லெ. கிளேசியோவும் இந்தியாவும்
இந்திய தேசம் புதிர்களால் ஜ்வலிக்கிற கனவுதேவதையாக ஆதிங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள் வெவ்வேறுகாரணங்களின் அடிப்படையில் இந்தியாவைத் தேடி வந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டர், மெகஸ்தனிஸ் ஆகியோர் முன்னோடிகள். சந்திர குப்த மௌரியர் காலத்தில் பாடலிபுத்திரம் வரை (பாட்னா)வந்த மெகஸ்தனிஸ் சுமார் பத்தாண்டுகாலம் தங்கி எழுதிய இண்டிகாவில், முதன் முதலாக ஒரு மேற்கத்தியர் பதிவு செய்த இந்தியாவைக் காண்கிறோம். அதன் பின்னர் உரோமானியரான பிளினி (Pliny the Elder) எழுதிய நூல் Naturalis Historia. கி.பி.முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவை விசித்திர மிருகமென்று சித்தரிக்கிறது. மேற்கத்திய படைப்பாளிகளை பொருத்தவரை தங்கள் எழுத்துப்பாதையில் என்றேனுமொரு நாள் இந்தியத்தைச் சந்திக்கவேண்டுமென்பது படைப்பிலக்கிய விதி. குறிப்பாக பின் நவீனத்துவத்தில் களைத்திருக்கும் அவர்களுக்கு இந்தியத்துவம் என்ன மாய்மாலம் செய்கிறதோ? இந்தியா என்று பேசும்போதெல்லாம் அவர்கள் எழுத்து எருவைத்த பயிர்போல கரும்பச்சையில் நெளிகிறது. அதிலும் கிளேஸியோ போன்ற நாடோடிகளுக்கு எங்கேனும் ஓரிடத்தில் ஒன்றிரண்டு வரிகளிலாவது இந்தியாவை சிலாகித்து அந்நாடுபற்றிய தங்கள் கேள்விஞானத்தைக் கோடிட்டுக் காட்டிவிடவேண்டும். உலகத்தின் இருப்பை அதன் உயிர்வாழ்க்கையை, அதன் சீர்மையையை சொல்லவருகிறபோது இந்தியா என்ற சொல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, இல்லை யெனில் தமது படைப்பறிவு கேள்விக்குறியதாகிவிடுமென்ற அச்சம் மேற்கத்திய படைப்பாளிகளுக்கு நிறையவே உண்டு. மிளகு, ஏலக்காயென்று வாசனாதி திரவியங்களைத் தேடி தங்கள் புறவளத்தை பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது ஒரு கூட்டமெனில்; சிந்தனைகள், கலைகள், இலக்கியமென்று தங்கள் அகவளத்தைப் பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது மற்றொரு கூட்டம். முதல் வளத்தை தேடிவந்தவர்கள் நம்மை அடிமைபடுத்தினார்கள், இரண்டாவது வளத்தைத் தேடிவந்தவர்கள் நமக்கு அடிமையானார்கள். எனது சிற்றறிவுக்கு சட்டென்று நினைவுக்கு வருகிற இரண்டாம் வகையினருக்கு நேற்றைய உதாரணம் ஆங்கிலேயரான இ.எம் பார்ஸ்ட்டர். இன்றைய உதாரணம் பிரெஞ்சுக்காரரான லெ கிளேஸியோ. La quarantaine என்ற நாவலில் எழுத ஆரம்பித்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தla Ritournelledela Faimவரை தொடர்ந்தது. இனியும் தொடரக்கூடும். மொரீஷியஸில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்ததாலோ என்னவோ இந்தியாவைப்பற்றியும் தவறாமல் எழுதுகிறார்.
இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்?
