மாப்பசான் கதைகளில் மொரென் என்பவனின் கதை சுவாரசியமானது. இந்த மொரென் நடுத்தர வயது வியாபாரி தையற் தொழிலுக்கு வேண்டிய பொருள்களையும் உபகரணங்களையும் விற்பது தொழில். கடைக்கு சரக்கு பிடிப்பதற்காக பாரீஸ¤க்குச் செல்லவேண்டும். உண்மையில் பாரீஸ¤க்கு செல்வதற்கெனவே கடைக்குச் சரக்குகள் பிடிக்க என்ற காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். வெளி மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு பாரீஸ் நகரத்தில் பதினைந்துநாள் தங்குவதற்கான வாய்ப்பெனில் சொர்க்கத்தை திறந்துவைத்திருப்பதுபோல, அதிலும் எத்தனைவிதமான பெண்கள்: இறுக்கமான உடையணிந்த நாட்டியக்காரிகள், திறந்த மார்புடன் வலம்வரும் நடிகைகள்; அழகிய கால்களுக்குச் சொந்தக்காரிகள், என மாப்பசான் நீளமாக எழுதிக்கொண்டுபோகிறார். கொஞ்சம் தில்லுள்ள ஆசாமியெனில் தொட்டுப்பார்க்கலாம் என்பதுபோல கைக்கெட்டும் தூரத்தில் கிடைப்பார்கள். ஆக பாரிஸ¤க்கு இரயில் பிடித்தபோது எல்லா மனிதர்களையும்போல நம்ம ஆசாமிக்கும் அப்படி இப்படியென்கிற கொஞ்சம் சபலமிருந்ததில் தவறில்லை, ஆனால் சாமர்த்தியம்தான் போதுமானதாக இல்லை. யாரிடம் தமது சரக்கு விலைபோகுமென முகம்பார்த்து தமது வாடிக்கையாளரை அடையாளப்படுத்தத் தெரிந்தவர், உடன் ரயிலில்வந்த பெண்ணைப் புரிந்துகொள்ள தவறிவிட்டார். போதாதற்கு அவரது அசட்டுத்தனமும் தோற்றமும் கூடுதலாக துரோகமிழைக்கின்றன. ஆமாம் இரயிலில் ஓர் இரவுமுழுக்க பெண்ணொருத்தியுடன் பயணம் செய்கிற மொரென், இப்பபடி யொரு வாய்ப்புகிடைத்தும் தவறவிட்டால் தம்மைவிட ஓர் அசடனிருக்கமுடியாது என்று முடிவெடுத்து ஒரு வேகத்தில் அவளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுவிடுகிறார். காமம் சிலநேரங்களில் இப்படித்தான் வாழ்க்கையையே திசைதிருப்பிவிடும். இவரது எல்லைமீறல் காவல் துறையின் தலையீடு, வழக்குப்பதிவு என்று நீள, வீடு திரும்பினால் ஏற்கனவே ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் ஆர்ப்பரிக்கிற இவரது மனைவி பத்ரகாளியாக மாறியிருப்பாள். வெளியில் தலைகாட்ட முடியாத நிலை. காலில் விழாத குறையாக தமது பத்திரிகையாள நண்பனை பெண்ணின் குடும்பத்திடம் தூது அனுப்பி வழக்கை வாபஸ் பெற வைக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை வாழ்நாள் சேமிப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொரென் இறக்கவும் செய்கிறார். தூதுபோன பத்திரிகையாளன் வேறுரகம். தந்திரப்பேச்சால் அப் பெண்ணோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் எதிர்காலத்தில் அவள் உதவியால் அரசியல் படிக்கட்டுகளைத் இரண்டிரண்டாக தாவிச்செல்லவும் அவனுக்கு முடிகிறது. ஆக இருவேறுமானிதர்கள் இருவேறு அணுகுமுறைகள், இருவேறு முடிவுகள். இடறிவிழுந்தால் அதுவும் ஒரு வித்தையென்று சொல்லத்தெரியாதவர்கள் எங்கேயும் ஜெயிப்பதில்லை. டொமினிக் ஸ்ட் ரோஸ்கான் முன்னாள் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவர், நடக்கவிருக்கும் பிரான்சு அதிபர் தேர்தலில் நின்று ஜெயித்து அதிபராகியிருக்க வேண்டியவர். சோஷலிஸ்டுகட்சியின் அதிகார பூர்வமான அதிபர் வேட்பாளாராக தம்மை அறிவித்துக்கொள்ள பாரீஸ¤க்கு திரும்ப இருந்த அன்று நியூயார்க்கில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பணிப்பெண்ணிடம் பாலியல்வன்முறையில் இறங்கியதற்காக