அவரைச் சந்திப்பதற்கு முன்பு அவரது குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு ஒரு பிற்பகலில் ஜீவனுள்ள அந்திவெயிலின் திரைமறைவில் ஒரு தேவாலயத்தில் வைத்து நிகழ்ந்தது. அவரது குழந்தைகள் குழப்படியற்ற குழந்தைகள். பிரபஞ்சம் அங்கே படிமங்களாக உயிர்பெற்று அசைந்தன. மானுட உயிரியக்கத்தின் குறியீடுகளாக கபி க்ரெட்ஸென்ற கலைஞர் சமைத்திருந்த சிற்பங்கள் இருக்கக் கண்டேன். கலை நுணுக்கமும் அழகியல் பார்வையும் ஒருங்கே அமைந்த படைப்புகளென்று அவற்றை சொல்லவேண்டும். அமைதியும் சன்னமான மின்சாரஓளியும் குடிகொண்டிருந்த சூழலில் நீந்தியபடி சிற்பங்களை வரிசையாகப் நண்பருடன் பார்த்து முடித்து நிமிர்ந்தபோது சிட்டு குருவி முனுமுனுப்பதுபோல குரல்கள். நண்பர் அவர்தான் என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. நிழல்போல அவரைத் தொடர்ந்துசென்று பெண்மணி முன் நின்றேன். மொட்டவிழாத சிரிப்பு, கூர்மையான கண்கள். நெற்றியில் நிழல்போல் அசையும் தலைமையிர். எதிரிலிருப்பவர்களை உள்வாங்கி மனதிற்குள் பிசைந்து பிரதியெடுப்பதுபோன்றதொரு பார்வை. நண்பர் ஓரிருவார்த்தைகளில் அவருடைய சிற்பங்களை சிலாகித்துவிட்டு, இரண்டாவது முறையாக அவற்றைக் காணவந்தத தமது நோக்கத்தை நியாயப்படுத்துகிறார். இதற்கிடையில் என்னைபற்றிய அறிமுகமும் நடந்து முடிகிறது.
சிற்பக் கலை மானுடத்தின் அழுத்தமான பிரதிகள். சொற்களை மறுதலித்து ஊமைமொழியில் உரையாடும் கலைவடிவங்களில் ஓவியமும் சிற்பமும் தன்னிகரற்றவை. ஓவியமும் சிற்பமும் ஒரே இனமென்றாலும் ஓவியத்தின் முப்பரிமாணவடிவமென்று சிற்பத்தைக் குறிப்பிடலாம். தொடு உணர்வை சிற்பக் கலையினும் பார்க்க வேறொன்றால் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் சொல்ல முடியுமமென்று நினைக்கவில்லை. ஏனையகலைகளைக் காட்டிலும் சிற்பகலையுடன் ஒரு நெருக்கத்தை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள இதுவே காரணமென்று நினைக்கிறேன். சிற்பக் கலைக்குள்ள மற்றொரு சிறப்பு இவர் அவைரைப்போல, அந்த சிற்பத்தைப்போலவென்று ஒரு கலைஞரை அவரது படைப்பை மற்றொருவருடனோ, பிரிதொரு படைப்புடனோ போகிறபோக்கில் ஒப்பீடுசெய்வதில் சங்கடங்களுண்டு. சிற்ப கலைஞனும் சரி அவரது படைப்புகளும் சரி தனித்தவை.
