பிப்ரவரி -5
நேற்றையைபோலவே இன்றும் காலை உணவு நேரு வீதிக்கருகிலிருந்த ‘Hot Bread’ ல் என்றானது பிரான்சு நாட்டிற்கு வந்ததிலிருந்து ஐரோப்பிய உணவு முறையை வழக்கப்படுத்திக்கொண்டாயிற்று. பிரெஞ்சு நண்பர்களுக்கு இந்திய உணவுகளில் அதிக நாட்டமிருப்பதில்லை, குறிப்பாக தென்னிந்திய உணவுகளில். வட இந்தியர்களைப்போலவே தோசையை மட்டும் விரும்பிச்சாப்பிடுகிறார்கள். சில புதுச்சேரி நண்பர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பிரெஞ்சு நண்பர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பார்கள். அவர்கள் காசு கொடுத்து சாபிடும்போது எதைச் சாப்பிடுகிறார்களென்று பாருங்கள் அதுதான் அவர்களது விருப்பமாக இருக்குமென அவர்களிடம் சொல்வதென் வழக்கம். மனிதர் வாழ்க்கைப் பன்முகக் கலாசாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. வரலாறு மட்டுமல்ல உலகின் பண்பாடும் வாகைசூடியவர்களுக்கும், எஜமானர் இருக்கையில் நீண்டகாலமாக அமர்ந்து கோலோச்சியவர்களுக்கும் சொந்தமானது. இந்திய முதுகுகள் வெகுகாலமாகவே மேற்குலக பண்பாட்டை சுமந்துகொண்டிருக்கின்றன. எனக்கும் காலை நேரத்தில் இட்டளி, தோசையென்று உண்டு இந்தியாவிற்கு வந்து போகும் நாட்களைத் தவிர்த்து வெகு காலமாயிற்று:
நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பு ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியில் இருந்தது. அங்கிருக்கும் பள்ளிவாசலைக் கடந்தால் முல்லா வீதி சந்திப்பு வருகிறது. முல்லா வீதி யில் இறங்கி வடக்கு நோக்கிநடந்தால் லால் பகதூர் சாஸ்திரி வீதி. அதற்குப்பிறகு எங்களது தேவைக்கான திசையில் கால்கள் பயணிக்கும். நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்து வாசலிலேயே எதிர்பட்டார் அவர். அதிகம்போனால் 25 வயதிருக்கலாம். பள்ளிக்கல்விவரை முடித்திருக்கலாமென்பது என் ஊகம், ஆனால் பிரெஞ்சில் தட்டுதடுமாறி பேசினார் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது பிரெஞ்சு நண்பர்களை குறிவைத்து பேசத் தொடங்கினார். அவரது பெயரை தவிர்த்திருக்கிறேன். தாம் பிரெஞ்சு ஓரளவு கற்றிருப்பதாகவும், மொழியை மறந்துவிடக்கூடாதென்பதற்காக பிரெஞ்சு சுற்றுலாவாசிகளை தேடிப்படித்து அவர்களோடு பழகுதாகவும், நான் உங்களுடன் இருப்பதில் தயக்கமெதுவுமில்லையே என தடாலடியாக எங்களிடம் விண்ணப்பமும் போட்டார். எனக்கு இது வேண்டாத வேலையாக இருந்தது. வேறு சில ஐயங்களிருந்தன. கேட்டவர் ஒர் இளம்பெண் என்பதால் தயக்கங்கள். ஆனால் பிரெஞ்சு நண்பர்கள் அதற்கென்ன தராளமாக வாயேன் என்றார்கள்; அந்தப் பெண்ணும் ஓரளவு சமாளிக்ககூடிய பிரெஞ்சில் உரையாடியபடி எங்களைத் தொடர்ந்துவந்தார். சுஜாதா எழுதும்போது பல்லி சொன்னதென எழுதுவார். எனக்கும் அப்படி ஏதோவொன்று அவரைத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தது. எனது பிரெஞ்சு நண்பர்களைத் தனியாக அழைத்து அப்பெண்ணிடம் பிரான்சுவாஸ் – அவர் எங்கள் குழுவிலிருந்த ஒரே பெண்மணி- வேண்டுமானால் அப்பெண்ணிடம் உரையாடட்டும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே உரையாடுவது நல்லது, நாம் வந்திருப்பது இரண்டுவாரத்திற்கு, இதில் என்னால் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் அலைந்துகொண்டிருக்க முடியாது. கிளம்பிப் போய்க்கொண்டே இருப்பேன், என்றேன். அதற்குப் பிறகு பெண்ணுடனான அவர்கள் பேச்சு நிதானத்திற்கு வந்தது. தேவையற்ற உரையாடல்களைத் தவிர்த்தார்கள். தவிர நான் அறிவுறுத்தியதைப்போன்றே, பிரான்சுவாஸ் என்பவரை அப்பெண்ணிடம் உரையாடவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள்.
