எழுத்தாளனும் சினிமாவின் கதா நாயகனும்
ஒரு சினிமாவைப் பார்த்து கதாநாயகனின் பிம்பத்தை மனதில் வரித்துகொள்ளும் கடைநிலை ரசிகனின் மனப்பான்மைக்கும், எழுத்தை வைத்து படைப்பாளியின் பிம்பத்தை கையிலெடுத்துக்கொண்டு ஒத்திட்டுப் பார்க்க வருகிற வாசகனுக்கும் அதிக பேதமில்லை என்பதென் எண்ணம்.
இருவருமே வெகுசன தளத்தில் இயங்குகிற ரசிகர்கள்தான். எழுத்தாளன் தமது புனைவுக்குள் கட்டமைக்கும் கதாநாயக விலாசத்திற்குள் நான் போகவிரும்பவில்லை. ஆனால் பொதுவாகவே எல்லாமனிதர்களுக்குள்ளும் அவரவர் அறிவின் வழிபட்டு -அந்த அறிவை எல்லாமுமாக – ஓர் absolu (முழுமை) இந்த முழுமையை ஓர் instant absolu எனவும் கொள்ளலாம், அத்தருணத்தில் ஒரு பொருள் பற்றிய வாய்த்திருக்கும் அறிவு அல்லது அனுபவம் பிறருக்கு தட்டையானதாக இருந்தாலும் – தான் அதில் முழுமைபெற்றிருப்பதாக உறுதிபடுத்திக்கொண்டே, அம்முழுமையின் நெகிழ்ச்சி த்தன்மைகள் (Elasticity) ) குறித்த பிரக்ஞையின்றியே அத்தருணத்தைத் தொடங்குகிறான். விவாதத்தில் இறங்கும்போதோ அல்லது எழுதிக்கொண்டு போகிறபோதுதான் நிஜவாழ்க்கையின் அவன் சந்தித்த மறுப்புகளுக்கு இடம் தேடவேண்டும், அவ்வகையில் அவனது போதாமைக்கு, இல்லாமைக்கு களிம்பு பூசவேண்டும், சஞ்சலத்திற்கு கற்பனையிலாவது விடுதலை வாங்கித் தரவேண்டுமென ஏங்குகிறான். இதைத்தான் தொடக்ககாலத்தில் நமது இதிகாசங்களும், புராணங்களும் செய்தன. திராவிடம் பேசிய எழுத்தாளர்களும், அடுத்துவந்த வெகு சன இலக்கியங்களும் இதைத்தான் செய்தன. தீவிர இலக்கியங்களில் அதன் விழுக்காடுகள் குறைவு எல்லோருமே ஏதோவொரு உன்னதத்தை கட்டமைக்க காய்கறி வியாபாரி தொடங்கி கா·ப்கா வரை அவரரவர் ஞானத்தின் வழி முயல்கிறார்கள். அறிவொளி இயக்கங்கள் பிரபஞ்ச நோக்குகள் பற்றி பேசியதும் இந்தப்பொருளில்தான். பின்னர் அவர்களிடையே பேதம் வந்தது. பிரெஞ்சு தத்துவவாதி பிளேஸ் பஸ்க்கால் (Blaise Pascale)கூறுவதை இங்கே நினைவு கூர்தல் தகும்: “மனிதர் கடமைத் தேர்வென்பது உண்மை சார்ந்ததல்ல, அவனது அகவயமான விருப்பத்தை பூர்த்திசெய்யும் தன்மை சார்ந்தது. அவனது அகவய தேர்வுக்கு எழுத்துவேறு வாழ்க்கை வேறு என்று இனம் பார்க்கத் தெரியும். தமது சொந்த கதையை சுயகதை –autofiction- என்ற பெயரில் எழுதுகிற்போதும் ஒளிவட்டத்தில் கூடுதல் கவனமெடுத்து எழுதும் எழுத்தாளர்கள் தான் மிக மிக அதிகம். எழுத்தினை வைத்து எழுத்தாளர்களின் அசலான பிம்பத்தை ஒருபோதும் நிறுவமுடியாதென்பதுதான் எனது கருத்தும். இப்படியெல்லாம் பிம்பத்தை வரித்துக்கொண்டு எழுத்தாளர்களை தேடிப்போகும் வாசகர்களைக் கண்டால் எனக்கு அனுதாபந்தான் பிறக்கிறது.