கலைஞர் கபி க்ரெட்ஸ் நவீன கற்பனையுடன்கூடிய வெண்களிமண்ணிலான சுடுமண் சிற்பங்கள் வடிப்பதில் தேர்ந்தவர். அவரது சிற்பங்களை காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர் சேவியர் என்ற நண்பர். இருவரும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருநாள் பாரீசிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். பேச்சுக்கிடையில் கிருஷ்ணா! ஸ்ட்ராஸ்பூர் அருகில் சிற்பக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது. நீ அதை விரும்புவாய் என்று நினைக்கிறேன், ஆகையால் இருவருமாகச் சென்று பார்த்து வருவோம்’, என்றார். அண்மையில் ஓவிய கண்காட்சியொன்றிற்குச்சென்று மனம் ஒன்றாமல் ஏமாற்றத்துடன் உதிர்த்த எனது வார்த்தைகளுக்கு நிவாரணம் தேடுகிறார் நண்பர் என்பதாக அப்போதைக்கு நினைத்துக்கொண்டேன். அருங்காட்சியகங்களுக்குப் போகிறபோது சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. பொதுவில் அனைவரையும் போலவே கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு அவசரமின்றி நிதானமாக அவற்றை பார்க்க நேரும். அம்மாதிரி நேரங்களில் நீங்கள் பொறுமையாகப்பாருங்கள் எனக் கூறிவிட்டு கிடைக்கிற இடத்தில் அலுப்புடன் எனது மனைவி உட்கார்ந்துவிடுவாள். அநேக தருணங்களில் ஓவியம் மற்றும் சிற்பக் காட்சிகள் எங்கள் திட்டத்தில் இடம்பெறாமல் போவதுண்டு. நண்பர் தான் கண்ட காட்சியை, தமக்கு நேர்ந்த அனுபவத்தை எனக்கும் எப்படியாவது ஏற்படுத்தித் தருவதென்று தீர்மானித்துவிட்டதால் ஒரு ஞாயிற்றுகிழமை அவரும் நானுமாக கபி க்ரெட்ஸ் சிற்பங்களை பார்ப்பதென்று முடிவெடுத்துச் சென்றோம். கபி க்ரெட்ஸ் என்ற பெண் சிற்பக்கலைஞரின் நுணுக்கமான உணர்வுகளை அவர் படைத்திருந்த சிற்பங்களூடாக புரிந்துகொள்ள வாய்ப்பமைந்தது இப்படித்தான்.
மானுடத்தின் வழித்தடங்களை, உயிர்வாழ்க்கையின் உள்ளுணர்வை சிற்பங்களூடாக நம்மிடம் பகிர்ந்துகொள்ள கபி க்ரெட்ஸ் அகத்தில் கால்கடுக்க வெகுதூரம் நடந்திருக்கவேண்டும். பல்வேறு கருப்பொருளில் மனித உயிர்களை இரத்தமும் சதையுமாக ஒரு சிற்பக் கலைஞருக்கேயுரிய கவி உள்ளத்துடன் வடிவமைத்திருக்கிறார். ஆரம்பம், உறவு, துன்பம், வழித்தடம், வழிகாட்டி, மகோன்னதம், ஒளி, சக்தி, மூச்சு, திசைமயக்கம் போன்றவை அவரது கருப்பொருட்களில் சில. வடிவங்கள் தோறும் தம்மையும் இணைத்துக்கொண்டு, ஆன்மீகத் தேடலை கலைஞர் தமது சிற்பங்களூடாக அவர் நிகழ்த்தியிருந்தார். மனித குணத்தின் ஓட்டைகளையும், விரிசல்களையும் வென்ற நிம்மதியையும் எட்டிய அனுபூதி நிலையையும் சிற்பங்களின் முகத்தில் – காணமுடிந்தது. பனித்த கண்கள், புன்னகைபூத்த உதடுகள், சிறைத்த தலை என்ற பொதுஇலக்கணம்கொண்டு சிற்பங்கள் இருந்தன. அச்சிற்பங்கள் அனைத்துமே ஏகாந்த பிரதிகள், ஆனால் அவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக, கும்பலாக நின்று மானுடவாழ்க்கையின் இரகசியங்களை முனுமுனுக்கிறார்கள். சிற்பங்களில் பலர் பௌத்த பிட்சுகளாக எனக்குத் தெரிந்தார்கள். அப்பிட்சுகள் இடைக்கால கிருத்துவ மடாலயத்திற்குள் பிரவேசித்திருப்பதுபோல உணர்வு. ஓர் இந்தியனென்ற வகையில் அச்சிற்பங்களை