ஆயிரம்பேர் வலியுடன் வந்தால் ஐந்துபேரைகூட அனுமதிப்பதில்லை என்கிற விதிமுறையைக் கறாராகப் பின்பற்றுகிறவர்கள் மேற்குலக பதிப்பகங்கள். எழுத்தாளர்கள் நல்ல செய்திவராதா என காத்திருக்கிறார்கள். அனுமதித்து சுகப்பிரசவம் என்ற செய்திக்கிடைக்கிறது. தாயும் சேயும் நலமென்கிறார்கள். அடுத்து வேறொருவர் வருகிறார். இவருக்கு விமர்சகர் என்று பெயர். பிறந்த குழந்தையின் எடை, உயரம், ஆரோக்கியம் ஆகியவற்றைப்பற்றிய பாரபட்சமற்ற குறிப்பை எழுதுகிறார். இவர்கள் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை. ஆரோக்கியமான குழந்தை மரிப்பதில்லை. தாய்க்கும் சந்தோஷம். ஒரு புதிய எழுத்தாளனுக்கு இலக்கிய இதழ்தரும் ஆதரவென்பது அவனது முதல் நூலுக்கு விமர்சகர்கள் தரும் மதிப்பெண்களை பொறுத்தது. இந்த புண்ணியவன்கள் கொண்டாடவும் தெரிந்தவர்கள், காலில்போட்டு மிதிக்கவும் அறிந்தவர்கள். ஒரு புதிய எழுத்தாளனை, எந்த வரிசையில் நிறுத்தலாம், அவன் யாரைபோல எழுதுகிறான், எதிர்கால இலக்கிய உலகில் அவன் பங்கு என்ன? என்றெல்லாம் தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பிரான்சை பொறுத்தவரை 99 விழுக்காடு விமர்சகர்கள் எழுத்தாளர்களல்ல. எனவே சார்பற்ற அவர்களின் மதிப்பீடுகளுக்கு மரியாதை இருக்கின்றன.
புதிய புத்தகங்கள் இங்கே செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. பிரசுர வாய்ப்பிற்கும் உழைத்து; இலக்கிய விமர்சகர்களின் நன்மதிப்பை பெற்றாகவேண்டிய நெருக்கடிக்கும் புதியவர்கள் உள்ளாவதால் இவ்விளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. தனித்தன்மையை நிறுவவேண்டியிருக்கிறது. இன்றைய பிரசினைகளை மையப்படுத்திய எழுத்துகளாகவே அவை இருக்குமென்ற எதிர்பார்ப்பும் வாசகர்களிடமிருக்கிறது. இணையதளம், சமூக உறவுகளில் வலைத்தலங்களின் பங்கு, பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகளில் எதேச்சதிகாரங்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்றவை உலகம் இதுவரை காணாத அளவில் அண்மையில் நடந்துள்ளன. எனவே புதிய இலக்கியங்கள் இக்கருப்பொருளை மையமாகக்கொண்டே எழுதப்பட்டிருக்குமென பரவலாக நம்பப்பட்டது. இதுபோன்றதொரு பொதுவான எதிர்பார்ப்பை நிராகரித்து, தீவிர படைப்பென்பது பொதுநீரோட்டத்தோடு கலப்பதல்ல என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்துவதுபோல இந்நாவல்கள் உள்ளன. குடும்பம், இயற்கை, ஒப்பீட்டளவில் தமது மூதாதைகளிடமிருந்து நினைவுகள், அடையாளங்கள் ஆகியவற்றில் அவர்களுக்குள்ள விலகல் இடைவெளி ஆகியவற்றைபற்றி இப்புதியதலைமுறை படைப்புகள் பேசுகின்றன. சுயகதைகள், தன்முனைப்புடன் கூடிய பயணம் ஆகியவற்றை எழுதுபொருளாகக்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் நாவல்களின் பெயரைமட்டுமே நவீனப்படுத்திவந்த மூத்த பிரெஞ்சு எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.
