கதையல்ல வரலாறு1-4

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

ஹெஸ், ஹௌஸ்ஷோபெர் சந்திப்பு நடந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. 1941ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஹெஸ் தமது பாதுகாவலர் கேப்டன் கர்லைன் பின்ஷ்(Karlheinz Pintsch)ஐ அழைத்துக்கொண்டு ஆக்ஸ்பூர்க்கிலிருந்த சிறிய விமான தளமொன்றிற்கு வந்தார். அங்கு மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் என்ற பெயரில் யுத்த விமான தயாரிப்பு நிறுவனமொன்று இருந்தது. நிறுவனத்தின் முதலாளி விலி மெஸ்ஸெர்ஸ்மிஷ்ட்டும் ஹெஸ்ஸ¤ம் முதல் உலகப்போரில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்ற வகையில் இருவரும் நெருங்கிய சகாக்கள். அவ்வப்போது நண்பரிடம் இரவல் கேட்டு அவர்களுடைய மெஸ்ஸெர்ஸ்ஷ்மிட் யுத்த விமானத்தில் ஆக்ஸ்பூர்க் எல்லைப் பகுதிகளில் வானில் பறப்பது வழக்கம். கேட்பவர்களிடம், பறப்பது தம்மை உற்சாகப்படுத்திக்கொள்ள உதவுகிறதென்று கூறிவந்தார்.

அப்போதைய அதிநவீன யுத்த விமானமாகக் கருதப்பட்ட ME110 ரகத்தை ஜெர்மன் விமானப்படையில் சேர்த்துக்கொண்டபிறகு முதன்முதலாக அதனை ஓட்டிப்பார்க்க அனுமதிக்கப்பட்டவர்களில் ஹெஸ்ஸ¤ம் ஒருவர். ME110 நட்பு நாடுகளின் படைகளுக்கு கடும் சேதத்தை விளைவிக்கும் நம்பகமான யுத்த விமானமென்று பெயரெடுத்திருந்தது. ஆனால் விமானத்தின் எரிசக்தி அதிகபடியான நிலப்பரப்பில் தாக்குதலை நடத்த போதுமானதல்ல என்று போர் வல்லுனர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. அத்தகைய விமர்சனத்தை வைத்தவர்களில் ‘ஹெஸ்’ ஸ¤ம் ஒருவர். ஹெஸ்ஸின் வற்புறுத்தலுக்கிணங்க பின்னர் மற்றொரு எரியெண்ணெய் கொள்கலத்தை ME110 ரக விமானத்தில் சேர்த்தார்கள்.

அன்றைக்கு பிற்பகல் விமான தளத்திற்கு வந்த ஹெஸ் வழக்கத்திற்கு மாறாக கையுடன் துண்மணிகள் வைக்கிற சிறிய பெட்டியொன்றை கொண்டுவந்திருந்தார். தமது பாதுகாவலரிடம்: இண்றைக்கு வெகு நேரம் வானில் பறக்க இருக்கிறேன், எனக் கூறியிருக்கிறார். இரண்டு கடித உறைகளையும் பாதுகாவலரிடம் கொடுத்துள்ளார். இரண்டிலொன்று  பாதுகாவலருக்கும், மற்றொன்று ·ப்யூரெருக்கென்றும் எழுதப்பட்டிருந்தது. அடுத்த நான்கு மணிநேரத்திற்குள் தாம் திரும்பவில்லையெனில் பாதுகாவலர் தனக்கென்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துபார்க்கலாமெனவும், மற்றதை இட்லரிடம் கைப்பட ஒப்படைக்கவேண்டுமெனவும் சொல்லப்பட்டது. பாதுகாவலரை அறிவுறுத்தியபிறகு எஞ்சின் உறுமியது, ஓட்டுனர் இடத்தில் ஹெஸ் அமர்ந்தார், சாவியை ஒருமுறை சுழட்டித் திருப்பினார், அடுத்த சில நொடிகளில் யுத்த விமானம் வானில் பாய்ந்தது. பாதுகாவலர் பின்ஷ் விமானம் வானில் மறையும்வரை காத்திருந்தார். ஒவ்வொரு மணிநேரமும் ஒரு யுகம்போல கழிந்தது. பிற்பகல் கரைந்து, பொழுதும் சாய்ந்தது. ஹெஸ் கூறியிருந்த நான்கு மணி நேர கெடுவும் முடிந்தது. ஹெஸ் திரும்பவில்லை. பாதுகாவலர் இரண்டு கடிதங்களும் பத்திரமாக இருக்கின்றனவா என சட்டை பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டார். தம்முடைய கடித்தத்தைப் பிரித்து பார்ப்பதென தீர்மானித்தார். படித்தவர் திகைத்தார். அதிற் சொல்லப்பட்டிருந்த தகவல்களின் தன்மை அப்படி. அவ்வளவும் கற்பனையாக இருக்குமோவென்ற சந்தேகம். “தாம் இங்கிலாந்து திசைக்காக பயணப்பட்டிருப்பதாகவும், பயனத்தின் நோக்கம் இருநாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதெனவும்”, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடிதத்தின் வரிக¨ளை சரியாகக்கூட பாதுகாவலர் உள்வாங்கிகொள்ளவில்லை. மீண்டும் வானில் எஞ்சின் உறுமல். பின்ஷ் தலையை உயர்த்தி பார்த்தார். ME110போல தெரிந்தது, ஆமாம் அதுதான். ஹெஸ் தானா அல்லது வேறு யாரேனுமா என யோசிப்பதற்குள், விமானம் தரை இறங்கியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே காக்பிட் கடவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தவர் ஹெஸ்.

