துப்பறியும் புனைவுகள்: Whodunit
மேற்கத்திய நாடுகளில் குற்ற புனைவுகள் என வகைபடுத்தியபோதிலும், தமிழில் அவற்றை துப்பறியும் புனைவுகளென்றே அறிவோம். தவிர நம்முடைய துப்பறியும் புனைவுகளுக்கு நெடிய வரலாறு கிடையாது, அண்மைகாலத்தியவை. இருபதாம் நூற்றாண்டிலிருந்தே குற்றபுனைவுகளை தமிழ் எழுத்துலகம் சந்திக்க நேர்ந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்காரும் வை.மூ கோதைநாயகி அம்மாளும் முன்னோடிகள். குற்றப்புனைவுகள் அனைத்திலுமே பொலீஸார் வரவேண்டுமென்கிற அவசியமில்லை. அண்மையில் குற்ற நூல்களின் வரலாறு என்றதொரு நூலை வாங்கினேன். நூலாசிரியர்கள் இருவரும் குற்ற நூல்களின் வரலாற்றை அகழ்ந்து ஆய்ந்து அட்டவணை படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் நூலைப்பற்றியும் நூலாசிரியர்கள் பற்றியும், நூல் உருவான விதம் பற்றியும் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். துப்பறியும் கதைகள் வாசகர்களிடம் ஏற்படுத்துகிற தூண்டலை இலக்கிய விமர்சகர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் தொனிக்கிறது.
முதல் குற்ற புனைவு எந்த நூற்றாண்டில், எங்கே எழுதப்பட்டதென நினைக்கிறீர்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஊர்பேர்தெரியாத சீனர் ஒருவரால் எழுதப்பட்ட அந்நூலின் பெயர் Trois affaires criminelles résolues par le juge Ti (Celebrated Cases of Judge Deei). இதொரு வரலாற்று குற்றப்புனைவு. குற்ற புனைவிற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்கள். வரலாறு என்பதற்கு என்ன பொருளென்றும் அறிந்திருப்பீர்கள். இரண்டையும் சேர்த்து பொருள்கொண்டால் வரலாற்று குற்றபுனைவு. சற்று எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், படைப்பாளியின் உயிர் வாழ்க்கைக்கு முந்தைய காலத்தில் நடந்ததென்று ஒரு புனைவை கட்டமைப்பது வரலாற்று குற்றவியல். பாத்திரங்களின் மொழி, சமூக அமைப்பு, காட்சிகள் விவரணை அனைத்திலும் கடந்த காலத்தைத் தெளிவாய்க் கொண்டுவரவேண்டும். இவ்வரலாற்று புதினங்களில் ‘யார் செய்திருப்பர்’ அல்லது எதனால் நிகழ்ந்தது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் இதனை’ Whodunit (Who done it) என்கிறார்கள். Celebrated Cases of Judge Dee. என்ற சீன நூலை ரோபர்ட் வான் குலிக்(Robert Hans van Gulik ) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை வாசிக்கசந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக France-Culture என்கிற பிரெஞ்சு வானொலியில் பத்து பகுதிகளாக கேட்க வாய்ப்புக்கிடைத்தது. பிரெஞ்சில் தொடரைக்கேட்க விருப்பம் உள்ளவர்களுக்காக: http://www.franceculture.fr/oeuvre-trois-affaires-criminelles-resolues-par-le-juge-ti-roman-anonyme-chinois-du-xviiie-siecle-de-
பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ‘பல்ஸாக்’ 1841ம் ஆண்டு எழுதிய Une ténébreuse affaire , என்ற நூலும் வரலாற்று குற்ற புனைவிற்கு நல்ல உதாரணம். பிறகு அகதா கிறிஸ்டி எழுதிய புனைவுகளில் சிலவும், கோனன் டாயில் புதினங்களும் அவ்வகைப்பட்டவை என்று கருதலாம். ஆனால் குற்றப்புனைவுகளை முழுக்க முழுக்க துப்பறியும் புதினங்களாக மாற்றிய புண்ணியவான்கள் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும்.
இன்றைக்கு குற்ற வரலாற்று புதினங்கள் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இன்றைக்கு அவை இலக்கியம்: உம்பர்ட்டோ எக்கோ, குந்த்தர் கிராஸ், ட்ரூமன் கப்போட், ஓரான் பாமுக் போன்ற படைபாளிகள் குற்றப்புனைவுகளை இலக்கிய அந்தஸ்திற்கு உயர்த்தியவர்கள்.
தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்து அல்லது அதையே காரணமாக முன்வைத்து காழ்ப்பில் விமர்சனம் செய்பவர்கள்கூட கதைசொல்லலில் கல்கியின் இடத்தை என்றைக்கும் எட்டப்போவதில்லை. எனக்கு அவருடைய பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் வரலாறு குற்றப்புனைவு வகைமை சார்ந்ததே. எனது பங்கிற்கு நீலக்கடல், மாத்தாஹரி என்ற இரண்டு நூல்களை எழுதினேன். ஓரளவிற்கு அடையாளம் கிடைத்துள்ளது அதில் செய்திருக்கு பல முயற்சிகளை பாராட்டுகிறவர்கள் ஒருபக்கமெனில், உள்ளார்ந்த எரிச்சலில் உதாசீனப்படுத்தும் மனிதர்களுமுண்டு. நீலக்கடலுக்கும் மாத்தாஹரிக்கும் ஏன் எனது எந்தப்படைப்பிற்கு விமார்சனங்களை லாபி செய்து பெற்றவனல்ல. எழுதியவர்களை அவர்களின் விமர்சனத்திற்குப்பிறகே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கத்திய படைப்பாளிகளின் பெயர்களை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் சற்று உரத்து பேசத் தொடங்கியிருக்கிறோம். இன்றைய மேற்குலகைப்பற்றியும் அதன் படைப்புகளையும் கொண்டாட வழக்கம்போல இவர்களுக்கு 50 ஆண்டுகள் தேவைப்படலாம்.
——————————–