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:
இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள். இங்கேயும் காதல்தான் மையப்பொருள். செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். செகொலன் ரொயால் தற்போதைய பிரான்சு அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தாம்பத்யதிற்கு சாட்சியாக பிள்ளைகள் இருக்கிறார்கள். 2006ல் ஒலாந்து, வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் செகொலனுக்குண்டு. அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்வலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைக்கொண்டவர்.
அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது உதவியிருக்கிறார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற தலைவர்களை நடத்துவதைப்போலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள், கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த மாவட்டத்தில் வருகிறபோதும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. அதிபரின் புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவது பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும் அதனைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். பெருவாரியான மக்களின் வெறுப்பிற்கும், பத்திரிகைகளின் கண்டனத்திற்கும் வலெரி ஆளாகியிருக்கிறார். ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்சனங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதிபடுத்தியிருக்கின்றன. செகொலன் மீது கொண்டிருக்கும் பொறாமையால் இது நிகழ்ந்ததென்று பொதுவில் பலரும் குற்றம்சாட்ட, மறுக்கும் வலெரி தெரிர்வில்லர் தமது நடத்தைக்கு ஒலாந்திடம் தமக்குள்ள காதலேயன்றி, செகொலன் மீதான பொறாமையல்ல என்கிறார். அவருக்குக் காதலென்ற பேரில் சினேகிதர் முகத்தில் கரியைப்பூசினாலும் பரவாயில்லை, சுதந்திரம் பவித்ரமானது.
காதல் மூன்று:
‘எதிர்க்கரை’ (The Edge of Heaven). 2007ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசினை வென்ற படம். இங்கே வேறுவகையான காதல் சொல்லப்படுகிறது. இப்படத்தை பிரெஞ்சு தொலைகாட்சியான Arte அலைவரிசையில் கடந்தவாரம் பார்த்தேன். ‘படத்தின் இயக்குனர் பாத் அக்கின் (Fath Akin), பெற்றோர்கள் துருக்கியர். எதிர்க்கரை என்று மொழிபெயர்த்திருப்பது படத்தின் பிரெஞ்சு பெயரை கருத்திற்கொண்டு. திரைப்படத்தைப் பார்க்க நேரந்தால் பிரெஞ்சு பெயரே பொருத்தம் என்பீர்கள். ஐரோப்பிய நாடுகளில் துருக்கிமக்கள் வெகுகாலந்தொட்டு வசித்து வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிட்டால் பெரும்பான்மையினர் துருக்கி வம்சாவளியினராக இருப்பார்கள். பிரான்சுநாட்டில் மாத்திரம் ஐந்து இலட்சம் துருக்கிமக்கள் வாழ்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டுமில்லியன் துருக்கியர்கள். ஆக ஜெர்மன் நாட்கள் துருக்கி மக்கள் வாழ்க்கையாலும் எழுதப்பட்டவை. ‘எதிர்க்கரை’படம் உருவானதற்கு இதைக்காட்டிலும் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. திரைப்படமென்பது ஏனைய கலைகளைப்போலவே ஒரு வாழ்வியல் கிளிஷே. மனித வாழ்க்கையின் ஒரு துண்டு காட்சி. உறைந்துபோன காலத்தையும் கட்டிப்போன படிமத்தையும் உயிர்ப்பித்து நம்மை நாமே எதிர்கொள்வது. ‘எதிர்க்கரை’ திரைப்படம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைப் பற்றிய வித்தியாசமான காதல் கதை( கோலிவுட் ‘வித்தியாசமல்ல அசலானது).