La faute de goût (இரசனையில் நேர்ந்த தவறு) என்ற நாவல், பிரெஞ்சில் அண்மையில் வந்துள்ள ஒரு புனைவு. ஆசிரியர் ஓர் இளம் பெண்படைப்பாளி, முதல் நாவலுங்கூட. பெயர் கரோலின் லுனுவார். புனைவின் நாயகி மத்தில்து. அவள் மேட்டுக்குடியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர். தற்கால இளம்பெண்ணுக்குரிய தேவைகளுக்கும் கடமைகளுக்கும் நேரத்தை ஒதுக்கியதுபோக அவ்வப்போது எப்படி போக்குவதென்று தெரியாமல் சில பொழுதுகளும் அவருக்குக் கிடைக்கின்றன – (எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருமுறை கொஞ்சம் நேரம் கிடைத்தது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்திற்காக மெழுகுத்திரியை ஏற்றினேன், என்றார்) இப்பெண்ணுக்கும் அதுபோல நேரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகஸ்டுமாதம் 15ந்தேதி கிடைத்த வாரவிடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதென்று வந்திருக்கிறாள். செல்வாக்கான அக்குடும்பத்தைச்சேர்ந்த பலரும் கூடியிருந்த அம்மாளிகை குடுபத்தின் மூத்த உறுப்பினரான பாட்டி மற்றும் அவளுடைய சகோதரிகளின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இடைக்கால பிரபுத்துவ மன நிலையில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்வை நகர்த்தும் குடும்பம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஏவலாட்கள், பணிப்பெண்கள், பணியாட்கள், தோட்டக்காரர், சமையல்காரரென ஒரு பட்டாளமே வீட்டிலிருக்கிறது.
மாளிகையின் நீச்சல் குளத்தில் குளிக்க வருகிறவளுக்கு புத்தனுக்கு உதித்ததுபோல ஞானோதயம். புத்தியில் ஏதோ உரைக்கின்றது. உலக நடப்புகளில் அக்கறையின்றிருக்கும் தனது வாழ்க்கை குறித்து கேள்வி எழுகிறது. ஓய்வு கிடைக்கிறபொழுது இவளுக்கும் எதையாவது எதிர்த்துபோராடலாம், கலகக்குரல் கொடுக்கலாம் என்ற எண்ணம் துளிர்விடுகிறது. ஆனால் எதற்கு எதிராக பேராடுவதென்ற கேள்வி எழுகிறபோது பதிலின்றி தடுமாறுகிறாள். இன்றைய இளைஞர் அல்லது இளம்பெண்களின் போராட்டம் எதற்காக இருக்கக்கூடும்? உறங்கும் நம் உணர்வுகளை உசுப்பக்கூடிய பிரச்சினைகள் எவை? தனது குடும்பம் தனது சுற்றமென்று செல்லரித்த குறியீடுகளிலன்றி பிறவற்றில் நாட்டமின்றியிருக்கும் பெண்ணொருத்தியின் இலட்சியத்தை வளர்த்தெடுப்பது எப்படி? ‘பதினான்காம் லூயிகாலத்து ஒரு ஜோடி நாற்காலிகள் (அவற்றை சொந்தமாக்கிக்கொள்ள நடத்திய யுத்தங்கள்), ஒரு நிலைக்கடிகாராம், இளமைமாறாதிருக்கும் ஒரு நிழற்படமென்று உருமாறிப்போன பாட்டியின் வழித்தடத்தில் இவளும் பயணிக்கபோகிறாளா? என்ற கேள்விகள் அடுக்கடுக்காக வருகின்றன. ஆசிரியர் குறிக்கோளின்றியும் உயிர்ப்பின்றியும் வாழ்க்கையை நகர்த்தும் சக வயதினரை அங்கதத்துடன் விளாசுகிறார். முதல் நூலென்றாலும் சுருங்கக்கூறி விளங்கவைப்பதென்கிற முடிவை எடுத்திருக்கவேண்டும். கதைக்களன், மாளிகையை விட்டு வெளியிவரவில்லை, எதைச்சொல்லவேண்டுமோ அதைசொல்லியிருக்கிறார். பொதுவாக முதல் நாவல் எழுதுகிறபோது படித்தனைத்தையும் சொல்லிவிடத் துடிப்போம். சொந்தத் தொழிலுக்காக சட்டம்பயின்றதை தவிர நாவலில் ஆசிரியரின் வேறு ஞானங்களை சந்தியில் நிறுத்தும் முயற்சிகளில்லை. எண்ணி நூறே நூறுபக்கங்கள். போதுமா? போதும். பக்கங்களில் என்ன இருக்கின்றது. சொல்வதில் இருக்கிறது சொல்லப்படும் பொருளில் இருக்கிறது. ஓடும் நீரில் துரும்புபோல மீள முடியாத தனதுவாழ்க்கைதேர்வுகுறித்த மத்தில்து பெண்ணின் கவலையை நாமும் புரிந்துகொள்கிறோம் அவள் கையாலாதத்தனத்தைக்குறித்து எரிச்சல் அடையவோ பரிதாபப் படவோ எந்தத் தகுதியும் நமக்கில்லையென்றுதான் சொல்லவேண்டும்.
