பிப்ரவரி- 2
சென்னை சூளைமேட்டிலிருந்த இந்தியன் வங்கி விடுதியில் விழித்தபோது காலை 7 மணி. நண்பர் சவியே கிடைத்த நேரத்தைச் சிக்கெனப் பிடித்து பராபரமேயென குறட்டைக்குள் உறங்கினார். உறங்குவதற்கும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். எனக்கும் படுத்தால் உடனே உறங்கிவிடும் பழக்கமுண்டு. சென்னையில் அன்றைக்கு வாய்க்கவில்லை. ஆக விழித்தும் விழியாமலும் படுத்திருந்தேன். நண்பர் எழுந்து உட்கார்ந்தார். ஏற்கனவே மேசையில் திறந்து வைத்திருந்த மடிக் கணினி முன்பாக அமர்ந்தார். அதை ஒரு வேடிக்கைபோல பார்த்துக்கொண்டிருந்தேன். கணினிக்கு உயிர்ப்பூட்டி இணைப்புக்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றதை வெளிச்சம் பூசிய அரையிருட்டில் தெரிந்த முகத்தில் காணமுடிந்தது. ஆனால் அடுத்த கணம் ஓ Merde! என்றார். அதனை இங்கே மொழி பெயர்த்து ஆகப்போவதொன்றுமில்லை. என்னதான் புற உலகுக்கென நமது நடை உடை பாவனைகளுக்கு முலாம் பூசினாலும், இப்படி இயல்பு குணங்கள் சொற்களூடாக திடீரென்று பல்லை இளிக்கும். சாயம் வெளுத்துவிடும். மனிதரின் பண்பு அவன் எழுதும் வார்த்தைகளில்லை பேசும் சொற்களில்தானிருக்கிறது. பொதுவிடங்களில் கவனத்துடன் காப்பாற்றப்படும் இயற்கைக்குணம் தனித்திருக்கும்பொழுதும், நெருங்கியவர்களுடன் உரையாடும்பொழுதும் வெளிப்பட்டு நாம் இன்னாரென்று காட்டிக்கொடுத்துவிடும்.
கணினியை மடித்து ஒதுக்கிவிட்டு என்னைப்பார்த்தார். அவருடைய கணினி எதிர்பாராமல் கிடைத்த இணைப்புகாரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அப்பிரச்சினையைத் தொடவில்லை. புரிந்து கொண்டவிதமாக தலையாட்டினேன். இருவருமாக ஒருவர் பின் ஒருவராக காலைச் சடங்குகளை முடித்துக்கொண்டு விடுதிக் காவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு காப்பிவரவழைத்து குடித்தோம். நண்பர் சவியேக்குள்ள பிரச்சினை, கறுப்புக் காப்பி குடிப்பது. இந்தியாவில் பால் கலந்த காப்பி நன்றாக இருக்கிறது. கறுப்புக் காப்பியை தயாரிக்க நமக்குப் போதாதென்பது நண்பரின் அபிப்ராயம். மேலை நாடுகளில் எஸ்ப்ரெஸ்ஸோ காப்பிகளை குடித்துப்பழகியவர்களுக்கு நிலமை சங்கடந்தான். நட்சத்திர ஓட்டல்களில் அப்படியான சங்கடங்கள் இருக்காதென நினைக்கிறேன். வயிற்றில் பசி தலைகாட்டியது. விடுதிக் காவலரை அழைத்து நண்பருக்கு பிரெட் பட்டரென்றும், எனக்குப் பொங்கல் வடையென்றும் தீர்மானித்து வாங்கிவரும்படி அனுப்பினேன். எனது தொலைபேசிக்கு சிம் கார்டும் தேவைபட்டது. அதிலுள்ள சிக்கல்களை கூறிய விடுதிக்காவலர் கடவுச்சீட்டு அல்லது வேறு ஆதாரங்கள் வேண்டுமென்றார். என்னிடத்தில் OCI (Overseas Citizen of India) இருந்தது கொடுத்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல பசி சீக்கிரம்வந்தால் நல்லதென்று கூறி அனுப்பினேன். அவர் தலையாட்டியவிதம், அற்புதவிளக்கு பூதம்போலிருக்க அறைக்கதவை தாழ்ப்பாள்கூட போடாமல் விட்டுவைத்திருந்தேன். முதல் நாள் இரவு உணவென்ற பேரில் லூப்தான்ஸா எங்களைப் பழிவாங்கியிருந்தது. விமானம் இறங்க ஒரு மணிநேரமிருக்க அவசர அவசரமாக ஒரு சாண்ட்விச். பின்னர் கொடுத்த தட்டை திரும்ப வாங்கும்போது கெச்சப்பும், டிஸ்யூவும் விநியோகித்தார்கள். நண்பருக்கு அதுபோல நான்கு சாண்ட்விச் வேண்டும்.
