பிரெஞ்சு-இந்திய கலை இலக்கிய பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பகிர்ந்துகொள்ளல்:
பிரான்சு நாட்டில் சில நண்பர்கள் உதவியுடன் தோற்றுவித்துள்ள மேற்கண்ட அமைப்பு குறித்து இதே பகுதியில் பகிர்ந்துகொண்டுள்ளேன். அமைப்பின் நோக்கங்கள் குறித்தும் அதில் சொல்லியிருந்தேன். இரு தரப்பிலும் (நவீன) இலக்கியம், கலை, பண்பாட்டு பரிமாற்றங்கள் சம அளவில் நடைபெறவேண்டுமென்பது அடிநாதம். கனவுகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றையாவது நனவாக்கவேண்டும் என்ற உறுதியுமுள்ளது. பிரச்சினை அங்கிருந்து கொண்டு வருவதிலில்லை. இங்கிருந்து கொண்டுபோவதில்தானுள்ளது. பிரபஞ்சன், இந்திரன், தமிழவன், எஸ்.ரா. ஜெயமோகன், பாவண்ணன் போன்ற மூத்த படைப்பாளிகளையும்; காலச்சுவடு கண்ணன், சந்தியா நடராஜன் போன்ற பதிப்பாள நண்பர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு இயங்கத் திட்டம். முதல் கட்டமாக கடந்த மாதம் ஐந்தாம் தேதி புதுச்சேரியில் பிரெஞ்சு மற்றும் தமிழ்க் கவிதை வாசிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இக்கவிதை வாசிப்ப்பில் பிரெஞ்சு கவிதைகளாக பொதுலேர், சேவியர், பிரான்சுவாஸ் கவிதைகளும்; தமிழ்க் கவிதை வாசிப்பில் நண்பர் இந்திரன், மாலதிமைத்ரி, கடற்கரய் கவிதைகளும் வாசிக்கபட்டன. ஆக முதற் சந்திப்பு இரு தரப்பு கவிஞர்களுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதிபதியும், தமிழ்- பிரெஞ்சு பண்பாட்டின் ஏக பிரதிநிதியாக புதுச்சேரியில் இன்றளவும் திகழ்கிற பெருந்தகை தாவீது அன்னுசாமி தலமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பல அரிய யோசனைகளை வழங்கியிருக்கிறார். இனி வடம்பிடித்து தேரை இழுத்துச்செல்லவேண்டும்-முடிந்தவர்கள் கைகொடுங்கள்.
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது, இந்திரனுக்கு மொழி பெயர்ப்பு விருது:
இந்திரன் எனக்கு வாய்த்துள்ள இனிய நண்பர்களில் ஒருவர், இங்கே கவிஞர் மதுமிதாவுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஊடாகத்தான் இவரது அறிமுகம் கிடைத்தது. கவிஞர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என பலமுகங்கள் கொண்டவர் . அவரது அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம் (மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு) எனது அறைக்கும் வந்தது. இயல்பிலேயே கவிஞர் என்பதால் அவர் சொற்களை தேடுவதில்லை, சொற்கள் அவரைத் தேடிவரும் போலும்; சொற் தேர்வில், அதனைக் கையாளும் திறனில் ஒரு தேர்ந்த பொற்கொல்லனுக்குரிய கலைஞானம் ஒளிர்வதைக் கண்டு பிரம்மித்திருக்கிறேன். ஒரியக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸ் பத்ராவின் கவிதைத் தொகுப்பு “பறவைகள் ஒருவேளைத் தூங்கிப்போகலாம்” என்கிற தலைப்பில் இந்திரன் அவர்களால் மொழிபெயர்க்கப்படிருப்பதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். சாகித்ய அகாடமியின் 2011 மொழிபெயர்ப்பு விருதினை கவிஞர் இந்திரனுக்கு, இந்த ஒரிய மொழி கவிதை பெற்று தந்துள்ளது. இந்தியத் துணைக்கண்டம் தொடங்கி உலகம் முழுக்க பரவியுள்ள அவருடைய நண்பர்கள் மகிழ்ச்சிகொண்டிருக்கும் தருணம், அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம். காலம் கடந்து வழங்கப்பட்டிருப்பினும் உரிய நபருக்கு இவ்வருடத்திய மொழிபெயர்ப்பு விருது அளிக்கப்பட்டுள்ளதென்கிற வகையில் அகாடமிக்கு நன்றி.
