பண்டிகைக்கு, நாட்டிற்கு, தலைவர்களுக்கென ஒதுக்கிய நாட்கள் போக, எஞ்சிய நாட்களில் ஒன்றிரண்டு சில நல்ல காரியங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றுள் வருடம்தோறும் மார்ச் மாதத்தில் நினைவுகூரப்படும் உலகமகளிர் தினமும் ஒன்று. ஆனால் புள்ளிவிவரங்கள் தரும் ஏமாற்றத்தினால் அறைகூவல்கள், புதிய சபதங்கள். சமுதாயத்தில் அடையாளம்பெற்ற பெண்களை தலமையில் உரைகள், விவாதங்கள், தீர்மானங்கள். ஆனால் வரலாறு தரும் உண்மைகள் தெளிவாகவே இருக்கின்றன. தனிமனிதனோ, இனமோ, ஒரு சமூகமோ பாதிக்கப்படுகிறவர் எவராயினும் சுயமுயற்சியோ விழிப்புணர்வோ இல்லையென்றால் விமோசனங்களில்லை. சுதந்திரம், சமத்துவம் எனப் பெருமைகொள்ளும் பிரான்சுநாட்டின் இன்றைய நிலமை:
4மணி 1நிமிடம்: சராசரியாக நாளொன்றிர்க்கு பெண்ணொருத்தி வீட்டுப்பணிகளுக்கு செலவிடும் நேரமிது. ஓர் ஆண் குடும்பத்திற்கென்று வீட்டிலிருக்கிறபோது செலவிடும் நேரத்தைக்காட்டிலும் (2மணி 13 நிமிடம்) இருமடங்கு அதிகம். இது தவிர பிள்ளைகளோடு குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறாள், மாறாக ஆண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒதுக்க முடிந்த நேரம் அரைமணிக்கும் குறைவு.
ஒரு நாளில் பெண், தமது விருப்பமானவைகளுக்காக செலவிடும் நேரம்: 4மணி.45. ஆண்கள் விருப்பமானவைகளுக்கு ஒதுக்கும் நேரம் 5மணி 30 நிமிடங்கள். வேலைவாய்ப்பும் ஆண்களுக்கே அதிகம். பெண்களில் 31 சதவீதத்தினர் வேலையின்றி முடங்கிக்கிடக்க ஆண்களில் வேலைவாய்ப்பு அமையாதவர்கள் 25 சதவீதத்தினர். வேலைக்கும் செல்லும் பெண்களிலும் 31சதவீதத்தினர் பகுதிநேரப் பணிகளைச் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களில் சொற்ப சதவீதத்தினரே (அதாவது 7 விழுக்காட்டினர்) இந்நெருக்கடியைச் சந்திக்கின்றனர். தவிர வேலைக்குச்செல்லும் பெண்களில் 25 விழுக்காட்டினருக்கு ஆண்களுக்கு ஈடான ஊதியமோ, ஊதிய உயர்வோ வழங்கப்படுவதில்லையாம். இப்படி பலதுறைகளில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்கள் நிலைமை ஆண்களினும் பார்க்க தாழ்ந்தேயிருக்க, இயற்கை ஒரு விஷயத்தில் அவர்களுக்கு நீதியை வழங்கியிருக்கிறது. அது பெண்களுக்கான ஆயுட்காலம். மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் பெண்கள் ஆயுட்காலம் 85 ஆண்டுகள் என்கிறார்கள். சராசரி ஆணுக்கு 78 வயதில் உயிர்வாழ்க்கை முடிந்துவிடுமாம். ஆணைக்காட்டிலும் 7 ஆண்டுகள் அதிகம். 78 ஆனடுகால இழப்பை இந்த எட்டு ஆண்டுகளில் தாய்க்குலத்தினர் ஈடுசெய்யமுடியுமாவெனத் தெரியவில்லை. ஆனால் பெண்களில் அநேகர் கணவனை இழந்தபிறகு நிம்மதியாக இருக்கிறார்ளென்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
——-