‘J’aime la nuit avec passion’ ‘இரவு’ சிறுகதையில் கி மாப்பசான் -வாக்கியம். இரவை ஆராதிக்க இத்தனை பொருத்தமாக சொற்கள் அமையாது. இரவுவேளைகளில் ஆணோ பெண்ணோ மற்றவருக்காக காத்திருக்கின்ற தவிப்பும் மெல்லியப் பதற்றமும் விநோதமான உடல்மொழி. மாப்பசான் போலவே ஆர்வத்துடன் இரவைவெகுவாக நேசித்திருக்கிறேன், காத்திருந்திருக்கிறேன். திருமண வீட்டிற்குப் போன இடத்தில் இரண்டுநாள் பழக்கத்தில் ஒரு பெண்ணிடம் வைத்த கெஞ்சுதலுக்கு, அவள் தலையாட்டலையும், சமிக்கைகளையும் புரிந்துகொண்டதற்கு இலட்சணமாய் எனது சகோதரி வீட்டு, மோட்டர் ஷெட்டினைத் திறந்துவைத்துக்கொண்டு விடிய விடியகாத்திருந்ததும், நீர் இறைக்க அதிகாலையில், எந்திரத்தை இயக்கவந்த ஆசாமி கதவை திறந்துக்கிடப்பதைப் பார்த்து, நீர் இறைக்கும் எந்திரத்தை திருட வந்தவனென்று தப்பாக எண்ணி சத்தம்போட அவனைத் தடுத்து சமாதனப்படுத்த வேண்டியிருந்தது. பெண்ணிடம் என்ன நடந்ததென காலையில் விசாரித்தால், ‘உங்களை வெகு நேரம் தேடிபார்த்துட்டு நீங்கள் இல்லைண்ணு தெரிஞ்சதும் கொண்டுபோயிட்டேன், என்றாள். என்ன சொல்கிறாளென யோசித்துக்கொண்டிருக்க, உள்ளே சென்றவள் திரும்பவும் வந்தாள், பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகக்கூறி ‘ஒரு லட்டையும் இரண்டு மைசூர்பாகையும்’ கொண்டுவந்தாள். இனிப்பைக்கொடுத்து என்னை ஏளனம் செய்த இரவை இன்னமும் மறக்கவில்லை. மிக பொல்லாத இரவு அது.
இதே அனுபவம் முத்தொள்ளாயிர அப்பாவிக்கும் நேர்ந்திருக்கிறது இரவில் வருவதாகச் சொல்லியிருக்கிறான் தலைவன். அவ்வாறே பாவிப்பயல் வந்துமிருக்கிறான். வீட்டு நாய் குரைத்ததோ, அடைகாத்த கோழி இறக்கைகட்டி பறந்ததோ, ஏதோ நடந்தது. தலைவியும், தலைவி என்றொருத்தி உண்டென்றால் தோழியும் வேண்டுமில்லையா அவளுமாக அவன் வருகையை உணர மறந்திருக்கிறார்கள். மறுநாள் வந்த தலைவன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததைக்கூறி வருந்தியிருக்கிறான். தோழியும், “இங்கே பாரு எங்க தரப்பிலும் அதுதான் நடந்தது. ஊரே உறங்கியிருந்தது, உனக்காக இரவெல்லாம் காத்திருந்தோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஏழில் குன்றத்தின் மேல் உள்ள நொச்சியின் அழகு மிகுந்த மெல்லிய கிளைகள் உதிர்க்கும் பூக்கள் விழும் ஓசையையும் நன்றாகக் கேட்டு உறங்காமலிருந்தோமே, நீதான் வரவில்லை வீணாக எங்கள்மேலே பழிசொல்லாதே”, என்றாளாம். “கொன் ஊர்துஞ்சினும் யாம் துஞ் சலமே” என ஆரம்பிக்கிறது அக்குறுந்தொகை பாடல். பகற்பொழுதுகளில் வாய்கிழிய சாதிபேசும் நாட்டாமைகள், பின்னிரவில் சாதிமறந்த உடலின் எதார்த்தம் சார்ந்த தேவைக்கு பனியில் நனைவார்கள், அவை சாதி இரண்டொழிய வேறில்லையென சாதிக்கும் இரவுகள்.
