உலக அழகித் தேர்வும் ஓர் உண்மையும்..
அமெரிக்க தூதரகத்தின் சென்னைக்கிளையின் தூதுவர், பல்கலைகழகமொன்றில் ஆற்றிய உரையில், சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு ஒரு மாணவியாக இந்தியா வந்திருந்தபோது தமது பயண அனுபவமொன்றை கோடிட்டுக் காட்டுகிறார். இந்தியர்களின் சினேகித மனப்பாங்கையும் பரிவையும் கண்டு வியந்தோதியவர் உரையின் எச்சமாக நெடிய இரயில்பயணத்தின் இறுதியில் தம்முடைய தோல் தமிழர்களைப்போல அழுக்காகவும் கருப்பாகவும் மாறிவிட்டதென குறிப்பிடுகிறார். மயிர் நீக்கின் வாழா கவரிமான் அன்னார் இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் உடனே நமக்கு கோபம் பிறந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனை அழுக்கானவர் கருப்பானவர்களென்று தவறியுங்கூட உச்சரிப்பதென்றால் அப்பெண்மணிக்கு வாய்க்கொழுப்பின்றி வேறில்லை. வெள்ளையர்களின் இத்தகு மனப்போக்கு கண்டனத்திகுரியதென்பதில் மாற்று கருத்தில்லை.
எனினும் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. சில தெளிவுகள் தேவைப்படுகின்றன. அப்பெண்மணியை கண்டிக்கிறபோது தமிழர்கள் அழுக்கானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா கறுப்பானவர்கள் என்றதற்காக கண்டிக்கிறோமா அல்லது இரண்டிற்குமேவா என்று யாரேனும் தெளிவு படுத்தினால் நல்லது. நாம் அழுக்கானவர்கள் எனக் கூறப்படுவதை எதிர்க்கலாம். ஆனால் நம்மை கறுப்பர்களென்று கூறுவதை எதற்காக கண்டிக்கவேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. நமது நிறம் கறுப்புத்தானே இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? அமெரிக்க கறுப்பரினத்து மக்கள் தாங்கள் கறுப்பர்கள் என்பதைப் பெருமையாக கம்பீரத்தோடு சொல்லிக்கொள்கிறார்கள்.
நம்முடைய சான்றிதழ்களிலும் பிற அத்தாட்சிகளிலும் தோலின் நிறம் கறுப்பெனக் குறிப்பிடப்பட்டால் கூடாதென்போமா? எப்படி சொல்லலாமென்று கொடி பிடிப்போமா? அதையொரு அமெரிக்கர் கூறக்கூடாதெனில் இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினரை அமெரிக்கனென்றோ இத்தாலியனென்றோ, இங்கிலீஷ்காரனென்றோ சொல்லாமல் ‘வெள்ளையர்’ என நாம் உச்சரிக்கும்போது அதுவும்தானே நிறவெறியாகும். கறுப்பு நிறத்தின்மீது நம்மிடத்திலுள்ள துவேஷத்திற்கு யாரிடம் நியாயம் கேட்பது. பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் பாரதிராஜாவும், திராவிடத்தை குஷ்புவிடம் அடகுவைத்திருக்கும் நமது இனமானமும் எதைச்சொல்கிறது?. சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா?
உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?
——————
பிரெஞ்சு சினிமா: குற்றமிழைத்ததாக நம்பப்படுபவர்களும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்படுவர்களும்
அண்மையில் திரைக்கு வந்துள்ள ஒரு பிரெஞ்சு படம் L’Affaire Outreau – Présumé coupable – ஓர் உண்மைக் கதை. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் காவல் துறையும் நீதித்துறையும் விளைவித்த பெருஞ்சேதத்தை திரைப்படத் துறையின் அத்தனை உன்னதங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு நீதித்துறையின் அவலங்களை இப்படத்தில் தோலுறுத்தி காட்டியிருக்கிறார்கள். அலென் மரேசோ நீதித்துறையில் அமீனா வாக பணிபுரிந்தவர். 2001ம் ஆண்டு அவர் செய்யாத ஒரு குற்றத்துக்காக 23 மாதங்கள் சிறையில் இருந்தார். அவர் குடும்பவாழ்க்கை சிதறுகிறது. மனைவி பிரிந்துபோகிறாள். அவரது பிள்ளைகள் தங்கள் உறவைத் துண்டித்துகொள்கின்றனர். அவரது அலவலகம் மூடப்படுகின்றது. அதனைப்பின்னர் ஒரு நூலாக கொண்டுவருகிறார். அதுவே L’Affaire Outreau.
