‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

நீலக்கடல் நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினை பெற்றபின்பு ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

 (பதிவுகள்’ இணைய இதழ் ஆசிரியர் திரு. வ. கிரிதரன் அவர்களுக்கும், தமிழ் மீது தீராதுகாதல்கொண்டு அமெரிக்காவில் இயங்கிவரும் திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். )

பதிவுகள்:-  தங்கள் நாவலுக்கு விருது கிடைத்தமைக்கும் மென்மேலும் கிடைக்கவும் முதலில் வாழ்த்துக்கள். விருது கிடைத்த செய்தியறிந்தபோது உங்கள் உள்ளத்துணர்வுகள் குறித்து…?

மிக்க நன்றி. உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன், மறுப்பதற்கில்லை. நீலக்கடல் நாவலை சிரத்தை எடுத்துக்கொண்டு  வித்தியாசமாக எழுதினேன். மூன்று காலத்திற்கும் மூன்றுவிதமான மொழிகளை பாவித்தேன். அம்மொழிகளும் பாத்திரங்களின் சமூகச் சூழல், அறிவுத் திறன், சம்பவ நெருக்கடிகள் என பலக் காரணிகளின் அடிப்படையில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இது கதையல்ல  ஆண்டவர்களையும், அவர்களின் குடிகளையும் சமதளத்தில் வைத்து, வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களின் உண்மை மட்டுமல்ல, வாழ்ந்தவர்களின் உண்மை என தெரிவித்த முயற்சி. அந்த உண்மையையை நிறுத்த ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனைக்காட்டிலும் பொருட் செலவையும், புலம்பெயர்ந்தவர்களால் இயலாத காலச் செலவையும் தயக்கமின்றி செய்திருக்கிறேன். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக வெளியீடுகளையும், பிரான்சில் நான் வசிக்கிற நகரத்து நூலகங்களில் கிடைக்காத புத்தகங்கள், இந்தியாவில் வாங்கிய நூல்களென சொந்தமாக வாங்கி வரவழைத்துப் படித்தேன், நீலகடலுக்கெனவே சிறிய நூலகம் வைக்கலாம். கதை நடக்கும் முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன். பிறகு இணைய தளங்களின் உதவியையும் மறுப்பதற்கில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் காரர்களின் உணவென்றால், பிரான்சின் எந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வந்தவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன, ஒரு இசைக்கருவியின் பெயரைச் சொல்லவேண்டுமானால் கூட கதை நடந்த ஆண்டில், கதை நடக்கும் களத்தில் அதன் உபயோகத்திற்கான சான்றுகள் இப்படித் தேடித் தேடி எழுதியதுகூட பரிசுக்குக் காரணமாக இருக்கலாம். பிறகு எதையும் எனக்காகத்தான் செய்கிறேன். உண்பது, உடுப்பது, நேசிப்பது என எல்லாவற்றையும். எனது எழுத்தும் அப்படித்தான். ஒருவகை சுயநலம். சில சுயநலங்கள் பிறருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நீலக்கடலுக்கு அப்படியான வெற்றியாகக்கூட இருக்கலாம், பரிசுக்காக எழுதப்படவில்லை. எனினும் தமிழக அரசுக்கு நன்றி. இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும், அது நீங்களும் அறிந்ததுதான். பரிசுபெற்றவைமட்டுந்தான் உலகில் பெரிய படைப்புகளென்றோ, பரிசுவாங்கியவர்கள் மாத்திரந்தான் பெரிய எழுத்தாளர்களென்றோ சொல்வதற்கில்லை. பரிசேதும் இல்லை என்றாலும் சோர்ந்திருக்கமாட்டேன். உலகமெங்கும் பரிசுகள் பெற்றிராத தரம் வாய்ந்த படைப்புகள், மிகப்பெரிய படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்திய உதாரணம் சுந்தர ராமசாமி.

