நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பப்படவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.
நைநியப்பிள்ளை செய்திருந்த குற்றமென்ன? தண்டனையின் தீவிரத்தைப் பார்க்கிறபொழுது குற்றம் அசாதாரதனமானதென்கிற முடிவுக்கு எவரும் வரமுடியும். இழைக்கப்படும் குற்றமும் வழங்கப்படும் தண்டனையும் எப்போதுமே சமன் செய்யப்பட்டதாக வரலாறில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் மட்டுமல்ல நீதியுங்கூட. இங்கே நைநியப்பிள்ளை குற்றம் சாட்டப்படவர் என்றால், அவரை விசாரனை செய்யும் அதிகாரத்திலும் நீதி வழங்குமிடத்திலும் இருந்தவர்கள் அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள்: ஒருவர் கியோம் ஆந்தரே எபெர், மற்றவர் அவருடைய மகன்: குளோது ஆந்தரே எபேர்.
புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் முதல் கவர்னராக இருந்தவர் பிரான்சுவா மர்த்தேன். திருச்சிராப்பள்ளியின் அப்போதைய நிர்வாகியாக இருந்த ஷெர்க்கான் லோடி, பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் புதுச்சேரியில் நிரந்தரமாய்த் தங்கி வியாபாரம் செய்யவும், சரக்குக்கிடங்குகள் கட்டிக்கொள்ளவும் 1673ம் வருடம் ஜனவரி மாதம் 2ந்தே அனுமதி வழங்குகிறார். பிரான்சுவா மர்த்தேனுக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடைத்தரகராகயிருந்து செயல்பட்டவர் சென்னையிலிருந்து பிரான்சுவா மர்த்தேனால் அழைத்து வர்ப்பட்டிருந்த தானப்ப முதலியார். பின்னாளில் தரகு தானப்ப முதலியார் என்றழைக்கபட்ட இம்மனிதரின் உழைப்பும், திட்டமிடலும் புதுச்சேரியை மட்டும் கட்டி எழுப்ப உதவவில்லை. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவில் நிலைபெற்று தங்கள் பங்காளிகளைப்போலவே காலனி ஆதிக்கத்தை பிரெஞ்சுக் காரர்கள் கட்டி எழுப்பவும் அவை உதவின.. 1691ம் ஆண்டு தானப்ப முதலியார் இறக்கிறார். எல்லாக் காலங்களையும் போலவே அப்போதும் தந்தைக்குப்பிறகு மகனுக்கு உத்தியோகத்தை வழங்குவதென்பது ஒரு சம்பிரதாயமாக இருந்துவந்திருக்கிறது. எனவே பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் தரகராக தானப்ப முதலியார் மகன் முத்தியப்ப முதலியார் நியமிக்கப்படுகிறார்.
33 ஆண்டுகள் புதுச்சேரிகவர்னராக இருந்த மர்த்தேன் – இடையில் ஆறாண்டுகாலம் (1693-1699)புதுச்சேரி ஆலந்து நாட்டினர் வசமிருந்தது – 1706ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந்தே தேதி இறக்கிறார். அவருக்குப் பின் புதுச்சேரி கவர்னராக பதினான்காவது லூயியினால் நியமனம் செய்யப்பட்டவர் கியோம் ஆந்தரே எபேர் (Guillaume Andre Hebert).
இவரைபற்றி ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்றின் முன்னுரையில் அறிஞர் ஞானு தியாகு, “அந்த மனிதன் ஒரே முழுக்கில் கூடை மண் வாரவேண்டுமென்கிற எண்ணமுடையவர். எவ்வளவு சுருங்கின கால அளவில் திரண்ட ஆஸ்தியைச் சம்பாதிக்கமுடியுமோ, அவ்வளவையும் சம்பாதிக்கிற எண்ணத்துடன் புதுச்சேரிக்கு வந்தார்”, என்றெழுதுகிறார்.
ஆகவே வந்தவர், கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் பணம் காய்க்கும் மரங்கள் எவையெவையென பட்டியலிட்டார். அதில் மாட்சிமைமிகுந்த மன்னராட்சிக்கு என்ன இலாபமென பார்ப்பதற்கு முன்னால் தம் பங்கிற்கு எவ்வளவு சம்பாதிக்கமுடியுமெனவும் கணக்கிட்டார். அதனை அதிகரிப்பதற்கு செய்யவேண்டிய வழிமுறைகளும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளும் பற்றி நன்கு யோசித்து வரையறுத்தவர் செயலில் இறங்கவும் தயங்கவில்லை. வந்தவர் கவனத்திற்கு முதலில் தெரிய வந்த தகவல், கூட்டுறவு சங்க வர்த்தகத்தில் முத்தியப்ப முதலியாருக்கிருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும்.
* *
– உள்ளூர் வியாபாரிகள் வந்தார்களா?
– முத்தியப்ப முதலியார் ஊரில் இல்லையாம்.
* *
– விலை எப்படி? குறைத்து கேட்டிருக்கலாமே?
– அப்படித்தான் நினைத்திருந்தோம், ஆனால் முத்தியப்ப முதலியார்தான் நியாயமான விலை, கொடுக்கலாம் என்கிறார்.