நடந்தது இதுதான். ஊத்ரோ என்ற ஊரைசேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்கள் பெற்றோர்களின் நண்பர்களில் சிலர் தங்களிடத்தில் பாலியியல் குற்றங்களை இழைத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் சிறுவர்களின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறார்கள் அதன் விளைவாக பலர் கைது செய்யப்படுகின்றனர். சிறுவர் மீது இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளை பிரெஞ்சு சட்டம் மிகக் கடுமையாகத் தண்டிக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுவர்களின் பெற்றோர்களும் அடங்குவர். குற்றத்தின் தீவிரம் கருதி கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையின் அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது. வழக்கு விசார¨ணைக்கு வருவதற்கு முன்பே மூன்றாண்டுகாலம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சிறையிலேயே இறக்கிறார். 2004ம் ஆண்டு முதல் தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றம் சாட்டப்பட்ட பதினேழுபேரில் பதின்மூன்றுபேர் தொடக்கத்திலிருந்தே தாங்கள் நிரபராதிகள் என்றார்கள். அரசு வழக்கறிஞர் தவறுதலாக சிலரை வழக்கில் சேர்த்தாகச்சொல்லி தங்களை நிரபராதிகள் என்று சொல்லிவந்த அப்பதின்மூன்றுபேரில் ஏழுபேரை விடுதலைசெய்தார். நான்குபேர்கள், ஏற்கனவே சிறையிலிருந்த காலத்தை அவர்களுடைய தண்டனைக்காலமாகக் கணக்கிற்கொண்டு விடுதலை செய்யப்பட்டனர். இரண்டுபேர் தொடர்ந்து சிறைதண்டனை அனுபவிக்க நேர்ந்து பின்னர் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டிக்கப்பட்ட மேற்கண்ட ஆறுபேரும் மேல் முறையீடு செய்கிறார்கள்.
தொடக்கத்திலிருந்து தங்கள் குற்றத்தை ஒப்புகொண்டுவந்த நான்குபேருக்கும் அவர்களுடைய குற்றங்களின் அடிப்படையில் 15 – 20 -5- 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படுகிறது. தங்களை நிரபராதிகளென வாதிட்டுவந்த ஆறுபேரின் மேல் முறையீடு பாரீஸ் நீதிமன்றத்தில் நடபெற்றது. முதல் நாளே ஓர் உண்மை தெரியவந்தது. குற்ற்வாளிகளென தீர்மானிக்கபட்டுத் தொடர்ந்து தண்டனைபெற்ற மேற்கண்ட நான்குபேரில் ஒரு பெண்மணி தாம் பொய்யாக மற்ற்வர்களை இவ்வழக்கில் சேர்த்தாக சொல்ல, நிரபராதிகளென ஆரம்பம் முதல் கூறிவந்தவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள் எனக் கருதப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர்
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரின் குற்றங்கள் நிரூபணம் ஆகாதவரை அவர் குற்றவாளியல்ல. ஆனால் நடைமுறை உண்மை என்பது வேறு. காவல்துறையும், செய்தித் தாள்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு சமூகத்தின் முன்னால் ஒருவனை குற்றவாளியாக நிறுத்தமுடியும்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்மணியென தினசரியில் செய்தியாக ஒருவர் இடம்பெறுகிறாரென்று வைத்துக்கொள்வோம் அவர் மீதுள்ள குற்றங்கள் நீதிமன்றத்தில் உரிய சாட்சியங்களைக்கொண்டு நிரூபிக்கப்படாதவரை சட்டத்தின் முன் அவர் குற்றவாளியல்ல, அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. நீதிபதி தண்டிப்பதற்கு முன்பே ஆளாளுக்கு ஒரு கொலைவாளினை வைத்துக்கொண்டு அவளை தேடி அலைகிறார்கள். பெண்மணியின் படத்தைபோட்டு கீழே பெயரை எழுதி – அருகிலேயே ஒரு நடிகையின் திருமண செய்தி இருக்கலாம்- நீங்கள் அதையும் இதையும் சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாதுபாருங்கள் அதற்காக. அவள் ஏழையாகவோ, நடுத்தரகுடும்பத்தை சேர்ந்தவளாகவோ இருக்கும் தகுதியொன்று போதும். செய்தித்தாளில் ஆரம்பித்து வரிசையாக பலரும் ஈவிரக்கமின்றி தண்டிக்க தயார். அப்பெண்மணியின் பின்னே ஒரு குடும்பம், பிள்ளைகள், வாழ்க்கை, உறவுகள் இருக்கிறதென்ற பிரக்ஞையின்றி அவளை கால்வேறு கைவேறாக கிழித்துப்போடுவார்கள்.