பதிவுகள்:- நீலக் கடல் நாவல் உருவானது குறித்து உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நீலக்கடல் நாவலை1973ஆம் ஆண்டிலிருந்து எனக்கு தொல்லைகொடுத்த, இரண்டு மன ஆக்ரமிப்புகளின் வடிகால் என்று சொல்லலாம். முதலாவது சென்னையில் சர் தியாகராயாக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். இராயபுரத்திலிருந்து கல்லூரிக்குத் நடந்து செல்வது வழக்கம். அப்போது ஒவ்வொரு நாளும் ஒன்பது நாற்பந்தைத்துக்கு, T.H. ரோடு எனப்படும், திருவொற்றியூர் சாலையில் ஒரு பள்ளிமாணவி எதிர்படுவாள். நான் அறிந்து, தோழியர் கூட்டத்தோடு அவளைப் பார்த்ததில்லை. சில நேரங்களில் எங்கள் பார்வைகள் சந்தித்திருக்கின்றன. மனதில் பதிந்திருந்தாள், நிறைய கவிதைகள், ஒன்றிரண்டு சிறுகதைகள் அவளை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன். இன்றுவரை சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் வர்ணணைகள் என்று எழுதுகிறபோதெல்லாம் அவள் குறுக்கிடுகிறாள். நீலக்கடல் தேவயானி அந்தப் பெண்ணாகக் கூட இருக்கலாம். இரண்டாவதாக அதே ஆண்டில் ஏதேச்சையாகக் கேட்ட புலவர் கீரனின் கந்தபுராண சொற்பொழிவு. நீலக்கடல் கதைக்கு ஆதாரமான கருமாறிப்பாய்தல் என்றால் என்ன? என்பதை, தமது உரைக்கு இடையில் குறிப்பிட்டார். ஆக நீலக்கடலுக்கான விதை 1973ம் ஆண்டிலேயே என் மனதில் ஊன்றப்பட்டுவிட்டது.

பதிவுகள்:- நீலக்கடல் நாவல் உருவாக வித்திட்டது ஆனந்தவிகடனில் வெளியான தங்கள் சிறுகதை.

முன்பே குறிப்பிட்டதுபோல 1973ம் ஆண்டு வித்திட்ட நீலக்கடல் ‘பார்த்திபேந்திரன் காதலி’ என்ற பெயரில் ‘கதை சூப்பர் ஸ்பீடு, கலக்கல் டர்னிங், நெஞ்சை தொட்டுட்டேம்மா’ என்ற குறிப்புடன் ஆனந்தவிகடன் இதழில் (09-05-2004) பிரசுரமானது.

பதிவுகள்:- நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பித்தீர்களா? அல்லது  தற்செயலாக நீங்கள் அனுப்ப எதிர்பாராமல் விருது கிடைத்ததா?

இதில் என்பங்கு எதுவுமில்லை. கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியன்று, சந்தியா பதிப்பகம் தெரிவித்த செய்தியை எனது இளைய மகள் மூலம் அறிந்தேன். மறுநாள் தொடர்புகொண்டு விசாரித்ததில் நீலக்கடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பதைத் தெரிவித்தார்கள். எல்லா பதிப்பாளர்களையும்போலவே, போட்டியில் கலந்துகொள்ள தாம் வெளியிட்ட நூல்களை அரசின் பார்வைக்கு சந்தியா பதிப்பகம் அனுப்பிவைத்திருக்கிறது. பரிசு கிடைத்தபிறகுதான் இதனை அறிந்தேன். உண்மையில் இந்த விருது 2005ல் வெளிவந்த நூல்களுக்கான விருது, 2006ம் ஆண்டு கூடிய தேர்வுக்குழுவினர் அதுபற்றி விவாதித்து  2007ல் விருதினைக் கொடுத்திருக்கிறார்கள்.

பதிவுகள்:- முதல் கதை, முதல் கவிதை எழுதி வெளிவந்தபோது உங்களுக்குள் பொங்கிவழிந்த மகரந்த நினைவுகளை கொஞ்சம் மலருங்களேன்….?