பேய் பிசாசுகளுக்கிடையிலும் இளைஞர்களுக்கென்றால் மோகினிப் பிசாசுவை இரவு சிபாரிசு செய்கிறது, ஆக இரவு துர்த்தேவதைகளுக்கானதல்ல என்பது வாலிபம் தந்த அனுபவம். இளமைகாலத்து கிராமத்து இரவு ஒரு தேனடைபோல மனதிற் ஒட்டிக்கிடக்கிறது. திருமணக் காலங்களில் மணப்பெண் ஊர்வலமாகட்டும், திருவிழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவரும் நேரமாகட்டும், இருள் வெருட்டும் ஆகாச வாணமும்; முன்னூரும் தீப்பந்தமும், பெட்ரோமாக்ஸ் ஒளி வில்லைகளும்; உறக்கத்தை கலைக்கும் தவிலின் டமடமாவும் நாதசுவரத்தின் மல்லாரியும் பகலுக்கு வாய்க்காத ஒன்று. தீபாரதனைக்காக சுவாமி நிற்கிறபோது தீப்பந்த ஒளியில் கன்னமும் கண்களும் மினுங்க தெருவாசலில் இரவு பூத்ததுபோல நிற்கிற பெண்கள் தேவதைகள்! நாதஸ்வரம் வாசிக்கும் உள்ளூர் இளைஞன் எங்கள் விருப்பத்தை ‘ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே’ என பூர்த்திசெய்வான். இளமை வேகத்தில் எழுதிப் பகிர்ந்துகொண்ட வரிகள் இன்றும் நினைவில் அசைபோடுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கழியும்/ உறக்கம் பதுக்கி, உறவில் பதுங்கி இரவை விலக்கி எழுந்து வருவாய்/ ஒவ்வோர் அடியிலும் உனக்குள் அச்சம்/ காரணம் அறிவேன்/ நீ கால்களைப் பதிப்பது என் கண்களில் அல்லவா?… ஓ! எத்தனை ரம்மியமான இரவுகள் அவை!
எமிலி ஜோலாவின் ‘காதல் இரவொன்றிர்க்காக'(Pour une nuit d’amour) என்ற நெடுங்கதை இரவின் மௌனத்தையும், தாபத்தையும், ஏமாற்றத்தையும், இருட்டோடுகூடிய காதல் வெக்கையுடன் விவரிக்கிறது.
P**** என்றொரு சிற்றூர், ஊருக்குள் நுழைய ஷான்கிளேர் என்ற சிற்றோடைமீது அமைந்த பாலத்தைக் கடந்துசெல்லவேண்டும். உள்ளூர் முதிய ஆசாமிகளுக்குப் பாலமே கதைபேசுமிடம். பாலத்தைத் தாண்டினால் ‘போ-சொலெய்’ வீதி. வீதியின் முடிவில், மிகப்பெரிய சதுக்கம். உறக்கத்திலிருப்பதுபோல குடியிருப்புகள். தோட்டக்கலைஞர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில், மிகப்பெரிய அறையில் நமது கதைநாயகன் ஜூலியன் வாடகைக்குக் குடியிருக்கிறான் அல்லது அடைந்துகிடக்கிறான். வயது 25. பெற்றோரை இளம்வயதிலேயே பறிகொடுத்திருந்த ஜூலியனுக்கு அஞ்சல் அலுவலகத்தில் ஊழியம். ஊதியம் சுமார் என்கிறபோதும், சிக்கன பேர்வழி. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளுமில்லை கனவுகளுமில்லை. நெடு நெடுவென்று நல்ல உயரம், எலும்புகள் துருத்திக்கொண்டு பார்க்க முரடன்போல தெரிவான் ஆனால் ரொம்ப ரொம்ப சாது. கதாநாயக இலட்சனங்களின்றி இருப்பது அவனுக்குப் பெருங்குறை. பெண்கள் தன்னைச் சீந்தமாட்டார்களென்று நம்பியதால் அவர்களைக் கண்டு ஓடி ஒளிவான். அவனது தினசரி அலுவல்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாற்றமின்றி, சீராக நடந்துவந்தன. காலையில் அலுவலகம், முதல் நாள் முடிக்காதவேலையை மறுநாள் தொடரவேண்டும், பிறகு மதிய உணவென்று ஒரு துண்டு ரொட்டி, மீண்டும் அலுவலகம், மாலை வீடு, இரவு உணவு, பிறகு தூக்கம். என்றைக்காகவது கொஞ்சம் மகிழ்ச்சியை விரும்பினால் இரவு உணவுக்குப் பிறகு காலாரப் ‘போ-சொலெய்’ வீதியில் நடப்பான், பாலம் வரை செல்வான், கட்டை சுவரில் உட்காருவான். நீருக்கு மேலே கால்களை தொங்கவிட்டபடி ஓடும் நீரின் ஆழகை ரசிப்பான். ஒர் ஊமையன் சினேகிதமுமுண்டு. விடுமுறை நாட்களில் இருவரும் கைகோர்த்துகொண்டு உரையாடலின்றி நடந்து அலுத்து திரும்புவதுண்டு. பிரியமாக வளர்த்த நாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது வெகுவாக