மொழிவது சுகம் நவம்பர் – 15

The Artist – ஒருகனவுலகத்தின்கதை

கோடம்பாக்க கனவுகளுடன் ஊரைவிட்டு ஓடிவந்து சென்னையில் தஞ்சம் புகும் மனிதர்களை உண்மைக் கதைகளை அறிவோம். சினிமா இருக்கும்வரை இக்கதைகள் தொடரலாம். இன்றோ நாளையோ நாலைமறுநாளோ லாரியிலோ, பஸ்ஸிலோ, ரயிலேறியோ வருவதும் தெருவில் அலைவதும், சினிமா அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடப்பதும், காத்திருப்பதும், உள்ளே நுழையும் திருமுகங்களின் கடைக்கண்பார்வைக்காக ஏங்குவதும், கிடைத்த தருணங்களில் வேர்வையைத் துடைத்தபடி சவரம் செய்யாத முகத்தின் திணவுகளை சகித்துக்கொண்டு விண்ணப்பமிடுவதும், அவர்களின் பொய்யான உறுதிமொழியை  நடிப்பென தெரிந்தும் (?) நம்பிக்கைவைப்பதும், மீண்டும் மீண்டும் நெய்விளக்கு ஏற்றுவதும் தொடரும்.  இலட்சத்தில் ஒருவர்க்கு கோடம்பாக்கதேவதை அருள் பாலிக்கலாம். மிச்சமுள்ள 99999பேர்கள் எங்கே போனார்கள் என்னவானார்கள் யாருக்குத் தெரியும்? நாம் தெரிந்துகொள்ளவேண்டியது வழக்கம்போல வெற்றிபெற்றர்களின் கதை. மனித இனம் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் மீது அக்கறை கொள்கிறது, அவர்களின்புறக்கதை ஊடாக அகக்கதையை தேடுகிறது. வெற்றி பெற்றவனின் சஞ்சலத்தில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ச்சீ ச்சீ.. அதெப்படி என்கிறீர்களா? ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதிலுள்ள உண்மை என்ன? கம்பீரமாக அடியெடுத்துவைக்கும் ஆனைக்கு நிகழும் சறுக்கலில் நமது தோல்வியை நிவர்த்திசெய்து கொள்கிறோம். ‘தெருவில் அடிக்கடி உர் உர்ரென்று யமஹாவில் போகும் பையன், விபத்தில் செத்தானாமே’ ‘அந்த ஆள் ஆடிய ஆட்டத்துக்கு இது போதாது’. இதுபோன்ற நல்ல வாசகங்கங்களை நாமும் உதிர்த்திருப்போம்.

ஒரு நடிகை பிறக்கிறாள் (A Star is born) 1937ல் வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இத்திரைப்படத்தின் வெற்றியும் கதையிலுள்ள உண்மையும் மீண்டும் இரண்டு பதிப்புகளைக் காண உதவியிருக்கிறது. திருட்டு டிவிடியைக் கண்டிக்கும் நமது திரையுலகமும் அன்றுதொட்டு இன்றுவரை கூச்சமில்லாமல் பலகதைகளையும் திரைக்கதைகளையும் திருடியிருக்கிறது. அப்படி திருடிய கதை கோடம்பாக்கத்தில் எடுத்திருந்தால் வித்தியாசமான தமிழ்ப்படம், மும்பையில் எடுத்திருந்தால் மாறுபட்ட இந்திப்படம்.

விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தமது பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக தனது பாட்டியின் சேமிப்பைக் கைச்செலவுக்குபெற்று நடிகையாக புகழ்பெறவேண்டுமென்ற கனவுடன் ஹாலிவுட் வருகிறாள், அவ நம்பிக்கைகளுக்கிடையில்  புகழின் உச்சத்திலிருக்கும் நடிகரின் எதிர்பாராதச் சந்திப்பு வாய்க்கிறது, கனவு நனவாகிறது. அவள் வாழ்க்கைக்குத் தங்கப்பூச்சு கிடைக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பிறக்கும் காதலும் காதல்சார்ந்த தளமும் உபகதை. இந்த உபகதைதான், ஒரு நடிகை பிறக்கிறாள்’ திரைப்படத்தை உச்சத்தில் நிறுத்திய கதை. இந்த உபகதையை உயிரோட்டத்துடன் நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றிபெற்ற படத்தின் தங்க சூத்திரம் மறந்துபோகாதென்பதை நினைவூட்டும் இன்றைய திரைப்படமே The Artist என்கிற பிரெஞ்சு திரைப்படம்.