அதனைப் படைப்பென்று சொல்ல முடியாது, எனது உணர்வுகளை எழுத்தில் அளிக்க முடியுமென்கிற நம்பிக்கையை ஊட்டிய தருணமென்று சொல்லலாம். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வேளை,எனது தமிழாசிரியர் ‘நாகி’யென எங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு நா.கிருஷ்ணசாமி யாப்பிலக்கணத்தின் ஒருபகுதியாக ஆசிரியப்பாவை முடித்துவிட்டு, ஆளுக்கொரு கவிதை எழுதச்சொன்னார் ‘காகமே காகமே கருநிறக் காகமே,வேகமாய்ச் சென்று நீ மேகமாய் மறைவதேன்’, என ஒருக் கவிதையை எழுதிப்போய் காட்ட, பிற மாணவர்களைக்காட்டிலும் எனக்குக் கொஞ்சம் எழுதவருகிறதென நினைத்தவர் பள்ளி ஆண்டுமலர் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அதற்கடுத்த ஆண்டு, பள்ளியில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் பிரதியான ‘மனம்’ இதழுக்கு ஆசிரியராக உத்தியோக உயர்வு. எனது முதற் கவிதை, முதற்கதை, முதற்கட்டுரை மூன்றும் அவ்விதழில் இடம்பெற நேர்ந்ததை வாய்ப்பென்றுதான் சொல்லவேண்டும். அக்கையெழுத்துப் பிரதியை எவர்கையில் கண்டாலும் என்னிடத்தில் ஒருவித பெருமிதம் தொற்றிக்கொள்ளூம். அந்த இதழை அநேகமாகப் பள்ளியில் அதிகமுறைவாசித்தவன் நானொருவனாகத்தான் இருக்கவேண்டும்.

பதிவுகள்:- எத்தனை மொழிகளில் பரிச்சயம் உண்டு? உங்கள் நூல் எதுவும் பிற மொழியில் மொழிபெயர்க்கப்படவுள்ளதா?

ஆங்கிலமும், பிரெஞ்சும் அறிவேன். இதுவரை எனது எந்தநூலும் மொழிபெயர்க்கபடவில்லை. பிரான்சில் உள்ள நண்பர்கள் சிலர் நீலக்கடலை மொழி பெயர்க்கவேண்டுமென்றனர். பிரான்சில் Act Sud பதிப்பகம் நீலக்கடல் மாதிரியான நூல்களில் அக்கறை காட்டும் நிறுவனம். அவர்களிடம் ஓராண்டிற்குமுன் எழுதி கேட்க மொழிபெயர்ப்பினை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். ஒரு சில நண்பர்கள் மொழி பெயர்க்கிறேனென்று இணங்கி ஒரு பக்கங்கூட மொழிபெயர்க்கவில்லை. நானுங்கூட முதல் அத்தியாயத்தை மொழிபெயர்க்க உட்கார்ந்து சோர்ந்துவிட்டேன்.  நாவலின் பதினெட்டாம் நூற்றாண்டு மொழி சங்கடப்படுத்துகிறது. சிறுகதையொன்றை நேரடியாக பிரெஞ்சில் எழுதியிருக்கிறேன். தமிழ் அளவிற்கு மொழியை லாவகமாக பிரெஞ்சில் என்னால் கையாள இயலவில்லை. ஆனால் நீலக் கடலை எப்படியும் மொழி பெயர்த்து பிரெஞ்சில் வெளியிடுவது என்கிற கனவிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

பதிவுகள்:- இந்தப் பன்மொழிப் புலமை உங்கள் படைப்புகளை செழுமைப்படுத்த உதவுகிறதா?

