காந்திஎன்றகுறியீடு
கடந்த மாதம்(அக்டோபர்2) நான் வசிக்கின்ற Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறந்தார்கள். வொரெயால்(Voreyal) தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் எனக்கு அறிமுகமானவர். வருடந்தோறும் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து வருகிறவர். இவ்வமைப்பு தமிழ்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறது. ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியர் தமிழ் கற்று வருகின்றனர். வொரெயால் தமிழ் அமைப்பு நடத்தும் பொங்கல் நிகழ்ச்சியில் தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தவறாமல் இடம்பெறும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பொறுத்தவரை தமிழ் கற்கும் வாய்ப்புகள் மங்கிய சூழலில் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவர்களை வணங்க வேண்டியிருக்கிறது. நண்பர் இலங்கைவேந்தன், பாரீஸில் காந்திக்கு சிலைவைக்க முயற்சிகளெடுத்து அதில் இன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இருமாதங்களுக்கு முன்பு சிலை திறக்க யாரை அழைக்கலாமென என்னிடம் யோசனைக் கேட்டார். எனக்கு இன்றைய தேதியில் முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர்கள் இல்லை என்பதை வற்புறுத்தினேன் . தமிழ்நாட்டில் நேர்மையானவர்கள் என நம்பப்படுகிறவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டேன். இந்தியா சென்றதும் அவர்களைச் சந்தித்து பேசுவதாக என்னிடத்தில் கூறினார். அவ்வாறு அவர் செய்யவில்லை, இந்தியாவிலிருந்து திரும்பியபிறகு என்னைச் சமாதானபடுத்தும் வகையில் சில காரணங்களைக் கூறினார். அதை நான் வேறுவிதமாக ஊகித்தேன்: காந்தி சிலையை நிறுவ உழைப்பு பொருள் இரண்டும் தேவைபட்டன. உழைப்பை தர முன் வரலாம், ஆனால் பொருட்தேவையை ஓரளவுதான் சுமக்க முடியுமென்ற நிலை. இது எல்லோருக்கும் நேர்வதுதான். மீன் விற்றாலென்ன காசு நாறாதில்லையா? சுமையை பகிர்ந்துகொள்ளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் தேவையாக இருந்தனர். எனவே அவர்களை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம். எது எப்படியிருப்பினும் காந்தி முதன் முறையாக சிலை வடிவில் பாரீஸ் மண்ணில் கால் பதிக்க நண்பர் எடுத்த பெருமுயற்சி நனவாகியுள்ளது. வேறு இந்தியர்கள் சாதிக்காதது, பாராட்டுக்கள்.
இன்று காந்தி என்ற சொல் வணிகமொழியில் சொல்வதெனில் ஒரு விற்பனை குறியீடு. காங்கிரஸில் ஆரம்பித்து கசாப்புகடைவரை அவரவர் சரக்கினை விற்க முதலீடற்ற விளம்பரமாக காந்தி உதவுகிறார். இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்தியா துணைக்கண்டத்தைச்சேர்ந்த பலருக்கும் காந்தி உபயோகமாகிறார். இந்தியர்களோடு, பாகிஸ்தானியரும், வங்காள தேசத்தினரும், இலங்கையரும் மேற்கத்திய நாடுகளில் காந்தியின் பெயரால் நடத்தும் ரெஸ்டாரெண்ட்டுகளில் பிரியாணியும், முர்க்மசாலாவும், நான் கீமாவும், சிவப்பு ஒயினும், விஸ்கியும், பீரும் விலைபோகிக்கொண்டிருக்கின்றன. அக்டோபர் 2ல் காந்தியை ஞாபகம் வைத்து சிலைக்கும் காந்தி சமாதிக்கும் தலைவர்கள் அஞ்சலி செய்ய மறப்பதில்லை.
