பயணமும் படைப்பும்
படைப்பாளிகள் எஸ். ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் எழுத்தில் விஞ்சி நிற்பதற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், என்னைக்கேட்டால் அதற்கான சூட்சமம் அவர்கள் ஓயாமல் சுற்றிய ஊர்களிளும், சந்தித்த உயிர்களிலும்; கால் நனைத்த புழுதியிலுமிருக்கிறது.
நண்பர் V.S. நாயகர் எங்கள் பிரெஞ்சு வலைத்தளத்திற்காக ஜாம்பவான் ஜெயகாந்தனுடைய பாரீசுக்குப்போ நாவலைக் குறித்து கட்டுரையொன்று எழுதியிருந்தார். அக்கட்டுரையில் வெகு நாட்களுக்குப்பிறகு ‘Imagologie’ என்ற சொல்லை சந்திக்க நேர்ந்தது. ஆங்கிலத்தில் Imagology. அந்நிய தேசத்துடன் எழுத்தாளனுக்குள்ள உறவை அவனைப்போன்ற உணர்வுகொண்ட வேறொருவனுடன் ஒப்பிட்டு பேசுவது. இக்கட்டுரையை வாசித்தபோது அண்மையில் நோபெல் பரிசுபெற்ற கிளேஸியோவை நினைவு கூர்ந்தேன். இவர் தமது ஒவ்வொரு நாவலிலும் இந்தியாவை அல்ல
து அதன் பண்பாட்டை ஒன்றிரண்டுபக்கங்களிலேனும் தொடாது போனால் தமது படைப்பு முழுமைபெறாதென நினைப்பவர். இந்தியா இல்லாமல் தமது எழுத்தில்லையென நினைக்கிற மேற்கத்தியர்களில் ஒரு பத்துபேரை சிறுபிள்ளைபோல விரல்விட்டுச் சொல்லமுடியும். இந்தியாவும் மேற்குலக படைப்பாளிகளுமென்றே தனிக்கட்டுரையொன்று எழுதலாம். சிந்தனையை அதன் போக்கில் செல்லவிட்டு மூக்கனாங்கயிறை கையில் பிடித்தபோதுதான் இவர்கள் அனைவருமே தேசாந்திரிகள் என்கிற உண்மை பிடறியில் விழுந்தது.விலங்குகளில் மீன் போன்ற இவர்கள் அகத்திலும், புறத்திலும் ஓயாமல் அலைபவர்கள்.
புராணங்களை நம்புபவர்களுக்கு நாரதர் முதல் தேச சஞ்சாரி. அவர் சஞ்சாரம் நன்மையில் முடிகிற கலகத்திற்கு உதவியதாம். பாதிக்கப்பட்ட அசுரர்தரப்பு பதிவுகள் ஏதுமில்லாததால் ஒருதலைபட்சமாக இக்கருத்தை ஆதரிக்கவேண்டியிருக்கிறது.எங்கள் கிராமத்தில் திடீரென்று குஞ்சு குளுவான்களுடன், தங்கள் உடமைகளை முதுகில் சுமந்துகொண்டு நரிகுறவர்கள் வந்து கூடாரம் அடித்துக்கொண்டு பத்து நாட்களோ பதினைந்து நாட்களோ தங்கியிருப்பார்கள். கிராமத்தில் தங்கியிருக்கிற அவ்வளவு நாட்களும் அவர்கள் மீது பிரம்மிப்பை வரித்துக்கொண்டு சுற்றிவருவோம். வாஸ்கோடாகாமையும், கொலம்பஸையும் பள்ளி பாடத்தில் நிழற்படமாகப் பார்த்திருந்த எங்களுக்கு, இவர்கள் நிஜவாழ்க்கையின் ஆச்சர்யம். உலகத்தையே முதுகில் சுமந்து வந்து ஊர் புளியமரத்தடிகளில் இறக்கியதாக நினைத்து கொசுக்கள் போல அவர்கள் விரட்ட விரட்ட இருட்டும்வரை கண்கள் விரிய அவ்விடத்தை விட்டு அகலாமல் மொய்த்துக்கொண்டிருப்போம். கிராமத்தில் சிலர் அவர்களனுபவங்களை விசாரிப்பதும், அவ்வனுபவங்கள் அவர்கள் மொழி, அவர்கள் உடையை அணிந்து எங்கள் முன்னே உயிர்ப்பிப்பதும் அழகு.
ஒரு கலைஞன் அவன் புகைப்படக்காரனோ, ஓவியனோ கவிஞனோ கதாசரியனோ பயணத்தின் முடிவில் பகிர்ந்துகொள்வது வேறு; அது நீங்களும் நானும்பார்த்த உலகமோ விளங்கிக்கொண்ட பேச்சோ அல்ல, வேறு உலகம், வேறு மொழி, அவர்கள் மற்றவர்களாகவும் இருக்கலாம் அந்நியர்களெனவும் கருதலாம். .ஹாரி மிஷோ என்ற பிரெஞ்சுபடைப்பாளியும் ஒரு நாடோடி, ‘உத்தமமான மனிதனை நான் சந்தித்ததில்லை’ என்பவரின் கூற்றைவத்து அவர் உலகம் சுற்றியதற்கு என்ன காரணமென்று புரிந்துகொள்கிறோம்.
நானோ எனது வாழ்க்கையோ துணை எதற்கு
நீ புறப்படு
காற்றாய் நீ பறக்கிறாய்
எடுத்துவைக்கவேண்டிய
ஓரடிக்குக்கூட -இன்னமும்
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
தமது வாழ்க்கையிடம் கவிஞர் நடத்திய உரையாடல். பதில் கிடைத்திருக்கவேண்டும். பின்தொடர்ந்து ஓடிய சொந்த வாழ்க்கை கை விரித்துவிட வெற்றிடத்தை நிரப்ப புதியபூமி, புதியகாற்று, புதிய மனிதர்கள் உன்மத்தம் பிடித்து அலைகிறார், தேடலுக்கு முடிவில்லை.
நிக்கோலா பூவியே என்ற மற்றொரு எழுத்தாளருக்கு அண்டைமனிதர்களை அதிகம் நேசித்ததாலேயே பயணம் கட்டாயமாகிறது. பயணமே ஒரு கலை, அக்கலைக்கு பாம்பு சட்டையைக் கழற்றுவதுபோல அத்தனையையும் உதிர்த்துவிட்டு அருவமாக நிற்கிறார். நிக்கோலா பூவியேயின் கால்கள் இந்தியாவில் கால்பதிக்காத இடமில்லை.
காதலையும், சாகஸத்தையும் மையமாக்கொண்டு படைப்புகள் உருவான காலத்தில் ஜார்ஜ் சாண் என்கிற பிரெஞ்சு பெண்மணி முன்னணி எழுத்தாளர். இவருமொரு ஒர் தேசாந்திரி. பார்த்த தேசங்களையும், கிடைத்த அனுபங்களையும் தமது நாவல்களிலும், சுயசரிதையிலும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்கெரித் துராஸ் நாவல்களும் வியட்நாம் இந்தியாவென பயணம் செய்வன. பத்ரிக் டெவில் என்ற மற்றொருஎழுத்தாளரும் இதே இனம்.
———————————————————————————
பயணத்தின் போது சிறகு முளைக்கும், குந்திய இடத்தைவிட்டு எழுத்திரிக்காமல் இருந்தால் வேர்தான் விழும்…. இனிய பதிவு…
உண்மை, வெகு அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி
நா.கி