தளவாய் சுந்தரம்: காந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.
ஒரு தேர்ந்த பத்திரிகையாளருக்கேயுரிய சாதுரியத்துடன் ‘தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்” என்கிற கவர்ச்சிகரமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை குறித்து வெகுநாட்களாகவே எழுதவேண்டும் எழுதவேண்டுமென தள்ளிபோய்விட்டது. தளவாய் எழுத்துக்களை சிலாகிப்பவர்களில் ஒருவர் திரு. இந்திரன். நல்ல எழுத்துக்களை மனம்திறந்து அரிதாக பாராட்டுகிறவர்களில் இந்திரனும் ஒருவர். ஆக தளவாய் எழுத்தும் அந்த மரியாதையை தக்கவைத்துக்கொள்ளும் எழுத்தென்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. எதிர்காலத்தில் இதழியலில் இரு பெயர்கள் பெரிதும் பேசப்படும் மெனில் அவற்றுள் ஒன்று திருமாவேலன், மற்றவர் தளவாய் சுந்தரம்.
சரி கட்டுரைக்கு வருகிறேன். கட்டுரை காந்திராஜன் என்ற இளைஞர் பற்றியது. தமிழ் இளைஞர்கள் சூப்பர் ஸ்டார், உலகநாயன் என்று அலைகிறபோது விதிவிலக்காக தமிழ்நாட்டில் பாலை வெக்கையில் மலைகளையும் குகைகளையும் தேடி அலைந்துகொண்டிருப்பவராக, அங்குள்ள குகை ஓவியங்களைக் கண்டு பதிவு செய்பவாராக நண்பர் காந்திராஜன் இருக்கிறார். எனக்கு உதவாக்கரை பேச்சில் மயங்கி உணர்ச்சிக்கு ஆளாகி கரிக்கட்டையாகிப்போகிற அபத்தமான இளைஞர்க¨ளைக்காட்டிலும் இவரைப்போன்றவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். இது போன்ற மனிதர்களின் உழைப்பும் தியாகமும் பேசப்பட்டாலன்றி ஓர் இனம் உருப்படாது என்பது எனது கருத்து. எனது இந்தக்கருத்திற்கு இணக்கமாக இருக்கிறது காந்திராஜனைப்பற்றி நண்பர் தளவாய் சுந்தரம் தீட்டியுள்ள சித்திரம். காந்திராஜன் போன்ற இளைஞர்களைத் தேடிப்பிடித்து பயனுள்ள தமிழனாய் இருப்பதெப்படியென்ற பாடத்தை வருடத்திற்கு ஒருமுறையேனும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தீக்குளிக்கிற உயிர்களுக்கும், வெயிலில் கால்கடுக்க தியேட்டர்வாசலில் காத்துக்கிடக்கும் பிண்டங்களுக்கும் புத்தியில் உரைக்கிறமாதிரி சொல்லவேண்டும். தமிழ்ச்சமுதாயம் காப்பாற்றப்பட்டுவிடும். காந்திராஜனை வனங்குகிறேன், அக்காந்திராஜனை அறிவதற்கு வாய்ப்பளித்த தளவாயையும் வணங்குகிறேன்.
http://dhalavaisundaram.blogspot.com/2011/03/blog-post.html
எஸ்.ராமகிருஷ்ணன்
பறவை கோணம் தலைப்பில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் தமது வலைத்தளத்தில் உயிர்மை இதழில் வெளிவந்த தமது பத்தியை மறு பதிவு செய்துள்ளார். பாமாவிஜயம் திரைப்படத்தில் இயக்குனர் பாலச்சந்தர் பாடல்காட்சியொன்றின் நுணுக்கமான அவதானிப்பை கட்டுரை விவரிக்கிறது. அக்கட்டுரையில் பாடலைக் காட்சிப்படுத்திய திறன்குறித்து மட்டும் பேசாமல், அக்காட்சியினூடாக, இன்றைய தமிழ் வாழ்க்கை இழந்துபோன ஒரு குடும்பத்தின் அன்றாடத் தருணங்களை நினைவு கூர்ந்து அவருக்கே உரிய மொழி நடையில் அவரோடு சேர்த்து நம்மையும் ஏக்கத்தில் நிறுத்தியிருக்கிறார். நடிகையர் திலகம் என்று வர்ணிக்கபட்ட சாவித்திரி கணேசனின் பிராப்தம் படமும் அப்படத்தால் அப்பெண்மணிக்கு ஏற்பட்ட வாழ்க்கைச்சரிவும், உயிர்வதையும் கட்டுரையின் பிற்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.