எழுத்தாளனும் ஒரு சராசாரி மனிதன் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது. நீதிபதிகள் குற்றவாளிகளாக இருக்கமுடியாதென்பது விதியா என்ன?
உரையும் உரையாடலும்
உறவுக்கார நண்பரிடம் சென்னையில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது தெருவோர உணவகங்களைப்பற்றி பேச்சு வந்தது. அவர்கள் உபயோகிக்கும் எண்ணை மோட்டார் வாகனங்களில் உபயோகிக்கப்படும் lubricating oil என்றார். தெருவோர உணவகங்களில் கலப்பட எண்ணையை உபயோகிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மோட்டார் எந்திரங்களில் பிஸ்ட்டனின் உராய்வினை மட்டுப்படுத்துவதற்கென்று பயன்படும் எண்ணையை சமையலுக்குப் பயன்படுத்துவார்களா? அந்த எண்ணையின் அடர்த்தியென்ன சமையல் எண்ணையின் அடர்த்தியென்ன என்று யோசிக்க வேண்டியதில்லையா?
சிலர் இப்படித்தான் தடாலடியாக தங்கள் முடிவுகளைத் திணிப்பார்கள். அதை மற்றவர்கள் ஏற்கவேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இதுபோன்றதுதான் ‘செப்டம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதல் உண்மையல்ல’ என்று வாதிடுவதும்; ‘நிலவில் மனிதன் நடக்கவே இல்லை’, என்று வாதிடுவதும், இவர்களைக் கொஞ்சம் உட்காரவைத்து பேசிப்பாருங்கள், ‘இறைவனே அகத்தியரிடம் பேசினார்’, என்று சத்தியம் செய்வார்கள். இறைவன் அகத்தியரிடம் பேசினார் என்பதை நம்பத் தயாராயிருப்பவர் நிலவில் மனிதன் நடந்தான் என்பதை நம்பத் தயாரில்லை.
உண்மை, உண்டு, ஏற்பு, இணக்கம் போன்ற சொற்களை அறிந்த நமக்கு பொய், இல்லை மறுப்பு, முரண் போன்ற சொற்களை தெரியாமலிருக்க நியாயமில்லை. எதிரெதிர் அணியைச்சேர்ந்த இவ்விரு வார்த்தைக் குழுமத்தின் தயவுடனேயே நமது உரையாடல்களையும், கலந்துரையாடல்களையும், விவாதங்களையும் கட்டிஎழுப்புகிறோம். அவற்றின் அடிப்படையிலேயே ஒரு கருத்தியத்தை அல்லது முடிவை மிக ஆழமாகப் புரிந்துகொள்ளவும், வரையறுக்கவும், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் செய்கிறோம். அதேவேளை ஒரு கருத்தியத்தை அல்லது ஒரு முடிவை தீர்மானிக்கும் முன்பாக மேற்கண்ட உரையாடலோ, விவாதமோ இரு தரப்பினருக்கும் சமபலத்தையும், சமகாலத்தையும், சமவாய்ப்பினையும் வழங்கினாலன்றி உரையாடலின் முடிவில் ஒரு நேர்மையான முடிவினை எட்டுவது இயலாது. எங்கேனும் எதிர்வினை ஏதேனும் சில காரணங்களால் மறுக்கப்படுகிறதெனில் அங்கே வழங்கப்படும் நீதி, எடுக்கப்படும் முடிவு ஒரு பக்க சார்புடையதென்று பொருள்.
தகவல் தொழில் நுட்பம் பெருகியுள்ள இந்நாட்களில் திரும்பிய திசைகளிலெல்லாம் முடிவுகள் திணிக்கப்படுகின்றன. உரை (Discours) மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன, உரையாடல்களில்லை (Dialectique). நேருக்கு நேர் உரையாட இயலாதகட்டத்தில் ஒரு மூன்றாம் மனிதனை தேர்வு செய்து உங்கள் மறுப்பையோ, முரணையோ தெரிவியுங்கள்!என்றாவது எங்காவது ஒரு நேர்மையான முடிவினை அக்குறிப்பிட்ட கருத்தியம் ஒரு நாள் எட்டக்கூடும். இப்போதைக்கு அதுவொன்றுதான் வழி
——–