பன்மொழிப் புலமை என்றெல்லாம் சொல்வது அதிகப்படியான அடைமொழி. மூன்று மொழிகளிலும் பேச எழுத முடியும், தமிழில் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துகிறேன் அவ்வளவுதான். நிறைய விஷயங்களில் எனக்குப் பற்றாக்குறை இருக்கிறது அதனை எழுதும்போது உணருகிறேன். எனக்கு வாசிப்பு போதாது. ஆங்கிலமும் பிரெஞ்சும் படைப்புலகில் முக்கியமான மொழிகள். சமீபகாலமாக ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்கள் சந்தை நோக்கோடு செயல்படுகின்றன. விற்பனைக்கான அத்தனை தந்திரங்களும் கையாளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் கதைசொல்வதில் தேர்ந்தவர்கள். பிரெஞ்சுக் காரர்களுக்கு எழுத்து முக்கியம். ரஷ்ய எழுத்தாளர்களைப்போல. உயிர்ப்புள்ள இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள்-பிரெஞ்சு படைப்புலகம் என்பது நிலைப்பாடுக்கு எதிரான கலகக்குரல்களால் வளர்ந்தது. தன்னுணர்வு, அகமனப் போராட்டம் இவைகள் பிரெஞ்சில் அதிகம். இரண்டு மொழி படைப்புகளையும் அந்தந்த மொழியில் படிக்கிறேன். இரு மொழி படைப்பும் என் எழுத்துக்கு உதவுகின்றன. இங்கேயுள்ள நூலகத்தில் Bi-Langue என்று ஒரு பிரிவு உண்டு. அப்பிரிவில் புகழ்பெற்ற ஆங்கில சிறுகதைகள், மூலமும் மொழிபெயர்ப்புமாக எதிரெதிர் பக்கங்களில் இருக்கும். அம்மாதிரியான நூல்களை மாதத்திற்கு ஒன்றேனும் வாசிக்கும் பழக்கமுண்டு. இந்த ஒப்புநோக்குவாசிப்பு புறநோக்கில், மொழியின் வல்லமையை புரிந்துகொள்ள உதவ, அகநோக்கில்(மொழி இரண்டையும் இரு கண்களெனக் கொண்டால்) ஒத்துணர்வில் துடிப்பது வலமா இடமா? என்பதைப் புரிய வைக்கிறது. இப்படியானப் புரிதல்கள், நமது எழுதும் திறனிற்கு நிச்சயம் உதவக் கூடும்.

பதிவுகள்:- விருது..வாசகனின் பாராட்டு…இதில் எதைப் பெருமையாகக் கருதுவீர்கள்?

பாராட்டும் விருதும் இருவேறு சொற்கள் என்றாலும் பொருள் ஒன்றுதான். இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை, வாசிப்பில்லாமல் விருது ஏது. பாராட்டுவதற்கு முன்னால் வாசிப்பு, வாசிப்பு முக்கியம்.

பதிவுகள்:- புதுக்கவிதையின் திசை திருப்பப்பட்டு, அதன் பாதை இன்றைக்குச் சரியாக இல்லை என்ற கவிஞர் மேத்தாவின் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்?