கைதுசெய்யப்பட்டார். பின்னர் அக்குற்றத்தித்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பினும், ஆசாமியின் அன்றையதின அத்துமீறலை யாரும் மறுக்கவில்லை. காத்திருந்ததுபோல அடுத்தடுத்து அவர்மீது பாலியல் குற்றசாட்டுகள். அரசியல் எதிரிகளின் சூட்சியென்ற வதந்தியும் உண்டு. ஆசாமிக்குப் பெண்களிடத்திலுள்ள பலவீனத்தை அறியவந்த உலகம் வதந்திகளை கணக்கில் கொள்ளவில்லை. மாப்பசானின் கதைநாயகன் மொரென் மனைவிக்கு மாறாக சீண்டுவாரின்றி தனித்திருக்கும் இந்த சோஷலிஸ்டுகட்சியின் பிரமுகருக்குள்ள ஒரே ஆதரவு பத்திரிகையாளரான அவரது மனைவிதான். இந்த டொமினிக் ஸ்ட்ரோஸ்கான் இடத்தில் மாற்றுவேட்பாளாக சோஷலிஸ்டு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரான்சுவா ஹொலந்து அடுத்த அதிபர் என்பதாகக் தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் சொல்கின்றன. இப்பத்தியை நான் எழுதுகிறபோது பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முடிந்திருக்கவில்லை.
இரண்டு சுற்றுகளாக நடைபெறுகின்ற பிரெஞ்சு அதிபர் தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் 22 நடைபெறும். முதல் சுற்றில் களத்தில் பத்து வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கிற வேட்பாளர்களுக்கிடையே இரண்டாவது சுற்று தேர்தல் இருக்கிறது. நடைபெறும் தேதி மே 6. அன்றிரவே பிரான்சின் புதிய அதிபர் யாரென்று தெரிந்துவிடும். 1965லிருந்து இந்திய அதிபர் போலன்றி பிரெஞ்சு அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடைபெறுகிறது. எழு ஆண்டுகளாகவிருந்த பிரெஞ்சு அதிபரின் பதவிக்காலம் கடந்த 2000த்திலிருந்து ஐந்தாண்டுகள். பிரான்சுநாட்டில் பொதுவான கட்சிகளை தீவிர இடதுசாரிகள், இடதுசாரிகள், நடுவர்கள், வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகள் என்று பிரித்துவிடலாம். இப்பிரிவினை கூட முதல் சுற்றில்தான். இரண்டாம் சுற்றில் வலதுசாரி கட்சியான UMPயின் வேட்பாளர் நிக்கோலா சர்க்கோஸிக்கும் இடதுசாரி கட்சியான சோஷலிஸ்டு வேட்பாளர் பிராசுவா ஹொலந்துக்கும் நேரடி போட்டியாக இருக்கும். ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் சர்க்கோஸி இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார். தம்மால் மட்டுமே நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க முடியுமென்கிறார். துணிச்சலான ஆசாமியென பெயரெடுத்தவர். ஆனால் பெருவாரியான மக்களின் வெறுப்பினை சம்பாதித்துக்கொண்டிருப்பவர். தீவிர வலதுசாரிகளின் ஓட்டுகளுக்காக அவர் வெளிநாட்டினர்மீது காட்டும் வெறுப்பு, சென்ற தேரதலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, கராச்சி நீர்மூழ்கி கப்பல் ஊழல், இறுதியாக வழக்கம்போல அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எதிரான மக்கள் மனநிலை இவருக்குப் பாதகமாக உள்ள காரணிகள். இவருக்கு எதிராக இடதுசாரிக கட்சிகளில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஹொலாந்து என்பவர் நிற்கிறார். இவரிடமுள்ள குறைபாடுகள், அனுபவமின்மை, மெத்தனம், துணிச்சல் போதாது போன்ற குற்றசாட்டுகள். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சோஷலிஸ்டு வேட்பாளருக்கே சாதகமாக உள்ளன. கருத்து கணிப்பு உண்மையாக இருப்பின் அவரை பற்றி அடுத்தமாதம் எழுதுகிறேன்.