அவனைப் பாதித்திருந்தது, அதுமுதல் வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்க்கும் ஆசைகளில்லை. ஜூலியனுக்கு அவனது அறையே சொர்க்கம். இவ்வுலகத்தில் அவனை ஆதரித்து அடைக்கலம்கொடுக்கிற ஒரே ஒரு போக்கிடம் அறையென்பதால் அதனை மிகவும் நேசித்தான். வாசிப்பதில் ஆர்வமில்லை, புத்தகங்களுக்கு நடமுறைவாழ்வைப்பற்றிய ஞானம் குறைவென்று நினைத்தான். எழுத்திலும் ஆர்வமில்லைஅலுவலகத்தில் எழுதுவதே போதுமானதாக இருந்தது. இப்படிப்பட்டவனுக்கு புல்லாங்குழல் வாசிப்பதில் மட்டும் மிகுந்த ஆர்வம். ஒருமுறை பழம்பொருட்கள் விற்கிற கடையில் புல்லாங்குழலொன்றைக் கண்டான், கையில் பணமிருந்தும் கடைக்குள் நுழையவோ, பேரம் பேசவோ வெட்கம். ஒரு நாள் துணிச்சலுடன் கடையில் நுழைந்து எவர்கண்ணிலும் படாமல் எப்படியோ அறைக்கும் புல்லாங்குழலைக் கொண்டுவந்தாயிற்று. அறைக்குள் நுழைந்ததும், கதவு சன்னல்களென்று அனைத்தையும் இறுக மூடினான், இருந்தும் வாசிப்பைக்கேட்டுப் பிறர் கேலி செய்யக்கூடுமென அஞ்சி முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்தான். மெல்ல மெல்ல பழகிக் கொண்டான். எல்லாமே எளிமையான, பழமையான இசைக்குறிப்புகள். நூலகமொன்றில் கிடைத்த இசை நூல்களும் அவனுக்கு உதவின. ஓரளவு வாசிக்கவந்ததும் சன்னற் கதவுகளை திறந்துவைத்து இசைத்தான். அப்போதுகூட ஊரெல்லாம் அடங்கியபிறகு, இரவில், வீட்டில் விளக்கைக்கூட அணைத்துவிட்டு இசைப்பது அவன் வழக்கம். சன்னல் அருகே வானத்தை பார்த்தவண்ணம் அமர்ந்துகொண்டு பொதுவாக வாசிப்பான். வீதியில் நடந்துபோகிறவர்கள் தலையை உயர்த்திமேலே பார்ப்பார்கள், அலைஅலையாய், இவ்வளவு இனிமையாய் இசை எங்கிருந்து மிதந்து வருகிறதென யோசிப்பார்கள், பிறகு குழப்பத்துடன் நடப்பார்கள். அண்டை அயலார்கள், இவனது வாசிப்பை தொல்லையாக நினைப்பார்களோ என்ற அச்சமும் இவனுக்குண்டு. அண்டை மனிதர்களில் ஒருவர் பத்திரம் எழுதுபவர், மற்றொருவர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இருவருமே ஒன்பது மணிக்கெல்லாம், உறங்கப்போய்விடுவார்களென்பதால், அவர்களிடத்தில் இவனுக்கு பயமில்லை. மாறாக, நேரெதிரே இருந்த பங்களா வீட்டுக்காரர்களை நினைத்தால்தான் அச்சம். மர்சான் என்றபெயர்கொண்ட பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த குடும்பமது. பங்களாவின் மாடியில் பத்து சன்னல்களிருந்தன, பத்து சன்னல்களும் திறப்பதும் மூடுவதும் ஒரே நேரத்தில் நடக்கும். சன்னல்களின் பின்னே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? ஒன்றையும் அறியாதபடி தடித்த சன்னல் திரைகள். பங்களா குடும்பத்தினரைப் பற்றியும், அங்கு வந்துபோகும் விருந்தினர்களைப் பற்றியும், அவர்கள் செல்வநிலை குறித்தும் ஊர்முழுக்க வதந்திகள் உலாவின. பங்களாவுக்குள் நுழைந்து அதன் மர்மங்களை விளங்கிக்கொள்ளும் ஆவல் இவனுக்கும் நிறைய இருந்தது. இவனுடைய குடியிருப்பு திசைக்காயிருந்த பெரிய நுழைவாயில் எந்நேரமும் மூடியபடியே இருந்தது. ஓர் ஆத்மாகூட அவ்வழியை உபயோகித்து இவன் பார்த்ததில்லை. மற்றொரு சந்தொன்றில் இன்னொரு வழியிருந்தது, அநேகமாக அதுதான் உபயோகத்திலிருக்கவேண்டும். மாளிகையைபார்க்க ஏதோ கவனிப்பாரற்ற கல்லரைபோல அவனுக்குத் தோற்றம்தந்தது. அநேகதடவை, உறங்கச்செல்வதற்கு முன்னால் மெழுகுத்திரியை அணைத்துவிட்டு சன்னலருகில் நின்று எதிரிலிருக்கும் மாளிகையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதாவென பார்ப்பான், மாளிகையை அவதானித்தபடி குழலூதவும் செய்வான்.
