பேரிசையின் பின்னணி: சொல்வனம்
சொல்வனம் இணைய இதழில் பேரிசையின் பின்னணி-தவில் கண்ட மாற்ரங்கள் என்ற தலைப்பில் ப. கோலப்பன் என்பவர் எழுதியுள்ள கட்டுரை கவனத்தைப்பெற்றது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட கட்டுரையாளர் லயசுத்தமான ஒரு தவில் புராணமே படித்திருக்கிறார். நவீன தவில் ஓசையில் ஏற்பட்ட மாறுதலுக்கு வேணுகோபாலென்ற கலைஞர் காரணமென்பது என்னைப்போன்றவர்களுக்குப் புதிய செய்தி. ‘தவிலுக்கு வார் பிடிப்பது’ குறித்த தகவலும் சுவாரஸ்யமனாது. கட்டுரையாளர் குறிப்பிடும் தில்லானா மோகனாம்பாள் வாத்ய கோஷ்டியும் அவர்கள் எதிரே வைத்தியும் கண்முன்னே நிற்கிறார்கள். காதலியை அல்லது மனைவியை ஆரத் தழுவுபவர்கள் தயவு செய்து கட்டுரையாளர் சிபாரிசு செய்திருக்கிறாரென தவிலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தவிலுக்கு நல்லதோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்லது.
கணையாழி -மீண்டும் பாரதி
கணையாழியில் இந்திரா பார்த்தசாரதியின் ‘மீண்டும் பாரதி’ தொடரை வாசித்தேன். பாரதியின் கவிதையில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் அதை இ.பா. சொல்கிறபோது கூடுதலாக காதுகொடுக்க நேரிடுகிறது. மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்தை மனமார வழிமொழிகிறேன். ஆயிரம் சொல்லுங்கள் மூலமொழியில் ஒரு படைப்புக்குள்ள முழுபாய்ச்சலையும் அம்மூல மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் வாசித்துப் பெறும் இன்பத்தையும் அதன் மொழிபெயர்ப்பு வாசகர்களால் ஒருபோதும் பெறமுடியாதென்பது சத்தியம் சத்தியம். தமக்கு தமிழால் அறியவந்த பாரதி, ஆங்கிலத்தால் அறியப்பட்ட தாகூரைக்காட்டிலும் மேலானவர் என்பதற்கு பாரதியாரைத் தாம் தாய்மொழியில் வாசிக்க நேர்ந்தது காரணமெனச் சொல்லும் இ.பா., பாரதியின் கவிதை ஆற்றலைக் கொண்டாடவும் தயங்கவில்லை. ‘புல்லை நகையுறுக்கி பூவை வியப்பாக்கி’ என்பதற்கு ஈடான வரிகளை கம்ப சித்திரத்தில் மட்டுமே காணமுடியும் என்கிறார். குயில் பாட்டைப்பற்றிய ஒரு விரிவான ரசனை நூல் எழுதத் திட்டமிட்டிருப்பதாக இ.பா தெரிவிக்கிறார். காத்திருக்கிறோம் ஐயா!.
இதம் தரும் வங்கக் கதைகள்:
வணக்கத்திற்குரிய வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் அம்ருதா பதிப்பகத்தின் அண்மைக்கால வங்கச் சிறுகதைகள் என்ற நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கத்கதைகளில் பொதுத்தன்மை என்கிறார் வே.சபாநாயகம். தொகுப்பிலுள்ள 15 சிறுகதைகளை அவருக்கே உரித்தான் மொழியில் கதைப்பொருளை பகிர்ந்துகொள்கிறார். அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதைகளென்ற உத்தரவாதம் தரப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் வங்காளம் தமிழ் இருமொழிகளிலும் தேர்ச்சிபெற்றவரென்பதால், வங்கமொழிக்கேற்ப தமிழ்படுத்தியிருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆர். அபிலாஷ்