2011ம் ஆண்டுக்கான இயல் விருது நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இவ்வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, படைப்புலகில் மிக முக்கியமான விருது. வெயிற் போதின் செவ்வியை ஒளியூட்டவும், மூச்சிரைப்பற்ற சொற்களால் உணர்வுகளோடு உசாவவும் அறிந்தவர் நண்பர். வெயிற் காதலர் யாமத்தின் மீது மையலுற்ற செயல்கண்டு அதிசயித்திருக்கிறேன், அவர் படைப்புகளின் உள்ளார்ந்த எளிமை கண்டு மலைத்ததுமுண்டு. அவரது உழைப்பை நன்கறிவோம். ஒரு சாதனையாளருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பதில் ஆச்சரியங்களில்லை. வெம்புழுதி வீசுகிற தமிழ்ச்சூழலில் கதிராகியும் நாணல்போல நிலைத்து நிற்க பக்குவம் வேண்டும் நண்பருக்கு நிறையவே உண்டென்பதை அண்மையில் நேரில் அறிந்தேன். வாழ்த்துக்கள்.
இந்தியாவும் சாலை விபத்துக்களும்:
இந்தியாவில் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் விபத்தில்லாமல் திரும்பவேண்டுமே என நினைத்துக்கொள்வேன். எனது சகோதரர் துணைவியார் வாகன விபத்தில் இறந்தார். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் உறவினர் நண்பர்களென்று யாரேனும் ஒருவர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். உலகில் இந்தியாவில்தான் சாலைவிபத்துகள் அதிகமென்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறையின் உத்தியோகபூர்வமான அறிக்கையின்படி படுகாயமுற்றவர்கள், கால் கை இழந்தவர்களைத் தவிர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாத்திரம்
2010ஆம் ஆண்டில் 1.3 இலட்சம்பேர். 2009ம் ஆண்டைக் காட்டிலும்(125660) 4,1 சதவீதம் அதிகம். இந்தியாவின் ஆறில் ஒரு பகுதி நிலபரப்பையும், மிகக்குறைவான மக்கட் தொகையையும் கொண்ட பிரான்சு நாட்டில் 2011ம் ஆண்டில் வாகனவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3970பேர்கள், 2010 ஆண்டைக்காட்டிலுல் (3992) 22 உயிர்களை அரசு காப்பாற்றி யிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் சில சதவீதத்தை குறைப்பதென்று விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இந்திய சாலைவிபத்துகளுக்கு மக்கட் தொகையையும், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையும் காரணமெனக்கூறி அலட்சியபடுத்திவிடமுடியாது. போக்குவரத்து விதிமீறல்கள் இங்கு அதிகம். தவிர சாலை பாதுகாப்பு குறித்த ஞானமோ அல்லது விழிப்புணர்வோ இங்கில்லை. மத்தியமாநில அரசுகள், காவல்துறை, பொதுமக்களென அனைவருக்கும் இதில் பங்குண்டு. இவ்விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான விதிமுறைகளைப் பின் பற்றுகின்றன. ஓட்டுனர் உரிமம் இதற்கு நல்லதொரு