காலை மணி எட்டு. விடுதிக் காவலர் வரவில்லை. 8.30 ஆயிற்று வரவில்லை. சென்னையில் வந்திறங்கி ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. இந்திரனுக்கும், பதிப்பாள நண்பர் நடராஜனுக்கும் வருகையைத் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக நண்பர் இந்திரனுடன் பிப்ரவரி 5ந்தேதி புதுவையில் நடபெறவிருந்த கவிதை வாசிப்புக்காக தயாரிக்கவிருக்கும் ஒரு சிறிய கையடக்கமான புத்தகம் தொடர்பாக பேசவேண்டியிருந்தது. மறுமுனையில் கிடைத்தார். காலையில் என்ன திட்டமென்றார். எங்கள் அட்டவணையில் உங்களைச் சந்திப்பதென்று இருக்கிறது, தொந்தரவுகளேதுமில்லையெனில் சந்திக்கலாமே என்றேன். அவரும் உங்களௌக்குக்காகத்தான் நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன் பேசலாமென்றார். அவர் வீட்டிற்கு ஏற்கனவே சென்றிருந்தாலும் முகவரி தேவைபட்டது. ஆட்டோகாரருக்குச் சொல்லவேண்டிய அடையாளத்தையும் தெளிவுபடுத்திக்கொண்டு காலை பத்து மணிக்கு வந்துவிடுவோமென தெரிவித்தேன்.
காலை 9மணி. உணவுடன் வந்துவிடுவதாகச் சொல்லிச்சென்ற காவலர் வரவில்லை:
சார்லி சாப்ளின் நடித்த பழைய கறுப்பு வெள்ளை படமொன்றுண்டு. அதில் சாப்ளின் பனிமலையொன்றில் கடும் பனிப்பொழிவால் கிடைத்த சிறுகுடிலொன்றில் தங்க நேரும். அக்குடிலில் வேறொரு மனிதரும் இவரைப்போலவே பனியிலிருந்து தப்பிக்க ஒதுங்கியிருப்பார். இருவரும் கொடூரப்பசிக்கு ஆளாகி எதையும் தின்னலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். எதிராளியின் பார்வையில் சாப்ளின் கோழியாகத் தோற்றம் தருவார். நண்பர் சவியே என்னைப் பார்த்தபோது சாப்ளின்போலவே எனக்கும் இறக்கை முளைத்திருக்க தப்பிக்க வேண்டியிருந்தது.
விடுதியின் கீழே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகம். ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரிகள் பிரிந்து கிடந்தன. கதவைத் தட்டினேன், எட்டிப் பார்த்த நபரிடம்:
– விடுதிக்காவலரின் பெயரைத்சொல்லி தேடுவதாகக் குறிப்பிட்டேன்.
– வெளியே போயிருக்கிறார் வந்துவிடுவார்- என்றார்.