தந்தை மகனென்று ஒரு குடும்பம், தாய் மகளென்று இரண்டு குடும்பங்கள். ஒருதாயும் அவர் மகளும் ஜெர்மானியர், மற்ற நால்வரும் துருக்கியர். இந்த ஆறுபேரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை எங்கேனும் எதற்கேனும் சந்திக்கவேண்டிவருமென்றோ சில கி.மீட்டர்தூரம் அந்தப் பிறருடன் ஒன்றாகப் பயணிக்கவேண்டிவருமென்றோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவேண்டிவருமென்றோ நினைத்துபார்த்தவர்கள் அல்ல. இருந்தாலும் அவர்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் திடீர் சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறது, சந்தோஷத்தை நிரப்புகிறது, எதிர்பாராமல் ஏற்பட்ட உடைப்பில் சந்தோஷம் நிரம்பிய வேகத்தில் வற்றிப்போகிறது. புழுக்கமும் இறுக்கமும் வெக்கைநாட்களுக்கென்று யார் சொல்வது, மழைக்காலத்திலும், பனி நாட்களிலுங்கூட அவை நம்மை தொட்டுப்பார்க்கலாம், எல்லாம் மனம்சார்ந்தவை. நல்ல தமிழில் புழுதிக்கால் என்ற சொல்லுண்டு – உழுது காய்ந்த நிலம். வாழ்க்கையும் ஓர் புழுதிக்கால்தான். தண்ணீர் விட்டு விரைத்து நாற்றைப்பார்க்க எத்தனைபேருக்கு காலம் உதவுகிறது?
கதை ஜெர்மனுக்கும் துருக்கிக்குமாக போக வர இருக்கிறது:
பாரெம் நகரில் பணி ஓய்விலிருக்கும் அலி தாம் அடிக்கடிச்செல்லும் வேசியிடம், தனித்திருக்கும் தமக்குத் துணை தேவைப்படுவதாகவும் அவள் சம்பாதிக்கும் தொகையை தம்மால் மாதந்தோறும் கொடுக்கமுடியுமென்றும் கூறி அழைக்கிறார். எதிர்பாராமல் டிராம் பயனத்தின் போது அவள் இரு துருக்கியர்களால் மிரட்டப்படுகிறாள். நடுத்தர வயதைக் கடந்திருந்த அவளுக்கு அலி மட்டுமே வாடிக்கையாளர் என்ற நிலையில் அலியின் அழைப்புக்கிணங்க அவர் வீட்டிற்கு வருகிறாள். நெசட், அலியின் ஒரே மகன், ஹாம்பர்கில் பல்கலைக் கழகமொன்றில் ஜெர்மன் மொழி இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியன். மகனுக்கு தந்தைமீது நிறைய மரியாதை உண்டு. மகன் தந்தையைப்பார்க்க பாரெம் வருகிறான். அவனிடம் வேசியைத் தந்தை அறிமுகப்படுத்துகிறார். அலியின் மகனும் வேசிப்பெண்மணியும் உரையாடுகிறார்கள். உரையாடலின்போது அலியின் மகன் தமது ஜெர்மன் மொழி பேராசிரியர் பணிபற்றிக் கூற, அவள் தாம் வேசித் தொழில் புரிவதாகச் சொல்கிறாள். அவளுக்கு பிள்ளைகள் யாருமில்லையா என்று விசாரித்தபொழுது அவள் துருக்கியில் படிப்பதாகவும், அவளுக்கு ஒரு ஜோடி ஷ¥க்கள் அனுப்பபோவதாகவும், அவனைப்போலவே தம்மகளையும் பேராசிரியையாக பார்க்கவேண்டுமென்கிற தமது ஆசையையும் தெரிவிக்கிறாள். பெண்மணிக்குத் தம்மகள் அங்குள்ள குர்தின மக்களின் புரட்சி இயக்கத்திற் சேர்ந்து துருக்கி அரசாங்கற்கு எதிராக போராடுகிறாளென்றோ, தலைமறைவு வாழ்க்கை வாழ்வதோ தெரியாது. மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அலி வீட்டிற்குத் திரும்பியதும், குடிவெறியில் தம்மகனை வேசிப்பெண்மணியோடு சம்பந்தப்படுத்தி கன்னத்தில் அறைய அவள் இறக்கிறாள். அலி சிறையில் அடைக்கப்டுகிறார்.
