அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.

பிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக்கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி – நாடோடிப்பெண்.

ருமேனியா நாட்டிலிருந்தும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புறப்பட்டு பரவலாக மேற்கு ஐரோப்பிய நாடுகளெங்கும் அலைந்து திரியும் நாடோடி மக்களின் பூர்வீகம் இந்தியா என்கிறார்கள். ஆக அவளுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது, நானொரு இந்தியன் என்பதால் மட்டுமல்ல, நானுமொரு நாடோடி என்பதால், அதாவது புலம் பெயர்கிறவர்களெல்லாம் நாடோடிகளெனில் நானும் நாடோடி என்கிற அடிப்படையில். இரண்டாவது முறையாக சிரிக்கிறாள். சிரிப்பில் ஒத்திகையின் பலன் வெளிப்படையாகவே தெரிகிறது. பாசாங்கில்லை. வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாக துவங்கியிருக்கிற மே மாத வெக்கையைத் தணிக்கும் குளுமையும் அச்சிரிப்பில் இருக்கிறது. சிரிப்பில் ஓர் ஒழுங்கு. உதடுகள் சீராகப் பிரிந்து பற்களின் முன்வரிசையை, என்னை ஒரு புகைப்படக்காரனாகப் பாவித்து வெளிப்படுத்தியதைப்போல  உணர்ந்தேன். இளம்சிவப்பாக தெரிந்த அதரங்களின் மினுமினுப்பிலும் கன்னங்களின் இரு கதுப்புகளிலும் புத்தம் புதிய அச்சிரிப்பு மெல்லிய சவ்வுபோல ஒட்டியிருக்கிறது. அவளுடைய முதல் சிரிப்பும் கிட்டத்தட்ட இதுபோலத்தான் இருந்ததென்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். ஆனால் அச்சிரிப்பு அதற்கான விளைவை ஏற்படுத்த தவறிவிட்டதென்ற ஐயம் அவளுக்கு இருந்திருக்கவேண்டும். தலையை வணங்குவதுபோல தாழ்த்தியபோது, காத்திருந்ததுபோல விழுந்த தலைமுடியை விரல்தொட்டு காதுமடலுக்கும் தலைக்குமிடையே அனுப்பியபடி இரண்டாவது முறையாகச் சிரித்தபோது கூடுதலாக உதடுகள் பிரிகின்றன. இரு உதடுகளும் சேரும் இடங்கள் இம்முறை பின்னோக்கி இழுபட்டு மீண்டும் சுய நிலைக்கு வருகின்றன. சிரிப்பின் உபயோகம் என்னைப்போலவே நீங்களும் அறிந்திருப்பீர்கள். எதிராளியின் கவனத்தை தமக்கு இலாபம்தர தக்கதாக மாற்றவேண்டும். அவளுடைய எண்னமும் அதுவாகத்தான் இருக்கிறது. என்னை – என் கண்களை- குறிவைத்தே தாக்குதல் நிகழ்ந்தது. வேட்டையாடல் அநிச்சையாக நிகழ்ந்ததைப்போன்ற தோற்றம் தரினும் குறி தப்பவில்லை. குறிப்பொருள் வீழ்த்தப்பட்டது. வீழ்ந்திருந்தேன்.