நாம் இப்படியிருக்க அமெரிக்காவின் மார்ட்டின் லூதர்கிங்கில் ஆரம்பித்து தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மாண்டெலா, பர்மாவின் அவுன் சன் ஸ¥ கீ (Aung San Suu Kyi) போன்ற உலகறிந்த பெருமக்கள்- காந்தியைபோலவே பிறருக்காக தங்களை வருத்திக்கொள்கிறவர்கள் – காந்தியின் சீடர்களென சொல்லிக்கொள்வதில் நிறைவு காண்கிறார்கள். அன்னா ஹசாரே தம்மை காந்தியுடன் ஒப்பிடவேண்டாமென்கிறார். காந்தி இந்தியாவின் தேசிய அடையாளம், பாரம்பரிய சின்னம். காந்தியம் குறித்த விவாதங்கள் தேவைதான், ஆனால் காந்தி என்ற மனிதரின் அப்பழுக்கற்ற நெறியும் அறத்தின் மீதான அவரது பிடிமானமும் விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. எதையும் சந்தேகித்தே பழக்கப்பட்டவர்களிடம் நாம் விவாதிக்க ஒன்றுமில்லை. இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாததது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது.
புனைவும்நிஜமும்.
டேனி போயலின் Slumdog Millionaire தி ரை ப்படத்தில்வரும் சம்பவம் உண்மையாகியிருக்கிறது. சில நேரங்களில் எது புனைவு எது உண்மையென்று பிரித்துணரமுடியாமல் குழம்பிப்போகிறோம். இச்சம்பவம் அதற்கு ஓர் நல்ல உதாரணம். உண்மைசம்பவங்களின் அடிப்படையில் நாவல்களும், திரைப்படங்களும் வருவதுண்டு. ஆனால் புனைவு உண்மையாகுமா? நடந்திருக்கிறது நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சில் பங்குகொண்டு ஜெயித்திருக்கும் 26 வயது இளைஞனரான சுசில்குமார் என்ற இளைஞர் பீகார் மாநிலத்தைச்சேர்ந்த மோத்திஹரி என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர். அரசாங்கத்தில் எழுத்தராக பணிபுரிகிறாராம். ஒரு ஏழை விவசாயின் மகன் என்கிறார்கள். அவரது முன்னும்பின்னுமான வாழ்க்கையும் திரைப்படத்தை ஒத்திருந்ததா ஒத்திருக்குமா என்பது தெரியவில்லை.
காலபைரவன்
அந்நிய மொழிகளில்வரும் படைப்புகளை முடிந்தவரை உடனுக்குடன் வாசிக்கும் பழக்கமுண்டு. வாங்கிய வேகத்தில் பத்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியாமற்போன நூல்களையும் நிறைய வைத்திருக்கிறேன். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கிறபோதெல்லாம் தமிழில் இதைக்காட்டிலும் நல்லவாசிப்புகளை சந்தித்திருக்கிறேன் என்ற பெருமிதமும் இடைக்கிடை வருவதுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் உலகறிந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களைக்காட்டிலும் மீசுரமானவை. அக்டோபர் மாத உயிரெழுத்தில் ‘விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம்’ என்ற சிறுகதையை படித்தேன். காலபைரவன் என்ற இளைஞர் எழுதியிருக்கிறார். சொல்ல வார்த்தைகளில்லை. தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்த சிறுகதைகளுள் முக்கியமானதொரு படைப்பு. இக்கதையை மீண்டும் நினைவுகூரும்வகையில் நவம்பர் மாதம் 14ந்தேதி பிரெஞ்சு தினசரியில் மர்செய் என்ற பிரதேசத்துக்கருகே நடந்ததாக ஒரு சம்பவம். இந்தியக்குடும்பத்தைசேர்ந்த நாற்பது வயது பெண்மணி புத்தி சுவாதீனமற்ற 6 வயது மகனை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாள் என்பது செய்தி. காரணமும் காரியமும் நெருக்கமானவைதான் அந்த நெருக்கம நூலிழையாகவும் இருக்கலாம், பாரிய இடைவெளியாகவும் இருக்கலாம். முடிவின்றி காரணகாரியத்தை அறிவுகொண்டு புறத்தில் தேடுவது வானத்தைக் கைகொண்டு தொடும் முயற்சி. காலபைரவன் காரணகாரியத்தை மனித மனங்களுக்குள் தேடுகிறார்.
ஓடப்பரும்உதையப்பரும்..