ஒரு ஞாயிற்றுகிழமை தேவாலயத்தின் எதிரே, அஞ்சலக சக ஊழியனொருவன் ஜூலியனுக்கு முதிய தம்பதிகளிருவரை அறிமுகப்படுத்தி இவன் வீட்டெதிரே குடியிருக்கிற மாளிகைவாசிகள், என்றான். அவர்கள் இருவருக்கும் மகளொருத்தி இருப்பதாகவும், விடுதியொன்றில் தங்கி படிப்பதாகவும், பெயர் தெரெஸா மர்சென் என்றும், பத்திர எழுத்தாளரிடம் உதவியாளராக இருக்கிற குள்ளன் கொலொம்பெல் அவளுக்கு வளர்ப்புச்சகோதரனென்றும் அடுத்தடுத்து ஜூலியனுக்குக் கிடைத்தக் கூடுதல் தகவல்கள். குள்ளன் கொலொம்பெலுக்கும் ஜூலியனுக்கும் ஆகாது. ஜூலியனை கொலம்பெல் ஒருமுறை கேலி செய்யப்போக இருவரும் கட்டிபுரண்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அது நிகழ்ந்தது. அன்றிரவு மிகவும் வெக்கையாக இருந்தது, நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானம். வழக்கம்போல விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் சன்னலருகே அமர்ந்தபடி புல்லாங்குழல் வாசித்தான், கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்தது. எதிரிலிருந்த மாளிகையின் சன்னலொன்று திறக்க இருட்டுக்கிடையில் குபீரென்று ஒளிவெள்ளம், இமைக்க மறந்தவனாய் ஜூலியன் பார்த்துக்கொண்டிருந்தான். இளம்பெண்ணொருத்தி நடந்துவந்தாள். கைகளை ஊன்றிக்கொண்டு பார்த்தாள். அவள் முகத்தை தனித்து அடையாளப்படுத்த இயலவில்லை, தலைமயிர் கற்றையாய் சரிந்து கழுத்தில் இறங்கி பிரிந்திருந்தது. அவள் கேட்பது இவன் காதில் விழுந்தது, ‘ஏதோ இசையென்று நினைக்கிறேன், உனக்குக் கேட்கிறதா? தனது வளர்ப்புத் தாயிடம் கேட்கிறாள். ‘அநேகமாக குயிலாக இருக்கும்!’ வளர்ப்புத்தாய் பிரான்சுவாவின் பதில். பங்களாவைச்சுற்றி அடர்த்தியாக மரங்களிருந்ததால் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும். வளர்ப்புத்தாய் இளம்பெண்ணிடம், “இராக்கால விலங்குகளிடத்தில் கவனமாக இருக்கவேண்டும்”, எனவும் எச்சரிக்கிறாள். தொடர்ந்து திறந்த சன்னல் மூடப்படுகிறது. அருகிலிருந்த மரங்களில் குயிலிருக்கவேண்டுமென நம்பும் பெண்ணின் மனது இவனுக்குள் சந்தோஷத்தை விதைக்கிறது.