உதாரணம். எழுத்துத் தேர்வு, ஓட்டுனர் தேர்வு என இரண்டிலும் தேறவேண்டும். இரண்டாண்டிலிருந்து ஐந்தாண்டுகள்வரை இதற்குத் தேவைப்படும், அல்லது சோர்ந்து ஓட்டுனர் உரிமம் வேண்டாமென ஒதுங்கிக்கொள்கிறவர்களும் உண்டு. ஒருமுறைபெற்றுவிட்டால் வாழ்நாள் முழுதும் வைத்திருக்கலாம். இதற்கிடையில் 1992ம் ஆண்டிலிருந்து ஓட்டுனர் உரிமத்தில் புள்ளிகள் மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றவுடன் அவருக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் அடுத்த மூன்றாண்டுகளில் அவர் எவ்வித விதிமீறல்களுக்கும் உள்ளாகவில்லையெனில் கூடுதலாக 6புள்ளிகள் பெறுவார் ஆக மொத்தத்தில் 12 புள்ளிகள். ஒவ்வொரு தவறுக்கும் இழைக்கும் விதிமீறலுக்கொப்ப அபராதத் தொகையோடு ஒன்றிலிருந்து பல புள்ளிகளை இழக்கவேண்டிவரும். அடுத்த மூன்றாண்டுகளில் தவறேதும் இழைக்கவில்லையெனில் இழந்தப் புள்ளிகளைத் திரும்பப் பெறலாம். அனைத்துப் புள்ளிகளையும் இழக்க நேர்ந்தால் திரும்பவும் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து மீண்டும் தேர்வுகளில் வெற்றிபெற்றாக வேண்டும். விண்ணப்பமும் இழந்த நாளிலிருந்து ஆறுமாதங்கள் கழித்தே ஏற்கப்படும். தவிர பாதுகாப்பான வாகனமும் முக்கியம். புதிதாக வாங்கப்பட்ட வாகனம் நான்காண்டுகளுப்பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தின் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்களில் பல சோதனைகளுக்குப் (டயர், பிரேக், விளக்குகளென கிட்டத்தட்ட இன்று 70க்கும் மேற்பட்ட சோதனைகளுள்ளன.) உட்படுத்தவேண்டும். பாதுகாப்பான வாகனமென அத்தாட்சி பெற்றபிறகே அவ் வாகனத்தை மீண்டும் உபயோகிக்க முடியும்.
Le Silence du bourreau:
« ஒரு கொலையாளியின் மௌனம் » என்று தமிழில் கூறலாம். அண்மையில் பிரெஞ்சு படைப்புலகை உலுக்கிய ஒரு நூல். மரணத் தண்டனை தீர்ப்பான பிறகு, எந்த நேரமும் அது நிறவேற்றப்படலாமென தவித்து மாய்வதற்கு ஈடான மன உளைச்சல் வேறொன்றிருக்க முடியாதென்பதை அண்மைக்காலத்தில் நாம் கவனம் பெற்றிருந்தோம். அது மனசிதைவுக்கும் காரணமாகலாம். பிரான்சுவா பிஸோ(Francois Bizot) ஓர் இனவரைவியலறிஞர்(ethnologist), நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1971ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஓர் ஆய்வின் பொருட்டு இரண்டு நண்பர்களுடன் கம்போடியா சென்றவரை கேமர் ரூழ் என்ற கம்போடிய பொதுவுடமைக் கட்சியின் படைவீரர்கள் கைது செய்து அவசர அவசரமாக மரணதண்டனை விதிக்கப்பட்டு, அடர்ந்த காட்டில் காவலில் வைக்கின்றனர். அவரது சிறைக்காவலனின் பெயர் டூஷ் (Douch), 28 வயது. அவரைக்காட்டிலும் மூன்று வயது குறைவான இளைஞன். சிறைக்காவலனென்றாலும், நன்கு