The Artist படத்தின் கதை நடக்கும் காலம் 1927 அதாவது ஊமைபட உலகத்தின் காலம். ஊமைபட உலகம் பேசும்பட உலகமாக மாற,  ஊமைபடங்களில் கொடிகட்டி பறந்த நடிகனும் நடிகையும் எப்படி கவனிப்பாரற்றுபோகிறார்கள் என்பதுதான் கதை. இக்கதையிலும் காதலும் அதன் மாய்மாலங்களும் உபகதையாக வருகிறது.  படத்தின் நாயகன் Jean Dujardin (ழான் துழார்தென்) இப்படத்தில் நடிப்புக்காக 2011ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 2011ல் வெளிவந்திருக்கும் 1927 ம் ஆண்டு ஊமைப்படவுலகைப் பற்றிய இத்திரைப்படம் கருப்பு வெள்ளை படம் என்பதோடு  முழுக்க முழுக்க ஓர் ஊமைப்படமாகவும் கொண்டுவந்திருக்கிறார்கள். இக்கதையின் இயக்குனர் A star is born திரைப்படமே தமது படத்திற்க்கு ஆதாரமென்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

——-

கராச்சி நீர்முழ்கி கப்பல் விவகாரம்

அண்மைக்காலமாக பிரெஞ்சு அரசியலில் நாறும் பிரச்சினை கராச்சி விவகாரம் என்றபெயரில் சூடுபிடித்துள்ள ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளை மையப்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான ஊழல்.

எண்பதுகளில் ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த · போ·பர்ஸ் நிறுவனம் Haubits FH77 என்கிற பீரங்கிகள் விற்பனையில் இந்திய அரசின் உடன்பாட்டினைப்பெற அவர்கள் அப்போதைய ஆளுங்கட்சிக்கு பேரத்தை சாதகத்தை முடித்தவகையில் தரகுப்பணம் அளித்ததாக குற்றசாட்டு எழுந்ததும் வழக்கம்போல இந்திய சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்வதும், குதிரை செத்ததுமல்லாமல் குழிதோண்ட பத்துபணம் என்பதுபோல எய்தவனை மறந்து இடைத் தரகராக செயல்பட்ட  ஒட்டாவியோ குட்ரோச்சியை தேடி அலைந்ததும், நாம் மறந்துபோனதும் நேற்றைய கதை. இன்று வேறுகதைகள் படிக்க இருக்கின்றன. இந்த கராச்சிகதை பிரான்சு அரசியல்வாதிகள் எழுதிய கதை. எந்த நாடாக இருந்தாலென்ன அரசியல்வாதிகளென்றிருந்தால் ஊழல் இல்லாமலா?

2002ம் ஆண்டில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் அடுத்தடுத்து  தாக்குதல்கள் நடந்தன. முதல் பலி ஓர் அமெரிக்க பத்திரிகையாளர், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழைச் சேர்ந்தவர் பெயர் டேனியல் பெர்ல்,  கொலைசெய்யப்படுகிறார். மார்ச் மாதம் 17ந்தேதி நடந்த இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்களும் மூன்று ஐரோப்பியர்களும் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 8ந்தேதி கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் பதினான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தொழிலுக்கு தொழில் நுட்பத்தை வழங்கியவர்கள் என்ற வகையில் அங்கே பணியாற்றிய பிரெஞ்சு பொறியாளர்கள், மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். தொடர்ந்து மற்றொரு தாக்குதல் இம்முறை அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் நடந்தது. இத்தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 11 பேர், காயமடைந்தவர்கள் 46பேர். இந்த அனைத்தும் தாக்குதலும் ‘கராச்சி விவகாரம்’ (Affaire Karachi) என அழைக்கப்படுகிறது. அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கண்ட தாக்குதல்  அனைத்திற்கும் தலிபான்கள் காரணமென்றது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சிலவும் தலிபான்களைக் குற்றம் சாட்டின. ஆனால் உண்மை வேறாக இருந்தது.