மறுநாள் அஞ்சல் அலுவலகத்தில் மர்சான் குடுபத்தில் இளம்பெண் தெரெஸா விடுதியிலிருந்து திரும்பியிருந்ததைப் பற்றிய பேச்சு. ஜூலியன் சன்னல் வழியாக அவள் கூந்தலையும், கழுத்தையும் காண நேர்ந்ததை வாய் திறக்கவில்லை. அத்தரிசனம் அவனை பாதித்திருந்தது, அவளைத் திரும்பவும் பார்க்கநினைத்தான். அவன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இப்போது அவனது அறை கூட அந்நியமாகத் தோன்றியது. அவனுக்குப் பொதுவாகவே பெண்களென்றால் வெறுப்பு, ஆண்களைக் காட்டிலும் பெண்களிடத்திலேதான் அவனைக்கண்டதும் கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. வெகு நேர யோசனைக்குப்பிறகு எதிர்வீட்டுப்பெண்ணை அவன் வெறுப்பதாகப்பட்டது. ஒவ்வொரு நாளும் அறைவாழ்க்கை பதுங்கு வாழ்க்கைபோல கழிந்தது, இதற்கிடையில் சன்னல் திறக்காதாவென ஏங்கவும் ஆரம்பித்தான். இரவு பத்துமணி அளவில் எப்போதாவாது சன்னற் கதவுக்கூடாக அறையில் ஆள் நடமாட்டம் இருப்பதன் அறிகுறியாக வெளிச்சம் தெரியும், பின்னற் சட்டென்று அதுவும் அணைந்துவிடும். தனது அறையிலிருந்துகொண்டே கரிய இருளின் ஊடே சன்னலை அவதானிப்பான். ஒவ்வொரு நாளும் தவறாமல் வேவு பார்த்தான். சன்னல், வெளிச்சம், காலடிகள், இளம்பெண்ணின் முகமென சதா கனவுகளில் மிதந்தான். ஒரு நாள் காலை சன்னலை திறந்தபொழுது எதிர்வீட்டு பெண் நிற்கிறாள், வெகு நேரம் சிலைபோல நிற்கிறாள், யோசிப்பதுபோல தெரிந்தது, முகம் வெளுத்திருந்தது, கண்களில் ஒளியில்லை, உதடுகள் நன்கு சிவந்து, வீங்கியிருப்பதுபோல பட்டது. ஏதோ துயரத்தில் இருக்கிறாள். அவளுடைய கவலையை இவனுடையதாக கற்பனை செய்துகொண்டு வருந்தினான்.
பிரச்சினை என்னவெனில், இதுவரை எதிர்வீட்டு பெண் இவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவனை ஒருபொருட்டாகவே அவள் கருதவில்லை. அப்படித்தான் இருக்கவேண்டும், அவனை பார்த்தவுடன் பலரும் என்ன நினைப்பார்களென அவனுக்குத் தெரியாதா என்ன? எனினும் இவனுக்கு அவள் மீது தீரா காதல் இருந்தது. அவள் வேண்டும், இவனது சரீரம் அதற்கு உதவாது. இசை, இசை மட்டுமே அதைசெய்ய முடியும். எனவே நிலவில்லா இரவுகளை தேர்வுசெய்து நீண்ட நேரம் வழக்கம்போல மெழுகுத் திரியைக்கூட அணைத்துவிட்டு இருளில் திளைத்தபடி அவளுக்காக குழலிசைத்தான். ஒருநாள் இரவு மீண்டும் வெண்ணிற உடையில் சன்னல் அருகே தேவதைபோல வந்து நிற்கிறாள். இசையைகேட்டே வந்திருக்கவேண்டும், புரிந்ததும் வாசிப்பதை நிறுத்திவிட்டு, இருட்டுபோதாதென்று சன்னல் திரையில் தன்னை முற்றாக மறைத்துக்கொண்டான்.
“பிரான்சுவாஸ்! நீ நினைப்பதுபோல எந்தப் பறவையின் குரலுமல்ல!”
