எல்லோரும் எழுதுகிறார்கள். சில எழுத்துக்கள் ஈர்க்கின்றன. சிலவற்றை வாசிக்கிறபோது அருவருப்புடன முகத்தைச் சுளிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆற்றல்களுக்கும் குறைவில்லை. ஆனால் உள்ள சோகம் பெரும்பானமையான எழுத்துக்கள் Fabrication ஆக இருப்பது. அண்மைக்காலங்களில் சிற்றிதழ் படைப்புகள் குறிப்பாக கவிதைகளில் பல இந்தப் Fabrication சரக்குகுகளாக உள்ளன.
இம்மாதம் சிற்றிதழொன்றில் கட்டுரையொன்றை வாசிக்கநேர்ந்து இடையிலிருந்த ஒரு வரி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படிகூட படைப்பாளியொருவரால் கற்பனை செய்யமுடியுமா? என நினைத்துக்கொண்டேன். குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்ததுபோலவிருந்த அவ் வரியைக் கொண்டு கட்டுரையாளரின் மனத்தை எடைபோடமுடிந்தது. தொடக்க காலத்தில் கசாப்பு கடை வைத்திருப்பாரோ என்ற சந்தேகம். ஆனால் அங்கே கூட நிச்சயம் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காதென நம்பலாம்.
தமது கட்டுரையில் காலத்தின் பாய்ச்சலை சொல்லவந்த கட்டுரையாளர்:
“குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல் பாய்கிறது காலம்” என்று எழுதுகிறார். வளரும் எழுத்தாளர்கள் இதுபோன்ற விபரீதமான Avant -Guarde’ களைத் தவிர்ப்பது அவசியம். அவ்வரியை மீண்டும் எழுதுவதற்குக்கூட தயங்கினேன். கற்பனையென்றாலுங்கூட, இத்தனை பயங்கரமாகமாகாவா? தாதா -மற்றும் மீ எதார்த்த ஓவியக் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். படைப்பில் மட்டற்ற சுதந்திரத்தை சுவாசித்த அவர்களால்கூட குரல்வளையை அறுப்பதையெல்லாம் கற்பனை செய்ய காணாது.
பிரிட்டனிலுள்ள தொலைகாட்சியொன்று சிங்கள ராணுவ அட்டூழியங்களின் ஒரு பகுதியாக பன்னிரண்டு வயது சிறுவனின் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த காட்சியை ஓளிபரப்ப நாம் துடித்தோம். உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்று சொல்ல இயலாதென்றாலும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய அதிர்வை அக்காட்சி உண்டாக்கியிருந்தது. இன்னாருடைய மகன் என்பது மட்டும் ஒரு காரணமல்ல, வேட்டை மிருகங்களின் கூரிய நகங்களினால் சிதையுண்டவன் ஒரு சிறுவன் என்பதால், அக்கொடூரக் காட்சி நம்முள் பாதிப்பைத் தந்தது. யுத்தமென்றாலும் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் தெளிவாக இருக்கின்றன. அறிவுஜீவிகளென சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் ஓர் அறம் வேண்டாமா? இப்படியா குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரணங்கள் இல்லையா அல்லது வறட்சியா? விரும்பியே எழுதினாரெனில் இவர்களுக்கும் ராஜ பக்ஷேக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?
1973ல் வட சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது வேதாச்சலம் என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசவந்திருந்தார். தமது உரையைத் தொடங்கியவர், « கூட்டத்தில் அமர்வதற்கு முன்பு பசியோடிருந்தேன். தெம்பாக பேசமுடியுமா என்றிருந்தவேளை எனக்குச் சிற்றுண்டியும் சிறுநீரும் அளித்தீர்கள் », என அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளற, அந்த உளரலை இதோ இன்றும் கூட மறக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் வித்தியாசமாக சிந்திக்கிறேன் எழுதுகிறேனென சொல்லிக்கொள்கிற பலபேர்களின் எழுத்தில் இதுபோன்ற விபரீதங்களை வாசிக்க நேரிடுகிறது. பாரதி சொன்னதும் நினைவுக்கு வருகிறது “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும்
———————————————–