 இதில் சொல்வதற்கென்ன இருக்கிறது, அறுபதுகளில் எழுப்பி பாரதியைக் கேட்டிருந்தால் கூட அவருக்குப் பின்னால் கவிதை எழுதவந்தவர்களைப் பார்த்து இதைத்தான் சொல்லியிருப்பார். தம்மை அடையாளப்படுத்த பிறர் இருப்பை நிராகரிப்பதென்பது, அரசியல்வாதிகளிடமிருந்து படைப்பாளிகள் பெற்ற தாக்கம். கவிதையை ஓர் வீடென்று வைத்துக்கொண்டால், அதன் வடிவங்களில் ஒன்று புதுக்கவிதை. ஒரு வீட்டின் உட்பகுதி எந்த நாட்டிலும், எக்காலத்திலும் பொதுவானத் தன்மைகளுடன் நிரந்தரமாக இருக்கின்றன, வெளித்தோற்றங்கள் அதாவது வடிவங்கள் காலத்திற்கேற்ப, மக்களின் வளர்ச்சிக்கேற்ப, தேவைசார்ந்து மாற்றம் பெருகின்றன. கவிதை நிரந்தரமானது. அதன் உணர்வுகள் நிரந்தரமானவை. வடிவம் மாறும் தன்மையது, புதுக்கவிதையும் அதிலொன்று. கற்பனைத் திறனும், நாடகப் புலமையும் இணைந்த காப்பியங்களை அறிவோம், உரைநடை வடிவத்திற்கு மாற்றாக அவை எழுதபட்டன. பிறகு நாடகத் தன்மைகளை குறைத்துகொண்டு கவிஞன் தன் மனம்சார்ந்த உணர்வுகளில் அக்கறைகாட்டினான் எனினும் மரபுக் கவிதைகளாகத்தான் அவை இருந்தன. கவிதையென்பது இசையோடு தொடர்புகொண்டது, என்ற எண்ணத்தின் அடிப்படையில், தனிமனித உணர்வுகளை பேசும் போதுங்கூட யாப்பிலக்கணம்: சீர், அசை, தளை எதுகை மோனை விதிகள் அத்தியாவசியமாக இருந்தன. உலகமெங்கும் அதுதான் நடந்தது. பிரான்சில் மரபுக் கவிதைகளை அவர்கள் Poesie Classique என்று அழைத்தனர், பின்னர் Poesie Moderne (புதுக்கவிதை) அங்கு 1880ல் குறியீட்டாளர்களால்(Symbolists) அறிமுகப்படுத்தபட்டது. கட்டுபாடற்ற வரிகளில், ஓசை ஒழுங்குகளை ஒதுக்கிவிட்டு எழுதத் துணிந்த Gustave Kahnன் கவிதையான Palais Nomade அதற்கு முன் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. Vers Libres – Free verses என இலக்கியத்தில் பொருள்கொள்ளப்படும் அக்கவிதைகள் கவிதை வடிவத்தின் ஓர் அங்கம். உணர்வுகளுக்கு,  சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கப்படவேண்டும், என்பது புதுக்கவிதைகளின் எழுதப்படாத விதி. புதுக்கவிதையை கர்த்தாக்களான குறியீட்டாளர்கள் கவனமெல்லாம், அந்த நேரத்தில் அபௌதிகம், புதிர்நிலை என்றிருந்தது. டி.எஸ் எலியட் புதுக்கவிதையை “means too much to mean anything at all” என்றவர். புதுக்கவிதை என்பதே சுதந்திர எழுத்து என்கிறபோது அதற்கான திசை, குவிமையம் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. அதைவிட திசைகளைப் பற்றி அக்கறைகொள்ளாமல், கவிதை இருக்கிறதா, படைப்பு மனம் இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.  நல்ல படைப்புகள் வலிகளைச் சொல்லவேண்டும், உண்மையைப் பேசவேண்டும். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் எழுத்துலகில் தங்கள் உணர்வை பதிப்பிக்க முடியும் காலமிது. படைப்புலகம் அவ்வப்போது தடுமாறினாலும், நிமிர்ந்தே நிற்கும். திசைமாற்றமும் அதற்கு உதவலாம்.

பதிவுகள்:- உடலுறுப்புகளை கொச்சையாகப் பெயர் குறிப்பிட்டு கவிதையில் பெண்களே எழுதுவது இன்றைக்கு பரவலாக நடந்துவருகிறது. இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

எழுதினால் என்ன தப்பு? ஏன் பெண்கள் எழுதக்கூடாதா?  ஒரு படைப்பாளி அவர் ஆணோ, பெண்ணோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தானொரு புரட்சிகரமான சிந்தனாவாதி என்று காட்டிக்கொள்வதற்காகவும், தனது படைப்புப் பேசப்படவேண்டுமென்பதற்காகவும் உடலுறுப்புகளை நீங்கள் சொல்வதுபோல கொச்சையாக தமது எழுத்துக்களில் கொண்டுவருகிறாரென்றால் அது கண்டிக்கத் தக்கது.  ஆனால் தனது வலிகளையும், குமுறல்களையும் வெளிப்படுத்த, அல்லது ஒரு படைப்பின் தேவை சார்ந்து அதைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றால் தாராளமாக எழுதலாம். அந்த உரிமையைப் பெண்கள் விஷயத்தில்மட்டும் மறுப்பது என்ன நியாயம். சொல்லபோனால் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் தார்மீக உரிமை உடையவர்கள். அக்கவிதைகளில் தாக்குதல்களில்லை, தற்காப்பு நிலை. மூச்சுத் திணறிக் கிடந்தவன் சுவாசம் பெறும் முயற்சி. பொதுவாக இம்மாதிரியான கவிதைகளுக்கு புகலிடமாக இருப்பவை சிற்றிதழ்கள் சிற்றிதழ்வாசகர்களில் பெரும்பாலோர் அவர்களது கவிதைகளை ஏனைய கவிதைகளைப்போலவே எடுத்துக்கொள்கின்றனர், புரிந்துகொள்கின்றனர். முகஞ்சுளிப்பதில்லை. ஆபாசம் எங்கே இருக்கிறது தெரியுமா குடும்பபத்திரிகைகளில், வெகுசன இதழ்களில், தினசரிகளில், நமது சீரியல்களில், சினிமாக்களில்.