இன்றைக்கு சவியே காலையில் இந்திய உணவு விடுதிக்குச் செல்லலாமே என்றான். மனே (பிரான்சிஸ் பிரான்சுவா) தம்பதியினருக்குத் தங்கள் உணவுமுறையை மாற்றிக்கொள்ளும் உத்தேசங்களில்லை என்பது புரிந்தது. அவர்களுக்காக ‘ஹாட் பிரெட்”டுக்குள் நுழைந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அனைவருமாக இந்தியவிடுதியொன்றிர்க்குச்சென்று சாப்பிடுவதென தீர்மானித்தோம். நண்பர் பிரான்சிஸ¤ம், அவரது மனைவியாரும் பிறகு அங்கேயே சாப்பிடுவதென தீர்மானித்து சுயமாக பறிமாறிக்கொள்ளும், அந்த விடுதியின் வழக்கப்படி ஒரு தட்டில் காலை உணவுக்கான ரொட்டிகளை தேர்வு செய்து எடுத்துவந்தனர். அப்பெண்ணும் அவருக்குத் தேவையானவற்றை எடுத்துவர அதற்குண்டான பணத்தை மனே தம்பதியினர் செலுத்தினர். மூவரும் சாப்பிட்டு முடித்ததும், இப்போது நானும் சவியேவும் சாப்பிடவேண்டும். இந்திய உணவு விடுதி அருகிலிருந்தது. மேசையை பிடித்து மனே தம்பதியினர், சவியே, காலையிலிருந்து எங்களை தொடர்ந்து வந்த இளம்பெண், பிறகு நான் என அனைவரும் அமர்ந்தோம். நாங்கள் சாப்பிடலாமென்று சர்வரைக்கூப்பிட்டு ஆர்டர் செய்ய நண்பர் சவியே ஏதாவது சாப்பிடுகிறாயா என்று அப்பெண்ணிடம் விசாரித்தார். நீங்களெல்லாம் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுகிறேன் எனக்கூற, பிறகு அவரவர்க்கு விருப்பமானதை கொண்டுவரசெய்து சாப்பிட்டோம். இடையில் நடைபெற்ற உரையாடலில் இளம்பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிவதாகவும், பிரெஞ்சு நண்பர்கள் வேலை கடினமா எனக்கேட்க ஆம் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறதென்றும், ஒரு குடிகார சகோதரனிருப்பதாகவும், அம்மாவுக்கு மகளை எப்படியாவது பிரான்சுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்கிற கனவுகள் இருப்பதாகவும், அதற்காக மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அம்மா இப்படி பிரெஞ்சுக் காரர்களோடு இருக்கிறேன் எனக்கூறினால் மிகுந்த சந்தோஷப்படுவார்கள், என முடித்தார்.
சவியேவிற்கு எனது கிராமத்தையும் எங்கள் ஊர் மக்களையும் பார்க்கவேண்டுமென்று தெரிவித்திருந்தான். எனவே நண்பர் நந்தி வர்மனிடம் வாகனத்திற்கு சொல்லிவைத்திருந்தோம். முதல் நாள் சொல்லாததால், காலையில் அவரிடம் சொன்னபோது உடனே வாடகைக் கார்கிடைப்பது அரிதென்ற பதில் வந்தது. வாடகைக்கார் கிடைக்கவில்லையெனில் பேருந்து பிடித்து போவதென்று நினைத்திருந்தோம். இளம்பெண் எங்களை விடுவதாக இல்லை. எங்களோடு கிராமத்திற்கு வர விருப்பம் வரலாமலில்லையா? என்றார். பிரெஞ்சு நண்பர்கள் வருவதால் எந்த பாதிப்புமில்லை என்பதுபோல இருந்தார்கள்; எனக்கென்னவோ ஆரம்பத்திலிருந்தே அப்பெண்¨ணைக் கூட்டிக்கொண்டு அலைவதில் உடன்பாடில்லை. இதோ பாரம்மா நாங்கள் ஏற்கனவே நான்கு பேர் இருக்கிறோம் டிரைவரோடு சேர்த்து ஐந்துபேர் ஆகிறது என்னதான் வருவது பெரிய வண்டியென்றாலும் வேறொரு நண்பர் வருவதால் உன்னை அழைத்துச்செல்லமுடியாதென்று தெளிவாகக் கூறிவிட்டேன். புறப்பட்டுப்போனபோது அப்பெண் என்னைத் திட்டியிருப்பாளென தெரியும். ஆனாலும் அவள் புறப்பட்டுபோனபிறகே என்னால் நிம்மதியாய் மூச்சு விடமுடிந்தது.