 

1994ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கமும், அந்நாட்டைச்சேர்ந்த DCNS கப்பல் கட்டுமான நிறுவனமும் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கடற்படை அமைப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின் படி Agosta 90B ரக அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்களை பாகிஸ்தானுக்கு கட்டித் தரவேண்டும். நமது போபர்ஸ் சாயலில் பேரங்கள் முடிந்திருந்தன. அதாவது ஆளுகின்ற பாகிஸ்தான் அரசின் (பெனாசிர் பூட்டோ) நிர்வாகிகளுக்கும் முன்னின்று பேரத்தை நடத்திய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தத் தொகையில் அதாவது பிரான்சு விற்றவகையில் பெறுகின்ற தொகையில் பத்து சதவீதத்தை தரகாக தரவேண்டும். அதாவது பொருளின் விலையை 110 என தீர்மானித்து, அதை வாங்குகிற பாகிஸ்தானியரிடம் 110யும் வசூலித்து 10ஐ கையூட்டாக பாகிஸ்தான் நிர்வாகிகளிடம் திருப்பித் தரவேண்டும். இந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் பேரத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்பில் ஒரு பேரத்தை முன்வைத்தனர். அதன்படி பொருளின்விலையை 120 ஆக நிர்ணயித்து கூடுதலாக வரும் பத்து சதவீதத்தை தங்களிடத்தில் தரவேண்டுமென்றனர். பாகிஸ்தானிய அரசாங்கம் இதற்கு சம்மதித்தது அதாவது 100 பெறுமதியான பொருளை 120 கொடுத்து வாங்க சம்பதிக்கின்றனர். ஒப்பந்த திகையின் மதிப்பு 826 மில்லியன் யூரோ. அவ்வகையில் அத்தரகு தொகை மூன்றுதவணையாக செலுத்தப்பட்டது. முதல் இரண்டு தவணையாக செலுத்தப்பட்ட தரகுத் தொகையினால்  பிரச்சினைகள் எழவில்லை. பெனாஸிர் பூட்டோவுக்கும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தரகுத் தொகை செலுத்தப்பட அவர்களும் பிரெஞ்சுகாரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தரகுத் தொகையை திருப்பி அளித்தனர். ஒப்பந்தப்படி பாகிஸ்தானியருக்கு 32 மில்லியன் யூரோ பாக்கியிருந்தது. அப்போது திடீரென பிரெஞ்சு ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. 1997ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவர்களுடைய  சட்டம் இதுபோன்ற தரகுகளை பிரெஞ்சு அரசு ஏற்பதில்லை என்று முடிவுசெய்தது. விளைவு பாகிஸ்தானிய மக்களுக்கு அல்ல ஆளும்வர்க்கத்தின் ஊழல் பேர்வழிகளுக்கு 32 மில்லியன் யூரோ இல்லையென்றானது அதன் விளைவுதான் பாகிஸ்தானின் கடற்படையும் ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகளும் இணைந்து பிரான்சுநாட்டை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட தாக்குதலை நடத்தி பழியை தலிபான்கள்மீது சுமத்தியது.  தாக்குதலில் பலியானவர்களின் உறவுகள் கடந்த கால பிரெஞ்சு அரசாங்கத்தின் வலதுசாரிகள் சிலரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போதைய பிரெஞ்சு பிரதமரும் இன்றைய ஜனாதிபதியின் நண்பருமான எதுவார் பலாதூர் என்பவர் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் நின்றபோது தேர்தல் செலவுக்கு இந்த மாற்றுத் தரகுப் பணம் உதவியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்போதைய பிரான்சு அதிபர் சர்க்கோசி    எதுவார் பலாதூர் தேர்தலின்போது அவரது வலக்கரமாக இருந்து செயல்பட்டவர் என்றவகையில், அவரையும் இவ்விவகாரம் பாதித்துள்ளது. போபர்ஸ் புகழ் ராஜிவ் காந்தியும் இன்றில்லை, கராச்சி நீர்மூகிக் கப்பல் விவகாரப்புகழ் பெனாசீரும் இன்றில்லை.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s