பதிவுகள்:- பிரான்சில் நீங்கள் நடத்திவந்த “நிலா” இதழைத் தொடர்ந்து நடத்த இயலாது போனதற்கு என்ன காரணம்?

எல்லாவற்றையும் தனி ஒருவனாக செய்ய வேண்டியிருந்தது. எனது எழுத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர ‘நிலா’ இதழ், வெகுசன இதழ் சாயலில் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம். எனக்கான இடம் அது இல்லை என்பதும், வாசகர்களுக்காக நான் என்ற மனநிலையில், சினிமா செய்திகள், துணுக்குகள், ஜோக்குகள் என்று எழுதி அலுத்துவிட்டது. எனினும் மூன்றாண்டுகள் தொடர்ந்து இருமாத இதழாக வெளிவந்தது.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய கதைகளில் மூன்றில் ஒரு பங்கு அதில் பிரசுரமானவையே. எனது பாரீஸ் நண்பர்களில் திரு பாலகிருஷ்ணன் எழுதிய ‘நானொரு சங்கத்தமிழன்’, திரு. முத்துக்குமரன் எழுதிய ‘பிரான்சு தொழிற்சட்டங்கள்’ போன்ற தொடர்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது.

பதிவுகள்:- எழுத்தாளர், இதழ் ஆசிரியர் அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எழுத்தாளராக இருந்துவிடலாம், இதழ் ஆசிரியராக இருப்பது கடினம். உங்களுக்குத் தெரியாததா என்ன? எழுத்தாளனுக்கு இரண்டே இரண்டு கவலைகள்தான். ஒன்று: தனது எழுத்து பிரசுரத்திற்கு ஏற்கப்படுமா? என்பது. இரண்டாவது பிரசுரமானபின் எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள் என்பது. அத்துடன் சரி. மாறாக இதழ் ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் தலைவலிகள் நிறைய இருக்கின்றன. சொந்த எழுத்துக்களில் கவனம் செலுத்தமுடியாது. விரும்பியோ விரும்பாமலோ எல்லா எழுத்துக்களையும் படித்துப்பார்க்கவேண்டிய கட்டாயம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம், இனம், மதம், நாடு என எல்லாவற்றையும் ஒளித்துக்கொண்டு, நடு நிலையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம்..என நிறைய  சொல்லலாம். எழுத்தாளனாக இருக்கவே விரும்புகிறேன்.

பதிவுகள்:- சிறுகதை, நாவல், கவிதை இந்த மூன்றிலுமே தடம்பதித்துள்ள தாங்கள் எதில் அதிகமாக முகம் காட்ட விரும்புகிறீர்கள்?.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் தரமானக் கவிதைகள் எழுத எனக்குப் போதாது. கவிதை உலகம் எனக்குப் பிடிபடாததுபோல இருக்கிறது.  கவிதை எழுதுவதென்பது உட்கார்ந்துகொண்டு  காய்களை நகர்த்தும் சதுரங்க விளையாட்டு, எனக்கு ஓடிப் பிடித்து விளையாடவேண்டும். அதற்கு உரைநடை வெளியே எனக்கு உகந்ததென தீர்மானித்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகள்:அன்றாட வாழ்க்கையில்,  சட்டென்று நமது கவனத்தில் இடம்பெறும் ஏதோ ஒன்று சிறுகதையாகக்கூடும். அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்கள் மீது எனக்குப் பொறாமைகள் நிறைய.