கையை எனக்காக நீட்டியதும் சிரித்ததும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததா? கை நீட்டியது முதலிலும் சிரிப்பு இரண்டாவதுமாக நிகழ்ந்ததா? அல்லது சிரிப்புக்குப் பின் கையை எனக்காக நீட்டினாளா? என்ற கேள்விகள் எனக்குள் தேவையில்லாமல் ஒன்றன் பின்னொன்றாக தொடர்கின்றன. அவள் சிரிப்பினையும் நீண்டிருக்கிற அவள் கையையும் கவனியாதவன்போல நடந்துகொள்கிறேன். அதற்கான காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று  அப்பெண்ணை நான் அலட்சியம் செய்கிறேன் என்பதை அவள் தெரிந்துகொள்ளவேண்டும். மற்றொன்று அதன் மூலம் அவளுடைய உடல்மொழியை நிராகரிப்பதும் வாய் திறந்து பேசவைப்பதுமென்ற எனது எதிர்பார்ப்பு. எனவே அவளுடை இவ்விளையாட்டில் எனக்குப் பற்றில்லை என்பதுபோல நடந்துகொள்கிறேன். எனது மனதைப் படித்தவைபோல ஸ்டியரிங்கில் விரல்கள் ஏற்ற இறக்கத்துடன் தாளமிட ஆரம்பிக்கின்றன. பெண்ணிடமிருந்த கொத்தாகப் பறித்த எனது பார்வையையை  வெப்பத்தில் நனைத்து சிக்னல் விளக்கின் மீதி பதியமிடுகிறேன். அவளிடம் நெருக்கடியொன்றை ஏற்படுத்திய குரூரத்துடன் மனம் குதூகலிக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து பதட்டத்துடன், தற்காலிக மகிழ்ச்சியை ஒதுக்கியவன் ஜாடையாக அவளைப் பார்க்கிறேன். இப்போது பிரச்சினைகள் எனக்கு. விளையாட்டென்றாலும் ஆண் ஜெயிக்கவில்லையென்றால் எப்படி? என்னிடம் அவளுடைய எதிர்பார்ப்புகள் என்னவென்பதை வாய் திறந்து சொல்லட்டுமே. வெள்ளந்தியாக ஒரு சிரிப்பினை உதிர்த்து சுலபமாக எதிரியை வீழ்த்திவிடலாமென்ற நாடோடிப்பெண்ணின் திட்டத்தை முறியடிக்கவேண்டும்.

அவளிடத்தில் தொடர்ந்து பதிலில்லை. மென்மையான சிரிப்பும், கை நீட்டலும் போதுமென்று நினைத்திருக்கவேண்டும். பொறுமையின்றி ஒரு நொடி திரும்பிப்பார்த்தபொழுது அவள் தலையைக் குனிந்துகொண்டாள். தாமதித்தால் வேறு வாகனங்களை, வேறு நபர்களைத் தேடி போய்விடுவாளோ என்றும் தேவையின்றி ஒரு அச்சம். பெண்ணின் ஊமை கெஞ்சுதலுக்கு மசிவதில்லையென்பதில் திட்டவட்டமாக இருக்கிறேன். நொடிகள் நிமிடங்களாகப் ஊதிப்பெருக்கின்றன. மௌனத்தின் நீட்சி என்னவாக முடியக்கூடும், என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. நிலவிய அமைதியை குலைத்துவிடக்கூடாது என்பதுபோல இருவரும் மௌனத்தை கையிலெடுக்கிறோம். அதனைக் கலைப்பதில் அவள் முந்திக்கொண்டால் எப்படி நடந்து கொள்ளலாம், என்ன கூறலாம் என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை இருவர் பார்வையும் ஓசையற்ற சூன்யத்தில் முட்டிக்கொள்கின்றன, ஒருசிலவிநாடிகள் அசைவின்மைக்குப்பிறகு அவை மேய்ச்சலில் இறங்குகின்றன. ஒருவர் மற்றவரின் பலவீனத்தை துகிலுரிந்துவிடுவதென்று செயல்படுகிறோம். “பிச்சைக்காசு அதற்கு போயிட்டு இப்படி யோசிக்கிறான்?”, என்று அவளும்; “எதற்காக இந்த கழுதை ஊமை நாடகமாடுகிறது? வாயைத் திறந்து கேட்கவேண்டியதுதானே?”  என்று நானுமாக இருக்கிறோம்.

