பிரான்சில் என்ன நடக்கிறது?: மூன்று பெண்கள்
ராணிகள் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறங்கக்கூடுமென்பதால், அவர்களிடம் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார் அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிற சொலவடையில், முன்னதை ஏற்கலாம் அடுத்து வருவதை பெண்களிடத்திற் சொல்ல துணிச்சல் வேண்டும்.
ஆன் சேங்க்ளேர் (Anne Sanclair)
அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். உண்மையில் சோஷலிஸ்டு கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). சிறந்த பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர், சோஷலிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், மிதவாதி. பிரான்சுநாட்டில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவது கடினம் என்ற நிலையில் இடதுசாரியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆதரவைப் பெற்றவர். அப்போதைய அதிபராக இருந்த சர்க்கோசி UMP எனும் வலது சாரிகட்சியின் சார்பில் அதிபரானவர். கொஞ்சம் தந்திரசாலியுங்கூட. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அவர், உள்ளூர் அரசியலிலில் இருந்து, எதிர்காலத்தில் தமக்கு எதிராக நிற்கக்கூடிய சோஷலிஸ்டு வேட்பாளரை களத்திலிருந்து வெளியேற்றினால் – உள்ளூர் மக்களிடமிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேற்றினால் – ஓரளவு தொமினிக்கின் செல்வாக்கைக் குறைக்கலாம், அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்கவும் செய்யலாமென கருதி தந்திரமாக டொமினிக்கை பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்தார். ஓர் எதிர்கட்சிதலைவரின் திறமையை மதித்து உலக அரங்கில் பொறுப்பான பதவியில் அமர்த்திய சர்க்கோசியின் தயாள குணத்தை அப்போது புகழாதவர் எவருமில்லை. சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. உள்ளூர் பிரெஞ்சு ரகசியபோலீஸார் தெரிவித்த தகவலின்படி டொமினிக் பெண்களென்றால் கார்த்திகை மாதத்து நாயாகிவிடுவார் என்ற உண்மை சர்க்கோசிக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. சர்க்கோசி எதிர்பார்த்ததுபோலவே எல்லாம் நடந்தது. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் தமது பெயரை பிரேரிப்பதற்காக பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க்கில் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல் அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக டொமினிக் கைதுசெய்யப்பட்டார். விசாரணை, வழக்கு, சிறைவாசம். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. தொடர்ந்து பிரான்சு நாட்டிலும் அவருக்கெதிராக பல பெண்கள் குற்றம் சாட்டினர். பெண்பத்திரிகையாளரில் ஆரம்பித்து, கால்கேர்ள்கள் வரை இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமலில்லை. இதில் சர்கோசியை சுலபமாக குற்றம் சாட்டமுடியாது. டொமினிக்கின் பலவீனத்தை அவர் பயன் படுத்திக்கொண்டார். அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழிநீர் பானையில் விழுந்தார்.
ஆனால் இங்கே சொல்லவந்தது டொமினிக் பற்றியோ சர்க்கோசி பற்றியோ அல்ல டொமினிக்கின் மனைவி குறித்து. நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. சம்பவம் நடந்தது மேற்கத்திய நாடொன்றில், குறிப்பாக பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி (பில் கிளிங்டன் போல அல்ல, இரவுவேளைகளில் இதற்கெனவே டொமினிக் அலைகிறவரென வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில்), மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. தாம் சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். பத்ரிகையாளர்களிடம் தம் குடும்பபிரச்சினையை பிறரோடு பகிர்ந்துகொள்ளவிருப்பமில்லையென தெரிவிக்கிறார். வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி நட்சத்திரம், பெண்விடுதலையாளர்.
வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:
இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள்.
செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். தோற்றதற்கு சோஷலிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக அப்போதிருந்த ஒலாந்து சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றசாட்டு உண்டு, இக்குற்றசாட்டிற்கு பின்புலத்தில் இருந்தவர் யாரென்று அடுத்துவரும் வரிகளை படித்தால் புரிந்துகொள்வீர்கள். 2012ல் அதிபர் தேர்தலின்போது கட்சிக்குள் ஆளுங்கட்சிக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவதென்ற தேர்தல் நடந்தது. டொமினிக் போட்டியிடவாய்ப்பில்லை என்றானபிறகு, கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்வுக்காக சோஷலிஸ்டு கட்சியில் ஆறுபேர் போட்டியிட்டனர். அவர்களில் செகொலன் ரொயால் ஒருவர். ஆனால் துரதிஷ்டவசமாக முதல் சுற்றில் தோற்றார். இரண்டாவது சுற்றில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளராக ஒலாந்தை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.
செகொலன் ரொயால் பற்றிய பிற தகவல்கள் முக்கியமானவை. அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிள்ளைகளும் உண்டு. முந்தையை சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இப்பெண்மணிக்குண்டு. 2006ம் ஆண்டுவரை ஒலாந்தோடு வாழ்க்கை நடத்தியிருக்கிறார். 2006ல் ஒலாந்து வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் பிரிகிறார்கள். அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்விலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைகொண்டவர்.
அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது தங்கள் தந்தைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற தலைவர்களை நடதுவதைபோலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவ்ரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள். அதை கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த பிரதேசத்தில் வருகிறபோதும் அதேக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவதுகூட பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும், அதைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். சோஷலிஸ்டுகட்சி மட்டுமல்ல பிரான்சே கொந்தளித்து போனது. இப்பெண்மணி இவ்வளவு கீழ்தரமாக நடந்துகொள்வாரென எவரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகள் அனைத்தும் விளாசிதள்ளிவிட்டன. ஒரு பக்கம் மணச்சடங்குகளில் ஒப்புதலில்லை, தொடர்ந்து பத்ரிகையாளராக இருந்துகொண்டு சுதந்திரமாக இருக்கப்போகிறேன் என அறிவித்துக்கொண்டே, இன்னொரு பந்தத்தை புறவாசல்வழியாக நாகரீகமற்ற வகையில் நிரூபணம் செய்வதாக விமர்சனங்களை வைக்கப்படுகின்றன. நெருக்கடியான நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒலாந்துவிற்கு இது கூடாத தலைவலி. ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்னசங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். அவரது புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதி செய்கின்றன. இதையே கையாளதவர் நாட்டின் நெருக்கடியை எப்படி கையாளுவார் என்கிறார்கள் எதிர்கட்சிகாரர்கள்.
ஆன் சேங்க்ளேர் – வலேரி திரேவிலெர் இருவருமே மேற்கத்திய கலாச்சாரத்தில் விளைச்சல். பண்பாடு நாம் கற்ற ஞானத்தின் எடைசார்ந்ததல்ல, நம்மை முன்னிருத்திக்கொள்ளும் வகைமை சார்ந்தது.
——————————–