பிரான்சு நாட்டின் புதிய அதிபர்: பிரான்சுவா ஒலாந்து
எதிர்பார்த்ததுபோலவே சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து வெற்றிபெற்றிருக்கிறார். இந்த ஒலாந்து என்ற சொல்லை ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பில் கண்டேன். ஆனந்தரங்கபிள்ளைக்கும், இன்றைய பிரெஞ்சு பிரதமருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? எதையாவது எழுதலாம். கற்பனையிருப்பின் முடிச்சுகளா இல்லை. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிறவர்கள் டச்சுகாரர்களென்று நாமழைத்த ஓலாந்துகாரர்கள்.
பிரான்சுவா ஓலாந்து அதிபர் தேர்தலுக்கு நின்றபோது, ஆட்சியிலிருந்த வலதுசாரி கட்சியும் அவர்களது அனுதாபிகளும் கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தேர்தலில் நின்று ஜெயித்தும் ஆயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக புலம்பலும் தொடர்கிறது.
“வளர்ச்சியைப் புறக்கணித்து செலவினைக் குறைக்கவேண்டும்” என்று ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவை பிரான்சுவாஸ் ஒலாந்து மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த சொல்கிறார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த பலரும் வலதுசாரி பின்புலத்திலிருந்துவந்தவர்களென்பதால், பசியேப்பக்காரகளின் சஞ்சலத்தைக்காட்டிலும் புளிஏப்பக் காரர்களின் சங்கடங்கள் அவர்களுக்கு முக்கியமாகபட்டன. ஒலாந்துக்கு பசிஏப்பக் காரர்களின் சஞ்சலங்கள் முக்கியம். அவரது தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இருக்கின்றன. அவருக்கெதிராக கட்சிகட்டிகொண்டிருந்த ஐரோப்பிய வலதுசாரிகள், இறங்கிவந்திருக்கிறார்கள். பொருளியல் நிபுணர்களின் விமர்சன தொனியிலும் இறக்கமிருக்கிறது. நேற்றுவரை ஆட்சியிலிருந்த வலதுசாரி நடந்ததனைத்திற்கும் தாங்கள் பொறுப்பல்ல, அதற்கு உலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்றார்கள். புதிய அதிபரின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை என்கிற சர்க்கோசி அனுதாபிகளுக்கு, தங்கள் சர்க்கோசி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததில் வருத்தங்களில்லை. பிரான்சிலேற்பட்ட நெருக்கடிக்கு சர்க்கோசியும் அவரது சகாக்களும் பொறுப்பல்ல என்றும் உலகம் திணித்ததாகவும் கூற அவர்களுக்கு தயக்கமில்லை.
இந்த உலகம் எங்கிருந்து வந்தது, யார்கையில் இருக்கிறது? தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாட்டிலும் கைவிரல் எண்ணிக்கையிலிருக்கிற மனிதர்களிடம் உலகப்பொருளாதாரம் இருக்கிறது. உலகத்தின் தலைவிதியை இந்தச் சிறுகூட்டமே கைவலிக்காமல் எழுதுகிறது. அதை எழுதியதில் சர்க்கோசிகளுக்கும் பங்குண்டு. இன்றைய முதலாளியியத்திற்கு சில செப்படிவித்தைகள் தெரியும். சீனாவில் மாவோயிஸம்; பொதுவுடமைகாரர்களுக்கு சோஷலிஸம், மார்க்ஸிஸம்; அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முதலாளியியம்; இந்தியாவுக்கு ஜனநாயக சோஷலிஸமென மேடைக்கும் எதிரிலிருக்கும் ரசிகர்களைபொறுத்தும் எந்த வேடமும் முதலாளித்துவம் தரிக்கும். நேற்றுவரை பிரான்சு சர்க்கோசி முத்திரைகுத்திரையிருந்தது. இன்று ஒலாந்து முத்திரை. பீடித்துள்ள நோய்க்கு இதுதான் மருந்து என்று அறியாதபோது புதிய மருந்தையும் முயற்சிக்க வேண்டியதுதான். தற்போதைக்கு புதிய மருத்துவரின் கைராசிபற்றி கருத்து கூற உடனடியாக எதுவுமில்லை என்கிறபோதும் அவருடைய ஒலாந்து முகராசியை பலரும் நம்புகிறார்கள்.