செல்வாக்கு உடைவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் -குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டாலுங்கூட – அவனைத் தண்டிப்பதற்கு பலமுறை யோசிக்கிற சட்டம் சராசரி மனிதனென்றால் அவசரம் காட்டுகிறது. குற்றவாளிகளை தாராளமாக தண்டிக்கட்டும் அல்லது ஏதோ காரணங்களால் விடுதலை கூட செய்யட்டும் ஆனால் நிரபராதி ஒருவனை தண்டிக்கிறபோது புலம்ப வேண்டியிருக்கிறது.
இந்திய எழுத்துகளுக்கான இடம்?
பாரீஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற நவீனகலை அருங்காட்சியகமான Centre Pompidou வில் ‘Paris-Bombay-Delhi’ என்ற பொருளுளில் கடந்த ஆறுமாதகாலமாக கண்காட்சியொன்று நடபெற்று வருகிறது. பிரான்சு மற்றும் இந்தியாவைச்சேர்ந்த நவீனக் கலைஞர்களின் கலைபடைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி செப்டம்பர் 19 அன்று முடிவுற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் எழுத்தாளர்கள் “மொழிபெயர்ப்பாளர்களின் பார்வையில் இந்தியா” என்கிற இரண்டுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பம் வாய்க்கிறபோது கலந்துகொள்வதுண்டு. ஆனால் இம்முறை கூடுதலான ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு செல்ல காரணமிருந்தது. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு இங்கே “Echanges et Partages Franco-Indiens என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினேன். என்னோடு சில பிரெஞ்சு நண்பர்கள் அமைப்பில் வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் முக்கிய நோக்கங்களென்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலத்திலல்லாத பிற இந்திய மொழி படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுவர முயற்சி எடுப்பது, இந்திய எழுத்தாளர்களையும் பிரெஞ்சு எழுத்தாளர்களையும் வருடத்திற்கொரு முறை இந்தியாவிலோ அல்லது பிரான்சிலோ சந்திக்க ஏற்பாடு செய்வது. எனது இக் கனவை நண்பர் இந்திரனிடம் தெரிவித்தபோது மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார், பல அரிய யோசனைகளை வழங்கினார், வழங்கியும் வருகிறார். எனவே பாரீஸில் செப்டம்பர் 16 -17 ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையில் இந்தியா என்ற கருத்தரங்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக எனது அக்கறையைப் பெற்றிருந்தது. தவிர நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் திருமதி Dominique Vitalyos என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் பெயரிருந்தது. நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பதில் கூடுதல் அக்கறையுடனும், மலையாளத்திருந்தும் மொழிபெயர்ப்பு செய்துவருகிறார். ஆக அவரை சந்திக்கவும் வாய்ப்பு என்று கலந்துகொண்டேன். கேரளத்திலிருந்து வைக்கம் முகம்மது பஷீருடன் இணைந்து அவர் மொழிபெயத்திருந்த பஷீரின் படைப்பினைத் தவிர்த்து அவர் அறிமுகப்படுத்தியுள்ள கேரள எழுத்துகள் ஆங்கிலத்திலிருந்தே வந்திருக்கவேண்டும். ஆக அப்பெண்மணி இந்திய திறமைசாலிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்துக்கொண்டார். இந்தத் திறமைசாலிகளுக்கு அவரது பார்வையில் என்னபொருளென்று விளங்கிக்கொள்ளவும் ஆவல் இருந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர்களென்று நான்குபேரை அறிமுகப்படுத்தினார்கள்: Manil suri, Sudhir Kakar, Preeta Samarasan et Kunal Basu. இவர்கள் நால்வரையும் அறிமுகப்படுத்திய Dominique Vitalyos இந்தியாவில் பன்முகத் தன்மையை மேற்கண்ட எழுத்தாளர்கள் வெளிபடுத்துவதாகவும், இன்றைய இந்தியாவின் படைப்புலகை இவர்களூடாக விளங்கிக்கொள்ள முடியுமெனக் கூறி புளகாங்கிதமடைந்தார். இந் நால்வரின் படைப்புகளை இயலுமெனில் வாசித்துப்பாருங்கள். அவற்றின் தகுதரம் குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. இதில் பிரீதா சமரசன் என்ற பெண் மலேசியாவைசேர்ந்தவர். தானொரு தமிழ்ப்பெண் என்பதைத் தவிர்த்து இந்தியாவுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஒத்துக்கொண்டார். மற்ற மூவரும் பிரீதா சமரசன் போலவே தாங்கள் தாய்மொழியை வீட்டில் கூட உபயோகிப்பதில்லையென்றும் இந்தியாவுக்குபோவது கூட அரிதாக நிகழ்கிறதென்றும் ஆனால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்துவருவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் கூற்றுப்படி இந்தியாவில் பிறந்ததைத் தவிர்த்து அவர்கள் மொழி அளவிலும் பண்பாட்டளவிலும் விலகி வெகு நாளாகின்றது என்பது புரிந்தது? மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தங்கள் படைப்புகள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டத்தில்லை எனவும் ஆனால் ஆங்கிலத்தில் தங்கள் படைப்புகள் கிடைக்கிறபோது இந்தியவாசகனுக்கு பிறமொழிகளில் அவற்றைக் கொண்டுசெல்வது அவசியமில்லையெனவும் வாதிட்டார்கள்.