கற்றறிந்தவன் என்கிறார் ‘பிஸோ’. பிரெஞ்சு நன்கு பேசிய காவலன், கேமர் ரூழை வழிநடத்திய மார்க்ஸிய தலைவரான போல் போட்டின் (Pol Pot) தீவிர அபிமானி. ஒரு கிறிஸ்துமஸின் போது அதிர்ஷ்ட்டவசமாக மேலிடத்து உத்தரவுப்படி பிஸோவுக்கு விடுதலை என்று கூறி சிறைக்காவலன் விடுவிக்கிறான். பிசோவின் நண்பர்கள் இருவருக்கும் விதி வேறாக இருந்தது. பிரான்சுக்குத் திரும்பிய பிஸோவுக்கு அவரது சிறைக்காவலனின் முகம் சுத்தமாக மறந்துபோனது. வருடங்கள் கடக்கின்ற்ன. காலம் மாறுகிறது கேமர் ரூழின் கொலைதாண்டவத்தில் பங்களித்த பலரும் ஒருவர் பின்னொருவராக கைதுசெய்யப்படுகின்றனர். செய்தித் தாளில் இவரைப் பொறுத்தவவரை மிக அமைதியாகவும் இனிய நண்பராகவும் விளங்கிய சிறைக்காவலர் பற்றிய செய்தியை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார். கம்போடிய கேமர் ரூழ் பற்றி அறிந்தவர்களுக்கு S21 வதைமுகாம் அந்நியமல்ல. அந்த வதைமுகாமின் சூத்ரதாரியாகத் திகழ்ந்த ‘டூஷ்’ போல் போட்டிற்கு எதிரானவர்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் 40000 உயிர்கள் கொலை செய்யப்பட நேரிடையாகவும் குறைந்தது 1.7 மில்லியன் மக்களின் படுகொலைக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்திருக்கிறான். பத்தாண்டுகளுக்கு முன்பு தமது சிறை அனுபவத்தைத் தொகுத்து நூலாக படைத்திருந்த பிஸோ, இப்போது டூஷின் ஆளுமை, தனித்தன்மைகள், பிற குணங்களென உளப்பகுப்பாய்வு செய்திருக்கிறார்.
கொலையாளிக்குள்ளும் எல்லாமிருக்கிறது. சமூகப்பார்வையில் குற்றவாளிகள், கொலையாளிகள் இடத்தை மறு கட்டமைப்பு செய்கிறார். பிஸோவுக்கு கொலையாளியும் நம்மைபோலவே ஒரு மனிதன். சவப்பரிசோதனைசெய்யும் ஒரு மருத்துவருக்குள்ள திட்பமும், திறனும் கொலையாளிக்கும் பொருந்தும். இலட்சகணக்கான மனிதர்களை, உயிர்ப்பலியை ஒரு சடங்குபோல நிறைவேற்றிய டூஷ், பிஸோவை பொறுத்தவரை சராசரி மனிதன், இந்த சராசரிக்கு இலக்கணங்கள் ஏதும் தேவையில்லையெனில் சற்று மிகையாக சொல்லவேண்டுமெனில், விபத்தை சர்வசாதாரண்மாக எட்டிப்பார்த்த கையோடு வீடு திரும்பி சுவைத்துண்ணும் மனிதர்களுள் ஒருவன். பிரான்சுவா பிஸோ படைப்பில் தம்மையொரு மானுடவியலறிஞராகவோ, மெய்மைவாதியாகவோ முன்னிறுத்தவில்லை ஒரு கைதியின் பார்வையில் சிறைக்காவலனை பகுப்பாய்வு செய்திருக்கிறார். ஆசிரியருக்கு தீங்கென்பது வானத்திலிருந்து குதிப்பதல்ல, அல்லது எதிரெ இருப்பவன் அல்லது இருப்பவளுமல்ல. நமக்குச்சொந்தமானது, நம்மோடு உண்டு உறங்கி நமக்குள் தசையாக நரம்பாக, இரத்தமாக நம்முள் வாழ்ந்து நம்மிடமிருந்து தன்முகம்காட்ட தருணத்திற்காக காத்திருப்பது.
—————
நல்ல முயற்சி!
தொடர்க!
இயலுங்கால் இணைந்துகொள்வேன்
அன்புடன்
பெஞ்சமின் லெபோ