இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்கிற பிரச்சினையைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டபோது குறிப்பாக யூதர்கள் பலர் கைதானபோது இவரும் பிறப்பால் யூதர் என்ற நிலையில் கைது செய்யப்படவேண்டியவர். ஸ்டாலின் மரணம் குறித்து இவரிடம் சில உண்மைகளிருந்தன. எரென்பர்க் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளக்கூடியவராக இருந்தார். அவற்றில் பிரான்சுநாடும் ஒன்று. அவருடைய பாரீஸ் நண்பர்களில் ழான் போல் சார்த்துருவும் ஒருவர்.
இலைய எரென்பர்க் கூற்றின்படி:
« 1952ம் வருடம் அக்டோபர் மாதம் சோவியத் யூனியன் பொதுவுடமைக் கட்சியின் 19வது காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின்னர் ஸ்டாலின் ஒரு வெறிபிடித்த மனிதர்போல ஆனது உண்மை. சந்தேகப் பட்டவர்களையெல்லாம் அவர் கைது செய்ய விரும்பினார். அது தவிர தமது பழைய சகாக்களான மொலொட்டோவ், மிக்கோயான், ககனோவிச் ஆகியோர் கூட்டு சேர்ந்து தம்மை கொல்ல சதிசெய்வதாகக் கூறிக்கொண்டார். 1952ம் ஆண்டில் ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்ற விவகாரம் வெடித்த பொழுது ஸ்டாலினால் நாட்டிற்கு மிகப்பெரிய கேடு வர இருக்கிறதென புரிந்துகொண்டோம் ».
பதினெட்டாம் காங்கிரஸ் நடந்து முடிந்தபிறகு 19வது காங்கிரஸ¤க்குத் தேர்ந்தெடுப்பட்டிருந்த உறுப்பினர்களில் பலரை கொன்று குவித்தபோதே நடக்கவிருக்கும் விபரீதத்தின் பாரிய வீச்சு உணரப்பட்டது. 1934க்கும் 1938க்கும் இடையில் பதினேழாவது காங்கிரஸில் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட 130 அங்கத்தினர்களில் 48பேர்களும் 1966 பிரதிநிதிகளில் 1108 பேரும் கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஏதேனும் செய்தாகவேண்டும். உரிய தருணத்தில் பிரச்சினையை கையிலெடுக்கத் தவறினால் அவர்களுடைய உயிருக்கும் பிற தோழர்களுக்கும் ஏற்படவிருக்கும் ஆபத்தை புரிந்துகொண்டார்கள். கிரெம்ளினில் மத்திய குழு உறுப்பினர்களின் பிரத்தியேகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டப்பட்ட காலம் 1953ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ந்தேதி. இத்தேதியைக் குறித்து கொடுத்தவர் குருஷேவ். சோவியத் விவசாயத் துறையின் ஐந்தாவது ஆண்டுவிழா தொடர்பாக என கூட்டத்திற்கு காரணம் சொல்லப்பட்டது. ஸ்டாலின் சந்தேகப்பட ஒன்றுமில்லை, எனவே அவரும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கமாக அவருடன் இருக்கிற செயலர் வரவில்லை. அதற்கு முன்பாகவே கிரெம்ளின் ஹாலில் அவரது நம்பிக்கைக்குரிய ராணுவ தளபதி ஜூக்கோவ்(Joukov) அனுப்பிய வீரர்கள் செயலரை கைது செய்திருந்தனர் என்ற உண்மையை ஸ்டாலின் அறியவில்லை.
கூட்டத்தின் தொடக்கத்திலேயே ஒலிவாங்கியை கையிலெடுத்த ககனோவிச் ரகசிய காவற்படையின் தலைவரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென்றும், ‘மருத்துவர்களின் கூட்டு சதி’ என்றபிரச்சினையை ஒதுக்கிவிட்டு உருப்படியான வேறு காரியங்களை பார்க்கும்படியும் கட்சியின் முதன்மைச் செயலரான ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறார். ஸ்டாலின் இதை எதிர்பார்க்கவில்லை. அதுநாள்வரை அவரது அரசியல் நடவடிக்கைகளை விமர்சிக்க ஒருவருக்கும் துணிச்சல் வந்ததில்லை, எனவே ஆத்திரம்கொண்டார். கடும் சொற்களால் ககனோவிச்சை விளாசுகிறார். தொடர்ந்து பேசினால் ஆபத்தை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார். ககனோவிச் விட்டுகொடுப்பதாக இல்லை. கோபத்தில் எழுந்தவர். தோழர் லெனின் உருவாக்கிய மிகப்பெரிய கட்சி உன்னால் இன்று மிகப்பெரிய அவமானத்தை அடைந்துள்ளது. நீ ஒரு கொலைகாரன், கட்சியில் இனி அடிப்படை உறுப்பினனாகக்கூட இருக்கப்போவதில்லை எனக்கூறி கட்சி உறுப்பினருக்கான தமது அடையாள அட்டையை ஸ்டாலின் முன்னே கிழித்தெறிகிறார்.