“உண்மைதான் வெளியே யாரோ இசைக்கலைஞன் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்”
“சன்னற் கதவைத் சாத்து, மழைவரும்போலவிருக்கிறது
எதிர்வீட்டில் பேசுவது, இவனுக்கு நன்றாகக் கேட்கிறது. அன்றிலிருந்து மிகவும் அக்கறையெடுத்துக்கொண்டு வாசிக்கலானான். ஒவ்வொரு இரவும் இவனது அறையின் சன்னற்கதவுகளை விரிய திறந்துவைத்து இருளில் பதுங்கியபடி குழலை சளைக்காமல் ஊதினான். ஒருநாள் காலை ஆறுமணி. தனது புல்லாங்குழலை உறைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் எதிர்வீட்டு சன்னல் திடீரென்று திறக்கிறது. காலையில் இதுநாள்வரை எட்டு மணிக்கு முன்னால் எதிர்வீட்டு சன்னல் திறக்கப் பார்த்ததில்லை. ஜூலியனுக்கு அதிசயமாக இருந்தது. தெரெஸா குளித்துமுடித்த ஆடையில் இருந்தாள், வழக்கம்போல கூந்தல் கழுத்தை சுற்றிக்கொண்டிருந்து. ஜூலியன் கற்சிலையாக சமைந்து போனான். கைவசமிருந்த புல்லாங்குழலை அவள் பார்த்துவிடக்கூடாதென நினைத்து மறைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அவளுடையை பார்வையும் இவன்மீது ஒருமுகபடுத்தப்பட்டிருந்தது, ஒன்றிரண்டு நொடிகளில் முடிவுக்குவந்ததுபோல முதுகைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். இவனுக்குப் பெருத்த ஏமாற்றம், தமது தோற்றம் அவளுக்குக் கசந்திருக்கவேண்டுமென நினைத்தான். கால்கள் சோர்ந்துபோயின. நிலை தடுமாறி சோபாவில் விழுந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு கலங்கினான். காதல் முடிந்ததென்று நினைத்தான். அதற்குப் பிறகு பலமுறை சன்னலருகில் கையூன்றிகொண்டு அவள் நின்றபோதெல்லாம் இவனை வேண்டுமென்றே அலட்சியபடுத்துவதுபோலிருந்தது. ஒரு நாள் ” என்ன வாசிக்கிறான், தப்பு தப்பாய் கேட்கக் கொடுமையாக இருக்கிறது” என அவள் கூறுவது காதில் விழுந்தது. இனி புல்லாங்குழலைத் தொடுவதில்லையென ஜூலியன் தீர்மானித்தான்
ஒரு வருடம் கழிந்திருந்தது. தெரெஸாவுக்காகவே தனதுயிர் தரித்திருக்கிறதென்பதாக ஜூலியன் நினைத்தான். அவனுடைய இதயம் குளிரில் உறைந்துகிடந்த மாளிகையைச் சுற்றிவந்தது. திறந்திருக்கும் சன்னலை தரிசிக்க நேர்வதே அவனுடைய உயிருக்கு ஆதாரமாக இருந்தது. காலையில் சன்னற்கதவும் திறக்கப்படும்போதும், முன்னிரவில் சாத்தும்போதும் அவளைச் சந்திப்பது அவனது தினசரிகளின் முக்கிய தருணங்கள். இருமுறை பெண்ணின் திசைக்காய் முத்தங்களை காற்றில் அனுப்பிவைக்கவும் துணிந்தான். அவள் பார்வையை அகற்றவில்லை, சன்னலைவிட்டு அகலவுமில்லை. அன்றிலிருந்து தொடர்ந்து அந்திசாய்ந்ததும் சன்னலைத் திறப்பதும், பின்னர் மூடுவதுமாக கழிந்தது. பிறகு வெகுநாட்கள் சன்னற்கதவுகள் திறக்கப்படவில்லை. கார்காலத்தில் ஒருநாள் எதிர் வீட்டு சன்னல் திடீரென்று திறக்க இவனுக்கு உயிர் வந்தது. கண்ணீர்விட்டான். அன்று காலை நல்ல மழை பெய்திருந்தது, பங்களாவுக்கு அருகிருலிருந்த செஸ்ட்நட் மரங்கள் இலைகளை உதிர்த்திருந்ததில் ஒருவித பிணவாடை எங்கு வீசியது. எப்படியும் எதிரிலிருக்கும் மாளிகையின் சன்னற் கதவுகள் திறக்குமென ஜூலியன் காத்திருந்தான். கதவுகள் திறந்துகொண்டன. தெரெஸா நிற்கிறாள், கண்கள் வழக்கத்தைக்காட்டிலும் பெரிதாக தெரிந்தன, தலைமயிர் கட்டவிழ்ந்து கழுத்தில் கிடந்தது. சன்னலை ஒட்டி நேராக நின்றாள். அவளுடையை பத்துவிரல்களையும் வாய்மீதுவைத்து ஜூலியன் திசைக்கு முத்தத்தை அனுப்பினாள். இவன் மயக்கமடையாதகுறை, இவன் தனது மார்பினை வலதுகையைக் குவித்துத் தொட்டுக்காட்டி, முத்தம் எனக்கா என்றுகேட்டான். இம்முறை சன்னல் விளிம்பில் மடிந்து சாய்ந்தவள் மீண்டும் பத்துவிரல்களையும் உதட்டில் தொட்டு உறுதிபடுத்துகிறாள். அவளனுப்பிய செய்தி அவனை எட்டிவிட்டதென்பதன் அடுத்தகட்டமாக, வாயேன் என்றாள். இவன் இறங்கிச் சென்றான். நெடுநாளாக திறக்கப்படாதப் பங்களாவின் கதவு இவனுக்காக ரகசியமாக திறக்கிறது. அவளைத் தொடர்ந்து மாடியில் தினமும் அவளை காண நேர்கிற அறைக்கு இருவருவருமாக வந்தார்கள். இவனெதிரே இதுநாள் வரை எவளுக்காக ஏங்கினானோ அவள் .