பாதுகாவலர் கையில் திறந்திருந்த கடித உறையை பார்த்த மாத்திரத்தில் என்ன நடந்திருக்குமென ஹெஸ்ஸால் ஊகிக்க முடிந்தது.தமது இல்லத்திற்கு பாதுகாவலரை அழைத்துச் சென்று தமது திட்டத்தையும் அதற்கான காரணங்களையும் பொறுமையாக விவரித்தார். பின்னாளில் ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது ஹாமில்டன் பிரபுவிடமும், கிர்க் பட்ரிக்கிடமும் என்ன கூறினாரோ அதை அப்படியே வரிபிசகாமல் தமது பாதுகாவலரிடம் தெரிவித்தார். ஜெர்மனுக்கு ஆபத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தல்ல, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து என்பது அவர் கூறிய தகவலின் சாரம். இங்கிலாந்திடம் சமாதானமாக போவதால் ஜெர்மனுக்கு என்னென்ன நன்மைகளென்று பட்டியலிட்டார். பிரிட்டிஷாரிடம் சுமுகமான உறவைக் பேணமுடியுமெனில் ரஷ்யாவின் விஷயத்தில் அதன் விருப்பம்போல ஜெர்மன் நடந்துகொள்ள இயலுமென்றார். திட்டத்தை ஆங்கிலேயர்களிடம் தெரிவிக்க விரும்புவதாகவும், அவர்கள் ஏற்கும்பட்சத்தில் ஆங்கிலேயர் விடயத்தில் ஜெர்மன் தலையிடாதென்ற உத்தரவாதத்தை அவர்களுக்குத் தரப்போவதாகவும் பாதுகாவலரிடம் விளக்கினார்.

தமது எஜமானரின் விளக்கத்தை நம்புவதா கூடாதாவென்று பின்ஷ்க்கு குழப்பம். தலை நிமிர்ந்து ஹெஸ்ஸின் முகத்தைப் பார்த்தார். இம் மனிதர் தாய் நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவரல்ல, அவர் எதைசெய்தாலும் அது நாட்டின் நன்மைகருதிய நடவடிக்கையாக மட்டுமே இருக்கு என மனமார நம்புகிறார். ஹெஸ்ஸின் திட்டம் குறித்து எவரிடமும் வாய் திறப்பதில்லையெனவும் பாதுகாவலர் அன்றைக்கு ஹெஸ்ஸிடம் உறுதியளித்ததாகக் கூறுகிறார்கள்.

தமது பாதுகாவலர் துணையுடன் ஹெஸ் பார்த்த ஒத்திகை நடந்து முடிந்து நான்கு மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் வழக்கம்போல பின்ஷ் அலுவலகப்பணியில் முழ்கியிருந்தபோது தொலைபேசி அலறியிருக்கிறது. போனை கையிலெடுத்தார், மறுமுனையில் இவரது எஜமானின் குரல்:

– என்னய்யா தயாராக இருக்கிறாயா? திட்டத்தை இன்றைக்குத்தான் செயல்படுத்தபோகிறேன்- என்கிறார் ஹெஸ்.

அன்றைய தினம் சனிக்கிழமை. தேதியை சரியாக சொல்லவேண்டுமெனில் மே 10, 1941.  கிடைத்த கட்டளைப்படி தனது எஜமானரைத்தேடி ஆக்ஸ்பூர்க் விமானதளத்திற்கு பதட்டத்துடன் வந்தார். விமானக்கூடம் மூடியிருந்தது. அன்றைக்கு விடுமுறை. பூட்டை உடைத்து கதவைத் திறந்தார்கள். யுத்த விமானத்தை  இருவருமாக வெளியில் கொண்டுவந்தனர். தமது பாதுகாவலரிடம் ஹெஸ் இம்முறை இடலருக்கென்று வேறொரு கடிதத்தைக் கொடுத்தார். காக்பிட்டுக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் வானில் பறந்தார்.