பதிவுகள்:- அச்சு இதழ்களில் உங்கள் ஆக்கம்….. இணைய இதழ்களில் உங்கள் ஆக்கம் வெளியாகும்போது எதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாக கருதுகிறீர்கள்?

அச்சு இதழ்களில் வருகிறபோது கூடுதலாக மகிழ்ச்சிக் கிடைக்கிறது. எனினும் அச்சு இதழ்களில் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட வாசகர்களைக் காட்டிலும் இணைய இதழ்களில் குறிப்பாக திண்ணை, பதிவுகள் இதழ்களில் படித்துவிட்டு தொடர்புகொண்டவர்கள் அதிகம். உண்மையைசொல்லபோனால் எனது வளர்ச்சியே இணைய இதழ்களினால் ஏற்பட்ட வளர்ச்சி.

பதிவுகள்:- புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்ப கதை, பாட்டு எழுதி வெளியிடும் எண்ணம் உண்டா?

அப்படி ஏதும் எண்ணம், இதுவரை தோன்றவில்லை. உங்கள் கேள்வி அதற்கு வித்திட்டிருக்கிறது.  குழந்தைகளுக்குச் சொல்ல, நிறைய இருக்கிறது. வழக்கமான உத்திகளிலிருந்து மாறுபட்டு கதை பாட்டு எழுதலாம்.

பதிவுகள்:- நீங்கள் எழுதிய படைப்புக்களில் மன நிறைவைத் தந்த ஆக்கமாகக் கருதுவது எதை?

 சிறுகதைகள். துரதிஷ்டவசமாக அவை சரியாக அறியப்படவில்லை. அன்புள்ள அப்பா, அக்கினி காரியம், எமன் அக்காள் கழுதை, பிறகு, நாளை போவேன்..எனக்குப் பிடித்த என்னுடைய சிறுகதைகளில் முக்கியமானவை.

பதிவுகள்:- எழுத்தாளர் என்ற நிலையில் உங்களின் இலட்சியங்கள் என்று…..?

எல்லா எழுத்தாளர்களுக்குமுள்ள இலட்சியங்கள் எனக்கும் இருக்கின்றன. முதலாவதாக ஒரு நல்ல எழுத்தாளனென்று பேர்வாங்கவேண்டும். இரண்டாவது கனவு, Simone de Beauvoir எழுதிய Le Deuxieme Sex  நூலையும், Margurite Yourcenarடைய Memoire d’Adrien நூலையும் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். இதைத் தவிர பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை

பதிவுகள்:- உங்களின் நாவல் வெற்றிக்கு மூவர்  காரணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக இணையத்தில் கதையைப் படித்து ஊக்கமூட்டும்வகையில் பின்னூட்டு கொடுத்தவர்கள் குறித்து…?

அவர்கள் எனது நாவல் வாசகர்கள் மட்டுமல்ல எனது சிறுகதைகளையும், கவிதைகளையுங்கூட வாசித்து விட்டு பாராட்டுபவர்கள் எனவே நாவல் எழுதியபோது அவ்வப்போது பாராட்டினாலும் புத்தகமாக வெளிவந்தபிறகுதான் முழுவதுமாக படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படித்தான் கவிஞர் சதாரமாலதியின் நட்புக் கிடைத்தது. பிறகு மரியதாஸ் என்ற நண்பர்  தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தியவர். இந்த நாவல் எனக்குப் புகழ் சேர்க்கும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.

பதிவுகள்:- உங்கள் குடும்பத்தைப்பற்றி….?

மனைவி கிரிஜா, சராசரி இந்தியப் பெண்மணி. வணிகம் தொடர்பான எனது பணிகளை அவள் பங்கீடு செய்துகொள்வதால் எழுத்தில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு மகன் இரண்டு பெண்கள்.மகன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பாரீஸில் பணிபுரிறார். மூத்த மகள் தனது கணவருடன் அமெரிக்காவில் இருக்கிறாள். இளையவள் வேதியியில் துறையில் இருக்கிறாள்.

———–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s