இப்புனைகதைக்கு பிரான்சின் தெற்கு பகுதியில் செல்வந்தர்கள் வாழும் குடியிருப்பொன்றில் நிகழ்ந்த சம்பவமும் அதை தினசரியில் வாசிக்க நேர்ந்ததும் காரணமென ஒரு பேட்டியில் நாவலாசிரியர் தெரிவிக்கிறார். அச்செய்தியின் படி காலனிவாசியொருவர் குடியிருந்தவர்களுக்குப் பொதுவான நீச்சல் குளத்தில், காவல் பெண்மணியொருத்தியை குளிக்க அனுமதிக்கப்போக பிற காலனிவாசிகள் அதை எதிர்த்து உடனடியாக செயற்குழுவைக்கூட்டி கண்டிக்கிறார்கள். இச்சம்பவம் தன்னிடத்தில் ஏற்படுத்திய ஏன்? எதற்காக? என்ற கேள்விகளுக்கான விடை தேடலே நாவலுக்கு மூலமென்பது அவர் தரும் விளக்கம்.
பொதுவாக நடுத்தர ஏழைவர்க்கத்தைசேர்ந்த குடும்பங்களில் இளம்வயதினருக்குள்ள இடம் செல்வந்தர் குடும்பங்களில் இருப்பதில்லை. அபரிதமான செல்வமும் அதைச் சம்பாதித்த அல்லது கட்டிக்காத்த வகைமையும் பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளையாக பெண்ணாக இருப்பதே உகந்தவாழ்க்கை என்ற அடிமைச்சிந்தனைக்கு செல்வந்தர் பிள்ளைகள் தங்களை ஒப்படைத்துவிடுகிறார்கள். இத்தகைய ஒரு குடும்பத்தின் தலைமுறையாக, கதாநாயகியை நிறுத்தி கலகக்குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.
இறந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ஒன்றை எடுத்துச்செல்வதில் நேர்கிற உணர்வு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்படி? இணங்கிப்போவதா முரண்படுவதா? மனிதம் எட்டிய உயர்வு இணங்கியதால் நேர்ந்ததல்ல முரண்களால் உற்றது. மரபு -நவீனம்; பழமை -புதுமை இவற்றினை எதிரெதிர் நிலையிலிருந்து ஆதரிப்பதைத் தவிர்த்து, வெற்றி பெற்றவனாக உலாவர இவை இரண்டிற்குமிடையிலுள்ள தடத்தின் மேடுபள்ளங்களை அறிந்து நடக்கத்தெரிந்த சாதுர்யம் மட்டுமே போதுமா? இவற்றையெல்லாம் இயற்கை எழுதிய விதியென சொல்லிவிட்டு உண்பது, உறங்குவதென்று காலத்தைத் தள்ளலாமா? என்பதுபோன்ற வினாக்களுக்கு செக்குமாட்டின் வாழ்க்கையை பற்றிய உண்மைகளை கதைப்படுத்தி ஆசிரியர் விடைதேடுகிறார்.
——————————————————