கோபமுற்ற ஸ்டாலின் ககனோவிச்சை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க விரும்பி அருகிலிருந்த தொலைபேசியைக் கையிலெடுத்தபோது மிக்கோயானும் மொலொட்டோவும் குறுக்கிடுகிறார்கள்.
– ஜெசெப் இது வீணான வேலை. வெளித் தொடர்புகளை நாங்கள் முன்பே துண்டித்துவிட்டோம். ஜூகோவ்வும் மோஸ்காலென்க்கோவும் இப்போது எங்கள் பக்கம். இதையும் மீறி எங்களுக்கு ஏதாவது நேர்ந்து அடுத்த கால்மணிநேரத்தில் நாங்கள் பத்திரமாக வெளியேறமுடியாத சூழ்நிலை உருவாகுமெனில் ஜூக்கோவ் தமது ஆட்களுடன் கிரெம்ளினுக்குள் நுழைவது உறுதி, என்கிறார்கள்(1).
நேற்றுவரை தன்முன்னே வாய்மூடிக்கிடந்த தோழர்கள் குரலுயர்த்தி பேசுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்த சில கணங்களில் ஸ்டாலின் சரிய ஆரம்பித்தார். வாயிலிருந்து இரத்தநுரை தள்ளுகிறது. முகம் வெளுக்க ஆரம்பிக்கிறது அவருடைய இரண்டுகைகளும் முன்னும் பின்னும் இழுபடுகின்றன. கடைசியாக தரையில் சுருண்டு விழுகிறார். சில நொடிகளில் மரணம் அவரை அழைத்துக்கொள்கிறது. மூளையில் இரத்தநாளங்கள் சிதைந்திருந்தன என்பது பின்னர் தெரியவந்தது. எந்த மருத்துவரையும் அங்கிருந்தவர்கள் அழைக்கவில்லை. ஆக கிரெம்ளினிலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டிருந்ததென்பதுதான் உண்மை.
ஸ்டாலின் மரணத்தோடு இணைந்த இரண்டாவது உண்மைக்குச் சொந்தக்காரர்1957ம் ஆண்டு வார்சோவியில் சோவியத் யூனியனின் தூதுவராக பணியாற்றிய பொனோமரேன்க்கோ (Ponomarenko). இவரது பேச்சை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்திவிடமுடியாது. காரணம் பத்தொன்பதாவது காங்கிரஸ் மாநாட்டிற்கு பிறகு ஏற்படுத்தபட்ட மத்திய புரவலர் குழு செயலர்களில் இவருக்கு மூன்றாவது இடத்தை ஸ்டாலின் கொடுத்திருந்தார். ஆகக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர். அவருடைய கூற்றின்படி:
1953ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 28ந்தேதி நடைபெற்ற செயற்குழுவின் பிரத்தியேகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின். கிரெம்ளினிலிருந்த மத்திய குழுவின் அரங்கத்திலே இக்கூட்டம் நடந்தது. தகுந்த காரணமின்றி இதுபோன்ற கூட்டத்தை ஸ்டாலின் ஏற்பாடு செய்யமாட்டாரென சகாக்கள் நினைத்தார்கள். செயற்குழுவின் 25 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (அவர்களில் பொனோமரேன்க்கோவும் ஒருவர்). ஒலிவாங்கியைக் கையிலெடுத்த ஸ்டாலின், தாம் முன்னதாக தயாரித்திருந்த நான்கு பிரேரணைகளை வாசித்தார். அவற்றின் மைய நோக்கம் பெரும் எண்ணிக்கையில் சோவியத் யூதர்களை மத்திய ஆசியாவிலிருந்த பிரோபிட்ஜான் (Birobidjan) பிரதேசத்திற்கு குடியேற்றுவது தொடர்பானது. அங்கு ஏற்கனவே இருபத்தைந்து ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கில் யூதர்கள் கடுங்குளிரிலும் கொடிய வறுமையிலும் போராடியபடி வாழ்ந்துவந்தனர். உண்மையில் இப்புதிய ஆணையின் உதவியின்றியே பல ஆயிரம் யூதர்களை கடுங்குளிர் நிலவும் அப்பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி ஸ்டாலின் தண்டித்திருக்கிறார். சோவியத் யூதர்களைத் தாம் தண்டிப்பதற்கு அவர்களுடைய தீவிர மதவாதமும், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக அவர்கள் இருப்பதும் காரணமென்றார். வந்திருந்தவர்களில் இந்நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்புக்குரல் கொடுக்க