1961ம் ஆண்டு அக்டோபர் 17 பிரான்சுநாட்டின் காலனிய வரலாற்றில் ஒரு கறைபடிந்த தேதி. பாரீஸ் மாநகரில் அமைதியாக ஊர்வலம்சென்ற அல்ஜீரிய மக்களில் பலர் பிரெஞ்சு காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைபடுத்தும் தேதி அது. கடந்தமாதம் அதனுடையைய ஐம்பதாவது ஆண்டு தினம். பொதுவாக காலனிய வரலாறென்பது ஆதிக்க சக்திகளின் அதிகார அடக்குமுறைகளாலும் அடிமைபட்டநாடுகளின் அபயக்குரல்களைக்கொண்டும் எழுதப்பட்டது. எஜமானர்கள் எஜமானர்களாகவே இருக்கவேண்டுமா என்ன? அடிமைப்பட்டுக்கிடந்தவர்கள் தலைநிமிர நினைக்கிறார்கள். அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கின்றன. காற்று திசைமாறுகிறது. ஓடப்பராயிருந்தவர்கள் உதையப்பர்களாக மாறுகிறார்கள், அதற்கான விலையையும் அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது. பிரான்சுநாட்டின் காலனிகளில் ஒன்றாக இருந்து விடுதலைபெற முயன்ற அல்ஜீரிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அதுபோன்ற அநீதிகளின் சாட்சியாகவிருந்த நாட்களில் ஒன்றுதான் 1961ம் ஆண்டு அக்டோபர்மாதம் 17ந்தேதி. தேதியின் அடிப்படையில் பார்க்கிறபோது சம்பவம் ஒரு நாள் அடையாளத்தை பெற்றதைப்போல தோற்றம் தரினும் பின்புலத்தில் பல மாதங்களின் – அதாவது உண்மையில் ஆகஸ்டுமாதத்தின் இறுதியில் தொடங்கிய பிரச்சினை அக்டோபர் இறுதிவரை நீடித்தது.
ஆப்ரிக்கக் கண்டத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட அல்ஜீரியாநாடு பிரெஞ்சு காலனியாக இருந்துவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் காலனிநாடுகள் பலவும் விடுதலைபெறவிரும்பியதைபோலவே அல்ஜீரியமக்களும் விடுதலை பெற விரும்பினர். அவர்களை வழி நடத்த இரண்டு விடுதலை இயக்கங்கள் தோன்றின. ஒன்று தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale), மற்றொன்று அல்ஜீரிய தேசிய இயக்கம். இவை இரண்டினுள் முதல் இயக்கம் வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவு இரண்டாவது இயக்கத்திற்கு. இவ்விரண்டு அமைப்புகளுக்கும் பிரான்சுநாட்டில் குடியேறியிருந்த அல்ஜீரிய மக்களிடை அனுதாபிகளிருந்தனர். தாய்நாட்டில் இவர்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தை புலம்பெயர்ந்த நாட்டிலும் தொடர்ந்தனர். இச் சகோதரயுத்தத்தில் ஏறக்குறைய 4000பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
ராஜபக்ஷேபோலவே பிரெஞ்சு அரசாங்கமும் இந்த சகோதரயுத்தத்தை மறைமுகமாக கூர்தீட்டி விளைவை சந்தோஷத்தோடு ரசித்தது தேசிய விடுதலை முன்னணியின் ஆதரவுபெற்ற ஆல்ஜீரியாவின் தற்காலிக அரசாங்கத்திற்கு வேண்டிய நிதியை அவ்வியக்கத்தின் பிரான்சு நாட்டின் கிளையும் பிரான்சு நாட்டில் வசித்துவந்த அதன் அல்ஜீரிய உறுப்பினர்களும் உதவப்போக இதை தடுத்து நிறுத்த நினைத்த பிரெஞ்சு அரசாங்கம் தனது ஆதரவுபெற்ற தேசிய இயக்கத்தைக்கொண்டு இவர்களை கண்காணிக்க ஆரம்பித்தது. அல்ஜீரிய தேசிய முன்னணிக்கு எதிராக ஒர் பிரத்தியேக காவற் படையை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை முன்னணியின் அனுதாபிகளான ஆண்களும் பெண்களும் அவ்வப்போது இழுத்துசெல்லப்பப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரத்தியேக காவற்படையுடன் நேரடித் தாக்குதலில் தேசிய முன்னணி இறங்க இருதரப்பிலும் பல உயிரிழப்புகள். பிரத்தியேக காவற்படையின் ஒரு பிரிவினரும் பிரெஞ்சு இனவாதிகளும் ஒன்றுகூடி அல்ஜீரிய மக்களை தண்டித்தாக வேண்டும் என்கிறார்கள். மாவட்ட தலைமை