பரிதாபத்திற்குரிய அவளது செயல்பாடு, வாய் திறந்தால் வரவிருக்கிற சொற்கள் ஆக எதுவென்றாலும் அவற்றை சந்திப்பதென்ற முடிவோடுதான் இருக்கிறேன். என்னை அணுகிய விதமும், காட்டிய பணிவும், நீட்டிய கையும் கடந்த ஒரு சில நொடிகளில் அவளை ஓர் அடிமையாகவும், என்னை எஜமானாகவும் கற்பித்துக்கொள்ள தூண்டுகின்றன. அவள் இருப்பின் மீது ஒரு தற்காலிக உரிமையை ஏற்படுத்திக்கொள்கிறேன். பெண்ணின் உடல்மொழிக்குப் பொருத்தமான வகையில், சரியான தருணத்தில், எனது பின்னூட்டம் அமையவேண்டும். சிக்னல் வழக்கமான நேரத்தைத்தான் எடுத்துக்கொள்கிறதென்ற போதிலும் எனக்கு முடிவுறாமல் நீள்வதாகத் தோன்றுகிறது. அவ்வப்போது அவளைப் பார்த்துக்கொள்ளவும் தவறவில்லை. மீண்டும் அடுத்தடுத்து கேள்விகள், வரிசையாக கரும்பலகையில் எழுதபட்டு கையில் பிரம்புடன் முகமற்ற ஒருவர் வாசிக்க சொல்லி அவளைக் கேட்கிறார்: பிறந்தநாடு, நாடோடி வாழ்க்கை, யாசிக்கும் குணம், மௌனம், முகம், சமிக்கைகள்- வாய் திறந்தால் பிரெஞ்சில் அவள் உபயோகப்படுத்தவிருக்கிற சொற்கள்?  இதுபோன்ற பலவும் மின்னணு தகவற் பலகையில் வருவதுபோல கோர்வையாய் தொடர்கின்றன. அவள் வாய்திறந்தால் வரக்கூடிய சொற்களெல்லாம் ஏற்கனவே வேறொரு சாலையில், வோறொரு சிக்னலில் வாகனத்தை நிறுத்திய பொழுது கேட்டதுதான். எனினும் திரும்பவும் கைநீட்டும் குறியீட்டிற்கான பொருளை அவள் தெளிவுபடுத்திட வேண்டுமென்பதில் கறாராக இருக்கிறேன். .

காத்திருப்பது அநாவசியமாகப்பட்டது. ஏதோ அவளுக்காகவே சிக்னலும் அதற்கான விதிமுறைகளும், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களும் இயங்குவதுபோன்ற எண்ணம் மனதில் சிலுசிலுவென்ற பரவ, உடலொருமுறை அதிர்ந்து மீள்கிறது. சென்னையில் ஒரு எழுத்தாள நண்பரைபார்க்கப்போக, மதிய உணவுக்கு முதலமைச்சர் வீடு திரும்புகிறார் எனக்கூறி வாகனங்கள்  நிறுத்தபட்டதும், மற்றொரு ஆட்டோகாரர் (எதிர்கட்சி அனுதாபி) ஏக வசனத்தில்  பிறர்காதுபட அந்த முதலமைச்சரை திட்டிதீர்த்ததும் நினைவுக்கு வந்தது. எனது தரப்பில் அவளாக வாய்திறக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் சேர்த்திருந்த நியாயங்கள் பாலினத்தில் எனக்கு எதிர்த்திசையிலிருக்கிறவள் என்ற அடிப்படையிலும், அவள் வயது காரணமாகவும் குலையத் தொடங்கிய அதேவேளையில் உலகெங்கும் ஏதோஒருவகையில்  பிறரை எதிர்பார்க்கும் கைநீட்டல்கள் அதாவது கொடுக்கின்ற கைகள் மேலேயும் வாங்குகின்ற கைகள் கீழேயுமென காட்சிகள் ஒன்று இரண்டு, நூறு ஆயிரம்  லட்சமென என்னை சுற்றிலும் வலைப்பின்னல்களாக தொடர்கின்றன.