நண்பரது வலைத்தலத்தில் வந்துள்ள தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டுத் தளத்தை அடையவில்லை? என்ற கட்டுரை பற்றியும் குறிப்பிடவேண்டும். பிறமொழி படைப்புகள் சிலவற்றை ஒப்பிட்டு தமிழ் ஏன் அந்நிலையை எட்டவில்லையென கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார். தமிழ் இலக்கியவாதிகள் வெகு சனங்கள் எனப்படுகிற பெருவாரியான மக்களிடமிருந்து விலகி நிற்பதும், வெகு சனப்பிரச்சினைகளில் கவனங்கொள்ளாததும் அவர் சொல்லும் காரணங்கள். அதை மறுக்கமுடியாது. அதற்காக புலம்பெயர்ந்த இந்திய இலக்கியவாதிகள் -அபிலாஷைபொறுத்தவரையில் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்- எடுத்துள்ள நிலைபாட்டை இந்தியாவில் மாநில மொழிகளில் எழுதுகிறவர்களும் எடுக்கவேண்டுமென்பது அபத்தம். புலம்பெயர்ந்தவர்கள் எந்த மொழியில் எழுதினாலும் அவர்கள் சூழலைவத்துத்தான் எழுதமுடியும். அபிலாஷே சொல்வதுபோல அது வேரறுந்தநிலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை ஆங்கிலத்தில் எழுதப்படுவதால்தான் பலரும் அறிய நேர்ந்ததே தவிர அபிலாஷ் சொல்கிற அவர்களுடைய பண்பாட்டைத் துண்டித்துக்கொண்டது காரணமல்ல. சொல்லபோனால் அவர்களுடைய நூலிலும் இந்தியாவில் இன்றளவுமுள்ள சில சூட்சமங்களை சொல்லியே விலைபோகவேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் பிரபலமான இந்திய எழுத்தாளர்களைத் தவிர்த்து காமா சோமாவென்று ஆங்கிலத்தில் வரும் நாவல்கள் விற்பனையாவது உள்ளே இருக்கும் சரக்கும் தரமானது என்பதாலல்ல நாவலின் அட்டைகளில் இன்றளவும் ஒரு ரிக்ஷாவோ, பத்து தலை நாகமோ, கையில் இரத்தம் சொட்டும் தலையுடன்கூடிய காளியோ இடம்பெற்றிருப்பதால் இருக்கலாம். அபிலாஷ் சொல்லும் ஸ்பானிய, துருக்கி நாவல்களைப்படித்தால் அங்கேயும் எழுத்தாளனின் மண் சார்ந்த கலாச்சாரமும் பண்பாடும் இருக்கத்தான் செய்கின்றன. பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறபோது பண்பாட்டளவில் வேற்று மொழிகாரர்களுக்கு புரியவைப்பது கடினமே. The Name of the Rose நூலில் பக்கத்திற்கு பக்கம் கிரேக்க மொழியோ லத்தீன் மொழியோ ஏராளமாக இருக்கும், ஆங்கில நாவல்களில் பிரெஞ்சு வாசகங்களோ, பிரெஞ்சு நாவலில் ஹீப்ரு மொழியோ நாவல் தன்மைகருதி சேர்க்கத்தான் செய்கிறார்கள். மேற்கத்தியர்கள் பண்பாடில் – காலனி ஆதிக்கம் -கலாச்சார ஆதிக்கம்- உலகாலவிய மயக்கமிருப்பதால் இக்குறைகளை சகித்துக்கொள்கிறோம். நாவலின் ஓட்டத்தில் வாசகன் அக்குறைகளை பொருட்படுத்துவதில்லை. நமக்கு நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் அமைவதில்லை என்பது உண்மையில் ஒரு குறை. தமிழ் படைப்புகளை இந்தியாவில் அவர் ஆங்கில இலக்கியத்தில் கரைத்துக் குடித்தவராகக்கூட இருக்கட்டும் அவர் ஆங்கிலம் பண்டித ஆங்கிலமாக இருக்குமே ஒழிய ஒரு படைப்புக்குரிய ஆங்கிலமாக இருக்கமுடியாதென்பது உண்மை. இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ இருக்கும் ஆங்கிலம் வேறு இந்திய ஆங்கிலம் வேறு. தமிழ் நாவலை தமிழறிந்த ஆங்கிலேயரோ அமெரிக்கரோ மொழிபெயர்த்தாலன்றி நமது படைப்புகளுக்கு விமோசனங்களில்லை. அப்படி அமைந்தால் பண்பாட்டளவில் மற்றவர்களுக்கு கடினமாக இருக்குமென்று நம்பக்கூடியவைகளைகூட கொண்டுபோகமுடியும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தால் நாவலின் கடைசிபக்கங்களில் கள்ளருக்கும் பிள்ளைமாருக்கும் சில விளக்கங்கள் கிடைக்குமானால் கண்டிப்பாக வாசகர்கள் கிடைப்பார்கள்.
———————————-