* *
– தவக்கமில்லாமல் சரக்கு நாளை கப்பலில் ஏற்றப்பட சாத்தியமுண்டா
– தோணி செலுத்தும் செம்படவர் முத்தியப்ப முதலியார் வந்தால்தான் கடலில் இறங்குவார்களாம்
* *
முத்தியப்ப முதலியார்மீது தேவயின்றி கோபம் வந்தது. முன்பிருந்த கவர்னர் இந்த மனிதரைத் தேவையின்றி வளர்த்துவிட்டாரோ என்ற சந்தேகம். காப்ரிகளை எப்படி வைத்திருக்கவேண்டுமென ஆந்த ஆளுக்கு ஏன் விளங்காமல் போயிற்று எனக் கோபப்பட்டார். இதை இப்படியே விடக்கூடதெனத் தீர்மானித்தவராய், முத்தியப்ப முதலியாருக்கு துணையாக இருக்கும் கணக்கனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவரும் தலையை சிலுப்பிக்கொண்டு வந்து நின்றார்.
– சிப்பாய் ஒருவனை உடனடியாக அனுப்பி முத்தியப்ப முதலியாரை என்னை வந்து பார்க்கசொல், என்றார்.
போன கணக்குப்பிள்ளை இரண்டு மணி நேரத்தில் குடுமியை முடிந்துகொண்டே திரும்பவும் வந்தார். இன்றைக்கு அவரது தாயாருக்கு திதியாம். வீட்டில் அவசியம் இருந்தாகவேண்டுமாம். நாளை வந்து பார்க்கிறேன், என்று முதலியார் கூறியதாகத் தெரிவித்தார். அவர் வேறொன்றையும் தெரிவித்திருக்கவேண்டும். எதற்காக வீண் வம்பென நிறுத்திக்கொண்டார். வரமாட்டேனென்று கூறிய முதலியார், “ஏண்டா மாடு பன்றிகளை தின்கிறவனுக்குத்தான் புத்தியில்லை, உங்க கணக்கனுக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டிலே விசேஷம்ணு அவனுக்குத் தெரியுமே, எப்படி சொல்ல மறந்தான்? என இடக்குத்தனமாக முதலியார் கேள்வியெழுப்பியதையும் சிப்பாய் சொல்லியிருந்தான், கணக்குப்பிள்ளை அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை உணர்ந்திருக்கவேண்டும், கவர்னரிடம் கூறாமல் தவிர்த்தார்.
– சரி சரி நீ போ, என்ற கவர்னர் ஆந்தரே எபெருக்குக் கோபம். உடனே முத்தியப்ப முதலியாரை கட்டி இழுத்துவந்து சந்தியில் தூக்கில் போடலாமா என்று கூட நினைத்தார். அவர் மூளை வேறுவிதமாக யோசித்திருந்தது. இந்தக் காட்டுமிராண்டிகளை மேய்த்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பும்போது முடிந்த அளவு செல்வத்தை அள்ளிபோகவேண்டும், அதற்கு வேண்டிய தந்திரங்களை கையாளவேண்டும் என்பதை புரிந்துகொண்டவுடன் கவர்னரின் கோபம் அன்றைக்குத் தணிந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கவர்னர் எபெர் தரகர் முத்திய முதலியாரை அழைத்திருந்தார். முத்திய முதலியாரும் கவர்னரின் உத்தரவை மதித்து கவர்னர் சமூகங்காண உடனடியாக வந்திருந்தார். வந்த முத்திய முதலியாரிடம் கவர்னர் ஐம்பது பேழைகளைக் கொடுத்தார். பேழைகள் ஒவ்வொன்றிலும் நன்கு சிவந்த பவழங்கள் இருந்தன.
– என்ன பார்த்தீரா?
– பார்த்தேன்.
– அவ்வளவும் ஜாதி பவழங்கள் எனக்குப் பரிசாக வந்தவை. அவற்றை விற்கலாமென தீர்மானித்திருக்கிறேன்.
– நல்லது.
– மணங்கு ஒன்றுக்கு 120 வராகன் போகுமென்று சொல்கிறார்கள். விற்க ஏற்பாடு செய்யுங்கள்.
சரக்கினைப் பெற்றுக்கொண்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகளை வரவழைத்து பவழங்களைக் காட்டியபோது, அவர்கள் சரக்குகளை பரிசோதனை செய்து சரக்குகள் நல்ல ஜாதியில்லை என்றார்கள். மணங்குக்கு 106 வராகனுக்குமேல் ஒரு குண்டுமணிகூட பெறுமதி இல்லையென தெரிவிக்கின்றனர். கவர்னர் எபெர் குறைந்தது 110 வராகனாவது வேண்டுமென பிடிவாதமாக இருந்தார். முத்தியப்ப முதலியார் வியாபாரிகளை சமாதானம் செய்து மணங்கிற்கு 110 வராகன் என முடித்துவைத்தார். சம்மதித்த வியாபாரிகள் போகிறபோது சண்டையிட்டுக்கொண்டுப் போனது கவர்னரின் காதிற்கு எட்டியது. கவர்னர் பிரச்சினைகள் அனைத்திற்கு தரகர் முத்தியப்ப முதலியாரே காரணமென நினைத்தார். முதலியார் நினைத்திருந்தால் மணங்கொன்றிர்க்கு தமக்கு 120 வராகன் விற்றுத் தந்திருக்கலாம், தவிர வியாபாரிகளை எப்படி வழி நடத்துவதென்பதைக்கூட அவர் அறியாமலிருக்கிறார் என்றெண்ணி தரகர் பதவிக்கு அவர் சரியான ஆளல்ல என்ற முடிவெடுத்து தமக்கு விசுவாசமாக இருக்கிற நைநியப்பிள்ளையை அன்றுமுதல் தரகராக நியமிக்கிறார்.
(தொடரும்)