– என்னை காதலிக்கிறாய் இல்லையா?
– ம்ம்.. இவனுக்கு நா குழறுகிறது
– இப்போ என்னை உனக்கு கொடுத்தால், எனக்காக எதுவும் செய்வாயில்லையா? இவனிடத்தில் பதிலில்லை. ஆனால் அவள் தரப்பிலிருந்து ஒரே ஒரு முத்தமென்றாலும், தன்னையே இழக்க தாயாரென்ற நிலையில் அவன்.
– நல்லது எனக்காக ஒன்று செய்யவேண்டும்
இம்முறையும் அவன் பதிலின்றி இருந்தது அவளை எரிச்சலடைய செய்திருக்கவேண்டும்.
– இப்படி நின்றால் என்ன அர்த்தம். நீ எனக்காக எதையும் செய்வேனெனறு சத்தியம் பண்ணு -அவள்
– சத்தியம், சத்தியம். நீ எதை சொன்னாலும் செய்வேன்
அவள் கிடு கிடுவென்று நடந்தாள். அவள் அறையில் மெத்தையும், தலையணைகளும் சிதறிக்கிடந்தன, கட்டில் துணிகளோடு கலந்து ஒர் ஆணின் பிணம்.
” இவன் என்னுடைய காதலன், இரண்டுபேருக்குமிடையில் நடந்த விளையாட்டுச்சண்டையின் முடிவில், அவன் இறந்துட்டான். பிணத்தை நீதான் இங்கிருந்து அகற்றியாகணும். ” என்கிறாள்
இதற்குமேல் கதை அவ்வளவு முக்கியமல்ல, இருந்தாலும் இறந்திருந்த காதலன் அவளுடைய வளர்ப்பு சகோதரன் கொம்பெல் என்ற செய்தியும், இருவரும் பால்யவயதிலிருந்தே நண்பர்கள் என்பதும், இளம்பெண் தெரெஸா மனப்பிறழ்வு கொண்டவளென்பதும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள். நம்முடைய ஜூலியன் என்ன ஆனானென தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? தனது காதலுக்காக பிணத்தை சுமந்துகொண்டு ஓடையில் எறிவதற்குச் சென்றவன், பிணத்தை எறிகிறபோது இவனைச் சுற்றியிருந்த கைகளை பிரிக்க இயலாமல் உடன் விழுந்து சாகிறான். இளம்பெண் மூன்றுமாதத்திற்குப் பிறகு பிரபு ஒருவனை மணந்துகொள்கிறாள். மணக்கோலத்தில் அவளைப்பார்க்க தேவதைபோல இருந்தாளாம். ஆபத்தான இரவு தேவதை.
