Saint Germain -Des -Prés
பாரீஸின் நகரின் 6வது வட்டத்தில்( 6 ème arrondissement) சேன் நதியின் தென்னண்டையில் உள்ள புகழ்பெற்ற பகுதி Saint Germain -Des -Prés. பிரெஞ்சு படைப்புலகத்தின் புனித பூமி. நமது படைப்புலக நண்பர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்தால் கட்டாயம் பார்க்கவேண்டியவை பட்டியலில் இதற்கென கொஞ்சம் நேரத்தை ஒதுக்கவேண்டும்.
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் மொழி, இலக்கியம், கலைதவிர வேறு சுவாசங்களில்லை என்றிருப்போர் அவ்வப்போது வந்து இளைப்பாறும் பகுதியாக இருந்து வருகிறது. முதலில் மாண்டெல் காப்பிக் கடையில் ( Café Landelle) ஆரம்பித்து வைத்த அறிவுஜீவிகளின் சந்திப்பு இன்றைக்கும் ப்ரோக்கோப் காப்பிக் கடையில் (Café Procope)முகமன்கள், நலன் விசாரிப்புகள், இலக்கிய புதினங்கள், கேலி பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள், விவாதங்கங்கள்; அமைதியாகவும் – உரத்த குரலிலும் தெருவில் போவோர் வருவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும்படியாகவும்; பிரெஞ்சு மக்களின் பண்பாட்டினை சுண்டியவண்ணமும் தொடர்கின்றன. பிரெஞ்சு புரட்சியின் கர்த்தாக்கள்: Danton, Marat, Guillotin (கில்லெட்டின் புகழ்?) போன்றவர்கள் புரட்சிக்கு முன்பாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். பிரெஞ்சு படைப்புலகைச்சார்ந்த பலருக்கும் எழுத்தாளர்களென்ற தகுதியை இங்கே பெற்றால்தானுண்டு, அவர்களுக்கு பிற விருதுகள் பரிசுகள் இரண்டாம் பட்சம். வோல்த்தேர், ரூஸ்ஸோ, சார்த்த்ரு, சிமோன், கிளேசியோ, ஹ¥ல்பெக் கென்று இங்கே கோட்டையும் தொப்பியையும் கழற்றிவிட்டு காப்பிக்கடையின் காலியான மேசைகளைத்தேடி அலையாதவர்கள் எவருமில்லை. கோடைகாலத்தில் காபியை உறிஞ்சியபடி ப்ரோக்கோப் காப்பிக்கடையின் வெளியில் சுவாரஸ்யமாக உரையாடுபவர்களில் இன்றைய கவால்டாவோ, கிஞ்ஞாரோ இருக்கக்கூடும். காப்பிகடைகளோடு, இரவு விடுதிகளுக்கும் பங்குண்டு. படைப்புலக அறிவுமாந்தர்களின்றி திரைப்படம், நாடகம் சார்ந்து இயங்கும் மனிதர்களும், படைப்பில் ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளும் வந்துபோவதுண்டு. முன்னாள் பிரெஞ்சு அதுபர் பிரான்சுவா மித்தராண்ட் தமது அதிபர்காலத்தில் இதற்கென நேரத்தினை ஒதுக்கி இலக்கிய நண்பர்களைத் தேடி (குறிப்பாக Duras) வந்து போவதுண்டாம்.
சென்னைக்கருகே சந்தடிகளற்ற இடத்தைத் தேர்வு செய்து எழுத்தாளர்கள் வந்துபோக, கலந்துரையாட ஓரிடத்தை உருவாக்கலாம். நம்மால முடிந்தது ஏக்கத்தோடு கூடிய பெருமூச்சொன்றுதான்.. அண்ணா நூலகம் படும்பாட்டை பார்க்கிறபோது தமிழனுக்கு இதுபோன்ற பேராசைகள் கூடாது. அதுவும் தவிர நமது நண்பர்கள் அநேகமாக ஒரு பாரை (Bar) தேர்வுசெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நான்கு பேர் சேர்ந்து சந்திப்பதென்றால் அதற்கு வேறு பொருள். அந்நோய் தமிழ்நாட்டில் படைப்புலகையும் விட்டுவைக்கவில்லை. கூடுவது குடிப்பதற்கென்றானபிறகு ஊர்வம்புதான் அரங்கேறும். இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது?
———————————