பரபிரம்மங்களாகக் கண்டேன். எத்தனை யுகங்கள், ஊழிக்காலங்கள் வரினும் போயினும் நிலைபேறுடைய கடைபேருண்மையை சுமக்கும் சிற்பவடிவங்கள் அவை. அவரது படைப்புகளை ஒரு தேவாலயத்தின் பின்புலத்தில் காட்சிபடுத்தியமைக்குப் பிரத்தியேகக் காரணங்கள் இருக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அமைதி குடிகொண்டிருக்கும் எந்தச்சூழலும் அச்சிற்பங்கள்வழி உணர்த்தப்படும் உண்மைகளுக்குப் பொருத்தமாகவே இருக்குமென தோன்றியது. எனவே அவரை குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து பார்க்க சங்கடப்பட்டேன். “எனது படைப்பு மாந்தர்கள் பெரும்பாலும் கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்து அக உலகத்தில் மூழ்கிய ஆன்மீக மனிதர்கள். அவர்களை அறிமுகப்படுத்த தேவாலயச் சூழல் ஒத்ததாக இருக்கிறது மற்றபடி மதம் அல்லது கோட்பாடு என்ற முத்திரையின் கீழ் எனது படைப்புகளை அடையாளப்படுத்த விருப்பமில்லை, பிரபஞ்சத்தின் குறியீடுகளென சொல்லிக்கொள்ளவே விருப்பம்”, என்ற கபி க்ரெட்ஸின் கறாரான பதில் எனது அனுமானத்தை உறுதிபடுத்துவதாகவே அன்று அமைந்தது.
கலைஞர் கபி க்ரெட்ஸை மீண்டும் நண்பரும் நானும் அவரது கலைகூடத்தில் சென்று சந்தித்தோம். உரையாடலின்போது சிற்பக்கலையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், சிற்பத்தை படைக்கிறபோது மனதிலுதிக்கும் எண்ணங்கள் அதற்கான காரணங்கள் எனப்பொதுவாகச் சில கேள்விகளை முன் வைத்தேன். கபி க்ரெட்ஸ் சித்திர கலை, ஓவியம் தீட்டுதல் என ஆர்வங்கொண்டிருந்த மிக அடக்கமான கிராமத்துபெண். தொடக்கத்தில் தனதிருப்பை பிறருக்குணர்த்த ஓவியங்களும் சித்திரங்களும் தேவையாய் இருந்த என்றார். “வெண்களிமண்ணில் சிற்பங்களை உருவாக்குகிறபோது ஆரம்பம் முதல் முடிக்கின்றவரை எனது உணர்வுகளை குறையின்றி அதனோடு பகிர்ந்துகொள்ளும் மன நிலைக்கு ஆளாகிறேன். அவ்வுணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தவும் முடிகிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். பரபரப்புடன் இயங்கும் உலகச்சூழலில் நம்முள் நிதானத்தையும் அமைதியையும் தேடவேண்டியவர்களாக இருக்கிறோம். சிற்பக்கலை அதற்கு வழிவகுக்கிறது”, என்ற பதிலில் எனது பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. இளைமைமுதற்கொண்டு கலைகளில் இருந்த ஆர்வத்தினால் ஒற்றைபெண்ணாக இத்தாலிக்குப் புறப்பட்டு போனார். அங்குதான் சுடுமண்வகை சிற்பங்களில் அவருக்கு காதல் பிறக்கிறது. சிற்பக் கலையை பயில ரோம் நகர வீதிகளில் குருவைத் தேடி அலைந்திருக்கிறார். அப்படிக்கிடைத்தவர்தான் the name of the rose போன்ற திரைப்படங்களில் பணியாற்றி பெரும் புகழ்பெற்றிருந்த Filomeno Crisara. அவரிடம் குருகுலவாசம். இன்று கபி க்ரெட்ஸ் ஒரு தேர்ந்த சிற்பக்கலைஞர். வருடம்தோறும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று கண்காட்சிகளை நடத்திவருகிறார். “விரல்கொண்டு ஓவியம் தீட்டுவதைக்காட்டிலும் கைகொள்ள களிமண்ணையெடுத்து உருவங்களை சமைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கிறதென்று” உரையாடலின் போது அவர்தெரிவித்த வார்த்தைகள் பேரின்பத்தில் உய்யும் நிலை.
——–