அ. தமிழில் விமர்சகர்களே இல்லை:
“விமர்சனம் என்பது வெறும் கோட்பாடோ, ஆய்வோ அல்லது வெறும் ரசனை சார்ந்து உதிர்க்கப்படும் அபிப்பிராயங்களோ அல்ல. மொழியின் அழகும், படைப்பின் ஆழமும் ஒரு சேர வெளிப்படும் அபூர்வமான கலையே விமர்சனம் என்பது. ஒரு படைப்பையோ, அல்லது ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த மன உலகையோ நளினமும், அழகும் மிக்க உரைநடையில் ஆழமான வீச்சுடன் எழுதத் தெரிந்தவனே முதல் தரமான விமர்சகன் -“வண்ண நிலவன்.
பெருமதிப்பிற்குரிய வண்ண நிலவன் தளத்தில் வாசித்த கட்டுரை “தமிழில் விமர்சகர்களே இல்லை” ஓர் எல்டாரோடாவை கட்டிக்கொண்டு இதுதான் இலக்கியமென பரமார்த்த குருகதை அளந்துகொண்டிருக்கிற இன்றைய தமிழ் படைப்புலகத்தின் கன்னத்தில் அறைகிறது.
வண்ண நிலவன் சொல்வதுபோல ஒரு தேர்ந்த சார்பற்ற விமர்சகன் வேண்டும். அதுவன்றி தற்போதைக்கு விமோசனமில்லை. கிணற்றை எட்டிப்பார்த்து இதுதான் கடல் என்கிற வாசகர்கூட்டத்திற்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. படைப்புலகம் ஆரோக்கியமாக இருக்க முதுகு சொறியாத விமர்சனமும், தேர்ந்த வாசகர்களும் தேவை. அமெரிக்காவிலிருந்து கொண்டு தமிழில் வலைத் தளங்களில் எழுதும் இளைஞர்கள் (இவ்வளவிற்கும் தீவிர இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள்போல தெரிகிறது) எப்போதேனும் அமெரிக்காவின் இன்றைய நவீன எழுத்துக்கள் பற்றியோ, நவீன எழுத்தாளர்கள் பற்றியோ எழுதுவார்களென எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். தமிழ் நாட்டெல்லைக்குள் வாசிக்க போதிய வசதியற்றிருக்கும் வாசகர்களை இங்கே நான் கணக்கிற்கொள்ளவில்லை. எங்கே பாரபட்சமற்ற விமர்சகர்களும், வாசிப்பில் பரந்த ஞானமும் உண்டோ அங்கே மட்டுமே இலக்கியம் வளரும்.
http://wannanilavan.wordpress.com/2012/06/06
ஆ. கசல் கடவுள்
“அவர் பாடல்கள் நடுவே கொடுக்கும் ‘இசைமௌனம்’ அப்படிப்பட்டது. அதை பெற்றுக்கொள்ள காது மட்டும் போதாது. அவரது இசை கேட்பவனுக்குள் அலையாழியென வலியையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் எழுப்பி, சென்ற காலங்களின் அடிநுனி முதல் இக்கணம் வரை காதலை இழந்து துயருறும் அத்தனை பேருடைய ஒட்டுமொத்த துயரத்தையும் அவன் நெஞ்சில் கொண்டுவந்து நிறைக்கும் வல்லமைகொண்டது. அவரது குரல் இன்னொரு மானுடக்குரல் அல்ல. வலியையும் தியாகத்தையும் மீட்பையும் ஒலிவடிவம் கொள்ளச்செய்யும் ஒன்று அது. அது தூயகாதலின் வெற்றியைப்பற்றிய புனிதமான நன்னம்பிக்கையை முன்வைத்து, இறப்பையும் விதியையும் நோக்கி அறைகூவுகிறது. அது இணையற்ற, அழிவில்லாத ஒரு அனுபவம்.. ” (கசல் கடவுள் கட்டுரையில் ஷாஜி)
கசல் கடவுள்: மெஹ்தி ஹசன் என்ற தலைப்பிலுள்ள ஷாஜியின் பதிவு வாசிக்கவேண்டிய ஒன்று. தமது நண்பரும் பாடகருமான ஸ்ரீனிவாஸ் ஊடாக ஹசனை அறிந்துகொண்டது தொடங்கி கசல் பாடகரின் சரிதை, சாதனை, இசையாற்றல் அவ்வளவையும் உணர்வுபூர்வமாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.
http://www.musicshaji.blogspot.fr/
இ. Pattu’s terrace Garden
ஊர்வம்பில்லாத வலைத்தளங்களை தேடிப்பிடித்து வாசிக்கவேண்டியிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் Pattu’s terrace Garden. நண்பர் இயற்கை தாவரவளர்ப்பில் ஆர்வலர். அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். உபயோகமான பதிவு. வீட்டில் தோட்டமும் அல்லது வேறு வகையில் வசதிகளுமிருப்பின் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள குறிப்புகளிருக்கின்றன;
http://gardenerat60.wordpress.com/2010/11/03/seethaphal-custard-apple/
ஈ நெஞ்சின் அலைகள்
திண்ணை இணைய இதழில் தொடர்ந்து காணக்கூடிய பெயரொன்று உண்டெனில் அநேகமாக திரு. ஜெயபாரதன் என்ற பெயராக இருக்கும். எளிய தமிழில் சிக்கலான அறிவியல் கூறுகளையும் தெளிவுபடுத்தும் ஆற்றலில் அணமையில் இவருக்கு நிகராக வேறொருவரைக் கண்டதில்லை. அன்னாருடைய வலைத்தளமே நெஞ்சின் அலைகள். கோவையிலிருந்து வெளிவந்த கலைக்கதிர் என்ற நூலை எழுபதுகளில் விரும்பி வாசித்ததுண்டு. அதற்குப்பிறகு அதுபோன்றதொரு மொழியில் அறிவியலில் அக்கறையற்றவர்களையும் வசீகரிப்பதில் நண்பர் தேர்ந்திருக்கிறார். வாசித்த கட்டுரை, கூடிய சீக்கிரம் செவ்வாய் கோளில் இறங்கவிருக்கும் தளவூர்தி பற்றியது.
http://jayabarathan.wordpress.com/
உ. கணையாழின் கதை
அன்பிற்குரிய திரு வே.சபாநாயகம் தமது நினைவுத் தடங்களில் கணையாழியின் வரலாற்றை தொடக்கமுதல் இன்றுவரை பதிவு செய்திருக்கிறார். திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது. கணையாழி பற்றிய பொதுவான தகவல்களை அறிந்திருக்கிறேன். கணையாழின் தொடக்கம், ஆரம்பாகால முயற்சிகள், பங்களிப்புகள் வெளியான படைப்புகள் கணையாழியால் அறியப்பட்ட எழுத்தாளர்கள், இன்று ம. ராஜேந்திரனிடம் கணையாழி வந்திருப்பதுவரை தெளிவாக்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வருகின்றன. நிலைத்து நிற்க ஆர்வமும், உழைப்பும், புதிய யுக்தியும், நிதியும் வேண்டும். கணையாழிக்கு வாழ்த்துகள்