திராவிடக் கட்சி தலைவர்கள் அறுபதுகளில் இளிச்சவாய் தமிழர்களுக்கெனவே கண்டுபிடித்த மேடை வசனம். இன்றைக்குத் சிரியாவில் தினசரி அரங்கேறுகிறது. ஐநாவின் மனித உரிமை ஆனையத் தலைவர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிரிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு அதிபரெடுத்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஐந்தாயிரத்திற்குக் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமுற்று சிகிச்சையின்றி வீட்டில் பதுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. காரணம் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுகிறவர்களை மருத்துவமனையில் அதிபரின் கூலிப்படை கொல்கிறது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கமுன் வரும் மருத்துவர்களுக்கும் அதுவே முடிவு. வழக்கம்போல சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டொ அதிகாரத்தின்மூலம் பாதுகாப்புசபையின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டைபோட்டு இக்கொடுமைகளுக்குத் துணைபோகின்றன. சிரியமக்கள் சபிக்கப்பட்டவர்கள். மேற்கத்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் சிரியா நாட்டினால் லிபியா போன்றோ ஈராக்போன்றோ பெரிய இலாபங்களில்லை. எதற்காக ரஷ்யாவும் சீனாவும் சிரியாமக்களை எதிர்க்கவேண்டும்?. மேற்கத்திய நாடுகளின் குரல்கள் சிரியாவுக்கு ஆதரவாக ஒலிக்கின்றனவே அது போதாதா? உலகில் இன்னமும் சுதந்திரமென்ற சொல் ஒலிக்ககூடாத நாடொன்று உண்டெனில் அது சீனாவகாத்தான் இருக்க முடியும். இவ்விஷயத்தில் இந்தியாவை நினைக்க நமக்கு எவ்வளவோ பெருமையாக இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகளென ஆதரிக்கவும் எதிர்க்கவும் இங்கு எவ்வளவோ உள்ளன. உண்மையில் இந்தியர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இதை நான் சொல்லவில்லை ஒரு சீன நண்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் வாயால் சொல்லக்கேட்டது. அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் கொண்டாடும் சுதந்திரமும், ஜனநாயகமும் பல நேரங்களில் கேலிக்குறியதாக இருப்பதும், கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவதும் உண்மைதான். எனினும் கலகக்குரல்கள் எதிர்பார்க்கும் நீதிக்கு (‘பல நேரங்களில் பொய்த்தாலுங்கூட) அங்கே வாய்ப்புகளுண்டு.
தாய் சீஜி (Dai Sijie)பிறப்பால் சீனர். வாழ்க்கையின் முற்பகுதி சீனாவில் கழிந்திருக்கிறது. பிறந்ததும் வளர்ந்ததும் பூர்ஷ்வா சூழலில். காம்ரேடுகள் சீனாவுக்கு அவர் எதிரி வர்க்கம். மாவோ சீனா புரட்சிபோதையில் அட்டூழியம் செய்த நேரம் தோழர்களுக்கு நிலவுடமையாளர்களும், பிற உரிமையாளர்களும் கொடுங்கோலர்கள். நடுத்தர மக்களும் மெத்த படித்தவர்களூம் முதலாளியியத்தின் கைக்கூலிகளென்ற மார்க்ஸிய பார்வையின்படி மூன்றாண்டுகாலம் புணர்வாழ்வுபணிக்கு சிக்சூவான் மலைபிரதேசத்துக்கு அனுப்பப்பட்டவர் தாய் சீஜி. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் அகதியாக வாழ்ந்து வருகிறார். “சீனாவில் எனது விருப்பப்படி திரைப்படங்கள் எடுப்பதற்கான சூழ்நிலைகள் நிலவாததால் பிரான்சுக்கு வருவதற்கு முன்பாக சீனப்பின்புலக் கதைக்கு வியட்நாம் நாட்டில் தங்கி இரண்டுபடங்களை எடுக்கவேண்டியிருந்தது”, என்கிறார் அவர்.
சீனாவுக்கு ஒரு தாய்சீஜியெனில் ஈரானுக்கு ஒரு ஜா·பர் பனாயி( Jafar Panahi ). ஜாபர் உலகம்முழுக்கக் கொண்டாடப்படுபவர் அவரது திரைப்படமொன்றிற்கு தங்கக் காமிராவை 1995ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் பரிசாகப்பெற்ரார். அவ்வாறே வெனிஸ் திரைப்படவிழாவிலும் பர்சினை வென்றவர். ஸ்பீல் பெர்க் இவரது பரம ரசிகர். இவருக்கு ஈரானிய உச்சநீதிமன்றம், அண்மையில் கீழ் நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த ஆறாண்டுகால சிறைதண்டனையை உறுதிசெய்திருப்பதோடு இருபதாண்டுகாலம் திரைப்படத் தொழிலிலிருந்து அவரை விலக்கி வைத்துள்ளது. இது தவிர அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரானக் கருத்துக்களை திரைபடங்களில் தெரிவித்தாரென்பது அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டு. உண்மையில் 2009 அதிபர் தேர்தலில் இயக்குனர் தற்போதைய அதிபருக்கு எதிராக நின்ற வேட்பாளரை (முசாவி) ஆதரித்தது மிகப்பெரிய குற்றம். பிரச்சினைக்குப்பின்பு 2010 மார்ச் மாதம் ஜா·பர் பனாயி அவரது மனைவி, மகள் மூவரும் கைது செய்யப்பட்டனர், 88 நாட்கள் சிறையிலிருந்த இயக்குனர் உண்ணாவிரதமிருக்கவே வேறுவழியின்றி விடுதலை செய்து ஈரான் அரசு வழக்குத் தொடர்ந்தது வழக்கின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன்.