சென்றமுறைபோலவே ஹெஸ் வானில் மறைந்து நான்கு மணிநேரம் கடந்திருந்தது. ஹெஸ்ஸின் பாதுகாவலருக்கு இம்முறை ஹெஸ் திரும்பமாட்டாரென்று புத்தியில் உறைத்திருக்கவேண்டும், அவசரகதியில் விமான கூடத்திலிருந்து புறப்பட்டார். தாமதிக்காமல் நடந்த சம்பவத்தை ·ப்யூரெருக்குத் தெரிவித்துவிடவேண்டும், இல்லையென்றால் தமக்கு ஆபத்து என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைப்போல இரவுமுழுக்க பயணம் செய்து இட்லரின் அலுவலகம் இருக்கிற பெர்ஷ்ட்காடென்(Berchtesgaden) வந்து சேர்ந்தார்.

இனி ஹெஸ் விவகாரத்திற்கு வருவோம்.

ஹெஸ் பிரிட்டிஷ் எல்லைக்குள் பிரவேசித்து, அவர்களுடைய கடற்பகுதியில் பறந்தபோது பொழுது சாயவில்லை. பகல் நேரத்தில் ஆங்கிலேயரின் விமான எதிர்ப்பு பீரங்கியிடமிருந்து தப்புவதென்பது அத்தனை சுலபமல்ல என்பதை ஹெஸ் நன்றாகவே அறிவார். அப்படியொரு ஆபத்தை எதற்காக விலைகொடுத்து வாங்குவானேன் என்று அவர் யோசித்திருக்கவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு இரவு பிறக்கட்டுமென வடக்குக் கடலுக்கு மேலாகச் சுற்றித் திரிந்தார். பிறகு   அதற்கான நேரமும் வந்தது வடக்கு கடற்கரையை நோக்கி விமானத்தைச் செலுத்த தயாரானபோது தமக்குமேலே திடீரென்று மேகங்கள் திரள்வதை எதிர்பார்க்வில்லை. இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தவர் இருநூறுமீட்டருக்கும்  தாழ்வாகப் பறக்கவேண்டியிருந்தது.  அதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயரின் ஸ்பிட்பையர் யுத்த விமானமொன்று இவரது விமானத்தை கண்டுவிட்டது. ME 110 விமானத்தின் பின்னே ஸ்பிட்பயர். இரண்டு விமானங்களில் ME110 ஆற்றலை பலரும் அறிவார்கள். “எனது விமானத்தை ஆங்கிலேயர் விமானம் பின்தொடருகிறது என்றறிந்தமாத்திரத்தில் அதிவேகமாக எனது விமானத்தைச் செலுத்தி இடைவெளியைக்கூட்ட முடிந்ததென்று பின்னர் ஹெஸ் தெரிவித்தார். ஹெஸ் தொடக்கத்தில் ஹாமில்டன் பிரபுவின் மாளிகைக்கு எதிரிலிருந்த பூங்காவில் தரையிறங்க முடிவுசெய்திருந்தார். பின்னர் அம்முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பாதுகாப்பாதென யோசித்திருக்ககூடும் நிலா ஒளியில் கிராமமொன்று தெரிந்தது. அக்கிராமம் Eaglesham ஆக இருக்கலாமென்பது அவருடைய ஊகம். இவரது கணிப்பு சரியென்றால் ஹாமில்டன் பிரபுவின் மாளிகையான Dungavel Housem அங்கிருந்து பக்கம் தான் எனமுடிவுக்கு வந்த மறுகணம், எஞ்சினை நிறுத்திவிட்டு பாராசூட்டில் கீழே குதிக்க நினைத்தார். அப்படி அவர் குதிக்கும்போது ME 110 விமானம் தரையில் மோதி வெடித்து சிதறும், ஆங்கிலேயர்கள் தங்கள் ME 110 ரக விமானத்தின் தயாரிப்பு ரகசியத்தை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமையாதென்று நம்பவும் செய்தார்.

நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன?  ME 110 விமானத்தை அநாயசமாக கையாண்டிருக்கிறார். மிகதுல்லியமாக கனக்கிட்டு விமானத்தை செலுத்தும் ஆற்றலும் அவருக்கிருந்தது. ஆனால் அவசர காலத்தில் பார சூட்டை எப்படி கையாளுவதென்ற அனுபவம் அவருக்கு இல்லை, அதுபோன்ற சந்தர்ப்பமும் இதற்குமுன்பு அவருக்கு ஏற்படபில்லை. முதந் முறையாக மட்டுமல்ல, கடைசிமுறையாக குதித்ததும் அன்றுதான்.

(தொடரும்)

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s