அவளுக்கும் எனக்குமிடையில் இடைவெளியென்று ஒன்றுமில்லை.  என்னை அவளிடத்தில் நிறுத்தி அவள் நடவடிக்கைகளை எனது சரீரத்தின் செயல்பாடாக முன்னிறுத்தி யோசித்தபோது அது உண்மைதானென்று புரிந்தது. அவ்வுண்மை அவளுக்கு முன்பே எனது மௌனத்தை கலைத்துக்கொள்வதிலுள்ள நியாயத்தை தெளிவுபடுத்தியது. முடிவுகள் காரண காரியங்களை நியாயப்படுத்துகின்றன என்பதை மறுக்கவா முடியும். நாடோடிப்பெண்ணுக்கும் எனக்கும் இடையில் விழுந்த திரையை விலக்குவதில் அவளுக்குள்ள பொறுப்பு எனக்கு முண்டு. இப்படி இருவருமாக பார்வைகளை சாதனங்களாகப் பாவித்து எவ்வளவு நிமிடங்கள் உரையாடமுடியும். முன்பின் அறிந்திறாத இரு மனிதப்பிறவிகளுக்கிடையேயான சங்கடங்களுள் தொடக்க உரையாடலுமொன்று என்கிற அடிப்படை அறிவுகூட இல்லையென்பதை நினைக்க வெட்கமாக இருந்தது. தவிர இதை நான்தான் தொடங்க வேண்டும். தராசு முள் சமூகத்தில் ஓரவஞ்சனையாக என்தரப்பை சார்ந்திருக்கிறது. அதை நிரூபிக்க எனக்கொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறபொழுது எதற்காக விட்டுகொடுப்பானேன்? நாடோடிப்பெண்ணின் நீட்டிய கைக்கும் எனது உடலுக்குமுள்ள இடைவெளி ஒரு சில அங்குலங்கள் இருக்கலாம் அல்லது தோராயமாக ஓர் அளவினைக் குறிப்பிடவேண்டுமானால், அவள் சுவாசம் என்னைத் தொடும் தூரத்தில் என்று வைத்துக்கொள்ளலாம். இக் குறுகிய இடைவெளியைவைத்துக்கொண்டு இத்தனை நேரம் அமைதியாக இருந்தததே ஆச்சரியம், வியப்புக்குரிய விடயம். யோசித்துப்பாருங்கள். கைநீட்டுகிற நபரை கூடுமானவரை தவிர்க்க  எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் நமது பார்வையிலிருந்து தவிர்க்க நினைக்கிறோமா இல்லையா? எனக்கும் அது உரைத்திருக்கவேண்டும் எனது சட்டைப் பையை துழாவி முடித்து பர்ஸ் எடுப்பதுபோல பாவனை செய்கிறேன். எனது தேடலுக்கிடையிலும், அவள் வாய்திறந்து என்னிடம் பிச்சை கேட்கவேண்டுமென்கிற இளக்காரமான எதிர்பார்ப்பு. எனது தேடல் அவளுக்கு தெம்பூட்டியிருக்கவேண்டும், வாய் திறப்பதுபோலிருந்தது, குரல் வெளிவரவில்லை, கட்டைவிரலால் ஆட்காட்டிவிரலைத் தொட்டு சுண்டியவளாய், அவளுக்குத்தேவை ஒன்றிரண்டு நாணயமென குறிப்பால் உணர்த்துகிறாள்.

நாடோடி பெண்ணிடம் தோற்றுவிட்டேன் என்பது புரிந்தது.  என்ன நடக்கவிருக்கிறது என்பதைப்புரிந்துகொண்டவள்போல இப்போது மெல்ல சிரிக்கிறாள். விரும்பினால் கொடு, விருப்பம் இல்லையென்றால் இல்லையென்று சொல்லு, அடுத்த வாகனத்தைப்பார்க்கிறேன் என்பது போலத்தான் அவளது அடுத்த பார்வையும் இருக்கிறது. எனது பொல்லாத நேரம் சில்லறை நாணயங்களென்று எதுவுமில்லை. சட்டைப்பை சுத்தமாகத் துடைக்கபட்டிருந்தது. என்னிடம் காசில்லை, போவென்று சொல்லிவிடலாமா? போயும் போயும் ஓர் இந்தியனிடம் கேட்டேன் பார் என அவள் நினைத்திடக்கூடாது. ஏதோ ஒட்டுமொத்த இந்தியர்களின் மரியாதைக்கும் நான் தான் அத்தாரிட்டி என்று நினைப்பு. சபித்தபடி  ஐந்து யூரோ தாளை அவள் கையில் வைத்தேன். புறப்பட இருந்தவளிடம், “கொஞ்சம் பொறு நாமெல்லால் ஒர் இனம் தெரியுமா?”, என்றேன். அவள் விழித்தபடி நிற்கிறாள். தொடர்ந்து பேசினேன்: “அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.”. காதில் வாங்கினாளா என்று தெரியவில்லை. அவளது முழுக்கவனமும் அடுத்த வாகனத்தின் மீதிருந்தது.

————————————————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s