குற்றவாளிகள்?
மாக்சிம் ப்ருனெரி பிரான்சுநாட்டைச்சேர்ந்த 37வயது இளைஞர். லொரான்ஸ் பியாவா(Laurence Biava) என்ற எழுத்தாளர் உருவாக்கியுள்ள Le Savoir et dela Rechercheஎன்கிற இலக்கிய பரிசு அமைப்புத் தேர்வுக் குழு ஜூரிகளுள் இந்த இளைஞரும் ஒருவர். தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள வேறு இருவர் இவரை உடனடியாகத் தேர்வுக்குழுவிலிருந்து நீக்கப்படவேண்டுமென்கிறார்கள். காரணம் அவர் வலதுசாரி தீவிரவாத அமைப்புடன் அவருக்கிருந்த தொடர்பு. அதுமட்டுமல்ல 2002ம் ஆண்டு கொலை செய்ய முயன்றார் என்ற குற்றத்திற்கு ஆளாகி வழக்கின் முடிவில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு சிறைதண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிந்து நன்னடத்தையின் காரணமாக அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யமுயன்ற நபர் யாரோ எவரோ அல்ல, பிரெஞ்சு ஜனாதிபதி. சம்பவம் நடந்த தினம் பிரான்சு நாட்டில் பஸ்தி விடுதலை நாளான தேசிய தினம். அதாவது ஜூலை 14. அன்றைய தினம் கொடியேற்றிவிட்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்ட பிறகு அதிபர் திறந்த வாகனத்தில் முப்படை தளபதிகள் சூழ மெதுவாக வந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. மெய்க்காப்பாளர்களின் முன்னெச்சரிக்கையால் அதிபரைக் காப்பற்றவும் முடிந்தது. குற்றவாளியையும் வளைத்துப்பிடித்தார்கள். இத்தகைய குற்றத்துக்குக் காரணமானவரை ஓர் இலக்கிய பரிசு தேர்வுக்க்குழுவில் இடபெறச்செய்யலாமா? என்பது பரிசுக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற இலக்கியவாதிகளின் கேள்வி. அவரை தேர்க்குழுவில் இடம்பெறச்செய்தவர்கள் அவரது படைப்புத் திறனின் அடிப்படையில் இடம்பெறச்செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது படைப்புத் திறனுக்கு சாட்சியென்று இருப்பது ஒரே ஒரு நூல். பெயர்: Une vie ordinaire : je voulais tuer Jacques Chirac தமிழில் மொழிபெயர்ப்பதெனில்: அதிபரை (ழாக் சிராக்) கொலைசெய்ய விரும்பினேன் காரணம் எனது உப்புசப்பில்லாத வாழ்க்கை.
அதிபர் ழாக் சிராக்கை கொலை செய்ய முயன்று 2009ல் விடுதலையாகி தற்போது ஓர் இலக்கியப்பரிசு குழு தேர்விலும் இளைஞர் மாக்சிம் ப்ருனெரி இடம்பெற்றிருக்க சம்பந்தப்பட்ட அதிபருக்கோ அண்மையில் இரண்டாண்டுகால சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அவர் செய்தகுற்றம் பாரீஸ் நகரத்தின் மேயராக இருந்தகாலத்தில் செய்த ஊழல். குற்றம் பதிவுசெய்யப்பட்டும் அதிபருக்கேயுரிய பிரத்தியேக சலுகையின்கீழ் வழக்குத் தொடரமுடியாதவராக சட்டவிலக்குப் பெற்றிருந்தார். இரண்டு முறை அதிபராக இருந்த பின் மூன்றாவது முறையாக போட்டியிட பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் வாய்ப்பில்லாத நிலையில் காத்திருந்த நீதித்துறை வழக்குத் தொடர்ந்து தண்டனையும் வாங்கித்தந்தது. மேல் முறையீடு செய்யப்போவதாக அதிபரின் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். எனினும் பிரான்சு நாட்டு வரலாற்றில் முன்னாள் அதிபரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறை. சட்டத்தின் பார்வையில் இருவேறு மனிதர்கள் இருக்கமுடியாது இருக்கவும் கூடாது. இக்காரணங்களினாலேயே லோக்பால் மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.
நன்றி: அம்ருதா- ஜனவரி
————————————–