இந்திய அதிபரின் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய பவன் கே. வர்மா என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Becoming Indian என்ற நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. வர்மாவின் வேறு இரண்டு நூல்களும் ஏற்கனவே பிரெஞ்சில் வெளிவந்து கவனத்தை பெற்றவையென்பதால் இப்புதிய நூலின் மீது பிரெஞ்சு ஊடகங்கங்களின் கவனம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக விழுந்துள்ளது.
நூலாசிரியர் இந்தியனென்கிற தமது அடையாளத்தை வரையறுக்க இயலாமல் தவிக்கிறார், இத்தவிப்பு நூலின் கடைசிப்பக்கம்வரை நீடிக்கிறது. அதற்கான காரணங்களும் அவராலேயே ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா இன்றளவும் விடுதலைபெறவில்லை என்பதில் ஆசிரியர் தெளிவாக இருக்கிறார். வர்மாவை பொறுத்தவரை ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியிருந்தாலும் அரசியல் பொருளாதாரமென்று இன்றளவும் இந்தியாவை வழிநடத்துவது ஆங்கிலேயரின் நிழல். அவர்கள் தந்திரமாக விட்டுச்சென்ற ஆங்கிலம் காலணியாதிக்ககாலத்தினும் பார்க்க கீழ்மையனானதொரு ஆதிக்க அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறது. வர்மாவுடைய கருத்தின்படி காலணியாதிக்கம் விட்டுச்சென்றுள்ள வர்க்கபிரிவு ஆங்கில மொழி அறிந்தவர்கள், அறியாதவர்கள். இவர்களில் முதற் பிரிவினர் ஆங்கிலேயரின் இடத்தைப்பிடித்துக்கொண்டு பெரும்பான்மை இந்தியரை அடிமைகளாக நடத்துகின்றனர் என்கிறார் வர்மா. அந்நியமொழியான ஆங்கிலம் இந்தியாவின் சுயமான கல்வி, கட்டிடக்கலை, பிற கலைகள், திரைப்படங்கள், சங்கீதம், இலக்கியம், பண்பாடு என அனைத்தையும் பாழடித்துவிட்டது என்பது வர்மாவின் குற்றச்சாட்டு. இந்தியாவில் நடப்பதனைத்தும் எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே வெட்டி -ஒட்டும் வேலை அதாவது சுயாதீன முயற்சிகளால் இயங்குபவை அல்ல. இந்தியப்பட்டறையில் நாம் செய்வதனைத்தும் நகலெடுக்கும்பணிதான். உலகில் மிகப்பெரிய அறிவுலகிற்கு சொந்தக்காரர்களாக இருந்த இந்தியர்கள். ஆங்கிலக்கல்விமுறையினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செக்குமாடுகளாக உழைக்கக்கற்றுக்கொண்டதன்றி வேறுபலன்களை காணவில்லை என்பது அவரது வாதம்.
மெக்காலே பிரபு என்பவனால் ஏறக்குறைய இருநூற்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுவிட்ட இந்தியாவின் தலைவிதிக்கு இந்தியர்களும் பொறுப்பு என்கிறார் வர்மா. வில்லியம் பெண்டிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் அன்றைய இந்தியத் தலைவர்கள் இருபிரிவினராக இருந்திருக்கின்றனர். ஒரு சாரார், “எங்களை ஆள்வதற்கு எங்கள் மொழியை நீங்கள் கற்பதுதான் முறையென வற்புறுத்த மற்றொரு பிரிவினர் (ஆங்கிலேயர்களும் அவர்களின் விசுவாசிகளும்) ஆளுகின்ற வர்கத்தின் மொழியை குடிகள் ஏற்பதுதான் முறை எனக் கூறியிருக்கின்றனர். விளைவாக ஆளும்வர்க்கத்திற்கும் மக்களுக்குமிடையே இடைத்தரகர்களாய் ஒரு கூட்டம் முளைத்து அக்கூட்டத்தின் பிழைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளே நுழைந்தது என்கிறார், வர்மா. கீழைசிந்தனைகளில் தமக்கென ஒரு பாரம்பர்யத்தைப்பெற்றிருந்த இந்தியா ஆங்கிலத்தை அனுமதித்ததன் மூலம் தமது தலைவிதியையே மாற்றி எழுதிக்கொண்டது. ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இடத்தில் ஆங்கிலத்தை அறிந்த ஒரு புதிய நடுத்தரவர்க்கம் தங்களை ஆங்கிலேயராக மட்டமைத்துக்கொண்டு அதிகாரத்திற்குள் நுழைந்தது. தவிர இந்தியப்பண்பாட்டிற்குள்ளும் பல அத்துமீறல்களை நிகழ்த்தியதோடு இந்தியாவின் கல்வியும் கலையும் ஆங்கிலத்தினூடாகத்தான் உலக அங்கீகாரம் பெறமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வேதனைக்குரியது என்கிறார் பவன் கே.வர்மா.