விரும்பினார்கள். ஆனால் ஸ்டாலினை எதிர்த்து பேச அஞ்சி அமைதி காக்கிறார்கள். அந்த மௌனத்தை முதலில் உடைத்தவர் ககனோவிச். உறுப்பினர்களில் அவர் யூதர். “இந் நடவடிக்கை சோவியத் யூனியனிலுள்ள எல்லா யூதர்களுக்கும் எதிரானதா?” என்று கேட்கிறார். இல்லை தேர்ந்தெடுத்த சிலர்மேல் மட்டுமே இச்சட்டம் பாயும் என பதிலளிக்கிறார், ஸ்டாலின். ககனோவிச் அமைதியானார். அடுத்து எழுந்தவர் மொலோட்டோவ், காரணம் அவரது மனைவி யூதப்பெண்மணி. இப்பிரச்சினையால் இஸ்ரேலுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிரச்சினைகள் வரலாம், என்பது அவர் வாதம். அவருக்குப் பதில்சொல்ல ஸ்டாலின் முனைந்தபோது, தோழர் வொரோச்சிலோவ்(Vorochilov) என்பவர் குறுக்கிட்டார், “இச்சட்டம் பயன் பாட்டிற்குவருமெனில், பொதுவுடமைக் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கும் எண்ணம் தமக்கில்லை”, என்று கூறிவிட்டு தம்மிடமிருந்த உறுப்பினர் அட்டையை எடுத்து மேசைமீது எறிந்தார். ஸ்டாலினுக்கு கோபம் வந்தது. முகம் சிவந்துபோனது
– தோழரே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். அதை முடிவெடுப்பது நானே தவிர நீங்களல்ல, என்கிறார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுள் பலர் எழுந்துநின்று ஒரே நேரத்தில் பேச அங்கே சில கணங்கள் கூச்சலும் குழப்பமும் நிலவின. பேரியா என்பவர் ஸ்டாலினை நோக்கி ஓடுகிறார், அடுத்த நொடி ஸ்டாலின் சுருண்டு விழுந்திருக்கிறார். வந்திருந்த உறுப்பினர்கள் மருத்துவர்களை அழைக்க விரும்பியதாகவும், முக்கியமான மருத்துவர்கள் அனைவருமே சிறையிலிருந்ததால் ஸ்டாலினைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் பொனோமரேன்க்கோ சொல்கிறார். பேரியா, “அரக்கன் ஒழிந்தான், இனி எல்லோருக்கும் விடுதலை!” என கூச்சலிட்டதாகவும், அங்கே ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா வந்து சேர்ந்ததாகவும், அப்பா! அப்பா! என அரற்றியதாகவும் பொனோமரேன்க்கோ சொல்லும் கதைகள். அடுத்தடுத்து நடந்ததாக இவர்கூறும் தகவல்களில் பல குருஷ்சேவ் தகவல்களோடு ஒத்துபோகின்றன.
ஆக ஸ்டாலின் மரணம் தொடர்பான மேற்கண்ட தகவல்களில் எது உண்மை என்பது இன்றுவரை விளங்காத மர்மம். இவற்றுள் இலைய எரென்பர்க், பொனோமரேன்க்கோ இருவர் தகவல்களிலும் சிலவற்றில் ஒற்றுமை இருப்பதை பார்க்கிறோம். தவிர பொனோமரேன்க்கோ தரப்பில் தெரிவிக்கப்பட்டத் தகவல் அவர் சோவியத் யூனியனின் தூதுவராக வார்சோவியில் பணியாற்றியபோது தெரிவித்தது. தவிர அவர் பொதுவுடமைகட்சியில் செயலர் இடத்தில் இருந்ததால் அவரது தகவலை நம்பிக்கைக்குரிய தகவல் எனக் கருத இடமுண்டு. ஆனால் சிலர் ஸ்டாலின் மரணத்தை தயக்கமின்றி கொலையென எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் கப்பனாட்ஸ் என்பவர். இவர் மேற்குலகில் பணிபுரிந்த சோவியத் யூனியனின் உயர் அதிகாரி. ஸ்டாலின் கொலை பலருக்கும் அப்போது தவிர்க்கமுடியாததாக இருந்தது என்பது அவர் வாதம். ‘ஸ்டாலின் கொலையுண்டதை நிரூபிக்க சாட்சியங்கள் கிடையாது ஆனால் அவர் மரணம் இயற்கையானதல்ல என்பதை உறுதியாகச்சொல்ல முடியும்(2) என்ற அமெரிக்க பத்திரிகையாளர் சாலிஸ்பரி கூற்றும் கவனத்திற்கொள்ளதக்கது.
——————————————————————————-
1. Histoire pour tous mai 1965 Victor Alexandrov
2. Dossier secret de l’histoire page 371-Alain Decaux