அந்த வந்துவிடுவார் என்கிற சொல் தந்த உத்தரவாதத்தில் மயங்கி தெருவைப்பார்த்தேன். இந்தியப் பெரு நகரங்கள், தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்புக்குட்படாமல் தமது ரகசிய குணங்களை போற்றிக் காக்கும் இலட்சோப இலட்ச தெருக்களில் அதுவுமொன்று. போடிகோவும் வண்ணப்பூச்சுமாக நிற்கிற கவர்ச்சிகரமான ஒற்றை வீடுகள், சோகையான நிறத்திற்கு வாழ்க்கைப்பட்டு மூக்கைச் சிந்தும் குடியிருப்புத் தொகுதிகள், முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கும் ஒண்டிக் குடித்தனங்களை உள்ளடக்கிய வீடுகள், அண்ணாச்சி கடை, நான்கு சக்கர தள்ளுவண்டியில் துணிக்கு இஸ்திரிபோடும் மனிதர், குப்பையை வாரலாமா விடலாமா என யோசித்து யோசித்து பதுகாப்பு எதுவுமின்றி குப்பைகளை சைக்கிள் வண்டியில் நிறுத்திய பிளாஸ்டிக் கூடைகளில் நிரப்பிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் இருபக்கமும் தலையை திருப்பியவண்ணம் தமது வாகனத்தை முட்டி இழுத்து செல்லும் நடுத்தரவயது பெண்மணி. அரசு பெண்கள் விடுதியென்று எழுதியிருந்த ஒரு மாடி வீட்டின் தெருக்கதவு விசுக்கென்று திறக்கப்பட வெளிப்பட்ட இளம்பெண் ஒருத்தி தோளில் தொங்கியிருந்த பையை அவ்வப்போது முன்னால் தள்ளி பிடித்தபடி இடது கை கைக்குட்டையால் முகத்தில் அரும்பிய வியர்வையை ஒத்தியபடி நடந்துபோனார். இரண்டு ஆட்டோகாரர்கள் அருகருகே வண்டியை நிறுத்தியபடி உரையாடுகிறார்கள். சென்னை மொழியில் திட்டியபடி சிறுவனொருவனை திட்டிக்கொண்டு ஓடினான். சுவரொட்டியில் கண்ணீர் அஞ்சலி.
காலை மணி 10. விடுதிக்காவலர் வருவதாக இல்லை. பொறுமை இழந்து தொலைபேசியில் பிடித்தேன்.
– என்னங்க ஏதாச்சும் கிடைச்சுதா? நாங்க இன்றைக்கு காலமைதான் ஏதாவது சாப்பிடவேண்டுமென்று உங்களிடம் சொன்னது, நாளைகில்லை.
– அஞ்சு நிமிடத்திலே வந்துவிடுவேன் சார்.
ஐந்து நிமிடத்தில் வரவும் செய்தார். ஆனால் கைகளை வீசிக்கொண்டு 2G ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு முந்தைய ராஜா போல நடந்துவந்தார்.
– என்னங்க சும்மா வறீங்க..
– கோபிச்சுக்காதீங்க சார். ஒரு வேலையா போயிட்டேன். நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேன். பத்து நிமிடம் பொறுக்கமுடியுமா?
மிஸ்டு காலையோ கையையோ கொடுக்கவிருப்பமில்லாததால்
– இல்லைங்க பரவாயில்லை. நாங்கள் போகிற வழியில் பார்த்துக்கொள்கிறோம், என்று கூறிவிட்டு கீழிருந்தபடியே நண்பரை அழைத்தேன். பிரெஞ்சு நண்பர் இறங்கிவந்தார்.
ஒரு ஆட்டோவைப் பிடித்து, நண்பர் இந்திரன் முகவரியைக் கூறினேன். ஆட்டோகாரர் புரிந்துகொண்டார் ஐம்பது ரூபாய் கேட்டார். நண்பரும் நானுமாக ஏறிக்கொண்டோம். வழியில் ஐரோப்பிய மற்றும் இந்திய உணவுகள் சேர்ந்தாற்போல கிடைக்கும் உணவு விடுதி தென்படுகிறதா எனபார்த்தோம். எதுவுமில்லையென்றானது. நண்பர் இந்திரன் வீட்டிற்கு பத்து நாற்பதுக்கெல்லாம் வந்தாயிற்று. எதிர்பார்த்ததுபோலவே காலை உணவு ஆயிற்றா என்றார். இல்லையென்றேன். இங்கேயே சாப்பிடலாமே, தோசை இருக்கிறதென்றார். தோசையுடன் பூரியும் வந்தது. பிரெஞ்சு நண்பர் விருப்பமாக சாப்பிட்டார், நானுந்தான்.