கேள்வி நேரத்தின்போது நான் அவர்களிடத்தில் கேட்டது இதுதான். வந்திருந்த பார்வையாளர்கள் இதுபோன்ற கேள்வியை நான் தவிர்த்திருக்கலாமென்று ‘உச்சு’கொட்டினார்கள். சிலர் எழுந்துவந்தபோது உங்கள் கேள்வி நியாயமானதென்றார்கள்.
” உங்கள் எழுத்தை நான் மதிக்கிறேன். என்னுடைய கேள்வி உங்கள் படைப்பு பற்றியதல்ல மாறாக நீங்களே உங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களென்று தெரிவித்திருந்திருந்தீர்கள். அப்படி இருக்கையில் உங்களை வெளிவாடுவாழ் இந்தியர்களை பிரதிநிதித்துவ படுத்தும் எழுத்தாளர்கள் (Indian diaspora writers) என்று சொல்வதுதானே நியாயம்? இந்திய எழுத்தாளர்களென்று (Indian writers) எப்படி அழைத்துக்கொள்ளலாம் எனக்கேட்டேன், தொடர்ந்து அப்படிச்சொல்லிக்கொள்வதில் உங்களுக்கு கூச்சமிருப்பதில்லையா? ” – என்பது எனது கேள்வி.
அவர்கள் பதில் என்னவாக இருக்குமென்று உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். உண்மைதான் அது அவர்கள் குற்றமல்ல. வந்திருந்த எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும் பிரதேசமொழிகளில் எங்களைபோல எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என பெருந்தன்மையுடன் (?) கூறினார். மற்றவர்கள் ஒரு படி மேலே போய் நல்ல எழுத்தாளர்கள் பிரதேசமொழிகளிலும் உண்டு என்றார். ஒருவர் இது பிரதேச மொழி எழுத்தாளர்களின் பொறாமைக் குரல் என்றார், பிறகு நக்கலாக நீங்களேகூட ஓர் இயக்கத்தைப் பிரான்சில் தொடங்கலாமென்றார். அவர்களுக்குள்ள உரிமையை ஏற்றுகொண்டாலுங்கூட, பிரதேசமொழிகளில் எழுதுகின்ற இந்திய எழுத்தாளர்களை அழைத்திருக்கவேண்டாமா? என்பதென் கேள்வி. இன்னமும் காலனிய சிந்தனையிலிருந்து விடுபடாமல் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிற இந்த மேட்டுக்குடிமக்களின் எழுத்துமட்டுமே இந்திய எழுத்தாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரம் செய்யப்படுகிறதென்பது எனக்குள்ள வருத்தம். அவர்களைக்குற்றம் சொல்வதில் நியாயமில்லை. இந்திய அரசாங்கமும், இலக்கிய மைப்புகளும் என்னசெய்துகொண்டிருக்கின்றன என்ற கேள்விகள் இருக்கின்றன. உடனுக்குடன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகள் வருகின்றன, ஆனால் அது ஒருவழிப்பாதையாக இருப்பதுதான் சோகம்.
மறு நாள் மொழி பெயர்ப்பென்ற தளத்தில் நடந்த விவாதத்தையும் நவீன தமிழிலக்கியத்தினை பிறமொழிகளிற் கொண்டுசெல்ல முனைகிறபோது எதிர்கொள்ளவிருக்கிற சிக்கல்களையும் அடுத்த இதழில் தெரிவிக்கிறேன்.
———-