மனித குலம் தோன்றிய காலம் தொட்டே வாழ்வின் முழு பரிமாணத்தையும் எட்டிவிடுவதென்ற நோக்கத்தைக் பெற்றிருந்திருக்க வேண்டும். நமது புலன்களும் அறிவும் அதற்கான உபகரணங்கள். உணர்வில் வளர்ச்சி, அல்லது மோன நிலையை எட்ட மனம் நிறைவடைய வேண்டும். இரவு அவரவர் புலன்களின் தேடலுக்கொப்ப வழிநடத்துகிறது. பகல் அறிவை வளர்த்துக்கொண்டுபோக உதவலாம் அதனை நெறிபடுத்த உணர்வும் இரவும் தேவை:
சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே (தாயுமானவர்-பராபரக்கண்ணி)
பகற்பொழுது, காலத்துக்கு இணையாக ஓடிக் களைத்துபோகும் பொழுது. மூர்க்கத்துடன் நாளை முட்டித் தள்ள வேண்டியிருக்கிறது. புறவாழ்க்கையான பகல் இறைச்சலும் கூச்சலும், ஓட்டமும் நடையும், வெப்பமும் வேர்வையுமாக கழிகின்ற பொழுது. அந்திச் சாய்ந்ததும் அமைதியும் தொடர்ந்து வருகிறது, இரவென்ற பெயரில். இரவென்பது அகவாழ்வு. “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார்..இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்.” என்பது அகத்திணைக்கான விளக்கம். உறவு தரும் இன்பம் மாத்திரமல்ல, பிரிவும் தரும் துன்பமும் இரவுக்காலங்களில் பெரிதுதான். தலைவனைப் பிரிந்துவாழும் தலைவிக்கு, இரவில் தலைவனின் நினைவு அதிகமென்று கூறாத இலக்கியங்கள் உலகில் எங்குமில்லை. அத் துன்பம் நெடியது. குறும்பொழுதுக்குரியதல்ல. தலைவனில்லாத தனிமையின் இரவு நத்தைபோல ஊர்வதை – அவள் உணர்கிற அத்துன்பத்தை வெளிப்படுத்தும்பொழுது, ‘நெடிய கழியும் இரா’ என்று இரவின் மேல் பழி சுமத்துகிறாள்.
கொடியார் கொடிமையின் தாம் கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா (குறள்)
மேற்கத்திய நாடுகளில் ஆரம்பித்து, கீழைநாடுகளிலும் பரவியுள்ள ‘The night concept’ (கள்ளும் காமமும் பொய்யுமான) வியாதியை புரிந்துகொள்ள முடிகிறது. நெடிய இரவின் தனிமையில் வருந்தக்கூடிய நேற்றைய தலைவனோ தலைவியோ இன்றில்லை என்பதற்கான சாட்சியங்கள் அவை. இரவோடு இணைந்த சொற்களை வரிசைப்படுத்தினால்: பெண்ணில் ஆரம்பித்து நிலா, குளிர்ச்சி, கனவு, களவு, பதற்றம், அச்சம், புணர்ச்சி… சூன்யம் வரை இரவு சிமிழுக்குள் எதுவும் அடங்கும். உயிர்த்தெழும். பிரபஞ்சத்தின் மூச்சே இரவு. உலகம் இருமைப் பண்புகளாலானது. பகலென்று எழுத இரவு வேண்டும், ‘உண்டென்று’ சொல்வதற்கு ‘இல்லை’ வேண்டுமென்பதுபோல. இரவற்ற பகலை, உயிர் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே இயலாது. இந்தியாவின் மக்கள்பெருக்கத்தினை குறைப்பதற்குச் சாத்தியமற்ற யோசனையொன்றை வைத்திருந்தேன். ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என்பதுபோல ஓர் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை இரவிலிருந்து விடுவித்தால் மக்கத்தொகையைக் கணிசமாக குறைத்துவிடலாமென்பது எனது கணக்கு. மனித உயிர் தொழிற்சாலையின் உற்பத்தி நேரமல்லவா இரவு. சரீரமும், புலன்களும், மூளையும் பகலில் பிறருக்காகவும் இரவில் தமக்காவும் ஜீவிக்கின்றன. இரவொன்று இல்லையேல் ஓய்வின்றி உழைத்து மூளையும் புலன்களும் வெடித்து சிதறிவிடும். இரவுபெண் பொதுவில் பலரும் நினப்பதுபோல துர்த்தேவதையே அல்ல அவள் ரொம்பச் சாது. அடக்கமானவள், அமைதியானவள், புதிரானவள் மர்மங்கள் சூழ்ந்தவள், சூட்சமங்கள்நிறைந்தவள். மீண்டும் மாப்பசான் நினைவுக்கு வருகிறான். அவனைப்போலவே கண்கள் அவளைத் தரிசிக்கின்றன, நாசி அவளை சுவாசிக்கிறது, காதுகள் அவள் இசைக்கும் ‘அமைதியைக் கேட்கின்றன, சரீரம் அவள் தழுவலில் சுகம் பெறுகிறது.
——————————————————————————————–
anbaarndha naNbarae!
arumaiyaana karuththaadal. print 10 pages eduththu poekiRaen.
anbudan,
Devamaindhan
at: Kanniga Parameswari Browsing Centre
Puducherry 8..