வளவு
திரு இராம.கி. எனும் திரு இராமகிருஷ்ணன் என்பவரது வலைத்தலம் ‘வளவு’. இராயர் காப்பி கிளப்பென்ற யாஹ¤ குழுமத்தில் பல தமிழ் ஆர்வலர்களின் பெயர்கள் அறிமுகமாயின. அவற்றுள் திரு இராம.கி பெயருமொன்று. இராயர் காப்பி கிளப் குறித்து தனியாக எழுதவேண்டும். திரு. இராம.கி. பொறியாளர். தமிழில் தீராத காதல்கொண்டு விளம்பரங்களின்றி ஓயாமல் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழ் வேர்சொற்களை அலசி ஆய்ந்து முன்நிறுத்துபவர். போகிறபோக்கில் தமிழ் என்ற சொல்லேகூட தமிழில்லை என சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் இடைக்கிடை வருவதுண்டு. நான் எழுதியிருக்கிற இந்த பத்து வரிகளில் எத்தனை சொற்கள் தமிழல்லாத சொற்கள் இருக்கிறதோ? அவர்தான் அறிவார். எனக்கு இருக்கின்ற தமிழையே குறையின்றி கொண்டு சேர்த்தால் போதும். எனினும் அவரது வலைத்தலம் நான் விரும்பி படிக்கும் தளம், காரணம் பல நேரங்களில் நல்ல தமிழ்ச் சொற்களின்றி அவதிப்படுகிறபோதேல்லாம் அவரது வலைத்தலம்தான் எனக்கு உதவுகிறது, தவிர அவரது தமிழ் தேசியமும் பாசாங்கற்றது, கட்டுரைகள் அவ்வளவும் போற்றிபாதுகாக்கப்படவேண்டியவை. கடந்த மூன்றுமாதமாக அவர் மாணிக்கவாசகர் காலம் என்ற தொடரை எழுதிவருகிறார். பொறுமையோடு படித்தால், தெரிந்துகொள்ள வழக்கம்போல செறிவான தகவல்கள்.
வலைத்தள முகவரி: http://valavu.blogspot.com/2011/09/1.html
தேவமைந்தன்
நண்பர் தேவமைந்தன் அவருடைய பெயரிலேயே உள்ள வலைத்தலத்தில், திண்ணையில் ஏற்கனவே வெளிவந்த அவரது கட்டுரை ஒன்றை மறுபதிவு செய்திருக்கிறார். திண்ணையில் வாசித்திருக்க சந்தர்ப்பம் இல்லாவர்கள், அமையாதவர்கள் வாசிக்கவேண்டிய ஒன்று. மறுபடியும் வாசித்தாலும் தவறில்லை. ரேங்கே (Ringuet -Philippe Panneton) என்ற கனடா எழுத்தாளரின் ‘முப்பது ஏக்கர்’ புதினம் குறித்தது கட்டுரை. நாவலாசிரியர், நாவல், கருப்பொருள், நாவலின் நாயகன் அவன் எழுச்சி, வீழ்ச்சி எனகட்டுரை ஆழமாக படைப்பட்டிருக்கிறது. தேவமைந்தன் எதை எழுதினாலுலும் மிக கவனமாக சிரத்தை எடுத்துக்கொண்டு எழுதுவார். கிட்டதட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்புவந்த நாவலை தேடிப்பிடித்து நண்பர் பாராட்டுகிறபோது, படிக்கின்ற எவருக்கும் அப்படைப்பை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும் என்கிற உந்துதலைத் தரக்கூடும். வெகு நாட்களுக்கு திண்ணையில் படித்தது என்றாலும் தேவமைந்தன் எழுத்துக்காகவும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டுரை. மறக்காமல் சந்தர்ப்பம் அமைந்தால் ‘முப்பது ஏக்கர்களையும்’ தேடிப்படியுங்கள்.
தேவமைந்தன் வலைப்பூ: http://httpdevamaindhan.blogspot.com/:
அ.ராமசாமி
திரு அ.ராமசாமி வலைப்பூவில் இம்முறை ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு நூலைப்பற்றி மதிப்புரை நோக்கில் ஒரு கட்டுரை. அ.ரமசாமியின் எழுத்துக்களுக்கு எப்போதும் என்னிடம் மரியாதை உண்டு. கட்டுரையில் ஆசிரியர் வணிக எழுத்து இலக்கிய எழுத்தென கட்டமைக்கபட்ட இருபிரிவினருக்கிடையே நடந்த சகோதரச்சண்டையை கோடிட்டு காட்டிவிட்டு கட்டுரை ஆசிரியர் இவ்விரண்டிற்கும் பொதுவானவராக அடையாளப்படுத்திக்கொண்ட ஹெப்சிபாதாசன் படைப்புகள் பற்றிபேசுகிறார். புத்தம்வீடு என்ற நாவலும் அதன் தொடர்ச்சியாக வெளிவந்த பிற இரண்டு நாவல்களைக்குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஹெப்சிபா எப்படி தமது பாத்திரங்களூடாக பிற பழமைவாதிடகளிடமிருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதை வழக்கம்போல கறாரான தமது வாக்கியங்களின் துணைகொண்டு நிறுவ முயன்றிருக்கிறார். வாசிக்க வேண்டிய பதிவு
அ.ராமசாமி: http://ramasamywritings.blogspot.com/2011/10/blog-post_11.html#more
அசதா
இவரது வலைத்தலத்தில் யுவான் ருல்போவின் எரியும் சமவெளி அவலத்துயரின் அழகியல் என்றுள்ள – அண்மையில் இப்பதிவாளர் நாகர்கோவில் நிகழ்வின்றில் நிகழ்த்திய உரையின் – மறுபதிவுவை நண்பர்கள் வாசிக்க வேண்டும்: தென் அமெரிக்க எழுத்தாளர் யுவான் ருல்·போவின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை குறித்தது. சில கதைகளை ஆழமாகவும், சிலவற்றை போகிறபோக்கில் ஒன்றிரண்டு வரிகளிலும் சொல்லியிருக்கிறார். யுவான் ருல்போவின் கதைகள் எப்படியிருந்தாலும் இந்த நண்பரின் எழுத்துக்கள் அந்த எழுத்தாளருக்கு கூடுதல் மதிப்பீட்டத் தந்திருக்கின்றன என்பது வெளிப்படை.