நிர்வாகி இதை மறைமுகமாக ஆதரித்தாரென்ற குற்றசாட்டு. ஒரு பக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் மூர்க்கமான காவல் படை, எதிரணியில் பிரான்சில் வாழ்ந்துவந்த எழுத்தறிவற்ற அல்ஜீரிய மக்கள். ‘வன்முறைக்கெதிராக’ என்று தமது நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொன்ன பிரெஞ்சு அரசாங்கம் வன்முறையாளர்களைக் கொல்லவில்லை அப்பாவி அல்ஜீரியர்களைகொன்றது. விசாரணை என்ற பெயரிலே சித்திரவதை செய்தது. அடித்துக் கொன்றது. காரணமின்றி திடீர் திடீரென்று ஆண்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர். பலரை பிரான்சிலிருந்து வெளியேற்றியது. இக்காலங்களில் அப்படிக்கொல்லபட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 307பேரென்று சொல்கிறார்கள். அக்டோபர் 17 1961 அன்று பிரெஞ்சு அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவித்து அல்ஜீரிய மக்களில் சுமார் இருபதாயிரம் மக்கள் ஊர்வலம் போகின்றனர் அவர்களுக்கு எதிராக பத்தாயிரம் போலிஸார் தாக்குதலில் இறங்கினர் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியரென எவரையும் பொலீஸார் விட்டுவைக்கவில்லை. அடிபட்டு வீழ்ந்தவர்கள் பல மணிநேரம் வீதிகளிலேயே கிடந்ததாக சொல்கின்றனர். சேன் நதியில் குதித்து தப்பியோடமுயன்ற்வர்கள் பலர் நதியில் மூழ்லிப்போனதாகவும் பிரெஞ்சு அரசாங்கம் இத்தாக்குதலில் 30லிருந்து 50 பேர் இறந்ததாச் சொல்கிறது பத்திரிகையாளர்கள் குறைந்தது 200பேராவது இறந்திருக்கலாமென எழுதியுள்ளார்கள். அப்பாவிகளுக்கு நீதிகிடைத்ததாக வரலாறில்லை.
புக்கர் பரிசு
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில படைப்பிலக்கிய உலகில் புக்கர் பரிசு (மேன் குழுமம் சுவீகரித்தபிறகு மேன் புக்கர் பரிசு) முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதை மறைமுகமாக விமர்சித்தவர்கள் பலரும் அதன் அங்கீகாரத்திற்கு ஏங்கினதென்னவோ உண்மை. ஆனாலின்று அப்புக்கர் பரிசுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் வந்திருக்கிறது. புக்கர் பரிசு தேர்வு குழு ஒரு படைப்பின் வாசிப்புத் தன்மையை(readability) பார்க்கிறதேயன்றி படைப்புத் திறனை பார்ப்பதில்லை என்பது இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு. போட்டி புக்கர் பரிசு ஒன்றை அடுத்த ஆண்டிலிருந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புக்கர் பரிசுபோல காமன்வெல்த் நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில படைப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உலக நாடுகளில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எல்லா படைப்புகளையும் தங்கள் தேர்வு குழு போட்டிக்கு அனுமதிக்கும் என்கிறார்கள் புக்கர் பரிசு தேர்வுக்குழுவில் இலக்கியதுறை சார்ந்தவர்களும் அத்துறை சாராதவர்களும் இடம்பெற்றிருக்கிறார்களாம், ஆனால் இவர்கள் அமைக்கவிருக்கும் தேர்வுக் குழுவில் தொழில் முறை விமர்சர்கர்கள், எழுத்தாளர்கள், மொழிஅறிஞர்கள் மற்றும் இலக்கியதுறைசார்ந்தவர்கள் பங்குபெறுவார்களென்றும் இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும் அந்நோக்கம் ‘தெளிவுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமலும், மிகச்சிறந்த படைப்புகளை தேர்வு செய்தல்’ என்று சத்தியம் செய்கிறார்கள். இவர்களுக்கு போட்டியாக இன்னொரு புக்கர் பரிசு பிறக்காமலிருந்தால் சரி.
நன்றி: அம்ருதா டிசம்பர் இதழ்
—————————–