அ.ராமசாமி:
தனிக்கவனமெடுத்து வாசிக்கும் எழுத்துக்களில் திரு அ.ராமசாமியின் எழுத்துக்களுக்கு பிரத்தியேக இடமுண்டு. தமிழ் இனம், தமிழர் வாழ்வென்ற அக்கறை வெளிப்பாடாக மொழிப்படுத்தப்படும் அவரது கருத்தியல்கள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. தமிழ், தமிழர் என்கிற நிலைப்பாட்டை எப்போதும் முன்வைக்கிற அவரது எழுத்துக்களில் உடன்பாடு-மறுப்பு என்ற இருதரப்பு நியாயங்களையும் பொதுவில் சார்பின்றி வைத்து, தமது கருத்தை தெளிவாகக் கூறுவார். “தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்”, என்கிற அவரது பதிவு தமிழ் ஊடகங்களில் தமிழ்ச்சமூகத்தில் கேட்பாரற்றுக்கிடந்த மக்களினை சந்தைப்படுத்தும் அண்மைக்கால இதழியல் அறத்தை சற்று ஆழமாகவே ஆய்வுசெய்திருக்கிறது.
“தினசரிகளின் கவனம் வட்டாரச் செய்திகளாக இருக்கப் பருவ இதழ்களின் கவனம் முழுவதும் அரசியல் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த ரகசியங்களைத் தேடுவதாக இருக்கின்றன. அரசியல்வாதிகளின் குற்றப் பின்புலம், ஊழல் நடவடிக்கைகள்,திரைப்படத்துறையினரின் அந்தரங்கங்கள், நட்புகள், ஆடம்பர வாழ்க்கை எனக் காட்சிப்படுத்தும் பருவ இதழ்களின் நோக்கம் அவற்றைக் களைய வேண்டும் என்பதாக இல்லை. அதற்கு மாறாக அவற்றைக் காட்சிப்படுத்தி அவற்றையே இயல்புநிலையாகக் காட்டி நம்பச் செய்வதாக இருக்கிறது.”
என்ற அவரது விமர்சனத்தில் உள்ள நியாயத்தை, தமிழைனத்தின் மீது அக்கறைகொண்ட எவரும் புரிந்துகொள்வார்கள்.
http://ramasamywritings.blogspot.com/2011/09/blog-post_6770.html
ஷாஜி
ஷாஜியின் தளத்தில் ஷம்மி கபூர் பற்றி நல்லதொரு கட்டுரை. எழுபதுகளில் இந்தி சினிமாக்கள் சென்னையை ஆக்ரமித்திருந்த நேரம் கல்லூரிகளில் தமிழ் சினிமாக்கள் பற்றி பேசுவதைக்காட்டிலும் இந்தி சினிமாக்கள் குறித்து அதன் நாயகர்கள் பற்றியும், அச்சினிமாக்களை திரையிடும் தியேட்டர்களைக் குறித்தும் பேசுவதே நாகரீகமென்றிருந்த காலம். குறிப்பாக அப்போது ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த், ஷம்மிகபூர், அமிதாபச்சன், தர்மேந்திரா பிறகு கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களென நடிகர் பட்டாளம்; நடிகைகளின் பட்டியலும் நீளமானது. ஷர்மிளா, ரேகா, ஹேமா மாலினி, ஜெயா, மும்தாஜ், ஜீனத் அம்மன் என பலர் இருந்தாலும் எனது அபிமான நடிகை சாய்ஸ் லீனா சந்தாவர்க்கர். ஷம்மி கபூரைப் பற்றி பேசும் இக்கட்டுரை அவரது ஆழமான பல பரிமாணங்களை உரிய சொற்களின் துனையோடு சொல்கிறது.
“இந்திய சினிமாவின் எக்காலத்துக்குமுரிய கலகக்கார நாயகன்தான் ஷம்மி கபூர். சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகளுக்கு பின்னரும் இந்தியாவில் நிலவிய முன்னேற்றமின்மை கொண்டுவந்த சமூகப்பிரச்சினைகளுக்கும் அதையொட்டிய இளைஞர்களின் கோபத்துக்கும் அக்காலத்து பதின்பருவத்தினரின் அடக்கப்பட்ட காதல் ஏக்கங்களுக்கும் ஒரு வடிகாலாக அமைந்தது ஷம்மி கபூரின் கலகக்காரனும் கிளர்ச்சிக்காரனுமான திரைநாயகனின் பிம்பம். யா?¥. . டாலி §?¡. . ஸ¥க்கூ..ஸ¥க்கூ. . என்றெல்லாமான விசித்திர வார்த்தைகளில் கோஷமிட்டுக்கொண்டு திரையில் அவர் வெளிப்படுத்திய பித்தும் சுறுசுறுப்பும் இளைஞர்களை உன்மத்தர்களாக்கியது. அவரது பாத்திரங்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப காதலிகளை வெல்பவர்கள். அவரது படங்கள் எப்போதுமே சந்தோஷமாக முடிபவை. ஒரு பதின்பருவத்தினனுக்கு ஆனந்தமடைய வேறு என்ன வேண்டும்? ”
என்கிற கேட்கிற ஷாஜியின் கட்டுரை தவிர்க்கப்பட கூடாதது.