பிப்ரவரி 1.
முதல்நாள் எனது துணைவி, தனது மகள் வயிற்று பேரனுடைய முதல் ஆண்டு பிறந்த நாளைக்கொண்டாட அமெரிக்கா சென்றாள். தனித்து அவ்வளவுதூரம் பயணிக்க தயக்கம் காட்டினாள் நான் நவீன பெண்கள் அவதாரத்தையெல்லாம் விளக்கி, ஊக்கப்படுத்தினேன். இங்கே பார், உண்மையில் நீ இல்லாமல் இந்தியா செல்ல எனக்குங்கூட பயமென்றேன். பொய் சொல்லாதப்பா, உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? என்ற கண்களைச் சமாதானபடுத்த வேண்டியிருந்தது. ஊடியவளை உணராமல் போனால் எழுத்தாளானாக இருந்து என்ன பயன் சொல்லுங்கள்.
அமெரிக்கா புறப்படும் முன்னரேயே எனது பெட்டிபடுக்கைகளையும் பதினைந்து நாளுக்காக துணிமணிகளையும் வேண்டிய பணத்தையும் கொடுத்து, எனது பயணத்தையும் ஒழுங்குபடுத்தியிருந்தாள். என்னை ஊருக்குத் தயார்படுத்திய பட்டியலில் மூன்றாவதாகக் கைசெலவுக்கான பனத்தையும் சேர்த்திருக்கிறேன் கவனித்தீர்களா? ஏதோ வியாபாரம், கடை, எழுத்தென்று அலைந்துகொண்டிருக்கிறேனே தவிர, உண்மையில் நிதிமந்திரி அவள்தான். எழுத்தாளனாக இருக்கிறோமில்லையா? எனது புனைவு பிற இடங்களில் ஜெயிக்கிறதோ இல்லையோ அவளிடத்தில் ஜெயிப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்கிறேன்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி. வழக்கம்போல நான்கு மணிக்கு எழுந்தேன். கடந்த சில நாட்களாக Strasbourg நகரில் நல்ல குளிர். கவனமாக உடுத்திக்கொண்டு மனைவி குறித்துவைத்திருந்த கட்டளைகளின் படி வீட்டை இருத்திவிட்டு காரில் இரு பெட்டிகளையும் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து எனது பிரெஞ்சு நண்பர் வீட்டிற்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, இரயில் நிலையம் அருகிலிருக்கும் எனது கடைக்கருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க பெட்டிகளை நண்பரும் நானுமாக இழுத்துக்கொண்டு ஓடி, இரயில் நிலையத்துக்கருகிலுள்ள லூப்தான்ஸாவின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது அதிகாலை நான்கு மணி பத்து நிமிடம் இருக்கலாம். பேருந்தில் எங்களைப்போலவே பிராங்க்பர்ட் விமானதளத்திற்குச் செல்லவிருந்த சக பயணிகள் வரிசையில் குளிரும் பெட்டியுமாகக் காத்திருந்தார்கள். பேருந்து ஓட்டுனருக்கு குளிரைப்பற்றிய கவலை இல்லையென நினைக்கிறேன். நான்கு மணி பதினைந்து நிமிடத்திற்கு முன்பாக கதவைத் திறக்கமாட்டேன் என்பதுபோல நிதானமாகத் தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். ஏதோ தயவு பண்ணவிரும்பியவர்போல ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக சொர்க்கவாசலைத் திறந்துவிட்டார். ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து 250 கி.மீட்டரிலுள்ள பிராங்பர்ட் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. பேருந்தில் ஒரு குட்டித் தூக்கம். ஏழேகால், ஏழரைக்கெல்லாம் பிராங்பர்ட்டை அடைந்துவிட்டோம். நுழைவாயிலில் பிரெஞ்சு நண்பருக்கல்ல எனக்குச் சோதனை. அந்நியர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், கறுப்பர்கள் (இந்தியர்களும் அதிலடக்கம்) என்றால் கையில் குண்டினை வைத்துக்கொண்டு அலைகிறார்களென்ற பார்வை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. வேண்டா வெறுப்பாக அவனிடம் எனது கடவுசீட்டையும் மற்ற அத்தாட்சிகளையும் காண்பித்துவிட்டு ‘புறப்பாடு’ வரிசைக்கு வந்தோம். கையில் மிண்ணனு பதிவுச்சீட்டு அதை எந்திரத்தில் கொடுத்து பயணத்தைப் பதிவு செய்து அதற்கான அட்டையை எடுக்கவேண்டும். எந்திரத்திற்குக்கூட நான் கறுப்பனென தெரிந்திருக்கவேண்டும் அடம் பிடித்தது. அதைச் சமாதானப்டுத்துவதற்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. ஒருவழியாகச் சமாளித்து பெட்டிகளை பதிவு செய்துவிட்டு, சுங்க அதிகாரிகளையும் கடந்து பாதுகாப்புசோதனையை முடித்துக்கொண்டு, கை பைக்காக காத்திருந்தோம். நண்பரின் பை வந்தது. எனனுடையதில்லை. ஓர் ஆரியப்பெண் -இடலரின் தூரத்து சொந்தமாக இருக்க வேண்டும். கையை அசைத்தாள். பின்னாலிருந்த நண்பரைப் பார்த்தேன், அவர் வேறு திசையில் கைகாட்டினார். எனது கைப்பையை திறந்துவைத்துக்கொண்டு ஏதோ இரணிய கசிபுவின் வயிற்றைக் கிழித்த நரசிம்ம அவதாரம்போல மற்றொருத்தி. அருகிற் சென்றேன். விஸ்கி போத்தல் கைப்பையிற்கூடாதென்றாள். பத்துவருடங்களுக்கு மேலாக ஒரு விஸ்கி போத்தல் எங்கள் வீட்டில் சீண்டுவாரின்றி இருந்ததென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களாவென்று தெரியாது. சிகரேட், மது, இத்யாதிகளை தொட்டது கிடையாதென சத்தியமெல்லாம் செய்யமாட்டேன். ஆனாலும் எனக்கு விருப்பமானவை பட்டியலில் அவைகளெல்லாம் இல்லை. எப்போதாவது இந்த எப்போதாவதிற்கு இரண்டு மாத இடைவெளியிளியிலிருந்து ஆறுமாதம்வரை பொருள் கொள்ளலாம். ஆகப் பாட்டிலுக்காக கைப்பையை பதிவு செய்து விமானத்தில் அனுப்பிவிட்டு பறந்து, ஓடி, நடந்து, நீந்தி எல்லா பரிசோதனைகளையும் மீண்டும் கடந்து விமானத்தின் நுழைவாயிலைக் கடந்தபோது காத்திருந்த கொத்தவரங்காய் பணிப்பெண் களின் குட்டன் மோர்கனை ஏற்றுக்கொண்டு நொண்டி நடந்து கபினுக்குள் கையிருப்பை துருத்திவிட்டு நாற்காலிக்குள் அடைபட்டபோது காலை பத்து. மிக மோசமான சேவை. சென்னையில் எங்களை வரவேற்க தோழி சுதாராமலிங்கம் வந்திருந்தார். அதிகாலை சென்னையை தரிசித்துக்கொண்டு இந்தியன் வங்கி விருந்தினர் விடுதியில் படுத்தபோது விடிந்துவிட்டிருந்தது.
தொடரும்…
romba suvarasiyamana thodar, aduththa pathivirkku kaaththukondu irukkiraen
நன்றிங்க
நா.கிருஷ்ணா