காங்கிரஸ் இயக்கங்கண்ட இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதுபோல அவர்கள் மொழியையும் துணிச்சலுடன் வெளியேற்றியிருக்கவேண்டும் என்கிறார். நம்மவர்களின் விவேகமற்ற அணுகுமுறைகளுக்கு நூலாசிரியர் சில வரலாற்று சம்பவங்களையும் சாட்சிக்கு அழைக்கிறார். உபநிஷத்திற்கும் வேதாந்ததிற்கும் உரை எழுதிய ராஜாராம் மோகன் ராய் என்பவர்தான் சமஸ்கிருத கல்விமுறைக்கு எதிராகவும், ஆங்கில கல்விமுறைக்கு ஆதரவாகவும் அப்போதைய கவர்னர் ஜெனரலிடம் மனுகொடுத்தவராம். ஆக மெக்காலேவின் அறிக்கைக்கு ராய் பிரிட்டிஷ் நிர்வாகிகளிடம் கையளித்த விண்ணப்பமும் ஒரு வகையில் காரணம். விதேசிகளை விதந்தோதும் இந்தியரின் போக்கிற்கு அன்றே உதாரணங்கள் இருந்திருக்கின்றன என்கிறார். இனவாதியும், இந்தியர்களை மிகக்கேவலமாக விமர்சித்து பழகியிருந்த (அப்புத்தகங்கள் இந்தியச்சந்தையில் இன்றும் கிடைக்கின்றனவாம்) எட்வின் லுட்டியென் (Edwin Lutyens) வசம் இந்திய தலைநகரான புதுடில்லியை நிர்மாணிக்கும் பொறுப்பை அளித்ததும், இந்திய பாரம்பர்யதைக் கேலிசெய்தும், இந்தியர்களைப் பழித்தும் பேசிய லெ கொர்புசியே (Le Corbusier) என்பவரிடம் நேரு சண்டிகார் நகரை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததையும் வர்மா வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேற்கத்திய அறிவை சிலாகிக்கும் போக்கு இன்றளவும் தொடர்வதை ஆசிரியர் மறக்கவில்லை. இன்றுங்கூட இந்தியாவில் எத்தனை விருதுகள் பட்டங்கள் பெற்றாலும் அக்கலைஞனோ, படைப்பாளியோ வெளிநாட்டில் விருதுபெற்றால்தான், ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டால்தான், இந்தியாவில் பெரியவனென ஏற்றுக்கொள்கிறார்களென வருந்துகிறார்.
நூலில் இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன: ஒன்று ஆங்கிலத்திற்கு மாற்றாக நூலாசிரியர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்கபடவேண்டும் என்பது. இன்றைய தேதியில் இது சாத்தியப்படுமா? அறுபதுகளில் நிகழ்ந்த மொழிக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அடுத்து ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர்களையும் வரலாற்று ஆதாரங்களையெல்லாம் வம்புக்கிழுத்து விமர்சிக்கிறவர், நூலை ஆங்கிலத்தில் எழுதியிருப்பது.
———————————–