இந்தியாவிற்குப் போகிறோம்
இப்போதெல்லாம் பிரெஞ்சு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறபோது இந்தியா என்ற வார்த்தையை மரியாதையோடு உச்சரிக்கிறார்கள். என்னைப்போன்ற வெளிநாடுவாழ் இந்தியர்களை ஏதோ காமா சோமாவென்று பார்ப்பதில்லை. மரியாதை உயர்ந்திருக்கிறதென்றே சொல்லவேண்டும். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் கூலிகளாக வெளிநாடுகளுக்குப் போனார்கள் காலம் மாறியது, பொருள்தேடி, பெற்ற கல்விக்கு உரிய ஊதியத்தைத் தேடி வெளிநாடுசெல்வதென்பது அண்மைக் காலம்வரை நடபெற்றது இப்போதும் தொடருகின்றது. முற்றாக நின்றுவிட்டதென்று சொல்வதற்கில்லை. ஆனால் வேறொரு திருப்பத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக சந்திக்கிறோம்.
வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வேலை தேடுகிற அதிசயத்தை ஒரு தினசரியில் வாசிக்க நேர்ந்தது. பல்வேறு இந்திய நிறுவனங்களில் வேலை தேடி விண்ணப்பிக்கிறார்கள், வேலையிலும் அமர்த்தப்படுகிறார்கள். அண்மையில் கிடைத்த ஆய்வுத் தகவலின் படி தற்போது சுமார் 40000 வெளிநாட்டினர் இந்தியாவில் பணிபுரிவதாக அறிகிறோம். இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடுகள் அதிகமென்றும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகத்திலிருப்பதால் உத்தரவாதமான பணிகளை முன்வைத்து இந்தியா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் இனி மேலும் அதிகரிக்கலாம். அந்நியர்களின் 20 விழுக்காடு அதிகரிப்புக்கான நேர் காரணம் அந்நாடுகளுடன் ஒப்பீட்டளவில் எப்போதும் கண்டிராத அளவில் இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் வளர்ச்சி.
இந்தியாவை நோக்கி அறிவுபுலம் சார்ந்தவகையில் நிகழும் இப்படையெடுப்பிற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பியநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் அதன் தொடர்ச்சியாக விளைந்துள்ள வேலையின்மை நெருக்கடியும் தலையாய காரணங்கள். பல காரனங்களை முன்னிட்டு மேற்குலகம் இந்தியாவில் முதலீடு செய்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி பொருட்களுக்கான செலவினங்கள் பலமடங்கு அதிகம் இந்தியாவில் மூளைஉழைப்பும் உடலுழைப்பும் மலிவாகக்கிடைக்கிறது- உபரிமதிப்பு கூடுதலாக முதலாளிகளுக்குக் கிடைக்கிறது. ஆக பெரும் நிறுவனங்கள் இந்தியாபோன்ற நாடுகளைத் தேடிவர அவர்களோடு மூளைஉழைப்புக்கான வேலைகளைத்தேடி மேற்கத்தியரும் இந்தியா வருகின்றனர். இந்தியருக்குப் போட்டியாக தங்கள் உழைப்பை இந்தியச்சந்தையில் விற்கவும் செய்கிறார்கள்.
2008லிருந்து இந்தியாவில் வங்கிகள் நிதி நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலைகள், சுகாதாரம், சுற்றுலா, கல்வியென பலதுறைகளில் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நிறுவ
ங்கள் இந்தியாவில் மேற்குலக நாடுகளுக்கு ஈடான ஊதியத்தையும் இப்போது வழங்கத் தயாராக உள்ளநவாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள்மீதான மரியாதையும் இப்புதிய சூழ்நிலையால் கூடியுள்ளதென சொல்லவேண்டும்.
மின்னஞ்சல்களும் மின் புத்தகங்களும்
சுற்றுபுறசூழல் என்ற பெயரில் காகிதங்களின் உபயோகத்தை குறைப்பதென்று முடிவெடுத்து வங்கிகள், அரசுத்துறைகள், போக்குவரத்து துறைகளென பலவும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் காகிதமின்றி மையின்றி தீர்வுகள் கிடைக்கின்றன. ஏமாறும் மனிதர்களை அதிகம் ஏய்ப்பதற்கும் கணினி மயமாக்கப்பட்ட உலகம் உதவுகின்றதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இளம்வயதில் காதல் கடிதத்தைமுடித்து சம்பந்தப்பெண்ணிடம் கொண்டு சேர்ப்பதென்பது பெரிய கலை. நிறைய சாமர்த்தியம் வேண்டும், கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தால் போயே போச்சு. இந்த அனுபவங்களை சொல்லும் திறமையிருந்தால் சிறுகதையாகவோ, நாவல் வடிவமாகவோ சுலபமாகக் கொண்டுவரமுடியும். கடிதத்தைச் சேர்ப்பிப்பது ஒருபக்கமெனில் சம்பந்தப்பட்ட பெண்ணை ஓடைபக்கமோ, விளைந்தகம்புகளுக்கிடையிலோ, அந்தி சாய்ந்ததும் வைக்கோல் போருக்குப்பின்புறம் கிராமங்களில் சந்திப்பதென்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் மெரினாவிலும், எழும்பூர் மியூசியத்திலும், மகாபலிபுரத்திலும் காத்திருப்பதும் சந்திப்பதும். இப்போதெல்லாம் காதலன் இந்தியாவிலிருக்கிறான், காதலி இஸ்ரேலில் இருக்கிறாள். அவள் கருப்பா சிவப்பா, பாட்டியா குமரியா என்பது இவனுக்கும் தெரியாது. இவன் எப்படி யென்று அவளுக்கும் தெரியாது. இனி வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம்.
மைகொண்டு தாளில் அன்புள்ள மான்விழியே ஆசையில் ஒரு கடிதம், என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தகாலத்தில் கைக்குக் கடிதம் கிடைத்தால், சில பெண்கள் கிழித்துப்போடுவார்கள், வேறுசிலர் உறவுகளிடம் சொல்ல, அவர்களும் அதிகபட்சமாக வீடுதேடிவந்து மிரட்டிவிட்டுப்போவார்கள். அமெரிக்க இளைஞன் ஒருவன் என்ன தைரியத்தில் SMS அனுப்பினானோ அதையும் ஆபாசமின்றி அனுப்பித் தொலைத்திருந்தால் ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் மன்னித்திருக்கலாம், இந்தியாவிற்கு வந்த பையனை ஏர்போர்ட்டில் வைத்து அமுக்கிக்கொண்டுபோயிருக்கிறார்கள்.
அண்மையில் சோனி வெளியிட்டிருக்கும் மின்புத்தகம் கையளவு உள்ளது எடைகூட 200 கிராம் என்றார்கள். சட்டைப்பயில் போட்டுக்கொள்ளலாமாம். 1200 புத்தகங்களை அதில் வாசிக்கமுடியுமென்றார் விற்பனையாளர். கண்களை உறுத்தாத ஒளியில் படிக்க இதமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மின்புத்தகத்தை வாங்க ஆசைபட்டு தள்ளிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு வருடமும் இதைவிட நல்லதாக அறிமுகப்படுத்துவார்களா? விலை குறையுமா என்றெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. இவ்வருடம்?
————————————————-