மூவருமாக காலை உணவுக்குப்பிறகு ஏற்கனவே கூறியதுபோல கவிதைக் கையேடு தொடர்பாக நண்பர் இந்திரனுக்குத் தெரிந்த கணினி அலுவலகத்துக்குச் சென்றோம். காலை பதினோரு மணிக்கே வெயிலின் கடுமை தெரிந்தது. சில பிழைகளை திருத்தியதோடு எங்கள் பணி முடிந்தது. சிறிய கலைபெட்டகமாக வடிவமைக்கப்பட்ட அப்புத்தகத்தின் வெற்றிக்குரியவர் இந்திரனென்று சொல்லலாம். இந்திரனுக்குள் ஒரு பிரம்மனும் உடன்வாழ்ந்ததை அன்றுதான் கண்டேன். மனதில் நிறைவுடன் மதிய உணவுக்கு ஒரு மலேசியன் அசைவ விடுதிக்குச் சென்றோம். விலை, தரம், அமைதி நன்றாக இருந்தன. மீண்டும் கணினி கூடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. இறுதியாக ஒருமுறை படிவத்தைப் பார்த்து மனதுக்கு நிறைவு ஏற்பட்டவுடன் திரும்பினோம். திரும்பியபோது மாலை மணி ஏழு. அன்று நண்பர் எஸ்.ராவுக்கு இயல்விருது பெற்றமைக்காக ரஜனியின் தலமையில் பாராட்டுவிழா இருந்தது. நேரம் இணக்கமாக இல்லாததாலும், சுதா ராமலிங்கம் கிரீன் பார்க் ஓட்டலில் எங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்ததாலும் செல்ல முடியவில்லையென்கிற வருத்தம்.
மாலை வெகுநேரம் இந்திரனுடன் ச¨ளைக்காது இலக்கியம் பேசினோம். நண்பர் சவியே தமது Philomensurable குறித்து இந்திரனுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். இடையில் நான் மொழி பெயர்க்கவேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் இருவருக்கும் தெரிந்த மொழியில் இடைமனிதரின்றி உறவாடுவதிலுள்ள புரிதல் சாத்தியம் மொழிபெயர்ப்பில் கிடைக்காதென்பது நிச்சயம். நேற்றைய இன்றைய இலக்கிய ஆளுமைகள் சிற்பக் கலைஞர்கள் ஓவியர்களென்று பேச்சு நீண்டது. இடைக்கிடை நண்பர் இந்திரன் யாளிப்பதிப்பகத்தின் வெளியீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.
பிரான்சிலிருந்து புறப்படும்போதே காய்ச்சலுடன் புறப்பட்டிருந்தேன். காய்ச்சல் தோள்வலியையும் சேர்த்திருந்தது. அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நண்பர் இந்திரன் அழைத்துப்போனார். அவர் நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்படுகிற மருத்துவரென்று விளங்கிக்கொண்டேன். அபூர்வமான மனிதர். நண்பர் இந்திரன் அவரைப்பற்றி முன்னதாகக் கூறியிருந்த வார்த்தைகளுக்குப் பழுதின்றி நடந்துகொண்டார்.
இரவு எட்டு மணிக்கு நண்பர் இந்திரனின் சகோதரர் வாகனத்தில் கிரீன்பார்க் ஓட்டலுக்குச்சென்றோம். சுதாராமலிங்கம் அவர் துணைவர் ராமலிங்கம் அடுத்தவாரம் மணமுடிக்கவிருந்த அவர்கள் பிள்ளை, பெங்களூர் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் அவர் மகளென்று அனைவரும் வந்திருந்தனர். பெரிதாக வயிற்றுக்கு ஈயப்படுவதற்கு முன்பாக சிறிதாக செவியையும் கவனிக்க நினைத்ததால் அரசியல், இலக்கியம், பெண்ணுரிமை, உளப்பகுப்பாய்வு, கீழைநாடுகளைப்பற்றிய ஐரோப்பிய பார்வையென உரையாடல் நீண்டது.
தொடரும்…
“மனிதரின் பண்பு அவன் எழுதும் வார்த்தைகளில்லை பேசும் சொற்களில்தானிருக்கிறது. ”
மிக உண்மையான கருத்து.
பயணக் கட்டுரை தொடரட்டும் !
வயணமாய் அமர்ந்து படிக்கிறோம்.
தங்கள் சந்திப்பைப் பற்றி நண்பர் இந்திரன் கூறினார்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