அம்பேத்காரும் இவர்களும்:
ஏற்கனவே பிரசுரமான கேலிசித்திரம், இந்திய தேசிய நிறுவனமொன்றால் மறு பிரசுரத்திற்கு உள்ளாகியவகையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி பாராளுமன்றம் அமளி துமளிபட்டது. நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருந்த கல்விமான்கள் இருவரின் அலுவலங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் பத்து விழுக்காடு உத்தமர்கள் தேறலாம். 90 விழுக்காடு பிரதிநிதிகளுக்கு நாணயம், நேர்மை ஒழுக்கம் என்பது குறித்த உணர்வு இல்லாதவர்கள். பிரான்சில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி வேட்பாளர்கள் இருவர் மாத ஊதியதாரர்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னரென சொல்லிக்கொண்டாலும் பாரதத்தில் இப்படி தொழிலாளிகள் அதிபர் தேர்தலில் நிற்க வாய்ப்புண்டா தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் தராதரங்களை தினசரிகளில் வாசிக்கிறோம். இவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் எப்படியிருக்குமென உரசிப்பார்க்க அவசியமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மாயாவதி ஐம்பதுகோடி ( அறுபதுகோடி?) முதலீட்டில் பொதுசொத்தையும் வளைத்துப்போட்டு தமது அரண்மனையை கட்டிக்கொண்டதாக ‘இந்து’ இதழில் வாசித்தேன். இவர்தானென்று இல்லை இந்தியாவில் பெருவாரியான பிற்பட்ட மற்றும் தலித் பிரிவினர் தலைவர்களின் நிலமை இது. நான் ஒரு பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற வகையில் இதைச்சொல்ல உரிமை இருக்கிறதென நினைக்கிறேன். அம்பேத்காருக்கும், பெரியாருக்கும் சிலைவைத்து நினைவு நாள்கொண்டாடுவதைத் தவிர அல்லது அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதைத்தவிர கடந்தகால தலைவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அம்பேத்கார் இன்றிருந்தால் கார்ட்டூனை அனுமதித்திருப்பார் என்பது உண்மை. ஏனெனில் அவர் இவர்களல்ல. .
அ;மார்க்ஸ்
பேராசிரியர் அ;மார்க்ஸ் வலைப்பூ அண்மையில் புதுச்சேரிமாநிலத்தில் உருவையாறு என்ற கிராமத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு எதிரான கண்டன ஆர்பாட்டம் பற்றிபேசுகிறது. குற்றவாளிகளும் காவல்துறையில் சிலரும் இணைந்து செயல்படுவதையும், அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அலசுகிறது. பேராசிரியர் கல்யாணி, கொ.சுகுமாரன் போன்றவர்களின் நீண்டநாள் உழைப்பும் நினைவு கூரப்பட்டுள்ளது. சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்கள் வாசிக்கவேண்டிய பத்தி.
அ.ராமசாமி:
சரஸ்வதி சம்மாண் விருதுபெற்ற பேராசிரியர் அ.மணவாளன் குறித்து பேராசிரியர் அ.ராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை அம்ருதாவில் ஏற்லனவே வாசித்தது. அதனை அவரது தலத்திலும் இட்டிருக்கிறார். விமரிசிகர்களும் ஆய்வாளர்களும், தமிழ் படைப்பிலக்கிய உலகில் கண்டுகொள்ளப்படவில்லையென்கிற ஆதங்கத்தோடு, நவீன இலக்கியத்திற்கு வருகிறவர்கள் மரபு இலக்கியத்தில் அக்கறைகொள்ளவேண்டிய அவசியத்தையும் கட்டுரை ஆசிரியர் வற்புறுத்துகிறார். தமிழ்ப்பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியத்திலுள்ள ஞானத்தினும் பார்க்க நவீன இலக்கியவாதிகளுக்கு கூடுதலாக தொன்ம இலக்கியங்களைப் பற்றிய புரிதலிருக்கிறதென்பது எனது கருத்து. ஒன்றிரண்டு விழுக்காடுகள் இதற்கு மாறாகவும் இருக்கலாம். ஏனெனில் எனக்குத் தெரிந்த தமிழ்பேராசிரியர்கள் சிலர் நவீன இலக்கியத்தின் தீவிர வாசகர்களாக இருக்கிறார்கள், அனைவருமறிந்த தமிழவன், தில்லி பல்கலைகழக பேராசிரியர்கள் நாச்சிமுத்து, சந்திரசேகரன், புதுவைச்சேர்ந்த நண்பர் தேவமைந்தன் என்கிற பசுபதி என உதராணங்களைசொல்லலாம். பேராசிரியர் மணவாளனை அறிந்துகொள்ளவும், வழக்கம்போல பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் மொழிக்காகவும் வாசிக்கவேண்டிய கட்டுரை.
http://ramasamywritings.blogspot.fr/2012/05/blog-post.html#more
——–
———————————