காலை 9.30மணி அளவில் புறப்பட்டு புதுச்சேரியிலிருந்து 20.கி.மீட்டர் தொலைவிலிருந்த எங்கள் கிராமத்தை அடைந்திருந்தோம். காலை பத்து பதினைந்துக்கு, சிதிலமடைந்திருந்த எனது பால்ய வயது வீட்டின் முன் வாகனம் நின்றது. எனது பிள்ளைத்தமிழ் இடிபாடுகளுக்கிடை சிக்கி முனகிக்கொண்டிருப்பதைக் காணச் சகியாமல் கண்களை இறுக மூடினேன். ஒரு துளி கண்ணீர். அதற்குமேல் சிந்த ஒன்றுமில்லையென்பதுபோன்ற பாலை வெக்கை எனக்குள் இருந்தது. செரிபடாத நினைவுகள் குமட்டிக்கொண்டு விடுபட கசப்புகள் வாய் நெஞ்சு இதயமென்று நிறைந்து வழிந்தன. மனம் பல்லியின் நாக்கிற்கு எட்டாத தூரத்தை தேடி பாச்சையாக அலைந்தது. இலை உதிர்த்த மரக் கிளையின் கூடுபோல உடல் கால் மாற்றி நின்று வெந்து தவித்தது. கடைசிப் பந்தியிலும் உனக்கு இடமில்லை எழுந்திரு என்பதுபோன்றதொரு மூர்க்கமானதொரு குரல் காதில் விழக் கேட்டேன்.
இளநீர்வந்தது, சிந்திய ஒரு துளிகண்ணீரை இட்டு நிரப்பவாக இருக்கலாம். நெஞ்சில் நிழலாய், நுணி மடிந்த பழுப்பேறிய, காலத்தின் வடுக்களை வயதுடன் சுமக்கமுடியாமல் சுமந்தமடி கைகளைப் பற்றும் மனிதர்கள். கண்களைத் தொட்டிருந்த அவர்கள் மூப்பு எனது இளமையைக் கசக்கி ஆசுவாசப்பட்டது. அந்தி வேளையில் வீடு திரும்பும் மாடுகள்போல, தெருவில் இறங்கி நடக்கிறோம். வயதையும் வாழ்க்கையையும் இழந்து திண்னைகளில் ஒருக்களித்து படுத்திருந்தவர்கள் எழுந்து உட்காருகிறார்கள்.
– யாரு சின்னத் தம்பியா?
– ம்…
– உள்ளே வாயேன். ம். நீதான் எங்களையெல்லாம் மறந்திட்ட .
என்னிடத்தில் பதிலில்லை. நெஞ்சு வெப்பத்தால் நிரைகிறது. மூச்சுமுட்டுகிறது. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்கின்றன. தலையாட்டுகிறேன். பற்றிய கைகளை விலக்கி நடக்கிறேன். வழியெங்கும் விசாரிப்புகள். அவர்கள் முந்திக்கொள்கிறார்கள். அவர்கள் விசாரிப்பு எனது அக வாழ்க்கைப்பற்றியதா புற வாழ்க்கைக்குறித்ததா? வாழ்க்கை பண்டமாற்றுகளால் கொண்டுசெலுத்த முடியுமெனில் எவ்வளவு சௌகரியமாக இருக்கும். நாகரீகங்கருதி பல நேரங்களில் நட்டத்திற்கு விற்கவேண்டியிருக்கிறது. என்ரேனும் ஒருநாள் இலாப தரிசனத்திற்கு ஓடி வருகிறபோது நடைவாசல் மூடும் நேரம் என்கிறார்கள்.
சவியேவும் மனே தம்பதியினரும் புகைப்படக் கருவிகொண்டு தருணங்களை ஆவணப்படுத்துகிறார்கள். புதுச்சேரி திரும்பியபொழுது நண்பர் இந்திரன், அகவெளி நண்பர்களுடனும் கடற்கரையுடனும் வந்திருந்தார். இந்திரன் கொண்டு வந்திருந்த கவிதை வாசிப்புக்கென தாயாரிக்கபட்ட சிறிய புத்தகங்களை நந்தி வர்மன் வீட்டில் இறக்கிவைத்துவிட்டு நாங்கள் மதிய உணவிற்கு வந்தோம். வெகுநேரம் கழித்து நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் எங்களோடு இணைந்துகொண்டார். சாப்பிட்டு முடிந்ததும், நண்பர் எஸ். ஆரிடம் அவரிடம் தங்க ஏற்பாடு செய்திருப்பதைக்கூறினேன்.
– இல்லை கிருஷ்ணா நாளைக்கு வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே அறை எடுத்திருக்கிறார்கள். எதற்காக வீண் செலவு என்றார்.
– கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே என்றேன். – பிரெஞ்சு நண்பர்கள் இருந்ததால், அவருடன் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம்
– இல்லை நண்பர்களுடன் பேசியிருந்துவிட்டு மாலை நிகழ்ச்சிக்கு வந்து விடுகிறேன் என்றார்
அன்று மாலை நடந்த கவிதை வாசிப்பு குறித்து தனியாக எழுதுகிறேன்.
(தொடரும்)