அலியின் மகன் தந்தை செய்த பாவத்திற்குப் பிராயசித்தமாக வேசியின் மகளைத்தேடி (அய்ட்டன்) ஹாம்பர்க்கிலிருந்து (ஜெர்மன்) இஸ்டான்புல்செல்கிறான். துருக்கி போலிஸாரால் தேடப்படும் வேசியின் மகள் உரிய கடவுச்சீட்டின்றி இஸ்டான்புல்லிலிருந்து ஹாம்பர்க் வருகிறாள். பசியுடன் தெருவில் வாடும் அவளுக்கு கல்லூரி மாணவியொருத்தி (லோத்) அவள் தாய் எதிர்ப்பை அலட்சியம் செய்து அடைக்கலம் கொடுக்கிறாள். இருபெண்களுக்கிடையே ஒருபாலின உறவு ஏற்படுகிறது. வேசியின் மகள் சரியான உரிமங்களின்றி ஜெர்மனுக்குள் இருக்கிறாள் என்பதை அறிந்த ஜெர்மன் அரசாங்கம் அவளை கைது செய்து துருக்கிக்குத் திருப்பி அனுப்புகிறது. துருக்கி அரசாங்கம் இஸ்டான்புல்லில் அவளை சிறையிலடைக்கிறது.
இஸ்டான்புல்லில் அலியின் மகன் நெசட் வேசியின் மகளைத்தேடி அலைகிறான். முதலில் அவள் படித்த கல்லூரியில் விசாரிக்கிறான். அவளைப்பற்றிய தகவலைத் தந்த ஒருபெண்ணொருத்தி அவள் தங்கியிருந்த இடத்தின் முகவரியையும் தருகிறாள். அங்கே தேடிப்பார்த்துவிட்டு காணாததால் ஏமாற்றத்துடன் இஸ்டான்புல்லிலேயே தங்குவதென தீர்மானித்து அருகிலேயே ஒரு புத்தககடையை எடுத்து நடத்துகிறான். வேசிப்பெண்ணின் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவளைத்தேடும் முயற்சியில் இறங்கவும் செய்கிறான். வேசியின் மகளைத்தேடி லோத் என்பவளும் இஸ்டான் புல்வருகிறாள். நெசட் டின் புத்தககடைக்குவருபவள், அவனுடைய வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் அறிவிப்பொன்றை புத்தகக்கடையிற்கண்டு அங்கே தங்கவும் செய்கிறாள். லோத் சிறையிற்சென்று வேசியின் மகளைப்பார்க்கிறாள். சிறையில் ஒரு துண்டுக்காகிதமொன்றை வேசியின் மகள் தருகிறாள். அதில் ஒருவீட்டின் முகவரிகொடுத்து அங்கே பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அம்முகவரியில் துப்பாக்கியொன்றை தருகிறார்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறபொழுது அவள் பையைத் திருடும்முயற்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்த சிறுவன் அவளைச்சுட இறக்கிறாள். லோத் இறந்தசெய்தியை அவளின் தாய்க்குத் தெரிவிக்கப்பட ஜெர்மனியிலிருந்து வந்தவள், அலியின் மகன் நெசட் வீட்டில் மகள் இருந்த அறையில் சிறிது நாட்கள் தங்கிக்கொள்ள அனுமதிகேட்கிறாள். அவன் புத்தகககடையில் வேசியின் மகளை அவன் தேடுவது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தும் மகளைபோலவே அவளும் கவனிக்கத் தவறுகிறாள். ஜெர்மன் பெண்மணி சிறைக்குசென்று வேசியின் மகளைப்பார்த்து அவளை வெளியிற்கொண்டுவர அவள் மகளெடுத்த முயற்சிகளை தொடரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாள். சிறைவாசத்திற்குப்பிறகு தந்தை இஸ்டான்புல்லுக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் அனுப்பட்டச் செய்தி மகனுக்குக் கிடைக்கிறது. அவர் கடலோர கிராமமொன்றில் இருக்கிறார் என்று அவரைத் தேடி செல்கிறான். அவர் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் செய்தியறிந்து அவருக்காக எதிர்கரையை பார்த்துக் காத்திருக்க படம் முடிகிறது.
இம்மனிதர்களிடை தளிர்க்கும் பின்னர் வாடும் அந்த உறவிற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் இலை நரம்புகளாக தொழிற்படுகிற உணர்விற்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் சொல்லுங்கள்.
——————–